இதழ்-27

அந்த வேரை அறுத்து விடுங்கள்

இந்த சமூகம் எனும் மரத்தின் சமநிலையை பேணுவதற்கான ஆணிவேராமே சாதீயம்! அதை அறுத்தால் சமூகமே ஆட்டம் கண்டு விடுமென்கிறார்கள். ஆட்டம் காணட்டுமே! பிறப்பால் ஏற்றமும் தாழ்வாயும் இருக்கும் இந்த சமூகம் ஆட்டம் கண்டால் தவறொன்றும் இல்லை. புதிதாய் தளைக்கும் வேர்கள் சமூகத்தை கட்டாயம் தாங்கும்.

சாதீயத்திற்கு எதிரான எழுத்துக்களும் பேச்சுக்களும் பெருமளவில் காணப்பட்டாலும் செயல்கள் என்பவை அற்பத்திலும் சொற்பமாகவே இருக்கிறது. கல்லாதவர்கள் மட்டுமல்ல கற்றவர்கள் மத்தியிலும் இந்த சாதீயம் வேரூன்றி இருக்கிறது. பிறருக்கென வரும் போது எல்லோரும் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவரவர்களுக்கென வரும்போது தான் சுயரூபம் தெரிய வருகிறது.

சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவிக் காணப்படும் சாதீயத்தை அழிப்பது எப்படி? அழிக்க நினைபாபவர்களே! எடுத்த எடுபாபிலேயே எல்லோரையும் திருத்த மூற்படாதீர்கள். முதலில் நீங்கள் திருந்துங்கள். தெரிந்தோ தெரியாமலோ உங்களால் ஒருவர் சாதீயம் சார்ந்து பாதிக்கப்படாதவாறு நடந்து கொள்ளுங்கள். ஒருவருடமாவது உங்கள் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இதை உறுதி செய்த பின் உங்களுக்கே ஒரு திருப்தி ஏற்படும். அதன் பின் உங்கள் குடும்பத்தில் இதனை பிரயோகித்துப்பாருங்கள். குடும்ப மட்டத்திலும் நீங்கள் வென்று விட்டீர்கள் என்றால் அதுவே மிகப்பெரிய வெற்றி. அதன் பின் உங்கள் நெருங்கிய உறவுகள் மத்தியில் பிரயோகிக்கலாம்.

இவ்வாறு பக்க வேர்களை ஒவ்வொன்றாக வெட்டுவது தான் ஒரே வழி. எடுத்த எடுப்பிலேயே ஆணி வேரை வெட்டிவிடலாமென்று புறப்பட்டால் அது கடல் நீரை அள்ளுவது போலாகி விடும். சாதீயத்திற்கு எதிரானவர்களே! முதலில் ஒன்று படுங்கள்! உங்களுக்கு நடந்த அநீதி உங்களுக்கு தெரிந்த இன்னொருவருக்கு நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அந்த அலரி மரத்தின் ஆணி வேர் அறுபடத் தொடங்கும்!

Related posts

ஏகாதிபத்தியம் – Imperialism 03

Thumi2021

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 01

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 24

Thumi2021

Leave a Comment