இதழ்-27

சிந்தனைக்கினிய கந்தபுராணம்

‘இந்திராகிப் பார் மேல் இன்பமுற்றினிது மேவிச்
சிந்தையில் நினைந்த முத்தி சிவகதி அதனில் சேர்வர்
அந்திமில் அவுணர் தங்கள் அடல் கெடமுனிந்த செவ்வேள்
கந்தவேள் புராணம் தன்னைக் காதலித்தோதுவோரே’

இப்பாடல் ‘முருகப்பெருமானின் திருவரலாறாகிய கந்தபுராணத்தைக் காதலுடன் இப்புவியில் படிப்போர், கேட்போர், நினைப்போர் யாவரும் இந்திரனைப் போலத் தலைமைத்துவமும் இன்பமும் மிக்க வாழ்வை வாழ்ந்து இறுதியில் பரமானந்த நிலையாகிய சிவபதப் பேறும் பெறுவர்’ என்று நூற்பயனை விதந்து உரைக்கிறது.

பெருமை மிக்க இப்புராணத்திலுள்ள ஆறு பெரிய சங்கிதைகளுள் ஒன்று சங்கரசங்கிதை. இச்சங்கிதையிலுள்ள பதின்மூன்றாயிரம் சுலோகங்களால் ஆக்கப்பெற்றது சிவரஹஸ்ய காண்டம் என்ற உயர்ந்த பகுதி. இதில் ஏழு காண்டங்கள் உள்ளன. அவ்வேழு காண்டங்களுள் முதன்மையான ஆறு காண்டங்களை இணைத்து அழகுத் தமிழில் ‘கந்தபுராணம்’ என்ற ஞானக்களஞ்சியமாக தந்திருக்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

கி.பி 12, 13ம் நூற்றாண்டுகளில், தமிழகத்தின் காஞ்சியில், குமரகோட்டம் முருகன் ஆலய அர்ச்சகராகத் திகழ்ந்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். முருகனே ‘திகட சக்கர’ என்று முதல் அடியெடுத்துக் கொடுக்க 10345 அருந்தமிழ்ச் செய்யுள்களால் கந்தபுராணத்தை அவர் ஆக்கியிருக்கிறார்.

‘உபதேச ரத்னாகரம்’ என்று போற்றப்படும் கந்தபுராணம் காப்பிய இலக்கணங்கள் மிக்கதாக, சித்தாந்தக் கருத்துக்களின் செறிவுடையதாக, தத்துவார்த்த உண்மைகள் பொருந்தப் பெற்றதாக அமைந்திருக்கிறது. தமிழ்க் கந்தபுராணத்தின் தமிழ் நடையும் வியந்து நயந்து உண்ண வேண்டியது.

முருகப்பெருமானாலேயே ஆணையிடப்பெற்று, அவனாலேயே தினமும் பரிசீலனை செய்யப்பெற்றது. ஆயினும், அரங்கேற்றத்தில் அறிஞர் முன்றலில் இலக்கணச் சந்தேகம் உண்டானது. அப்போது கந்தவேட் பெருமானே சிறுவடிவு தாங்கி வந்து, தன்னால் அங்கீகரிக்கப்பெற்ற நூல் அது என்று யாவரும் அறிய சந்தேகம் நீக்கினார். மிகத் தெளிவாக ‘இறையாணை’ பெற்ற நூல் கந்தபுராணம் என்பது சைவத்தமிழ் மக்களின் நம்பிக்கை.

கந்த புராணம் அரியதொரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும். கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம். என்றும் இளையான், எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்தக் கந்தன் என்ற முருகன். அவனது மனைவியராகப் புராணம் இரு தேவியரைக் காட்டும். அவளுடைய வலது பக்கம் விளங்குபவள் வள்ளி. அவள் இச்சா சக்தி. மண்ணுலகில் பிறந்து வளர்ந்தவள். தமிழ்மகள். வேடுவனான நம்பிராஜன் புதல்வி. அத்தேவி இகலோக சுகத்தைத் தருவாள். அத்தேவியை முருகன் காந்தர்வ விவாகம் செய்து கொண்டான்.

முருகனின் இடது பக்கம் எழுந்தருளுபவள் தேவசேனா. விண்ணுலகில் பிறந்தவள். தேவராஜனின் புதல்வி. கிரியாசக்தி. அவளை இறைவன் கற்பு முறையில் பிரம்ம விவாகம் செய்தான். முருகனை வழிபடுவோருக்கு அத்தாய் பரலோக வாழ்வில் இடம்தருவாள். முருகனின் மூன்றாவது சக்தி வேல். முருகனின் கரத்தில் விளங்குகிறது. வெற்றியைத் தருவது. ஞானமே வடிவெடுத்த ஞானசக்தி அது. ‘வெல்’ என்ற வினையடியில் தோன்றியது ‘வேல்’. அது ஞானமே உருவானது. ஆழ்ந்து அகன்று கூர்மையாகி அறிவின் வெளிப்பாடாகத் திகழ்கின்றது. செவ்வேட் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் சேவற்கொடி அஞ்ஞான இருளகற்றி ஞானஒளி வரக் கூவுகிறது. (கொக்கு- மாமரம், அற- அறுத்த, கோ- நம் அரசே) வாகனமான மயில் ஆசை என்ற பாம்பை அடக்கி பிரம்மசக்தியாக ஓம்கார ஷொரூபமாக விளங்குகிறது.

(சமஸ்கிருதத்தில் பதிணெண் புராணங்கள் உள்ளன: சைவம், பவிஷ்யம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம், வராஹம், வாமனம், மத்ஸயம், கூர்மம், பிரம்மாண்டம், காருடம், நாரதீயம், வைஷ்ணவம், பாகவதம், பிரம்மம், பத்மம், ஆக்னேயம், பிரம்மகைவர்த்தனம் என்பவற்றுள் ஸ்கந்தபுராணம் என்ற மகாபுராணமும் ஒன்று.)

Related posts

சட்டவிழுமியம்

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 26

Thumi2021

ஈழச்சூழலியல் 14

Thumi2021

Leave a Comment