இதழ்-27

முடிவுறாக் கொட்டுக்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி…)

‘பழனி அண்ணே… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல… நா சொல்லுற ஆறுதல் மீனா அக்காவ உயிரோட கொண்டு வரப்போறதில்ல… நா இப்போ சொல்லப் போறத ஆறுதல்னு நீங்க நெனச்சாலு சரி… ஆற்றாமையினு நெனச்சாலு சரி… ஆனா ஒண்ணு இந்த தேன் பூச்சிக் கொட்டு இன்னிக்கி நேத்து நம்ம தொழிலாளிங்க உயிர வாங்கல… காலங்காலமா நடந்துக்கிட்டு இருக்குற அக்கிரமம் இது… போன வருசோ நம்ம முத்து அண்ணே கவ்வாத்து வெட்ட போயி ஆசுபத்திரியில மூணு நாலு பதிஞ்சிருந்து செத்து போனாறு…நம்ம மேட்டு லயத்து குப்பாயி அக்கா தேன்பூச்சி கொட்டு வாங்கி பயத்துல இப்ப தோட்ட வேலைக்கு போறதில்ல. நம்ம பின்ரோட்டு பூசாரி மவே சுப்பு புல்லுவெட்ட போயி தேன்பூச்சிக்கு பலியாகிட்டா… இண்ணிக்கி நம்ம மீனாட்சி அக்கா… நாளைக்கி யாரோ…??……??……. மூணு மாசத்துக்கு மொதல்ல யாரோ ஒரு மந்திரிவாறாருனு நிர்வாகத்து ஆளுங்க தேன்பூச்சிக் கூடுகள எரிச்சாங்க… இது அவுங்க பாதுகாப்புக்கா? இல்லாட்டி நம்ம பாதுகாப்புக்கா……? நாம சாதாரணத் தொழிலாளிங்கதா… தோட்டக்காட்டானுங்கதா… பஞ்சம் பொழைக்க வந்தவுங்கதா….. சுரண்டலுக்குப் பொறந்தவங்கதா… வசதிவாய்ப்பு இல்லாதவுங்கதா… ஒரு வேல சாப்பாட்டுக்கு வேலகாட்டுல கொழுந்து நிறுத்து தாற காசுல குடும்ப நடத்துறோ… ஒரு நாளு வேலைக்கு போவாட்டி பட்டினி… நேரம் பிந்தி போனா அரைப் பேரு…ஆனா ஒண்ணு பழனி அண்ணே… நாம உயிரோட இருந்தாதா நாட்டுக்கு பொருளாதாரோ ஒயரு… நம்ம தலைவருமாருங்க சொகுசா வாழுவாங்க… இந்த தேன்பூச்சி கூடுகள எடுக்க சொல்லி நாம எத்தன நாளு போயி தலைவருமாருககிட்ட சொன்னோ. ஒரு முடிவு இன்னுவரைக்கு எடுக்கல… நம்ம பாதுகாப்பா இல்லாட்டி….??????…????’

தளத்தளத்த குரலில் கண்ணீர் மல்க கண்ணாயி கூறிய நியாயமான, எதார்த்தமான பேச்சுக்களை, வார்த்தைகளின் ஆழத்தை சிந்திக்க மறுத்து, ஏற்க மறுத்து, திடீரென வானத்தைப் பிளந்து கொண்டு வந்த இடி முழக்கமும் பூமியைத் தழுவிச் சென்ற மின்னலும், தெற்கு பக்கமிருந்து வீசிய புயல்காற்றும் அந்த மேகமலைத் தோட்டத்துக் காம்பராக்களின் தகரக் கூரைகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் அதிரவைத்தது. ஆங்காங்கு உயர்ந்து நிழல் பரப்பி நின்ற கவ்வாத்து மரங்கள் சலசலத்தன. மீண்டும் மலைகளில் கருமுகில் கூட்டம் திரைக்கட்டி மழையை வரவேற்கத் தயாராகின. துக்கம் விசாரிக்க வந்த சனக்கூட்டம் வேகமாக களைய ஆரம்பித்தது. வந்திருந்த அதிகாரிகள் மழையின் அரவணைப்பிலிருந்து விடுபட்டு தங்களது பங்களாக்களை நோக்கி விரைந்தனர். கண்ணாயியின் வார்த்தைகள் எவர் காதுகளுக்குள்ளும் புகுந்துக்கொள்ளாது காற்றுடன் சங்கமமாகியது.

தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் குளவிக்கொட்டிலிருந்து தம்மை பாதுகாத்து தர கூறி பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். ஊடகங்கள் அனைத்திலும் மீனாட்சியின் மரணம் பற்றியும் குளவிக்கொட்டுக்களிலிருந்து விடுதலைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பரபரப்பாக போசப்பட்டது. பொருளாதாரத்தின் முதுகெழும்புகள் உடைந்துவிட்டால் தேயிலைச்செடிகள் துளிர்விடாது என்பதை அறிந்த முதலாளிகள் சபை கூடி பல கருத்துக்களை முன்வைத்தனர். மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் பெருந்தோட்ட கம்பனிகள் நடத்திய தீர்வு யுத்தத்தில் சில நடைமுறைகள் முன்வைக்கப்பட்டன. இரசாயனப் பதார்த்தங்களை பாவிப்பதைவிட இயற்கையான முறையில் குளவிக்கூடுகளை அழிக்க தோட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க தீர்மானிக்கப்பட்டது. தோட்ட மக்களுக்கு தகவல்கள் பரப்பப்பட்டது. தற்காலிகமாக தோட்ட நிர்வாகம் மண்ணெண்ணை, வெங்காயம், வாழை இலை சாறு – முதலுதவிக்காக பெரட்டு களத்தில் வைத்திருந்ததுளூவிழிப்புணர்வைம் ஏற்படுத்தியது.

A life of dignity long overdue for Assam's tea workers | Ethical Trading  Initiative

இப்பொழுது அந்த தோட்டம் அனைத்தையும் மறந்து வழமைக்குத் திரும்பியது.தோட்ட கம்பனிகளும் தோட்ட நிர்வாகங்களும் தேயிலை உற்பத்தி, ஏற்றுமதி நடவடிக்கைகளில் மாத்திரம் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தன. எங்கும் தேயிலைச் செடிகள் மீண்டும் துளிர்விட்டு நாட்டின் பொருளாதாரத்தை சுபீட்சமாக்க பனிப்போர்வைக்குள் மறைந்திருந்தன. தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து பறிப்பதற்காக இடுப்பில் ‘இறப்பர் சீட்’, ‘சாக்கு’ – கட்டிக்கொண்டு, முதுகில் ‘யூரியா பேக்’குகளுடன் மலைகளை நோக்கி விரைந்தனர். களைந்திருந்த குளவிக் கூடுகள் நியாயமற்ற பழிவாங்கல்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் மீண்டும் முடிவுறாத கொட்டுக்களை வழங்க அந்த மேகமலைத் தோட்டத்தின் இலுப்பை மரங்களிலும், சிறுவர் பராமரிப்பு இல்லங்களிலும், தேயிலைச் செடிகளுக்குள்ளும் தஞ்சம் புகுந்துக்கொண்டன.

முற்றும்.

Related posts

சிங்ககிரித்தலைவன் – 26

Thumi2021

சட்டவிழுமியம்

Thumi2021

மாமன் இருக்கேன் உனக்காக

Thumi2021

Leave a Comment