பிறவிக் குறைபாடாகத் தோன்றும் பிளவுபட்ட உதடு மற்றும் பிளவுபட்ட அண்ணம் உடலில் ஏற்படும் பிறவிக்குறைபாடுகளில் இரண்டாவது நிலையினை வகிக்கின்றது. கர்ப்பமுற்ற காலத்தில் இருந்து சிசுவின் வளர்ச்சியின் போது முகத்தின் பல பகுதிகள் தனி தனியாக உருவாகி பின்பு ஒன்றாக இணைகின்றன. பெரும்பாலும் கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் உதடு மற்றும் அண்ணத்தினை உருவாக்கும் உறுப்புகள் இணையும். இந்தப் பகுதிகள் சீரான முறையில் இணையாவிட்டால், இந்தப் பகுதிகளுக்கிடையே பிளவு ஏற்படும். பிளவுகள் Unilateral cleft, bilateralcleft, oblique facial cleft, median mandibular cleft unilateral macrostomia என்று பலவகைப்படும்.
பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் ஆனது ஒன்றாகவோ அல்லது பிளவுபட்ட அண்ணம் தனியாகவோ ஏற்படும். இலங்கையில் 700ல் ஒரு குழந்தை பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணத்துடன் பிறக்கின்றது.
பிளவுபட்ட உதடு [1:700]
பிளவுபட்ட உதடு என்பது மேல் உதட்டில் ஒரு பிளவு ஏற்படுவதாகும். கர்ப்ப காலத்தின் தொடக்க வாரங்களில் குறிப்பிட்ட சில பாகங்கள் சரிவர இணையாவிட்டால் உதட்டுப் பிளவு ஏற்படலாம். இது மேல் உதட்டில் ஒரு குளியாகவோ அல்லது ஒரு தவாளிப்பாகவோ, அல்லது முழுமையாக உதட்டின் ஒரு பக்கமாவோ(Unilateral cleft lip) அல்லது இரு பக்கமாவோ (Bilateral cleft lip) ஏற்படும்.
[படம் 1]
பிளவுபட்ட அண்ணம் [1:600]
பிளவுபட்ட அண்ணம் என்பது அண்ணத்தில் ஏற்படும் ஒரு பிரிவு ஆகும். கர்ப்பகாலத் தொடக்கத்தில் வாயின் சில பகுதிகள் இணைக்கப்படாதிருந்தால் அண்ணப்பிளவு உண்டாகலாம். இது cleft palate alone, softpalate alone, soft and hard palate, submucous cleft என்று பலவகைப்படும். இலங்கையில் 600இல் ஒரு குழந்தை பிளவுபட்ட அண்ணத்துடன் பிறக்கின்றது. [படம் 2]
இதற்கான சரியான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. எனினும் உதடு மற்றும் அண்ணப்பிளவிற்கு பலகாரணிகள் பங்களிப்பு செய்கின்றன. மரபணு காரணிகள், சூழல் காரணிகள் அவற்றில் முக்கியமானவை. சில மருந்துகள் [Phenytoin, Sodium valporate, methotrexate] , (தாய்) புகைத்தல், (தாய்) மது அருந்துதல், போ(f)லேட் அளவு குறைதல் போன்றவற்றினாலும் ஏற்படக்கூடும்.
பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணத்தின் தாக்கங்கள்
உதடு மற்றும் மேல்வாய்ப் பிளவு குழந்தைகளிற்கும் பெற்றோர்களுக்கும் சமூகச் சவால்கள் சிலவற்றை உருவாக்கலாம்.
இந்த நிலைமையினை பூரணமாகச் சீர் செய்ய முடியும். உதடு மற்றும் அண்ணப்பிளவுக்குச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், குழந்தைக்குப் பாலூட்டுதல், போசாக்கு, காது கேட்டல், பற்களின் வளர்ச்சி, முகவளர்ச்சி, மானசீக மற்றும் பேச்சு போன்றவற்றில் சவால்கள் உருவாகலாம்.
பால்பருக்குதல்
உதடு மற்றும் அண்ணப்பிளவுள்ள ஒரு குழந்தைக்கு பால் குடிப்பதில் கஷ்டம் இருக்கலாம். பாலூட்டும் செயலை இலகுவாக எவ்வாறு செய்யலாம் என்பதில் பெற்றோருக்குக் குறிப்புகள் வழங்குவதில் தாதியர்களின் பங்கு அளப்பெரியது. பாலூட்டுவதற்கு சிறப்பான பால் புட்டிகள், பாலூட்டும் முறைகளும் உள்ளன. [படம் 3]
இது பற்றிய மேலதிக தகவல்களை பின்பு பார்ப்போம்.
காது கேட்டல்
மேல்வாய்ப் பிளவு சில சமயங்களில் நடுக்காதினை பாதிக்கலாம். அதனால் ஒரு குழந்தையின் கேட்கும் திறன் பாதிக்கப்படலாம்.
பற்கள்
உதடு மற்றும் பிளவுபட்ட அண்ணம் குழந்தையின் பற்கள் முளைத்தலினை பாதிக்கலாம் அல்லது மேலதிக பற்கள் முளைக்கலாம். [படம் 4]
பேச்சு
சாதாரண பேச்சு முன்னேற்றத்துக்கு அண்ணம் மிகவும் முக்கியமானது. பிளவுபட்ட அண்ணம் சரிசெய்யப்பட்டபின் அநேக பிள்ளைகளுக்கு பேச்சு சிகிச்சை (Speech Therapy) தேவைப்படும்.