இதழ்-32

சிங்ககிரித்தலைவன் – 30

சாத்தானின் வாய்!

ஆண்டாண்டு காலமாய் அமைதியாய் கிடந்த சிங்ககிரியின் நீண்ட உறக்கம் காசியப்பனால் மீண்டும் கலைந்து போனது! அரச படை பட்டாளங்கள், பணியாளர்கள் என்று சிங்ககிரியின் சூழலே ஒரே ஆரவாரமாக இருந்தது! பாதையைச் செப்பனிடுபவர்களும், காட்டை வெட்டி கட்டுமானங்களுக்கு உதவுபவர்களும், முதல் நாள் நடந்த சம்பவத்தால் சற்றுப்பயந்து போய்தான் இருந்தார்கள்… ஆனால் அதற்குப்பிறகு அப்படியொரு சம்ப வம் நடைபெறாததாலும், தங்கள் தளபதியாரே அது குறித்து ஆராய நேரில் சென்றதாலும், ஓரளவு அச்சம் குறைந்து நம்பிக்கை பெற்றிருந்தாலும், அது சாத்தானின் குன்று என்றும், சாத்தானின் வாயில் கால் வைத்ததாலேயே இரு வீரர்களும் சாத்தானின் வாயில் விழுந்தார்கள் என்றும் சில ஊகங்கள் பூதங்களாக உலாவின!

எது எப்படி இருந்தாலும் காசியப்பனோ தன் முயற்சியில் கடுகளவும் பின்வாங்கவில்லை… மீகாரனின் வரவுக்காய் காத்திருந்தான்! மேலும் அவன் சாத்தானைப் பற்றியோ… அமானுஷ்யங்களைப் பற்றியோ நம்பிக்கையற்றவனாகவே இருந்தான்!
வாழும் பொருட்டு எதுவும் செய்யலாம் என்றும், கலையின்பமாகிய நிலையின்பத்தை வேறு யாரும் அனுபவிக்காத நிலையில் நின்று அனுபவிக்க வேண்டும் என்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தான்!

இலங்கையின் அரியாசனம் கிடைத்ததும் அதைத் தன் கற்பனையில் ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த சிங்ககிரியை நோக்கி எடுத்துவந்ததில் இருந்தே அவனின் இரசிப்பின் ஆழத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்!

வழமையான சகதிக்குள் புதுமைத் தாமரையாக மலர வேண்டும் என்பதே அவனின் தீவிர எண்ணம்!

அதற்கு அதிகாரமும், ஆள்பலமும் துணை செய்ய வேண்டும்! ஆனால் இரு வீரர்களின் மரணமும் மற்றய வீரர்களின் மனநிலையைப் பாதிப் படைய செய்திருந்தது தான் இப்போதைக்கு பெரும் தலையிடியாய் அமைந்தது! குன்றில் ஏறும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களும் மனதளவில் சோர்ந்தே போயிருந்தனர்…

மாலை மெல்ல கவிந்து கொண்டிருந்தது! காசியப்பன் கூடாரத் தினுள் செல்வதும்… வெளியே வந்து பார்ப்பதுமாக மீகாரனின் வரவை எதிர்பார்த்திருந்தான்! மீகாரன் சென்றதும், அவனின் பின்னால் காசியப்பனால் அனுப்பப்பட்ட வீரர்களில் ஒருவன் தன் குதிரையில் வந்து சேர்ந்தான்!

“மன்னா… தளபதியார் ஏதோ அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார்! வீரர்கள் புதையுண்ட இடத்தில் இருந்து நாம் அமைத்து வந்த பாதை வரை பணியாளர்களை வைத்து பள்ளம் தோண்டியுள்ளார்…”

“அப்படியா?” என்று காசியப்பன் கேட்டு முடிப்பதற்குள் மீகாரன் அனுப்பிய வீரன் ஒருவன் ஓலையுடன் அவ்விடம் வந்து சேர்ந்து முதுகு மடக்கி பணிந்து ஓலையை காசியப்பனிடம் வழங்கினான்!

ஆவலாக ஓலையை திறந்தான் காசியப்பன்…

‘மன்னா…
திறந்தது சாத்தானின் வாய் அல்ல!
நம் முன்னோர்களின் மதிநுட்பம்!
காலையில், எனக்கு இரண்டு யானைகளை இங்கு அனுப்பினால்,
விரைந்து என் பணி முடியும்!வீரர்களின் அச்சமும் மறையும்”

இப்படிப் புதிர் போல ஓலை இருந்தாலும், ஆபத்து ஏதும் இல்லை என்பதை அது உணர்த்தியதால், காசியப்பன் உள்ளார மகிழ்ந்து வீரர்களை அனுப்பி வைத்து விட்டு கூடாரத்தின் வாசலுக்கு வந்த போது, லீலாதேவியும் வெளியே வந்தாள்!

காசியப்பனின் முகத்தில் தெரிந்த மகிழ்வின் சாயலால் லீலாதேவியின் முகமும் மலர்ந்தது…

“லீலா… நன்றாக ஓய்வெடுத்தாயா? உன் முகத்தில் அசதியின் ரேகையே இல்லையே… இந்தப் பயணம் உன்னைக் களைப்படையச் செய்யவில்லையா?”

“என் உயிரின் மேலான தங்களின் அரவணைப்பில்… என்னையே மறந்து யானையில் வந்தேன்… இந்த சிங்ககிரி இவ்வளவு அருகிலேயா இருக்க வேண்டும்..? ஏழு கடல்களையும்… ஏழு மலைகளையும் தாண்டியிருக்க கூடாதா? என்றல்லவா நான் கவலை கொண்டேன்..!
எப்படி அசதி கொள்வேன்? வரம் பெற்ற யாரேனும் அசதி கொள்ளவார்களா என்ன?”

காசியப்பன் அசந்து போனான்! தான் முதலில் சந்தித்த போது எப்படி லீலாதேவியின் பேச்சின் வீச்சு எப்படியிருந்ததோ அதை மீண்டும் கண்டதால் காசியப்பன் இன்னும் இன்னும் மகிழ்ந்தே போனான்!

“சாத்தானின் வாய் திறந்ததாகப் பேசிக்கொள்கிறார்களே…
கேள்விப்பட்டாயா லீலா?”

“கேள்வியுற்றேன் நாதா…
இரண்டு வீரர்கள் மடிந்ததையும் அறிந்தேன். அந்த இரண்டு வீரர்களின் குடும்பங்களுக்கும் நீங்கள் இழப்பீடு வழங்கியதாகவும் அறிந்தேன்…”

“லீலா… இந்த நாட்டை என்னருகில் இருந்து ஆளப்போகின்றவள் நீ…நான் எடுத்திருக்கும் இந்த முயற்சி பயனற்றதா? சாத்தானின் வாய் குறித்து நீ அச்சம் கொள்ளவில்லையா?”

‘நாட்டை ஆளும் திறமை எனக்கு இல்லை ஆயினும் உங்கள் அன்பை நான் மட்டுமே ஆள ஏங்கித்தவிக்கின்றேன்… உங்கள் முயற்சி பயனற்றது என்று யார் சொன்னாலும் அவர்களின் நாவை அறுத்து வீசுங்கள்! சாத்தானின் வாய் திறந்தால் உங்கள் வாளால் அதை மூடிவிடுங்கள்! நீங்கள் அருகிலிருக்க எனக்கு அச்சம் தான் ஏது? “

காசியப்பனுக்கு ஏற்ற துணையாக லீலாதேவி வரலாறு எங்கும் பேசப்படுவாள் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையா என்ன?

காதல் நீளும் …

Related posts

அழகான ராட்சசியே!

Thumi2021

ஈழச்சூழலியல் 19

Thumi2021

தாய்ப்பால் – ஒரு அறிமுகம்

Thumi2021

Leave a Comment