இதழ்-34

சாபமா என் சபதம்?

மனைவிக்கு கண்கண்ட தெய்வம் கணவன் என்றார்கள். என் தெய்வங்கள் ஐந்தும் கல்லாகிப் போய் தலை கவிழ்ந்து முழந்தாலிட்டு உட்கார்ந்திருந்தன. பஞ்ச பூதங்கள் சாட்சியாக எந்த நிலையிலும் என்னை கைவிட மாட்டோமென கரம் பற்றிய என்னவர்கள் கைகள் சகுனியின் பகடைகளால் கட்டுப்பட்டு விட்டன . அடிமைகளாகி விட்டவர்களால் இனி ஆவதொன்றும் இல்லை. எனக்கான கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டனவா? இந்த அபலையின் குரலுக்கு அபயம் அளிக்க ஒருவருமா இல்லை?

இருக்கிறான்! கோபியருக்காக கோவர்த்தனம் ஏந்தியவன் இருக்கிறான்! காளிங்கனில் நர்த்தனம் ஆடியவன் இருக்கிறான்! வெண்ணையும் உண்பான்! மண்ணையும் உண்பான்! ஆடுபவர்கள் எல்லோரையும் ஆட்டுவிக்கும் இடையன் அவன்! எந்தப் பகடைக்கும் பலியாகாதவன். கவ்வும் சூதையும் கவிழச் செய்பவன்! என் மித்திரன் கண்ணன்!

என்னை என்னாலும் காக்க முடியாதென்பதை உணர்ந்தேன். என் ஆடைகளை பற்றிய கைகளை தளர்த்தி சிரம் மேல் குவித்து ” இனி எல்லாம் உன் செயல்” என்று மாதவனை முழுவதுமாக சரணடைந்தேன். அடுத்த நொடி அவன் வந்துவிட்டான். திரண்ட பலம் முழுவதையும் கொண்டு என்னை போர்த்திய ஆடையை விலக்கிக் கொண்டே இருந்தான் துட்டன் துச்சாதனன். மலை போல் குவிந்தது அவன் அவிழ்த்த ஆடை. ஆனால் வளர்ந்து கொண்டே இருந்தது என்னை போர்த்திய ஆடை! எப்படி? எல்லாம் மாயவனின் மாய லீலைகள்!

அன்றொருநாள் குளக்கரையில் கண்ணன் மானம் காக்க நான் கிழித்துக் கொடுத்த என் சேலையின் ஒரு துண்டு இன்று பல்கிப் பெருகி சேலை மலையாக எனக்கு திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைத்தான் பின்னாளில் வள்ளுவர் ” காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப்பெரிது” என்கிறார். துண்டாக கொடுத்தது துச்சாதனனை மூர்ச்சையடையச் செய்யும் நீண்ட துகிலாக மாறியது. உடனிருந்த எவராலும் எதிர்த்து குரலே கொடுக்க முடியாத அந்த சபையில் சத்தமே இல்லாமல் என் சங்கடம் தீர்த்து மானம் காத்தான் கண்ணன்!

ஆபத்தில் உதவியவன் தான்! ஆனால் அவனிலும் எனக்கு ஒரு குறை! ஆண்டவன் என்றால் அழைத்தால்த்தான் வருவானா? அதீத இன்பத்திலும், மிகையான துன்பத்திலும் முக்கியமானவற்றையும் முக்கியமானவர்களையும் மறந்து விடுவது தானே மானிட இயல்பு! மறந்தேன்! அந்த மாதவனாம் மாயவனை மறந்தேன்! அழைத்தால்த்தான் வருவானா? மற்றவருக்குத்தான் அவன் கடவுள். எனக்கு மித்திரன். துன்பம் வர முதலே தோள் கொடுக்க வேண்டியவன் தானே தோழன். அப்படியென்றால் நண்பனாக அவன் தோற்றுவிட்டான்!

முக்காலமும் உணர்ந்த கண்ணனுக்கு என் இந்த கொடுங்காலம் தெரியாமலா போயிருக்கும்! கள்ளன்! பாரதப் போரை என் மூலம் நடத்த நாடகம் போட்டிருக்கிறான்! என் சபதம் குரு வம்சத்தின் சாபமாக வேண்டும் என்பதே அவன் கணக்கு!

ஆண்டவனாக மாதவன் கணக்கும் சரிதான்! கண் முன்னே ஒரு அக்கிரமம் நடக்கிறது. புத்திசாலிகள் என்று தம்மைத்தாமே நம்புபவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அமைதி காக்கிறார்கள். அவர்கள் அந்த சம்பவத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கவில்லை. எதிராகவும் குரல் எழுப்பவில்லை. நடப்பதை வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக அமைதி காக்கிறார்கள். இவர்களின் இந்த உத்தி உத்தமமானதா? மகா பாதகமானது! துகில் பறித்த துச்சாதனனிலும் துரோணர் பாவம் செய்தவராவார். விண்ணையும் பிளந்த என் அழுகுரல்களை அவர்கள் காதுகளுக்குள் வாங்காது விட்ட தவறுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டியிருந்தது. நடப்பது நடக்கட்டுமென அமைதியாய் இருந்ததற்கான பிரதிபலனை அனைவரும் அனுபவிக்காது விட்டால் இந்த உலகம் இந்த சம்பவத்தை முன்னுதாரணமாக கொண்டு இயங்கத் தொடங்கிவிடும். அமைதி எப்போதும் நல்லதல்ல என்பதை உணர்த்த அந்த அஸ்தினாபுர அரசவையில் நான் ஆகுதியாக வேண்டியிருந்தது.

சபதமிட்டேன்! சத்தமாக சபதமிட்டேன்!

சாபமென்றார்கள் சிலர்! என் சங்கடத்தில் சாந்தமாக இருந்தவர்களுக்கு என் சபதம் சாபமாகப்பட்டாலும் கவலை இல்லை. சாபங்கள் எல்லாம் சபதங்களானால்த்தான் சாத்தியப்படும் என்பதை உணர்ந்தவள் நான். “சொந்தங்கள் மீதா சாபமிடுவாய்? இரக்கமற்றவளா நீ?” என்றார்கள். உயிரினும் மேலான என் மானம் போன போது அந்த சொந்தங்கள் யாராவது என்னை சொந்தமென்று நினைத்தனரா? குரு வம்சத்தின் குலமகள் நானென்று தெரிந்தும் என் முடிபிடித்து இழுத்து வந்து மடியில் அமர்த்தப் பார்த்தவர்களையும் அதை அமைதியாக வேடிக்கை பார்த்தவர்களையும் மன்னிப்பது தான் மிகப் பெரிய அதர்மம். மன்னிக்கப்படுவோம் என்கிற நம்பிக்கையில் தவறுகள் தொடரக் கூடாது.

மற்றொன்றையும் உணருங்கள் மானிடர்களே! மானம் உயிரினும் பெரிது தான்! மறுப்பதற்கில்லை. ஆனால் எமது அத்தனை பிரயத்தனங்களையும் மீறி எமது மானம் பறிக்கப்படுமாயின் அதற்காக உயிரை மாய்ப்பது முட்டாள்த்தனம் மட்டுமல்ல கோழைத்தனமும் தான்.

எம் சக்தியையும் மீறி நடந்ததற்கு நாம் என்ன செய்ய முடியும்?

சிந்தித்து செயலாற்றுங்கள்.

சபதங்கள் சாபங்களாவதும் உண்டு.
சாபங்கள் வரங்களாவதும் உண்டு.

இப்படிக்கு,
பாஞ்சாலி

Related posts

Covid-19 நோய்த்தொற்று பரவல் காலப்பகுதியில் வாய் சுகாதாரத்தினை பேணுதல்

Thumi202121

T-20 உலகக்கோப்பை 2021 அணிகளின் அலசல் – 03

Thumi2021

சித்திராங்கதா – 33

Thumi2021

Leave a Comment