இதழ்-34

சிங்ககிரித்தலைவன் – 32

மரக்கலத்தில் சென்ற தந்தம் யானையில் வந்தது!

அவசர அவசரமாக காசியப்பனின் யானை சிங்ககிரியை சென்றடைந்தது!
அதே நேரத்தில் மீகாரன் தன் குதிரையை எடுத்துக்கொண்டு அனுராதபுர கோட்டையை நோக்கி புறப்பட்டான்! அவனுடன் கூடவே ஐந்தாறு வீரர்களும் சென்றார்கள்…

புனித தந்த தாது புத்தருடையது! அது காலாகாலமாக அரசாட்சியை செலுத்துபவர்களின் அடையாளமாகத் திகழ்ந்தது… இலங்கையின் அரியாசனத்தில் யார் அமர்ந்து இருக்கிறார்களோ அவர்களின் பாதுகாப்பிலேயே புத்தரின் புனித தந்த தாது அமைந்து விளங்கும். அதேவேளை புத்தரின் புனித தந்தத்தின் ஆசியும் பாதுகாப்பும் அரியாசனத்தில் மீதும் இருக்கும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரச அந்தஸ்தாகவும் விளங்கியது!

புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பிறகு அவருடைய உடற்பாகங்கள் பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவற்றை வைத்து புனித தாதுகோபங்கள் அமைக்கப்பட்டதாகவும் வரலாறு சொல்கிறது.

அப்படி பாரதத்தின் கலிங்கத்தில் பாதுகாக்கப்பட்ட புத்தரின் பல்லாகிய புனித தந்த தாதுவை, இளவரசி ஹேமமாலி, தன் கணவனான இளவரசன் நந்தா என்பவனுடன், தன் தந்தையான அரசன், குகசிவனின் ஆணைப்படி, தன்னுடைய தலைமுடிக்குள் வைத்து பாதுகாத்து இலங்கைத் தீவை வந்தடைகின்றள். அப்போது ஆட்சி செலுத்திய ஶ்ரீமேகவர்ணன் (301-328) அவர்களை உபசரித்து, தந்ததாதுவைத் தன் சிரம் மேல் தாங்கி ஆலயமும் அமைப்பித்தான்! அன்றில் இருந்து அது அரச சின்னமானது!

அத்தகு வரலாறு கொண்ட புனித தந்த தாது இன்று மீண்டும் பாரதத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை எண்ணி காசியப்பன் மிகுந்த கோபம் கொண்டவனாக இருந்ததோடு, அதை முறைப்படி பாதுகாக்கத் தவறிய தன் தவறையும் எண்ணி வருத்தம் மிகக் கொண்டவனாகவும் இருந்தான்!

மகாநாமரின் புத்திசாலித்தனத்தையும், தமிழகத்தில் இருந்தபடியே காய் நகர்த்தும் சாமர்த்தியத்தையும் எண்ணி வியந்தான்!மரபுரீதியாக ஒரு ஆட்சி அதிகாரத்தை எப்படி தக்க வைப்பது என்று மகானாமர் அறிந்திருந்தார்!

புனித தந்த தாது இல்லாத ஒரு ஆட்சி அங்கீகரிக்கப்படாத ஒரு ஆட்சியாகவே அமையும் அது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும்! இறை சின்னம் இல்லாத ஆட்சியை ஏற்றுக்கொண்டால், தங்கள் மீது இறைவன் கோபப்படுவான் என்கின்ற ஒரு மாயையை மக்களிடத்தில் அது உண்டாக்கும்!இதன் மூலம் அந்த ஆட்சியை மிக இலகுவாக அழித்து விடலாம் என்பது மகாநாமரின் சிந்தனையாக இருக்க வேண்டும்!

மீகாரன் அனுராதபுரத்துக்குச் சென்று இரண்டு பகல் கடந்து விட்டது!
சிங்ககிரியின் அடிவாரத்துக்குச் சென்றவுடனேயே காசியப்பன் சில வீரர்களை அழைத்து ஒரு பகுதியை சுட்டிக்காட்டி அதை அலங்கரித்து பெரிய கூடாரம் ஒன்று அமைக்குமாறு கட்டளையிட்டிருந்தான்!

இரவு தீபங்களால் அந்த இடம் ஒளிர வேண்டும், என்பதற்காக அவசர அவசரமாக தீப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டன!

பாதை மிக விரைவாக செப்பனிடப்பட்டது உடனடியாக அங்கிருந்த அரச வம்சத்தவர் களுக்கு சில அறிவித்தல்கள் வழங்கப்பட்டன…
அவர்கள் விரைவாகத் தங்களை அலங்கரித்துக் கொண்டு எதற்கோ தயாராகினார்கள்!

அங்கிருந்த வீரர்கள் சிலர் தமக்குள் ‘புத்தரின் புனித தந்த தாது இன்று சிங்ககிரிக்கு வரப்போகிறது’ என்று பேசிக்கொண்டார்கள்!லீலா தேவி தன்னை அலங்கரித்துக்கொண்டு காசியப்பனின் அருகில் ஒரு மேடையில் அமர்ந்திருந்தாள்! தம் அரசியாரைப் பார்ப்பதற்கே பல வீரர்களும் அரச வம்சத்தவர்களும் முண்டியடித்துக்கொண்டனர்!

“என் அன்புக்கு பாத்திரமான இலங்கையின் அரணாக விளங்கும் வீரர்களே…. அரச வம்சத்தவர்களே…. இன்று என் மனைவி அதாவது உங்கள் அரசியான லீலாதேவியை இவ்விடத்தில் அறிமுகம் செய்து வைப்பதில் நான் அதிக ஆனந்தம் கொள்கிறேன்!அதைவிடவும் ஆனந்தமான ஒரு செய்தி…. காலாகாலமாக இலங்கையின் அரசர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வரும் புத்த பெருமானின் புனிதப் பல் என்று அனுராதபுரம் வழியாக புறப்பட்டு நாளை இங்கே வருகிறது! புத்த பெருமானின் ஆசியுடன் இந்த குன்றத்தின் மேலே நாம் ஏறுவோம்!”

“அரசர் வாழ்க!! அரசியார் வாழ்க!!”

அந்த வாழ்த்தொலிகள் சிங்ககிரியில் பட்டு தெறித்தது!
அதே நேரத்தில் அனுராதபுரம் மகாபோதி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட யானையில் புத்தரின் புனித தந்த தாது பயணப்பட தயாரானது!
“புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி”
அனுராதபுரமே பெளத்த துறவிகளின் அணிவகுப்போடு சிங்ககிரியை நோக்கிப் புறப்பட்டது.

பயணம் தொடரும்….

Related posts

பரிசு வேண்டாம்…!

Thumi202121

சாபமா என் சபதம்?

Thumi2021

குழந்தைகளில் ஏற்படும் வலிப்பு/ காக்கை வலிப்பு (EPILEPSY)

Thumi202121

Leave a Comment