இதழ்-34

அவளுடன் ஒரு நாள் – 02

நீளமாயும் அழகாயும் இருந்த அவளுடைய கூந்தல் கத்தரிக்கப்பட்டு காதுமடல்கள் வரை பரவியிருக்க.. சோடிச்சிமிக்கிகள் தொங்கிய அந்த இரு காதுமடல்களும் வெறுச்சோடிப்போய் கிடந்தன. தலையை அசைத்து அசைத்து அவள் பேசுகின்ற பொழுது காற்றில் படர்கின்ற கருங்கூந்தலில் ஒரு வாசம் வருமே, அதில் ஜீவன் சில சமயங்களில் மயங்கியே போய்விடுவதாகவும், பின்னர் சோடிச்சிமிக்கிகளின் சத்தத்தில்தான் தான் விழித்துக்கொள்வதாகவும் கூட எத்தனையோ காதல் கவிதைகளும் அவளுக்காக எழுதியிருக்கிறான்.

இரு புருவங்களுக்கும் இடையே அவள் வைத்துக்கொள்ளும் பொட்டு. அதுவும் இருக்கவில்லை. நெற்றி வெற்று நெற்றியாக இருந்தது. கண்ணுக்கு முன்னே பூத்துச்செழித்த ஒரு பூங்காவனம் திடீரென வரண்டு போன பாழ்நிலமாய் மாறினால் அது எப்படி இருக்கும்? அதை எப்படி அவ்வளவு எளிதில் ஜீரணித்துக்கொள்ள முடியும்? காதல் பெருகி பொங்கிக்கொண்டிருக்கின்ற ஒரு மனத்திற்கு இந்தக்கொடூரத்தை ஏற்றுக்கொள்வது எத்தனை கடினமானது? ஜீவனின் மனது கிடந்து பதைக்கிறது. மார்புக்கும் வயிற்றுக்கும் உள்ள தூரத்தில் இனம்புரியாத ஒரு வருடல் இருக்கத்தான் செய்கின்றது. இவை அனைத்துமே பொய்யாகிவிடக்கூடாதா? ஒரு நிமிடம் நப்பாசையில் கண்களை மூடி எண்ணிக் கொள்கின்றான்.

கண்களை திறக்கின்ற பொழுது அவளுடைய கருவிழிகள் இரண்டும் அவனை ஒரு தேடல் கலந்த காதலில் பார்க்கின்றன. அந்த கண்கள் இரண்டும் காண்பவர் அனைவருக்கும் சொர்க்கத்தை நொடிகளில் காட்டிவிடும் காந்தங்கள். பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் விடிகாலையில் போட்ட தூக்க மருந்தின் விளைவால் அந்த காந்த விழிகள் இரண்டும் உயிரின்றி பாதி திறந்த வண்ணம் இருந்தன.

“அது.. அ..”

ஜீவன் ஏதோ பேச நினைக்கின்றான், ஆனால் முடியவில்லை.

வார்த்தைகள் பிறக்க முன்னே மரணித்துப் போகின்றன. அவனுடைய கண்களில் காதல் நீராய் கசிகின்றது. கசிந்த காதல் கன்னங்களில் பட்டு ஒழுகி அவனுடைய உதட்டு வரிப்பள்ளங்களில் வடிந்து போகின்றது. ஆண்கள் அழமாட்டார்கள் என்று யார் சொன்னது? ஆண்களும் அழுவார்கள். மெய்யான மையல் கண் முன்னே சாம்பலாகி மடிகின்ற பொழுது எந்த ஆணுமே உடையத்தான் செய்கின்றான்.

அவன் அழுதுகொண்டிருக்கின்றான். கண்களில் நீர் பெருகிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த கள்ளி ஒக்சிஜன் பைப்பிற்குள் இருந்து சிரிக்கிறாள். இவளை என்ன செய்வான் அவன்? முதலாவது தடவையாக அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போனது என்று ஒரு முறை ஜீவன் அழுதிருக்கிறான். அப்பொழுது கூட,
‘ஐயோ என் சின்ன ஜீவன் பாப்பா, ஏன்டா அழுற என் தங்கமே..”

என்று அவன் அழுகின்ற பொழுது கூட அவனை அழவிடாமல் கண்ணீரோடு சேர்த்து சிரிக்க வைத்தவள் இந்த மாயக்காரி. ஆனால் அது வேறு, இது வேறு. இன்று இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் கூட இவளால் எப்படி சிரிக்க முடிகிறது? உண்மையிலேயே இவள் மாயக்காரிதான்.

பாதி திறந்த விழிகளிரண்டும் அந்தப் புன்னகையை அள்ளிவந்து ஜீவனிடம் சேர்க்க, மெய்சிலிர்த்துச் சிலும்பிப்போனான் அவன்.

அந்த வலியிலும் அவனுக்காக புன்னகைக்கிறாளே, பதிலுக்கு அவனும் புன்னகைத்தான்.

கன்னங்களில் வடிந்திருந்த நீரை ஷேட் காலர்களால் துடைத்துவிட்டு கட்டிலுக்கு அருகிலிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான்.

அத்தோடு எழுந்து போய் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க முடியாதவர்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு கட்டிலில்தான் அவள் இருந்தாள். ஜீவனின் மனது நெருப்பாய் சுட்டெரித்தது அவனை.

முதல் முறையாக தன்னை கட்டியணைத்து அவள் தந்த முதல் முத்தம்.

முதல்முறையாக ஒரு சிறுபிள்ளை போல தன் மடியில் உட்கார்ந்து கொண்டு பின்னால் திரும்பி ஜீவனை பார்த்து அவள் சிரித்த சிரிப்பு.

எல்லாமே ஒரு கலவையாய் சேர்ந்து ஜீவனை வதைத்துக்கொண்டிருந்தன.

தைரியத்தையும் காதலையும் வரவழைத்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.

‘இப்பொ..”

‘இப்பொ உனக்கு..”

‘இப்ப எப்படி?”

முடிந்த மட்டும் முயற்சித்து பேசினான். அவளால் பதிலுக்கு பேசமுடியாது தான். ஆனால் அதே புன்னகை மாறாமல் கையசைக்கிறாள் அவள், வலியிலும் சிரிக்கிறாள். அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமே.

மறுபடியும் பேசிப்பார்க்கின்றான்.

“இப்ப உனக்கு நல்லமா?”

காற்றில் அசைந்த அவளுடைய விரல்களுக்கு, ரிதம் சேர்த்து அவள் காதோரம் அவன் பாடிய பாட்டு நிச்சயம் அவளுக்குக் கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால்த்தான் அவளுக்கு அருகிலிருந்த அந்த இதய அலைகளை காட்டுகிற பெட்டி அவளுடைய நேர் இதய அலைகளை அவ்வளவு துல்லியமாகக் காட்டியிறாதே!

மீண்டும் புன்னகைக்கிறாள் சிறிய தலையசைவுடன்.

காலையில் வந்தவன், பகல் கடந்து, நேரம் மாலை வேளையாய் போனது கூட தெரியாமல் அவளுடனேயே கட்டிலில் இருந்தான் கண்களால் கதைகளை பேசியபடி, அவளை சிரிக்க வைத்துக்கொண்டும், கட்டிலோடு அடங்கிப் போனவளின் கனவுகளை காற்றோடு பறக்க வைத்துக்கொண்டும்.

‘அன்னிக்கு ஒரு நாள் நான் உன்ன பாக்க உன் வீட்டுக்கு வெளிய நின்னுட்டு இருந்தன். ராத்திரி ஒரு 2 மணி இருக்கும். நீ கூட மேல்மாடியில வந்து நிண்ணு கை காட்டினியே.. அப்புறமா நீ உள்ள போயிட்ட. நீ போன அப்புறம் எனக்கு என்னாச்சுனு தெரியுமா? அந்த நாய் பேரு என்ன? உங்க அப்பா கூடவே சுத்துமே.. ஆ.. ஹஸ்கி.. அது தொறத்த தொடங்கிருச்சு என்ன.. அன்னிக்கு ஓடுனன் பாரு ஒரு ஓட்டம்.. ஒலிம்பிக் போயிருந்தா நான் அன்னிக்கு ஜெயிச்சிருப்பன்..”

இந்த கதைகளையெல்லாம் சத்த மில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தவள், கண்களை சிறிதாக்கி உதட்டை விரித்து புன்னகைத்தாள். பழையதையெல்லாம் தன்னுடன் சேர்ந்து எண்ணிபார்த்து மீட்டிக் கொண்டிருக்கிறாளென ஜீவனும் அனுமானித்துக்கொண்டே பல பல கதைகளை பேச ஆரம்பித்தான். நேரம் போவதே தெரியாமல் அவளும் புன்னகைத்து புன்னகைத்து ஜீவனயே பார்த்த வண்ணம் இருந்தாள்.

உணவு வேளைகள் கொடுக்கப்பட்டும் அவன் உண்ணவில்லை. நீரை மட்டும் அருந்திக்கொண்டான். நீரை மட்டுமே.

இடையிடையே நேர்ஸ்மார் இருவராய் வந்து சேலையினை மாற்றிவிட்டும் ரிப்போட்டுக்களை பார்த்துவிட்டும் போனார்கள்.

அசைந்த விரல்கள் திடீரென அவனை இறுகப்பிடித்துக்கொண்டன. கதைகளைப் பேசிய பாதியில், அவளுடைய பாதி திறந்த கண்களை பார்த்தான்.

“என்னாச்சும்மா?”

அவள் லேசாய் சிலமுறை கண்களை மூடித்திறந்தாள்.

‘நான் உன்னுடனேயே இருந்துவிடுகிறேனே.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..”

என்று அவளுடைய குறும்பு கலந்த பிடிவாதமான தொனியில் அவள் கேட்பது போல இருந்தது அந்தப்பார்வை.

அந்தப் பார்வையிலிருந்த சொல்ல முடியாத ஒரு தவிப்பு. மீண்டும் ஜீவனின் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிய,

‘நீ என்னுடன் தான் இருக்க வேண்டும், அப்படியெல்லாம் உன்னால் என்னைவிட்டு எங்கும் போய்விட முடியாது”

என்பது போல அவளுடைய கையை இன்னும் இறுகப் பற்றியபடி, அதிலேயே தலையை வைத்துக்கொண்டு அப்படியே கண்ணயர்ந்து உறங்கிப்போனான்.

சில மணி நேரங்கள் உறங்கியிருப்பான் போல. வெளியே சோவென மழை பெய்து கொண்டிருக்கும் சத்தம் லேசாக கேட்டது அவனுக்கு. அறையின் ஜன்னல்கள் திறந்திருந்ததாலோ என்னமோ, இயற்கை அன்னையின் இலவச ஏசியில் உடம்பு குளிரில் தடுமாறியது. இந்த நாட்களில் அவனுக்கு சரியான உறக்கம், உணவு எதுவுமே இல்லாததால் அவனால் எழுந்திருக்கக்கூட முடியவில்லை.

‘..தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல..’

‘..தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல..’

ஜீவனின் கைப்பேசி இரண்டாவது முறையாக ஒலித்தோய்ந்துபோகவும் தான், அவன் திடீரென எழுந்து கொண்டான். எழுந்ததும் அவன் முதலில் பார்த்தது உயிரற்ற அந்த இரு கண்களையும் தான்.

நேற்றுக்காலையில் உயிர்ப்புடன் அவனைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த அந்த இரண்டு கண்களும், ஏக்கம் தீர்ந்து உயிர்ப் பற்றுப் போயே போனது. இதய அலை காட்டும் பெட்டி கூட உணர முடியாத தூரத்திற்கு போயிருந்தன அவளுடைய இதயத்தின் அலைகளும்.

அதே கட்டில்.. அவள்.. அவளுடன் ஒரு நாள்..

‘..தென்றல் வந்து தீண்….’

தொலைபேசியை நிறுத்திவிட்டு காதில் வைத்தான்.

அடங்கிப்போயிருந்த அந்த அறைக்குள் மெதுவாக ஒரு சத்தம். “ம்..?”
‘..ஜீவா எங்கப்பா இருக்க? நான் நெறைய வாட்டி கோல் பண்ணி இருந்தனே.. எங்கப்பா இருக்க?..’ – வசந்தி

தன் காதலியை பற்றி அப்பா, சித்தி, மாமா, அத்தை, நண்பர்கள் என எல்லோரும் தெரிந்துதான் இருந்தார்கள். அவர்களாக பார்த்து பேசி வைத்ததுதானே! ஆனால் அவளுக்கு என்ன நடந்தது? எப்படி இருக்கிறாள்? என யாருக்குமே தெரியாது அவனைத்தவிர. தெரிய வேண்டாம், சொல்லியும் விடாதே என சத்தியமும் வாங்கியிருந்தாளே அவள்.

‘..ஜீவா.. தம்பீ.. இருக்கியாப்பா..?..’ – வசந்தி

திடுக்கிட்டான்.

இன்னும் அவனுடைய கை அவளுடைய கையைக் கோர்த்த வண்ணம்.

‘…………….’ எதுவுமே பேசவில்லை ஜீவன்.

இந்த மௌனத்தில் அவள் மட்டுமே கலந்திருந்தாள்.

அவளுடன் அந்த ஒரு நாள். மௌனமாகவே.

Related posts

குழந்தைகளில் ஏற்படும் வலிப்பு/ காக்கை வலிப்பு (EPILEPSY)

Thumi202121

மரணம் என்னும் தூது வந்தது!

Thumi202121

வெளியில் வாருங்கள் குழந்தைகளே!

Thumi202121

Leave a Comment