அவள் ஆழ்ந்த துயிலில் இருக்கிறாள். பெண்கள் சிலர் அவளை குழுமியிருக்கிறார்கள். அவளுக்கே தெரியாத அவளுடைய உறவினர்களும் அவளுடன் கூடப் படித்த நண்பர்கள், அவளுடைய சகோதர சகோதரிகளின் நண்பர்கள், தாய் தந்தையுடன் கூட வேலை செய்பவர்கள் என்று அத்தனை பேரும் அவளின் கட்டிலருகே வந்து மௌனமாக நிற்கிறார்கள். நின்றவர்கள் பலரும் அவளை வெறித்து பார்க்கிறார்கள்! அப்படி எதை தான் பார்க்கிறார்கள்?
இருண்டு போயிருக்கும் அவளது முகத்தையா? கறுத்துப்போன அவள் உதடுகளையா? அவள் அணிந்திருக்கும் அந்த நாவல் நிற சேலையையா? நெஞ்சின் மேலே மின்னும் தங்கச்சங்கிலியையா? இல்லை இவள் தூங்கும் போது எதற்கு கையுறைகளும் காலுறைகளும் அணிந்திருக்கிறாள் என்ற சிந்தனையா? அல்லது அவளது பூக்கள் தூவிய பஞ்சணை மெத்தை அழகையா? விலையையா?
“பொழுதாகி போனதே இன்னும் தூக்கமா
சொல்லாமல் போவது தாயே நியாயமா”
அவளை ஓரிரு நிமிடம் பார்த்து விட்டு அவர்களின் கண்கள், அருகில் அவளது தாயோ தந்தையோ அல்லது சகோதரர்களோ இருக்கிறார்களா என்று தேடுகிறது. கண்ணில் பட, அவர்களை பார்த்து தலையை அசைத்து விட்டோ அல்லது அவர்களது கைகளை பற்றிவிட்டோ நகர்ந்து செல்கிறார்கள். அந்தப்பற்றுதல்,
//போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
போனால் போகட்டும் போடா//
என்ற கால தேவனின் எழுத்தை மீள வாசித்து செல்கிறது. அவளை பார்க்க வந்தவர்களில் சிலரது கண்களில் மட்டும் கண்ணீர். அவர்கள் முன்னர் இவளுடன் நினைவுகளை பரிமாறிக்கொண்டு இருக்கலாம்!
“பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்”
தாய்க்கும் தந்தைக்கும் அழுது அழுது கண்ணீர் வற்றி கண்கள் வரண்டு போயிருக்கிறது. ஆனாலும் தன் நெருங்கிய உறவுகளை கண்டதும் தாயின் கண்கள் உடைந்து வழிகிறது. கதறுகிறாள். அவர்களிடமெல்லாம் தன் மகளின் பெருமைகளை மட்டுமே பேசிய வாய் இன்று வார்த்தைகள் இன்றி அழுது தீர்க்கிறது.
“நீ முந்தி போனது நியாயம் இல்லையே
நான் முந்தி போகவே யோகம் இல்லையே
என் தேவியே நானும் செய்த குற்றம் என்ன கூறு ஒரு பார்வை பாரு”
அழுது தீர்த்து அலங்கோலமாகி சுவரிலே தலை சாய்த்தபடியே தானே கொன்று விட்டேனா? எதையும் என்னிடம் சொன்னதில்லையே? படிப்பில் கஷ்டமெண்டு வாயே திறக்கலையே? குற்ற உணர்விலும் கவலையிலும் பொசுங்குகிறாள் அம்மா!
//இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லை என்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா//
அவள் நினைவுகள் இருபது வருடங்களுக்கு முன்னர் இழுத்துச் செல்கிறது.
பிரசவவலி ஆரம்பித்திருக்கிறது. பன்னீர் குடம் உடைந்து விட்டது. அவளை பிரசவ அறைக்கு எடுத்து செல்கிறார்கள். ஒரு தாதி குருதி அமுக்கத்தை அளக்கிறார். வைத்தியர் ஒருவர் கையுறைகளை அணிந்து வந்து அவளது பிறப்புறுப்பில் விரல்களை விட்டு கருப்பை கழுத்து ‘எட்டு சென்ரிமீற்றர்’ விரிந்து விட்டதாக சொல்கிறார். தொடர்ந்து ஏதோ மருந்து ஏற்றுகிறார்கள். ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள். வலியில் இவள் கண்கள் சொருகிறது.
“மண்ணில் ஒரு செடி முளைச்சா
மண்ணுக்கு அது பிரசவம் தான்
உன்னை பெற துடி துடிச்சா
அன்னைக்கு பூகம்பம் தான்”
பாதங்கள் இரண்டையும் கைகளால் இழுத்து பிடித்த படி மூச்சடக்கி முக்க, பிறப்பு வழி வழியே தலை எட்டிப்பார்க்கிறது. ‘அம்மா! இன்னும் நல்லா முக்குங்க!’ , தாதிகள் மாறி மாறி கட்டளை பிறப்பிக்கிறார்கள். உயிர் போகும் வலியில் இவள் இன்னும் வயிற்றை உந்தித்தள்ளுகிறாள். குழந்தையின் தலை இன்னும் கொஞ்சம் வெளியில் வருகிறது. அந்த நிலையில், இன்னொரு தாதி யோனி வழியில் கத்தரிக்கோலை விட்டு தொடை பக்கமாக யோனி வழியை வெட்டுகிறார். சரக் சரக் என்று அந்த சத்தம் இவளுக்கு இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது.
இன்னும் ஒரு பலமான முக்கல். ‘குவா குவா குவா’ என்ற சத்தம். அழுகை! அவ்வளவு நேர வலியும் நொடியில் மறைந்து போகிறது. தொப்புள் கொடியை வெட்டிவிட்டு தாதி பிள்ளையை உயர்த்தி காட்டினாள்,
‘அம்மா இங்க பாருங்க, பொம்பிளை பிள்ளை!’
“ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா”
நினைவுகள் நெஞ்சைக் கிழிக்க இன்னும் வீறிட்டு அழுதாள். மகளின் இத்தனை வருட நினைவுகளால் பீடிக்கப்பட்டு உடைந்து கிடந்த தகப்பன், இவளை தாங்கிக்கொண்டே மகளை வெறிக்கிறான்.
“ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் கால் இல்லா கட்டிலடா”
இவள் இன்னும் ஆடவே இல்லையே! இருபது வயது தானே! அவளுக்குள் என்ன அப்படி சோகம்? ஸ்ட்ரெஸ்!! நல்ல பிரெண்ட்சும் இல்லை போல!
அவளை பார்த்து விட்டு வெளியே போடப்பட்டிருந்த தட்டப்பந்தலுக்குக்கு வந்த சிறிசுகளும் பெரிசுகளும் தாங்கள் கேட்டதையும் தங்கள் ஊகங்களையும் வைத்து புலன்விசாரணையை தொடங்கினார்கள்.
“ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே”
சரியான அமைதியான பிள்ளை. ஏதும் காதல் பிரச்சினைகளோ? வருத்தமேதும் வந்து போனால் கூட பரவாயில்லை! பெத்ததுகளுக்கு கொஞ்சம் ஆத்தியா இருக்கும்! இப்பிடி அவசரப்பட்டுட்டாளே! வாழ்க்கையில அப்பிடி என்னத்தை கண்டுது?
“பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்”
பொலிஸ்காரர் வந்தவங்களே? என்ன ஒண்டும் விசாரிக்கேலையோ? ஏதும் கடிதம் கிடிதம் எழுதி வச்சுக்கிடக்கோ? எங்க பானிலயே தொங்கினது? பொடி போஸ்மோர்ட்டம் போய் தானே வந்தது! தற்கொலை எண்டு உறுதிப்படுத்தியாச்சோ?
//வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது//
என்ன வாழ்க்கையோ! இப்பத்தைய பிள்ளைகள் இந்த பேஸ்புக், போனெண்டு அதுகளோட தானே கிடக்குதுகள்! எங்க மனுஷரோட பழகினம்! பிறகு சின்ன கஷ்டம் வந்த உடனையே இப்பிடி பிழையான முடிவுகளை எடுத்துப் போடுறது! அந்தக் காலங்களில எங்களுக்கு சோத்துக்கே வழியில்லை! அதுக்காக செத்தா போனம்?
//வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்//
டயரில எழுதி வச்சிருக்காம், இந்த வருசம் சாகணுமெண்டு! படிப்பு அவளுக்கு பிடிக்கேல! தாய் தேப்பனும் படி படியெண்டு ஒரே ஆய்கினையோ யார் கண்டது? உந்த கம்பசில வருசா வருசம் ஒருத்தன் சாகிறான்! என்ன தான் செய்யிறாங்களோ! அவள் பாவி போனது போய் சேந்திட்டாள்! இனி இருக்கிற காலம் வரைக்கும் பெத்ததுகளுக்கு தானே நரகம்!
“ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?”
அதுகளும் பிள்ளை படிச்சு தங்களை பாக்கும் எண்டு ஆயிரம் கனவுகளோட இருந்திருக்குங்கள். அவளும் அவ்வளவு கெட்டிக்காரி தான்! திடீரெண்டு என்ன நடந்திச்சுதோ! என்ன பிரச்சனை எண்டாலும் தற்கொலை தீர்வில்லை தானே!
“கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்”
காடு வா வா எண்டுது வீடு போ போ எண்ட நிலையில இருக்கிற கிழங்களெல்லாம் இப்பவும் இயமனுக்கு தண்ணி காட்டிக்கொண்டு இருக்குதுகள்! இதுகள் பிஞ்சுகள் தாங்களே வலிய போய் சாகுதுகள்! இதுகளை நினைக்க மனுசருக்கு ஆத்திரம் தான் வருகுது!
“சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்”
என்னவோ அண்ணை! பெட்டை செத்துப் போச்சு! இனி என்னத்தை கதைச்சு என்ன பலன்! போனவள் வரவே போறாள்?
//நமக்கும் மேலே ஒருவனடா
அவன் நாலும் தெரிந்த தலைவனடா
தினம் நாடகமாடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா//
இஞ்சை பேஸ்புக்கை பார்! இது தான் கதை! ஃபேஸ்புக் பக்கம் போனாலே ஒரே அஞ்சலி போஸ்ட்டும் அவெயர்னஸ் போஸ்டுமா கிடக்கு. அவள் செத்துப் போனாள்; அங்க இருக்கிறவனுக்கு இண்டைக்கு கன்டண்ட்! அவ்வளவு தான்! நாளைக்கே இன்னொண்டு சாகும்! அப்பவும் ‘தற்கொலை எதற்கும் தீர்வல்ல ரைட்டப்புகள்’
“பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றது என்பது மெய்தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே”
கிரியையள் முடியுது போல! நேரமும் நெருங்குது! என்ன மாதிரி சூசைட் கேஸ் தானே! எரிக்கிறதோ? புதைக்கிறதோ? சுடலை கிட்டவே?
“விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு”
தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பது உண்மை தான்! ஆனால் அந்த நேரத்து மனப்பிறழ்வுக்கு அந்த முடிவு தான் அவர்களுக்கு சரியானதாக தோன்றும். சமூகம் இன்றும் தற்கொலைக்கு முயல்பவர்களை குற்றவாளிகளாகவே பார்க்கிறது. அந்த நிலையில் அந்த நபரினால் அதை தாண்டி சிந்திக்க முடியவில்லை என்பது தான் உண்மை. அந்த நபர் மற்றும் அவர் சார்ந்த சூழல் தான் “தற்கொலை” என்ற முடிவுக்கு அழைத்துச்செல்கிறது.
பல காரணங்களால் தீர்மானிக்கப்பட்டாலும் பிரதான மூன்று காரணிகள்,
1.சமூக ஆதரவு(Social support) – குடும்பம், நண்பர்களுடன் நல்ல பிணைப்பு இல்லாதவர்கள்.
2.பிரச்சினைகளை கையாளும் திறன்(coping strategies)- சின்ன சின்ன விஷயத்துக்கும் மன ரீதியான காயப்படுகிற, பிரச்சினைகளை உள ரீதியாக கையாளும் திறன் குறைந்தவர்கள்.
3.தனிநபர் ஆளுமை தொடர்பான காரணிகள்( Personality factors) – தனிமையை விரும்பும் நபர்கள்( Isolated persons), பிறர் கவனம் தேடும் நபர்கள்( Attention seeking personalities), Manipulative personalities and so on.
அவளுடைய பல்கலைக்கழகத்தில் “Suicide” எனும் தலைப்பில் விரிவுரை நடந்து கொண்டிருந்தது…