இதழ்-34

வெளியில் வாருங்கள் குழந்தைகளே!

தரையில் ஓடியாடி விளையாடாமல், திரையில் பொம்மைகளை ஓட வைத்தும் ஆட வைத்தும் கொண்டிருக்கும் எனதருமைக் குழந்தைகளே! கேளுங்கள்…

இந்த வயதில் விளையாடுவது தான் உங்கள் கல்வி, வேலை, பொழுது போக்கு எல்லாமே! தீரும் வரை விளையாடி தீராத விளையாட்டுப் பிள்ளை என்று பெயர் எடுக்க வேண்டிய வயது இது! நீங்கள் ஓட வேண்டும், பாய வேண்டும், நீந்த வேண்டும், ஏற வேண்டும், முக்கியமாக விழ வேண்டும், அதை விட முக்கியமாக விழுந்த போதெல்லாம் எழ வேண்டும், காயங்கள் பட வேண்டும், மண்ணோடு விளையாட வேண்டும், மரங்களோடு விளையாட வேண்டும், கொப்புகளில் ஊஞ்சல் கட்டி ஆட வேண்டும், பூக்களை பறித்து எறிய வேண்டும், காய்களையும் கனிகளையும் பறித்து சுவையை ஆராய வேண்டும்,

ஏட்டிலே சுரைக்காய் என்று எழுதி விட்டு அதை வெட்டி கறி சமைக்க இயலாது. மிளகாய் உறைக்கும் என்றும் கரும்பு இனிக்கும் என்றும் மனனம் செய்து மண்டையில் ஏற்றாதீர்கள்! கடித்துத் தின்று மென்று பாருங்கள். பட்டறிவு தான் பகுத்தறிவுக்கே அடிப்படை என்பதை உணருங்கள்!

அங்கே இந்த அட்டைப் படத்தைப் பாருங்கள்… உங்களைப் போல ஒரு குழந்தை குதித்துக் குதூகலிப்பதைப் பாருங்கள். அந்த முகத்தைப் பாருங்கள். ஒரு கோடி சூரியப் பிரகாசம் தெரியவில்லையா? அப்படி என்ன மகிழ்வு அந்தக் குழந்தைக்கு? வித விதமான பொம்மைகளுடன் விளையாடும் குழந்தைகளுக்கு கிடைக்காத ஒரு திருப்தி நிறைந்த மகிழ்ச்சி சாதாரண தெரு நாயுடன் தெருவோரமாக விளையாடும் ஒரு குழந்தைக்கு எப்படி கிடைத்தது?

இந்தக் கேள்விக்கான பதிலை வார்த்தைகளில் வடிப்பதும் வர்ணிப்பதும் கடினம். அனுபவித்துப் பாருங்கள் புரியும். சந்தோசத்தின் எல்லை வரை சென்று வருவீர்கள். குழந்தைகள் தினத்தில் உங்களுக்கு ஒரு பரிசு தரப்போகிறேன். இந்த சந்தோசம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறேன். எங்கென்றா பார்க்கிறீர்கள்? வெளியில் வாருங்கள். நான்கு சுவர்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதா உங்கள் நீண்ட நெடிய வாழ்க்கை. கட்டிலிலோ, கதிரையிலோ இருந்தால் அந்த அளவற்ற ஆனந்தம் அணுவளவும் கிடைக்காது. வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து இயற்கை தந்த அனைத்தையும் ஆறுதலாக அனுபவியுங்கள். மரங்களோடு பேசுங்கள். மலர்களோடு பாடு ங்கள். போதுமான நேரம் இந்த வயதில்த்தான் உங்களிடம் இருக்கிறது. இயற்கையோடு விளையாடுங்கள். இயற்கைக்குள் விளையாடுங்கள்!

பிள்ளையார் பிடிக்கிறேன் என்று குரங்காக்கிக் கொண்டிருக்கும் பெற்றவர்களே! உங்களுடன் ஒரு நிமிடம்!

வெய்யிலில் திரியாதே! வெளியில் திரியாதே! என்றுபொத்தி பொத்தி
நோயே வராமல் வளர்ப்பதல்ல சிறப்பு! கணனியில் விளையாடு வதல்ல கௌரவம் ! களனியில், காட்டில், மேட்டில் விளையாடுவதே ஆரோக்கியம்! நோய் வந்து போனால்த்தானே நோய் எதிர்ப்பு சக்தியும் வளரும். நோயே வராமல் குழந்தையை வளர்த்தால் இளைஞனாய் அவன் வளருகையில் நோயாளியாகிப் போவான். நீங்கள் எப்படி வளர்ந்தீர்களோ, அப்படியே உங்கள் குழந்தையையும் வளரு ங்கள். சொகுசு வாழ்க்கையை குழந்தைக்கு கொடுக்கிறேன் என்று சோம்பல் வாழ்க்கையை கொடுத்து விடாதீர்கள்.

நீங்கள் வளர்ப்பது குழந்தையை மட்டுமல்ல, அடுத்த தலைமுறையை என்பதை மறவாதீர்கள்.

Related posts

Covid-19 நோய்த்தொற்று பரவல் காலப்பகுதியில் வாய் சுகாதாரத்தினை பேணுதல்

Thumi202121

சர்வதேச ஓசோன் படலத்தின் பாதிப்பு மனித குலத்திற்கான சிவப்பு எச்சரிக்கை

Thumi202121

குழந்தைகளில் ஏற்படும் வலிப்பு/ காக்கை வலிப்பு (EPILEPSY)

Thumi202121

Leave a Comment