இதழ் 35

சித்திராங்கதா – 34

சித்திராங்கதாவின் காதல்

வியூகங்களும், சூட்சுமங்களும் சூழ்ந்த வன்னியர் விழா ஒருபுறம்
நல்லூர்க் கோட்டையில் கோலாகலமாய் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மறுபுறம் கோப்பாய் நடன கூடத்தின் நிலவரமோ கதிரவன் உச்சங்காட்டும் பொழுதிலும் காரிருளை ஒத்திருந்தது. தோழி மார்கள் எத்தனைமுறை வந்து அழைத்தும் நடன கூடத்திற்கு வரமறுத்துவிட்டாள் சித்திராங்கதா. அவளது உள்ளத்து வானமே அப்படியொரு திசைகளறியா காரிருளில் இயக்கமற்று நின்றிருந்தது.

தன்கனவு நனவாக திடத்தோடு காத்திருந்த நாள் இது. இன்றைய நாள் மட்டும் எண்ணம் போல் அமைந்திருந்தால் இப்பொழுது நல்லூர்க் கோட்டை அரண்மனையில் அவள் வெளிச்சம் பரப்பியிருப்பாள். அபிநயங்களால் கோட்டையை அலங்கரித்திருப்பாள். திட்டமிட்டு வைத்திருந்த அபிநயக் கோலங்களை அவள் கற்பனை செய்து பார்க்கையில் உள்ளத்துள் துண்டுகளாக நொருங்கிக் கொண்டிருந்தாள்.

எப்படியோ இந்த நாள் வந்துவிட்டது. இல்லை என்று தெரிவிக்கப்பட்ட பின்னும் கூட இழையளவு நம்பிக்கையோடு காத்திருந்த நாட்கள் என்பது இப்போது முடிவாகி விட்டன. இனி இல்லை. யார் மீதோ வைத்திருந்த நம்பிக்கைகள் எல்லாம் அர்த்தமற்றுப் போய்விட்டன.

பெருந்துன்பத்தில் தனிமையில் உழலும் எந்த ஜீவனும் அந்த சமயத்தில் புத்தி உரைப்பதை ஏற்கமறுப்பேன் என்றே அடம்பிடிக்கும். துன்பத்தோடு தனிமை சேருகின்றபோது நேருகின்ற ஓர் அசாதாரண நிலமை அது. தன் துன்பத்திற்கு சிறிதும் காரணமில்லாத- ஆனால் தன் தனிமைக்கு துணையாய் இருந்திருக்க வேண்டிய நபர் மீது இனம்புரியாத கோபங்கள் உருவாகும்.

சித்திராங்கதா உள்ளத்திலும் அப்படியானதொரு கோபமே உருப்பெற்றிருந்தது. அவள் தன் தனிமையின் துணையாய் யாரை நினைத்திருந்தாள் என்பதை வாசகர்கள் ஊகித்திருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை. ஆம் வருணகுலத்தானைத் தான்.

ஆர்ப்பரித்து அலையும் பெருங் கடலைத் தாண்டி புரவியில் வந்த மாவீரன் என்று யாரை நினைத்திருந்தாளோ அந்த மாவீரர் கூட தன் கண்ணீரை கண்டு கொள்ள எண்ணவில்லை என்பது அவளிற்கு தகிக்க முடியாத வேதனையைக் கொடுத்தது. இதுவரை நாமும் வருணகுலத்தானுடன் மட்டுமே பயணித்திருந்தோம். அவனுடைய எண்ணங்களூடாகவே நாம் சித்திராங்கதாவையும் நோக்கியிருந்தோம். ஆனால் இப்போது முதன் முதலாய் தனிமையில் வாடும் சித்திராங்கதாவின் உள்ளத்து உணர்வுகளை அவள் அருகில் சென்று கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்வோமா?

நாட்டியமே விளையாட்டு. நாட்டியமே பொழுது போக்கு. நாட்டியமே வாழ்வு. நாட்டியமே உயிர் என வளர்ந்து வந்தவளிற்கு அரங்கேற்றம் என்பதொரு நாள் அரசவையில் குறிக்கப்பட்ட செய்தியினை அவள் வாழ்வின் வரமென கருதினாள். முதன்முதலாய் மேடையேறப்போகும் அரசவை குறித்து கற்பனைகளால் ஏராளம் ஓவியங்களை உள்ளத்தில் தீட்டி வைத்திருந்தாள்.

ஒருநாள் தஞ்சைவீரர் வரவை பற்றியும், அந்நாளில் சித்திராங்கதா நடன நிகழ்வு இருத்தல் அழகு என்று மாமன்னர் வேண்டியது பற்றி எச்சதத்தர் சித்திராங்கதாவிடம் கூறியபோது தன் முதல்மேடை குறித்த கற்பனை ஓவியங்களை பொய்யாக்கி ‘அரங்கேறமுதல் மேடையேற மாட்டேன்” என்ற உறுதிமொழியினை மறுமொழியாக்கினாள்.

சித்திராங்கதா சம்மதம் தெரிவிக்க வேண்டி மாவீரன் வருணகுலத்தான் வீரதீர புகழ்களை அடுக்கடுக்காய் எடுத்துரைத்தார் எச்சதத்தர்.

‘விஜய நகர இராச்சியத்திற்கே பெருஞ்சோதனை வந்த வேளை காவிரிக்கரையில் அன்று மாபெரும் போர் மூண்ட போது வருணகுலத்தான் நிகழ்த்திய வீரசாகசங்கள் எம் இராச்சியத்தில் அனைவருமே காது குளிரக் கேட்டிருந்தோம். அந்த மாவீரனை பார்த்து பாராட்ட வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்தோம். ஆனால் அவரே இப்போது எமக்காக தஞ்சைப்படை தாங்கி வருகிறார் என்பது எம் பெரும் பாக்கியமாகும். நம் தாயகம் தலை நிமிர காரியத்துணையாய் வந்திருக்கும் புகழ் மிகுந்த வீரனுக்கு வரவேற்பு நிகழ்த்த உன்னை விட சிறந்தவர் இங்கு வேறுயாருமில்லையேயம்மா”
என்று தொடர்ந்து அவர் கூறிய வார்த்தைகளால் அவள் அம்மாவீரனை தன் அகக் கண்களால் கற்பனை செய்து பார்த்தாள்.

எச்சதத்தர் கூறிய வார்த்தைகளால் அவள் உருவகித்த அந்த உருவம் அவளை அதிசயிக்க வைத்தது. தந்தை மேலும் மேலும் கேட்டதனால் தான் மேடையேற சம்மதிப்பதாய் பதிலுரைத்தாள். ஆனால் அவள் சம்மதத்தின் உண்மைக்காரணம் அவள் உள்ளத்தில் உருவகித்து வைத்திருந்த அந்த மாவீரனின் உருவம். ஆதலாலே ‘வண்ணமும் வடிவும் சென்று கண்டிலன்” என்கிற நாவுக்கரசரின் இனிய திருமுறையினை மாவீரனுக்கு மேடையில் அபிநயப் பரிசாக்க முடிவு கொண்டாள்.

வருணகுலத்தானிற்கு வாள் வழங்கும் விழாவில் அவள் மேடையேறி ஆடிய காரணம் எச்சதத்தரோ, மாமன்னரோ அல்ல. வருணகுலத்தான் மாத்திரமே ஆகும். அபிநயம் ததும்பிய கண்களோடு நொடி நொடிப் பொழுதுகளில் அந்த மாவீரனின் உருவத்தினை கண்டு தன் உள்ளத்தில் கோர்த்துக் கொண்டாள். தன் சிந்தனையில் உருவான அந்த உருவத்தோடு இந்த உருவத்தை பொருத்திப் பார்க்கையில் அவள் அடைந்த ஆச்சரியமும், ஆனந்தமும் அவளால்க் கூட அபிநயம் காட்ட முடியாததாகும்.

அந்த மாவீரனின் கண்கள் தன்னையே நோக்கி நிற்கின்றன என உணர்ந்த பொழுதுகளில் தன் பார்வையை இரகசியமாக்கி தேடும் கண்களை தவிக்கச் செய்யும் நாடகமெல்லாம் மேடையில் நின்று இவள் ஆற்றிய சூட்சுமங்களே ஆகும்.

மேடையில் அவள் இறுதி வணக்கம் கூறிய நொடி ‘வேண்டாம்” என்பது போல் பொறுமையிழந்து தலையசைத்த வருணகுலத்தானை ஓரக்கண்களால் இவள் கண்டபோது இவள் உள்ளங் கொண்ட களிப்பை முகம் வெளிக்காட்ட முன்னரே அவசரமாய் மேடையை விட்டு இறங்கி விட்டாள்.

அன்றைய அந்திப் பொழுதிலேயே நடன கூடத்தில் கூடி நின்ற தோழிகள் அவளை பரிகாசம் செய்த நொடிகளை கோபிப்பது போன்ற பாவனையில் இரசித்துக் கொண்டிருந்தாள். தஞ்சைமாவீரர் புரவியில் வந்து தன்னை இப்போதே அழைத்துக் கொண்டு போய்விடுவார் போல இருக்கிறதே என்று தோழிகள் பரிகாசம் நிகழ்த்திய கணத்திலே புரவியில் நடன கூடத்தை வந்தடைந்திருந்தான் வருணகுலத்தான்.

எதிர்பாராத விதமாய்க் கண்டதும் தாழமுடியாத சிரிப்போடு தோழிகள் விலகியோடிச் செல்ல சித்திராங்கதா மட்டும் சிலையாகவே நின்றாள். எக்காரணங் கொண்டும் தன் உள்ளத்து உணர்வுகளை வெளிவிடுதல் ஆகாதென்ற உறுதியோடு அன்று வருணகுலத்தானோடு உரையாடினாள்.

தன் உறுதியை வெளிக்காட்டும் தோரணையில் வருணகுலத்தானை அளவுக்கதிகமாகவே நையாண்டி செய்து விட்டதாய் பின்னர் உணர்ந்து தான் ஏதும் பெருந்தவறு செய்துவிட்டோமோ என அவள் தன் அந்தரங்க இரவுகளில் தவிக்காத கணம் இல்லை என்று சொல்லலாம்.

கடத்தப்பட்ட மாருதவல்லியை மீட்டுக் கொண்டு காங்கேசந்துறையிலிருந்து தஞ்சைவீரர் வந்துகொண்டிருக்கிறார் என்கிற செய்தி அன்றொரு நாளில் வந்தபோது அந்தப் பெருங் கூட்டத்தில் ஒருத்தியாய் தானும் அந்த மாவீரத்தின் பேரழகை தரிசித்த சிறு நொடியினை எண்ணி எண்ணியே தன் நாட்கள் பலவற்றைக் கழித்தாள்.

‘காத்திருந்த மாவீரர் இல்லம் நாடி வந்த போது என் போலிக் கௌரவத்திற்காய் அவரை ஏளனம் செய்து அனுப்பியது பெருங்குற்றம் தான். அந்த குற்றத்திற்காக எனக்கு விமோட்சனம் இல்லையா? என்னை மன்னித்து அருளமாட்டாயா? மாவீரனை மீண்டும் நான் எங்ஙனம் சந்திப்பேன்?” என மாயக் கண்ணனிடம் அவள் பிரார்த்தித்திருந்து விழி திறக்கையில் எதிரே வருணகுலத்தான் நின்று கொண்டிருந்த அந்த நாளில் கூட தன் குதூகலத்தை அவள் வெளிப்படுத்தாமல் கதைத்தாள். ஆனால் கடந்த முறைபோல ஏளனம் எதுவும் கூறி விடக்கூடாது என்பதில் மாத்திரம் உறுதியடைந்தாள்.

ஈசன் தனக்கென வரமாய் அளித்த ஆடற்கலையின் அரங்கேற்றம் காண கடல் – மலை தாண்டி வந்திறங்கிய மன்மதன்- மாவீரர் வருணகுலத்தான் என்பதை அவள் முழுமையாக நம்பியிருந்தாள். தான் நாட்டியம் கற்றது கூட அவனுக்காகத்தான் என உள்ளூற உணர்ந்தாள்.

இந்த மாவீரன் முன் தான் ஆடப்போகும் நாட்டிய அரங்கற்றமே தன் பிறவிப்பேறு என்று காத்திருந்தாள். அவன் தன் ஆட்டத்தைக் கண்டு உண்டு பருகுகின்ற காட்சியினை கற்பனையில் தீட்டி தீட்டி அழகு பார்த்துக் கொண்டருந்தாள். அவள் கற்பனை எல்லாம் நனவாக முன்பே கனவாகி காணமல் போய்விட்டதை அவளால் எவ்வகையில் இப்போது தாங்க முடியும்?

கற்பனைகளால் அவள் கட்டிய கோட்டை இடிந்து சரியும் போது அந்த வலி ஓர் அமைதியான பூகம்பம்தான். யாரிடமும் அதை பகிர்ந்து கொள்ளவும் இயலாது. மூடி மனதிற்குள்ளே புதைத்து விடலாம் என்றாலும் கண்கள், காதுகள், மூக்குகள் எல்லாவற்றாலும் அவ்வேதனை புகைபோல் வெளிப்பட்டு நிற்கும். இந்தப் புகையினை மேலும் எரியூட்டுவது போல் யாரோ இருவர்கள் அவள் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

கேட்போம்…

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 31

Thumi202121

கிராமத்து இளைஞர்கள்

Thumi202121

ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம்….!

Thumi202121

Leave a Comment