தென்னாப்பிரிக்கா
எப்போதும் பலம் பொருந்திய அணியாக இருந்து முக்கியமான தருணங்களில் தோற்று போகும் இவர்கள், இம்முறை கிண்ணம் வென்று அசத்துவார்களா?
டி கோக், மார்க்ரம் மற்றும் ஹென்ரிக்ஸ் என்ற தரமான Top Order துடுப்பாட்ட வீரர்கள் அணியில் உள்ளனர். மத்திய வரிசையில் அணித் தலைவர் பவுமா, மில்லர், க்ளாசென் மற்றும் வான் டெர் ட்யூஸென் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் தரமான கேசவ் மகராஜ் என்ற இடதுகை Finger Spinner மற்றும் தப்ராஸ் ஷம்ஸி என்ற இடதுகை wrist spinner கூட்டணி இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களில் ரபாடா, நோக்கியா மற்றும் நிகிடி உள்ளனர். வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என அனைத்திலும் சிறப்பாக செயற்படக்கூடிய வீரர்களை கொண்டுள்ள அணியாக திகழ்கிறது. ஏபி டீ வில்லியர்ஸ் மற்றும் டீ பிளெஸிஸ் இம்முறை அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். உலகக் கிண்ணத் தொடரில் 2009 மற்றும் 2014 இல் அரையிறுதிக்கு முன்னேறியமை தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பெறுபேறாக இருக்கிறது. இதுவரை மொத்தமாக 30 ரி20 உலக கிண்ண ஆட்டங்களில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 18 வெற்றிகள், மற்றும் 12 தோல்விகளை சந்தித்துள்ளது. 2016 ரி20 உலக கிண்ணத்திற்கு பின்னர் தென்னாப்பிரிக்கா அணி, மொத்தமாக 51 சர்வதேச ரி20 ஆட்டங்களில் விளையாடி 27 வெற்றிகள், 23 தோல்விகள் மற்றும் 1 சமநிலையும் பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான்
தாங்கள் விளையாடிய நான்கு ரி20 உலகக் கிண்ண தொடர்களுக்கும் தகுதிகாண் (Qualifiers) தொடர்களில் விளையாடி தகுதி பெற்றிருந்தனர். இம்முறை, இலங்கை பங்களாதேஷ் அணிகள் எல்லாம் உலகக் கிண்ண தகுதிகாண் குழுநிலை (Qualifiering Group Stage) ஆட்டங்களில் பங்கேற்க; ஆப்கானிஸ்தான் நேரடியாக சூப்பர்-12 க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது 2016ம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் சூப்பர்-10 க்கு முன்னேறியமை, ரி20 உலகக் கிண்ணத்தில் இவர்களின் சிறப்பான பெறுபேறாக இருக்கிறது.
அணித்தலைவர் பொறுப்பிலிருந்து நட்சத்திர வீரர் ரசித் கான் விலக சகலதுறை முன்னணி வீரரான மொஹம்மட் நபி அணியை தலைமை தாங்கிறார். அணியின் பந்துவீச்சு; ரசித் கான், நபி, மற்றும் முஜிபுர் ரஹ்மான் என்ற சுழற்பந்து வீச்சாளர்களினால் பலம் பெறுகிறது. அதுவும் ஆடுதளங்கள் சுழற்பந்து சாதகமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் பலம் குறைவாக இருந்தாலும் நவீன் உல் ஹாக் என்ற இளம் வீரர் சிறப்பாக செயற்படு கிறார்; பரீட் அஹ்மத், குல்படின் நைப் ஆகியோரும் உள்ளனர். Rahmanullah Gurbaz, Hazratullah Zazai மற்றும் Usman Ghani போன்ற அதிரடி துடுப்பாட்ட வீரர்களுடன் ஆஸ்கர் ஆப்கான் என்ற நிதானமான துடுப்பாட்ட வீரருமுள்ளார்.
அணித் தலைவர் நபியின் துடுப்பாட்ட பங்களிப்பும் அணிக்கு பலம் சேர்க்கும். ரி20 உலகக் கிண்ணத்திற்கு என்று முன்னாள் சிம்பாப்வே அணித்தலைவர் மற்றும் இங்கிலாந்தின் ரி20 உலகக் கிண்ணம் வென்ற பயிற்சியாளரான அன்டி பிளவர் (Andy Flower) ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக உலகின் சிறந்த சகலதுறை வீரரில் ஒருவரான தென்னாப்பிரிக்காபின் முன்னாள் வீரர் லான்ஸ் க்ளூஸ்னர் உம் பந்து வீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோன் ரைட் உம் உள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.