இதழ் 35

ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம்….!

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 ஆம் இலக்கமிடப்பட்ட வீடு அது! வெளித்தோற்றத்திற்கு ஏனைய வீடுகளை போன்றே ஆரவாரமற்ற அமைதியுடன் தோற்றமளித்தது. ஆனால் சாத்தப்பட்ட கதவுகளின் பின்னே ஒரு பிரளயமே நடந்தேறியிருந்தது.

அவள் வாழ்நாளுக்குமாய் இறுகப்பற்றியிருந்த கரங்கள், பிடி தளர்த்தி அவளை நிர்கதியாக விட்டு சென்றிருந்தன.

ஆள் அரவமற்ற அந்த அறையில் அவளின் விசும்பல் மட்டும் ஈன ஸ்வரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆற்றி தேற்ற அவளுக்காக அங்கு யாரும் இல்லை.

“தனியாக தவிக்கின்றேன்

துணை வேண்டாம் அன்பே போ

பிணமாக நடக்கின்றேன்

உயிர் வேண்டாம் தூரம் போ”

அவனுக்கான அத்தியாயம் அவள் வாழ்க்கை புத்தகத்தில் தொடங்க முன்னும் அவள் உரிமை கோர உற்றார் உறவினர் யாரும் இருந்ததில்லை. யாரும் இல்லையே என அவள் குறைப்பட்டதுமில்லை. அப்படியான உறவுகளை எதிர்பார்த்து ஏங்கியதும் இல்லை.

“சொந்தம் எதுவுமில்ல

அத சொல்ல தெரியவில்ல”

அவள் நினைவு தெரிந்ததிலிருந்து தனியாகவே இருந்திருக்கிறாள். தனிமையிலேயே வாழ்ந்திருக்கிறாள். ஆனால் அந்த தனிமை அவளை ஒருபோதும் நிலைகுலைய செய்ததில்லை. அனாதரவாய் உணர வைத்ததில்லை. அத்தனிமையை அவள் விரும்பினாள். அதன் சுகானுபவத்தை தினம் தினம் சுகித்தாள். தனக்கான சுதந்திர நொடிகளாக அம்மணித்துளிகளை செலவழித்தாள். அப்பொழுதுகளிலேயே சுயத்தை பூரணமாய் வெளிப்படுத்தினாள்.

“உன்னோடு மட்டும்தான்

என் நேரம் எனது

உன்னோடு மட்டும்தான்

மெய் பேசும் மனது

என் இனிய தனிமையே!”

இவ்வாறாக தனிமையிலேயே இனிமை கண்டுகொண்டு இருந்தவளை அவள் உற்ற நண்பனிடம் இருந்து பிரித்த கொடும்பாதகன் அவன்!

“ஒரு சிலர் என்னை நெருங்க

என்னிடம் பேச தொடங்க

சிறு ஊடல் கொண்டு

நீங்கி போகின்றாய்”

அவளுடைய குறுகிய வட்டத்திற்குள் அவள் அனுமதியின்றி நுழைந்தான். தனிமையின் முடிச்சிலிருந்து அவளை கட்டவிழ்த்து, தனித்திருத்தல் சுகம் என மதி கெட்டு இருந்தவளை தன் மனதில் தங்க வைத்து உண்மையான சுகானுபவத்தை காட்டினான்.

அவள் மேல் அவளுக்கே நம்பிக்கை ஊட்டினான். பல சமயங்களில் அவளை வெட்கப்படுத்தினான்; பூரிப்படைய செய்தான்; மெய் சிலிர்க்க வைத்தான். சுயம் சுற்றம் யாவும் மறந்து அவனே சரணாகதி என அவள் மனதில் சிம்மாசனம் போட்டமர்ந்தான்.

“என்னை நான் பெண்ணாக

எப்பொழுதுமே உணரல

உன்னாலே பெண் ஆனேன்

எப்படி என தெரியல”

அவள் உயிரில் வேரூன்றியவன் அவன்! இன்று ஏனோ கொடுஞ்சொல் கூறி விட்டு போய்விட்டான். அவன் மீண்டும் வரக்கூடும்; வராமலும் இருக்கக்கூடும். எது எவ்வாறெனினும் இந்தப் பொழுது, இம்மணித்துளி, இந்நொடி அவன் அவளோடு இல்லை.

“மூங்கில் காட்டில் தீ விழும் பொழுது

மூங்கில் காடென்று ஆயினள் மாது”

மீண்டும் தனிமை அவள் அருகே அவளை அணைக்க வேண்டி காத்திருந்தது. ஆனால் இப்போது அந்த தனிமை அவளுக்கு கதகதப்பு அளிக்கவில்லை; எரிதழலாய் சுட்டது. சுகமாய் அன்றி சூனியமாய் இருந்தது. அவளுக்கு ஆறுதலாய் இன்றி அருவருப்பை ஊட்டியது. உற்ற நண்பன் கொடிய எதிரியாகி அவள் இருதயத்தில் வேலை பாய்ச்சினான். அவன் பற்றிய நினைவலைகளை ஆர்ப்பரிக்க செய்யும் சுழிக்காற்றாய் மாறினான். அவனின் அருகாமைக்காக அவளை ஏங்க செய்தான்.

“தனிமை என்னை எரிக்குதே

உன் நினைவில் வதைக்குதே”

தலையணையை தாய்மடியாய் பற்றிக்கொண்டாள். தகிக்கும் நெஞ்சுக்கு தாலாட்டு தேவைப்பட்டது. இதயத்தின் கனத்தை குறைக்க தேற்றரவு கூறும் குரல் தேவைப்பட்டது. இயர்போனை காதில் சொருகி play list ஐ போனில் தட்டி விட்டாள். அவள் மனசாட்சியின் குரல் காதுக்குள் நுழைந்து மூளையில் எதிரொலித்தது.

//எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்//

அவளும் யாசிக்க தொடங்கினாள் ஏ.ஆர். ரஹ்மான் வாசித்ததை….

//இன்னிசை மட்டும்

இல்லையென்றால் நான்

என்றோ என்றோ இறந்திருப்பேன்//

தான் மறைந்தாலும் தன் இசையாலும் குரலாலும் பலரையும் இறக்கவிடாமல் தேற்றிக்கொண்டிருந்தார் சுவர்ணலதா.

இசையை நொதியம் எனக் கொள்ளலாம்.

உயிரங்கிகளில் நொதியங்களின் பங்கு இன்றியமையாதது. நொதியங்கள் உயிரியல் ஊக்கிகளாகும். அவை உயிர் இரசாயன தாக்கங்களின் ஏவற்சக்தியை குறைத்து தாக்கவீதத்தை அதிகரிக்கும். அவ்வாறே இசையும் மனிதர்களின் உணர்வுகளை அடக்கி கொள்ளும் தாங்கு திறனை(Threshold) குறைத்து அவற்றை பன்மடங்காக வெளிப்படுத்த செய்யும்.

நம் சந்தோஷம், உற்சாகம், வேகம், பூரிப்பு, நெகிழ்ச்சி, வெட்கம், சோகம், ஆற்றாமை, அழுகை என எத்தனையோ உணர்ச்சிகளை பன்மடங்காக பெருக்கிவிடும்.

“மொழி தெரியா பாடலிலும்

அர்த்தங்கள் இன்று புரிகிறதே”

இவ்விசை எனும் நொதியத்தின் துணைக்காரணி மொழி ஆகும். துணைக்காரணி என்பது குறித்த சில நொதியங்களின் ஊக்கற் தொழிற்பாட்டிற்கு அவசியமான கூறுகள் ஆகும்.

மொழி கடந்த இசை சந்தோஷ சாரலின் வெளிப்பாடாய் இருக்கும் அதேவேளை மொழியுடன் பிணைந்த இசை ஆற்றாமைக்கான தேற்றரவு!

“When you’re happy you enjoy

the music, but when you’re sad

you understand the lyrics” – Frank Ocean

அவளிற்கும் தேற்றரவாய்,

“இசை வந்த பாதை வழி

தமிழ் மெல்ல நுழைந்தது”

//புல்லாங்குழலே பூங்குழலே

நீயும் நானும் ஒரு ஜாதி

உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதி//

அவளின் மனதினுள் உள்ள ஏக்கமே புல்லாங்குழல் ஓசையாக வெளிவருவதை உணர்கிறாள். தன் மனதினுள்ள ஆறா வடு போன்றே புல்லாங்குழலும் சோகத்தில் உள்ளதாக பாவிக்கிறாள்.

இருந்தாலும் புல்லாங்குழல் அதன் வேதனையை அதன் துளையாகிய கண்களால் இசையழுகையாக்கி காற்றில் தவழ விட்டு சாந்தமடைகின்றது. ஆனால் இவளுக்கோ அத்தனை கண்களும் இல்லை. இருக்கின்ற இரு கண்களிலும் கண்ணீரும் இல்லை. மனபாரத்தை இறக்கி வைக்க வழியுமில்லை.

//அந்த குழலை போல் அழுவதற்கு

அத்தனை கண்கள் எனக்கில்லையே//

அவள் வேதனையை விலக்க வழி இல்லாவிடினும், வேதனையில் பங்கெடுக்க இசையும் வரிகளும் இருந்ததால் அவளால் தன் நிகழ்காலம் மறந்து இறந்த காலத்தை அசை போட முடிந்தது. சோக நோய்க்கு சிறந்த சிகிச்சையாகவும் இசை இருந்தது.

//கண்களை வருடும் தேனிசையில்- என்

காலம் கவலை மறந்திருப்பேன்…

எந்தன் சோகம் தீர்வதற்கு

இதுபோல் மருந்து பிரிதில்லையே//

மனத்தின் ரணத்திற்கு மயிலிறகாக, மீண்டும் நினைவலைகள் கரையாகிய அவனை தழுவிக்கொள்கின்றன… அவனும் என்னைப் போன்றே உறங்காமல் விடிய விடிய என்னைப் பற்றியே யோசித்து கொண்டிருப்பானா?

//உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள்மனதில் ஒரு மாறுதலா//

நடுநிசியில் தான் இன்றி நான் ஏங்கக்கூடும்; தனிமை என்னை வதைக்ககூடும் என எண்ணி அவன் அனுப்பும் செய்திகளா இந்த பாடல் வரிகள்?

//இரக்கம் இல்லா இரவுகளில்

இது எவனோ அனுப்பும் ஆறுதலா//

ஆனால் எப்போதும் அவன் தோள் வளைவில் இருந்தபடி அவள் கேட்கும் சிறுபிள்ளை தனமான சந்தேகங்களை நிவர்த்திக்க கூட இருக்கும் அவன், இன்று அவளுடன் இல்லை……..

//கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை எவனோ அறியவில்லை….//

Related posts

T-20 உலகக்கோப்பை 2021 அணிகளின் அலசல் – 04

Thumi202121

ஈழச்சூழலியல் 21

Thumi202121

விநோத உலகம் – 01

Thumi202121

Leave a Comment