கொரோனா ஊசி போட்டுட்டீங்களோ? எந்த ஊசி நல்ல ஊசி?
வர்சினி, வத்தளை
பதில்:-
ஓம் இரண்டு ஊசியும் போட்டாச்சு. உங்களுக்கு கிடைக்கக் கூடியதாக இருக்கிற எந்த ஊசியுமே நல்ல ஊசிதான் என்டு மருத்துவத்துறை சொல்லியிருக்கினம். ஆக, அந்த நாட்டு ஊசி இந்த நாட்டு ஊசி என்டு அடிபடாம கிடைக்கிற தடுப்பூசிகளை விரைவாக போட்டுக்கொள்றது தான் புத்திசாலித்தனம்.
திருவள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவர்?
எவனோ ஒருவன், யாழ்ப்பாணம்
பதில்:-
எங்களைப் பற்றி யாருக்கு வடிவாக தெரிஞ்சிருக்கோ இல்லையோ திருவள்ளுவருக்கு தெரிஞ்சிருக்கு. தான் இந்த மதம் என்றத வெளிக்காட்டினா திருக்குறளை இவங்கள் மத நூலாக்கி முடக்கி விடுவாங்கள் என்டு தெரிஞ்சு தான் எந்த குரளிலும் குறித்த ஒரு தெய்வத்தை குறிப்பிடவில்லை. மதங்களைக் கடந்த மனிதத்திற்கான நூல் திருக்குறள்.
உங்களுக்கு இன்னும் புரியுமாறு சொல்வதென்றால் நீங்கள் எப்படி உங்கள் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லையோ அதுபோல திருவள்ளுவரும் தன் மதத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.
தென்னை மரங்களை என்ன இடைவெளியில் நட்டால் நல்ல பயன் தரும்?
கம்சத்வினி, கிண்ணியா
பதில்:-
தென்னைக்கு தேரோட..
வாழைக்கு வண்டியோட…
கரும்புக்கு ஏரோட….
நெல்லுக்கு நண்டோட…..!
என்று இடைவெளி விட்டு பயிர் வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி சங்க கால பாடலே உள்ளது. அந்த மரத்தின் உச்ச பயனை பெற போதிய இடைவெளி மிக அவசியம். தேடிப்பெற்ற இடைவெளி அளவீடுகளை பகிர்கிறேன் சகோதரி!
👉வேப்பமரம். 15’ × 15’
👉பனைமரம். 10’ × 10’
👉தேக்கு மரம். 10’ × 10’
👉மலைவேம்பு மரம். 10’ × 10’
👉சந்தன மரம். 15’ × 15’
👉வாழை மரம். 8’ × 8’
👉தென்னை மரம். 24’ × 24’
👉பப்பாளி மரம். 7’ × 7’
👉மாமரம் உயர் ரகம். 30’ × 30’
👉மாமரம் சிறிய ரகம். 15’ × 15’
👉பலா மரம். 22’ × 22’
👉கொய்யா மரம். 14’ × 14’
👉மாதுளை மரம். 9’ × 9’
👉சப்போட்டா மரம். 24’ × 24’
👉முந்திரிகை மரம். 14’ × 14’
👉முருங்கை மரம். 12’ × 12’
👉நாவல் மரம். 30’ × 30’
Quarantine என்றால்….
14 நாள் தனிமைப்படுத்தலா?
40 நாள் தனிமைப்படுத்தலா?
ரம்யா, வெள்ளவத்தை
பதில்:-
பொதுவாக தனிமைப்படுத்தலைத்தான் Quarantine என்கிறார்கள். நீங்கள் தேவைக்கேற்ப நாட்களை இணைத்துக் கொள்ளலாம்.
பிளாக் டெத் என்று சொல்ல படுகின்ற பிளேக் எனும் கொள்ளை நோய் ஏற்பட்ட போதே இந்தச் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இத்தாலிக்கு வேறு நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக வரும் கப்பல்கள் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டு 40 நாட்கள் கடலில் தங்க வைக்க பட்ட பின்பே அனுமதிக்க பட்டன. 40 என்பதற்கான இத்தாலிய வார்த்தை quaranta இதில் இருந்து நோய் தொற்றுக்கு ஒதுக்கி வைக்கும் நிகழ்வுக்கு பெயர் Quarantine என வந்தது. ஆனால் இப்போது பொதுவாக தனிமைப்படுத்தலுக்கு இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
சங்குப்பிட்டிப்பாலத்தின்ட கதை முடிந்து விட்டதாமே! உண்மையா?
சாரங்கன், பளை
பதில்:-
2010ம் ஆண்டு அந்த பாலத்தை கட்டிய போது ஆச்சரியமாக பார்த்தார்கள். இப்போது ஆபத்தாக பார்க்கிறார்கள். உப்புத் தண்ணீர் அதிகமுள்ள இடம் என்பதால் விரைவாக துருப்பிடித்துள்ளது. அதற்கான பராமரிப்பு வேலைகளை காலத்திற்கு காலம் சுனுயு செய்து வருவது வழமை. இப்போது கொரோனா என்பதால் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவாக பராமரிப்பு பணிகள் இடம்பெறும் என்றும் கூறுகிறார்கள். பாலத்தின் பிரதான கட்டமைப்புக்கள் கல்வனைசுப்படுத்தப்பட்டுள்ளமையால் பாரிய பாதிப்பு இல்லை என்கிறார்கள். ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கியதைப் போல துரு பெரிதாக முன்னர் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.
துமியாரே! இலங்கையில் விரல் விட்டு எண்ணும் பணக்காரர்களில் நானும் ஒருவனாக என்ன செய்ய வேண்டும்?
கரன், சுழிபுரம்
பதில்:-
தேவைகளை குறைச்சுக்கொண்டே வாங்க கரன்! இலங்கையில் என்ன உலகத்திலயே நீங்கதான் பணக்காரனா இருப்பீங்க. செல்வந்தனா இல்லையான்னு தீர்மானிக்கிறது பணம் இல்லை, திருப்தியான மனம்!
யாழ்ப்பாணத்தில் சாதி இருக்கிறதா?
சங்கர், காரைநகர்
பதில்:-
சாதி என்கிற சகதிக்குள்த்தான் யாழ்ப்பாணமே இருக்கிறது.