இதழ் 35

குரும்பைகள் உதிரலாமா?

காரணங்கள் இன்றி இங்கே எதுவுமே நடப்பதில்லை என்பார்கள். அன்று நடந்த நாடுகாண் பயணங்களுக்கு மட்டுமல்ல என்றும் நடந்து கொண்டிருக்கும் நத்தையின் பயணத்திற்கும் காரணங்கள் இருக்கின்றன. ஊதப்படும் குழலுக்கு மட்டுமல்ல ஊற்றப்படும் பாலுக்கும் காரணங்கள் கனமாகவே இருக்கின்றன. காய்ந்து போன சருகுக்கும் மாய்ந்து போன உயிருக்கும் கூட காரணங்கள் இருக்கின்றன.

எங்கும் எதிலும் காரணங்கள் இருக்கின்றன என்றால் அந்த காரணங்கள் இயற்கையானதா? செயற்கையானதா?

ஒரு சம்பவத்திற்கான காரணம் அந்த சம்பவம் நிகழும் காலத்திற்கு முற்பட்டதா? பிற்பட்டதா?

இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடைகள் ஒன்றுக்குள் ஒன்று புதைந்து கிடக்கிறது. அதாவது இந்த கேள்விகளின் சராம்சம் என்னவென்றால் காரணங்கள் இருப்பதனால் காரியங்கள் நடக்கின்றனவா? அல்லது காரியங்கள் நடந்ததனால் அதற்கான காரணங்கள் தேடப்படுகின்றனவா?

மழை பொழிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே ஆகாயத்தில் நடந்து விட்ட தாழமுக்க வேறுபாடுகள்தான் இயற்கையான காரணம். ஆனால் அங்கே ஒருவர் பல நாட்களுக்குப்பிறகு தன் பெற்றவர் வீட்டிற்கு வந்திருக்கிறார். வராதவர் வந்ததால் மழை பெய்ததாக பேசிக்கொண்டார்கள். இது செயற்கையான காரணம். காரணத்தை சம்பவம் நடந்த பின் பொருத்திப்பார்க்கிறார்கள். இயற்கையான காரணங்கள் எப்போதும் புலப்படுவதில்லை. அதை அறிய ஆழமான ஆய்வும், நிதானமும் தேவை. அதற்கு பொறுமை இல்லாத மனம் உடனடி ஆறுதலுக்கு ஒரு காரணத்தை தேடி அலையும். அதுவாக ஒன்றை ஊகித்து ஆறுதல் அடையும். செயற்கை காரணங்கள் தோன்றுவதன் இயற்கைத்தன்மை இதுதான்.

இங்கும் இப்படித்தான். ஒரு குரும்பை உதிர்கிறது. தேங்காய் ஆவதை இலக்காகக் கொண்டு தென்னம் பாளையை கிழித்துக் கொண்டு வந்து உதிராமல் உருப்பெற்ற அந்த தென்னம் பூ மெல்ல மெல்ல குரும்பையானது. பரவிய வேரால் மண்ணில் உறிஞ்சிய நீரையும் உரத்தையும் தண்டினூடு கடத்தி பூவானது குரும்பையாகும் செயற்பாட்டிற்கு பெரிய சக்திச் செலவே நிகழ்ந்திருக்கிறது. இந்தச் சக்திச் செலவு வீண் செலவாவதை யார்தான் விரும்புவார்கள்? குரும்பைகளின் இந்த குறை ஆயுள் அவலத்திற்கு காரணங்கள் பல சொன்னார்கள். மண்ணில் பிழை என்றார்கள். மரத்தில் பிழை என்றார்கள். உரத்தில் பிழை என்றார்கள். காரணங்கள் தெரிந்தால் தவறுகளை சரிசெய்யலாம்தானே? ஆனால் குரும்பைகள் உதிர்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறன.

தென்னை மரத்தில் குரும்பைகள் மட்டுமல்ல இந்த மண்ணில் குழந்தைகள் சிலவும் இவ்வாறு உதிர்கின்றன. பத்துமாத வலி பொறுத்து ஆயிரம் கனவுகளுடன் ஒரு பிள்ளையை பெற்றெடுத்து, உதிரத்தை பாலாக்கி வளர்த்தெடுத்த குழந்தைகள் அற்ப ஆயுளுடன் தம் பயணத்தை முடித்துக் கொள்வது எவ்வளவு கொடுமை? இதற்கும் காரணங்களை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அதனால் நடந்ததா? இதனால் நடந்ததா? என்பதல்ல முக்கியம்! எதனால் நடந்தாலும் இனி நடக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்!

எங்கள் மண்ணில் இனி…
குரும்பைகள் மட்டுமல்ல,
குழந்தைகளும் உதிரக்கூடாது!

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 31

Thumi202121

முருகனடி சேர்ந்தார் நல்லூரான்!

Thumi202121

ஈழச்சூழலியல் 21

Thumi202121

Leave a Comment