இதழ் 35

முருகையனின் கவிதைகளில் மனிதநேயம்

ஈழத்து நவீன தமிழ்க்கவிதை வீறுடன் எழுச்சி பெற்ற காலப்பகுதியாகக் கருதப்படும் 1950 களில் எழுதத்தொடங்கி ஈழத்து நவீன தமிழ்க்கவிதை முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்படும் கவிஞர் இ.முருகையனின் கவிதைகள் பல் பரிமாண நோக்கில் ஆராயப்படத்தக்க வகையில் காத்திரம் வாய்ந்தவை யாக விளங்குகின்றன. இது வரை எண்ணிலடங்காக் கவிதை களைப் படைத்துள்ள இவரின் கவித்துவத்தினை இவரது ஒருவரம், வந்து சேர்ந்தன, தரிசனம், நெடும்பகல், கோபுரவாசல், ஆதிபகவன் முதலான இவரது நூல்களில் கண்டுணர முடிகின்றது. இத்தகைய சிறப்புத்தன்மை பொருந்திய இவரது கவிதைகள் பல்வேறு தளங்களில் நின்று படைக்கப்பட்டிருப்பினும் குறிப்பாக இருதளங்களினூடாக அவற்றை நாம் ஆராயலாம்.

  1. அறிவுத்தளம்
  2. உணர்வுத்தளம்

அறிவும், உணர்வும் எப்போதும் எதிரெதிரானவையே. எவ்வாறெனில் சில விடயங்களில் மூளை அதாவது எமது அறிவு எமக்கு சரியானதைத் தெரியப்படுத்தினாலும் நாம் எமது மனதின் போக்கில் அதாவது உணர்ச்சிகளின் வழிகாட்டலில்த்தான் பயணிப்போம்.

ஆனால் முருகையன் தனது கவிதைகளை அறிவியல்ப்பூர்வமாக உண்மைத் தன்மைகளை வெளிக்கொணரும் வகையிலும் அதேநேரம் அவற்றை உணர்வு பூர்வமாகவும் பதிவுசெய்திருப்பதைக் காணமுடிகின்றது. இவ்வகையில் இவ்விரு தளங்களையும் அடிப்படை யாகக் கொண்டு சமூகம் சார்ந்த மனிதநேயச் சிந்தனையுடன் பெரும்பாலான கவிதைகள் படைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

மனிதநேயம் என்பது அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு என்பவற்றுடன் தொடர்புடையதாக சகமனிதர்களிடம் அன்பு காட்டுதல் எனக்கூறலாம். இதில் உயிர்கள் மீதான இரக்கம் என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வகையில்,

  1. சகமாந்தர்களிடம்
    அன்புறவைப் பேணுதல்
  2. சாதீய ஒடுக்குமுறையை
    எதிர்த்தல்
  3. தொழிலாளர்களின் முன்னேற்ற த்திற்குக் குரல் கொடுத்தல்
  4. வறுமைத்துயர் போக்க உழைத்தல்
  5. மனிதர்களை மட்டுமன்றி ஏனைய உயிரினங்களையும் மதித்தல்

என்கின்ற அடிப்படையில் முருகையனின் கவிதைகளில் மனிதநேயத்தன்மையை இனங்காண முடிகின்றது. வறுமையால் துயருற்றவர்கள், சாதியத்தின் பெயரால் ஒடுக்கப்படுபவர்கள், முதலாளிகளால் சுரண்டப்படும் தொழிலாளிகள் என அனை வரது போராட்டங்களையும் பிரச்சி னைகளையும் கவிதைகளில் பதிவுசெய்திருக்கும் தன்மையே மனிதநேயத்தின் வெளிப்பாடாகின்றது. சான்றாக ‘தீ பரவட்டும்” என்ற கவிதையை நோக்கின்,

‘பசி அணைந்த வாழ்வினர்கள் பதறி அழவும்
பணம் அமைந்த வாழ்வினர்கள்
உதவிதர ஏன் பிசகி விட்டார்?”

என அறிவுத்தளத்திலே நின்று மனிதநேயத்துடன் வினாத்தொடுப்பவர்,

‘அவர்கள் குலம் பிய்ந்து கருக
பீறி எழுந்து ஓங்கிடட்டும்
பரவட்டும் தீ..”

என உணர்ச்சிப் பிழம்பாக கோபக்கனலைக் கக்குகின்றார். இவ்வாறே,

‘தொலைக வெறுப்புரைகள்
சுயநலம் இற்றொழிக
தொழில்கள் மிகப்பெருக
வழிகள் திறப்படைக”

என ‘ஒருமுனையில் திரள்க” என்ற கவிதையில் சுயநலத்தையும், வெறுப்புக்களையும் ஒழித்து பல தொழில்களைச் செய்வதற்கான வழிகளைத் திறப்போம் என மனிதநேயத்துடன் அறைகூவல் விடுக்கின்றார்.

‘நரகொழிப்பு” என்ற கவிதையில் பல்வேறு விடயங்கள் குறித்துப்பேசும் கவிஞர் குறிப்பாக சாதிவேற்றுமையை ‘நரகம்” எனச்சித்திரித்து அந் நரகத்தினை ஒழிப்பதற்கு மானிட சமூகத்தினை அழைத்து நிற்பது அவரது மனிதநேயத்தினையே புலப்படுத்துகின்றது. நீண்டுசெல்லும் இக்கவிதையில் பிறப்பு, இறப்பு என்பவை பற்றியெல்லாம் தெளிவாக எடுத்துரைத்து மக்கள், தேவர், நரகர் உயர்திணை மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை என்ற இலக்கணகாரரின் கூற்றினையும் தெளிவுபடுத்தி,

‘அட்டையை நசுக்குதல் கெட்ட செயல் எனப்
புத்தி புகட்டிய பெட்டை இப்போது
சட்டை இல்லாத தன்மையள் ஆகி
உள்;ர்ப் புறத்திலோர் சேரிக்கரையிலே
தள்ளி ஒதுங்கித் தனியே கிடந்த
குடியிருப்பொன்றிலே அவள் வதிகின்றாள்.”

என்றவாறு அட்டை என்கின்ற ஊரும் பிராணியை நசித்தலே கெட்டசெயலென அடுத்தவர்களுக்கு எடுத்துரைத்து உயிர்களை மதிக்கத் தெரிந்த பெண்ணை ‘சாதி” என்னும் பெயரால் ஊரின் ஒதுக்குப்புறத்திலே ஒதுக்கிவைத்த சமூகத்தைச் சாடும் முருகையன்,

‘பழையதோ புதியதோ நரகம் நரகமே!
யாவரும் கூடி நரகினை ஒழிக்கப்
பெரிதும் முயல்வாரே எனினும்
நரகொழிப்பு இன்னும் நடந்தபாடில்லையே..”

என்பதில் அவர் நரகென உவமிக்கும் சாதிவேறுபாடு இன்னும் ஒழிந்துபோகவில்லை என்ற நிதர்சனத்தை எமக்கு உணர்த்துகின்றார்.

இவ்வாறே தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் பல கவிதைகளில் மனிதாபிமானத்துடன் பதிவுசெய்துள்ளார். சிறுவர் தொழிலாளர்களின் நிலை குறித்துப்பேசும் ‘மாடும் கயிறுகள் அறுக்கும்” என்ற கவிதையில் கவிஞரின் மனிதாபிமானச் சிந்தனை மட்டுமன்றி,

‘மாடு மாடென ஏசுகிறீர்கள்
மாடும் கயிறுகள் அறுக்கும்
ஆடவர் மகளிர் அது செய்யாரோ”

என அடிமைத் தளையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க விளையும் விடுதலை உணர்வும் மேலோங்கியிருப்பதைக் காணலாம்.

பேராசிரியர் கைலாசபதி அவர்கள் முருகையன் குறித்துப் பேசும்போது, முருகையனின் கவிதைகளுடைய சிறப்பு யாதெனில் அவர் உணர்ச்சி நிலைப்பட்ட கவிஞர் அல்லர், மாறாக அவர் ஒரு ‘ஐவெநடடநஉவரயட Pழநவ’ அதாவது புலமைத்துவ நிலையில் இருந்த கவிஞர் என்கிறார்.

இக்கூற்று ஏற்புடையதாயினும் என்னதான் அவர் விஞ்ஞானபூர்வமாக அறிவியல் ரீதியாக சிந்தித்திருப்பினும் அவற்றுடன் உணர்வுபூர்வமாகவும் சிந்தித்து மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வகையில் கவிதைகளைப் படைத்துள்ளார் என்பதே உண்மையாகும்.

இவ்வகையில் சமூக அவலங்கள், ஏற்றத்தாழ்வுகள், முரண்பாடுகள், வறுமைத்துயர் அனைத்தையும் மனிதாபிமானத்துடன் நோக்கி அறிவுபூர்வமாக அவற்றின் உண்மைத்தன்மையை எடுத்துரைத்து சமூகவிடுதலையை அவாவிநிற்கும் ஒரு மானிடநேயக் கவிஞனாகவும் முருகையன் பரிணமிப்பதை இனங்காண முடிகின்றது.

Related posts

பொக்கைவாய்ப் பற்கள்

Thumi202121

குறுக்கெழுத்துப்போட்டி – 31

Thumi202121

குரும்பைகள் உதிரலாமா?

Thumi202121

Leave a Comment