இடைமாற்றத்தினூடாகச் செல்லும் ஒரு குழுவென்னும் பரந்த எண்ணக்கருவினுள் சமூகங்களிலும், கலாசாரங்களிலும் இளைஞர் குறித்த வரைவிலக்கணம் பெரிதும் மாறுபடுகின்றது. இதற்கான காரணம் குறித்ததொரு சமூக, பொருளாதார மற்றும் கலாசாரச் சூழமைவுகளில் இளைஞர்களின் அனுபவங்களையும், சூழ்நிலைகளையும் காண்பிக்கும் பல்வேறு அடையாளக்குறிகள் மற்றும் பண்புகளைப் பயன்படுத்தி அவர்களை ஒரு வகைப்பிரிவாக இனங்காணக்கூடியதாக இருப்ப தேயாகும்.
அனேகமான வரைவிலக்கணங்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக் குழுவின் பொதுவான அனுபவங்கள் மற்றும் பாத்திர எதிர்பார்ப்புகள் என்பவற்றினடிப்படையில் அவர் களை வகைப்படுத்தும், பரந்த வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மாதிரியைப் பயன்படுத்துகின்றன. இதன் பிரகாரம், அனைத்துலக வரைவிலக்கணம் ஐ.நா முறைமையின் கீழ் 15 – 24 வயதுக்குழுவை இளைஞர், யுவதிகளாகக் குறிப்பி டுகையில், பல்வேறு நாடுகள் தமது சொந்த, தனிச்சிறப்பான சூழமைவுகளைக் கருத்திற்கொண்டு வயதுக்குழுக்களில் சிறிய வித்தியாசங்களை ஏற்றுக் கொள்கின்றன. இந்தவகைப்படுத்தல் வயதுக் குழுக்களினுள் நில வும் பல்வகைமைகளைக் கருத்தில் கொள்ளாவிடினும், அது இளைஞர்களையும், சமூகத்தில் அவர்களின் இடத்தையும் இனங்காணுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழியாக விளங்குகின்றது.
இப்பின்னணியில், இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கை இளைஞர்களை இலங்கையின் சூழமைவில் தங்கி வாழும் சிறுவர் நிலையிலிருந்து சுதந்திரமான வளர்ந்தோர்நிலைக்கு இடமாற்றம் பெறும் தன்மையைக் கருத்திற்கொண்டு 15 – 29 வயதினர் என வரைவிலக்கணம் செய்கின்றது. இளைஞர்கள், யுவதிகள் ஒரு சமூகவகைப் பிரிவினர் என்ற வகையில் அவர்களின் உள்ளார்ந்த சிக்கல் தன்மைகளை அது அங்கீகரிப்பதோடு, இளைஞர்களின் சமூக, பொருளாதார, நகர்ப்புற, கிராமிய, வேலை வாய்ப்புநிலைகள், இனத்துவ வாழ்க்கை நெறியின் போது மொழி, மத மற்றும் கலாசாரக் கண்ணோட்டங்களில் ஏற்படும் பன்முக அனுபவங்கள் குறித்தும் பூரணமாக அறியப்பட வேண்டும்.
இப்போதைய தேவை, திறமைகளுடன் கூடிய நல்ல இளைஞர்கள். இளைய சமுதாயத்தை ஆய்வு செய்யும் போது வெறுமனே அவர்களை குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்தல் வேண்டும். மேலும் அவர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருதல் வேண்டும் என்ற நோக்கில் கிராமத்து இளைஞர்கள் என்ற தலைப்பில் ஆராயப்படுகிறது.
கிராமங்களிலே இளைஞர்களுக்கு என சிறப்பாக இளைஞர் கழங்கள், விளையாட்டுக் கழங்கள் காணப்படுவதை கண்டு கொள்ளலாம். ஆனாலும் இங்கு கிராமத்தின் முக்கிய மையமாக திகழும் சனசமூக நிலையத்தினை இளைஞர்கள் பொறுப்பேற்று நடத்துகின்றனர். அதாவது வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சுன்னா கம் மேற்கு அறிஞர் ஐயன்னா சமூக நிலையத்தினை இளைஞர்கள் நிர்வாகிக்கின்றனர்.
இன்று இளைஞர்கள் சனசமூக நிலையங்களை அரட்டை அடிக்கப் பயன்படுத்துகின்றனர் என்ற விமர்சன ங்களும் உண்டு. இவ் சனசமூக நிலையத்தில் 24 வயதிற்கும் 30 வயதுதிற்குட்ட இளைஞர்கள் சேவை செய்கின்றனர். இவர்களின் நிர்வாகத்தின் கீழ் வாசிகசாலை, முன்பள்ளி, விளையாட்டுக்கழகமும் உள்ளன. தலைவர், உபதலைவர், செயலாளர், உபசெயலாளர், உள்ளகக் கணக்காய்வாளர், நிர்வாக உறுப்பினர் என மொத்தமாக 12 இளைஞர்களையும் நடுத்தர வயதினை மிக்க பொருளாளரையும் கொண்டு இயங்குகின்றனர்.
இவர்கள் ஒவ்வொரு மாதமும் நிர்வாக சபை கூட்டத்தினை கூட்டி நிறை குறைகளை விவாதிப்பார்கள். பெரியோர்களை கொண்டு இயங்குகின்ற சனசமூக நிலையங்கள் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளுவது அரிதாக காணப்படுகிறது. இவ் சனசமூக நிலையத்தின் நுழைவாயில் முகப்பு வர்ணம் பூசுதல், மின்சார இணைப்புக்களை மேற்கொள்ளுதல் மற்றும் நிலையத்தினை அழகு படுத்துகின்ற செயற்பாடுகளை தமது தனிப்பட்ட வேலைப்பளுவுக்கு அப்பால் இரவு, பகல் என பாராமல் தமது சேவைகளை மேற்கொள்ளுவதை அவதானிக்கமுடிகிறது. இவர்க ளுக்கு ஆதரவாக கிராமத்து செல்வந்தர்களும் திகழ்கின்றனர்.
சனசமூக நிலைய உறுப்பினர்களும், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற் றோர்கள் மற்றும் கிராமத்து மக்களுடன் இனைந்து பண்பாட்டு, கலாசார நிகழ்வுகளை முன்பள்ளி குழந்தைகளை மகிழ்வூட்டும் நிகழ்வுகளாக பொங்கல் விழா, முன்பள்ளியிலிருந்து தரம் ஒன்றிற்கு செல்லும் மாணவர்களுக்கான வழியனுப்பு விழா, முன்பள்ளியில் புதிதாக இணைந்த மாணவர் களுக்கான கால்கோல் விழா போன்ற விழாக்களையும் நடாத்தினர். மேலும் விளையாட்டுப் போட்டி, உழவர் சந்தை, நவராத்திரி பூசைகள் என்பவற்றையும் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். முன்பள்ளி மாணவர்களுக்கு உதவி திட்டங்களை வழங்குகின்றனர். மேலும் கிராமத்தில் உள்ள சமூக மட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் உண்மையிலே வரவேற்கத்தக்கவை.
இக்கட்டுரையின் நோக்கமானது அவ் இளைஞர்களின் பெருமைக்காக மட்டுமின்றி யாழ்ப்பாண சமூகம் என்பது கலாச்சாரம், பண்பாடு மேம்பட்ட நிலையில் இருந்த நிலைமாறி இன்று அதீத போதைவஸ்து பாவனையும், கலாச்சார சீரழிவும் நடைபெறுகின்ற இடமாக மாறிக் கொண்டுவருகின்றது. இளைஞர்களும் திசைமாறிச் செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு காணப்படுவதனால் இவ்வாறன இளைஞர் மத்தியிலும் சமூக பொறுப்பு வாய்ந்த இளைஞர்களும் காணப்படுகின்றனர் என்பதை எடுத்துக்காட்டுவதற்கு இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது எனலாம்.
சனசமூகநிலையம் என்பது சமூக அபிவிருத்திக்கும் சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்குமான ஒரு அமைப்பாகும். அதன் செயற்பாடானது இளையோரை நல்வழிப்படுத்துவதற்கும் வருங் கால தலைமுறையினரை ஒழுக்க சீலர்களாக ஆக்குவதற்கும் ஆவன செய்ய வேண்டும். எனவே முன் மாதிரியான நிறுவனங்களாக சனசமூக நிலையங்கள் செயற்படவேண்டும்.