இதழ் 35

சிங்ககிரித்தலைவன் – 33

ரு பையில் தலை!

தீவட்டிகளை மிக அழகாக சுழற்றியபடி ஆடல் வல்லுனர்கள் அந்த அலங்கரிக்கப்பட்ட, யானையின் முன்பதாக அணியணியாக நடந்த வந்தனர்!

மத்தளங்களை அடித்துக் கொண்டும் சங்குகளை ஊதிக் கொண்டும் கொம்புகளால் ஒலி எழுப்பியவாறும் அந்த ஊர்வலம் மிக நீண்டதாக மெதுமெதுவாக அனுராதபுரத்தில் இருந்து சிகிரியாவை நோக்கி வந்து கொண்டிருந்தது. மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் அந்த ஊர்வலத்தை பின்தொடர்ந்தனர்.

‘இனி அனுராதபுரம் தலைநகரமாக இருக்காது. சிங்ககிரியே தலை நகரமாக அரசனின் உறைவிடமாக இருக்கும்.”
என்கின்ற செய்தி மக்களிடையே வெகுவாகப் பரவி இருந்தது. இதனால் அங்கு சென்று குடியேறுவதற்காகவும் சிலர் மாட்டு வண்டிகளில் தங்கள் உடமைகளைக் கட்டிக் கொண்டும் ஊர்வலத்தைப் பின் தொடர்ந்தனர்.

அந்த ஊர்வலம் சிங்ககிரியை சென்றடைய நாளை இரவு ஆகலாம்!
அதனால் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உணவுப் பண்டங்களும், குடிக்க நீரும் அரச வீரர்களால் அவ்வப்போது வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது. இதற்கெல்லாம் காசியப்பன் உத்தரவிட்டிருந்தான். அந்த ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து வருகிற காட்சி கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது!அனுராதபுரத்தின் ராஜ வீதியைக் கடந்து புத்தரின் புனித தந்த தாதுவை சுமந்து வருவதாகச் சொல்லப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட யானை இப்போது சிங்க கிரியை நோக்கி நகரத்தொடங்கியது!

அதே நேரம் சிங்ககிரியில், அமைக்கப்பட்ட பிரத்தியேக மேடையில் புத்தரின் வாழ்க்கை சரிதம், நாடக கலைஞர்களால் நாடகமாக அரங்கேற்றப்பட்டு கொண்டிருந்தது. அந்த நாடகத்தை மன்னன் காசியப்பன் தன் ஆசை மனைவி லீலாவதியுடன் முன் இருக்கையில் அமர்ந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய நினைவுகள் எல்லாம் புனித தந்த தாதுவைப் பற்றியும் அதை கவர்ந்து சென்ற மகாநாமர் மீதும் இருந்தது.

மகாநாமரை நினைத்து ஆத்திரப்ப டுவதா? அல்லது தன்னுடைய முட்டாள்தனத்தை எண்ணி வெட்கப்ப டுவதா? என்று தெரியாத அளவுக்கு அவன் மனநிலை இருந்தது.

போலியாக தயாரிக்கப்பட்ட பெட்டகத்துக்குள் புத்தரின் புனித பல் இல்லை என்கின்ற விடயம் காசியப்பனுக்கும் மீகாரனுக்கும் தான் தெரியும்.

எப்படியாவது வீரர்களையோ, ஒற்றர்களையோ தமிழகத்துக்கு அனுப்பி, மகாநாமரால் அவரின் ஒற்றர்கள் மூலம் கவரப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட புத்தரின் புனிதப் பல்லை மீண்டும் சிங்ககிரிக்கு கொண்டு வரவேண்டும் என்கின்ற திட்டம் காசியப்பனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.அதை அடையும் வரை இனி அவன் உறக்கம் தொலைத்தவனாகவே இருப்பான்!

‘தாங்கள் நாடகத்தைப் பார்ப்பதற்கு பதிலாக வேறு ஏதோ சிந்தனையில் இருப்பது போல் தோன்றுகிறது” இப்படி உங்களோடு அமர்ந்திருந்து கலை நிகழ்வுகளை கண்டு கழிக்க வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவு இன்று நிறை வேறியது. ஆனால் உங்களின் மனம் தான் எங்கோ போய்விட்டது..” என்று லீலாதேவி மெல்லியதாக காசியப்பனின் காதருகில் கூறினாள்.

‘அன்பே” எல்லாம் நான் உருவாக்கப் போகும் இந்தப் புதிய ராஜ்ஜியத்தை பற்றித்தான். எத்தனை தடைகளைஇ எத்தனை துரோகங்களைஇ நான் சுமக்க வேண்டியிருக்கிறது… காலம் எனக்கு மணி முடியோடு பல படிப்பினைகளையும் தந்திருக்கிறது. இந்த நாடகத்தில் நாட்டமிலாமைக்கு அந்த நினைவுகளே காரணம்… ம்ஹ_ம்…” என்று பெரு மூச்சு விட்டான் காசியப்பன்!

‘எத்துணை பெரிய சவாலையும் முறியடித்து விடும் ஆற்றல் உங்களிடம் இருப்பதை நான் நன்கு அறிவேன் இருந்தாலும் உங்களுடைய இந்தக் குழப்பமான மனநிலையை கண்டு என் மனம் கலங்குகிறது. நீங்கள் திடமாக இருக்கும் போது தானே இந்த ராஜ்ஜியமும் திடமாக இருக்கும்…” என்றவள் காசியபனின் முரட்டுக்கைகளைத் தனது கைகளால் அணைத்துக் கொண்டாள்.

‘லீலா…. நீ சொல்வது உண்மை தான்! என்னையும் மீறி நடந்த விடயங்களையும் சரி செய்து கொண்டு முன்னோக்கி நடக்க வேண்டும்…”
சித்தர்த்தர் அரண்மனையை விட்டு வெளியேறும் காட்சி மேடையில் அரங்கேறிக்கொண்டிருந்தது…

‘உலகே பொய்…
உறவே பொய்…
உடமைகள் பொய்…
பற்றை விடுவாய்…
பாசம் மறப்பாய்…
புதிய தேசம் படைப்பாய்…”

என்ற பாடலைப் பின்னணியில் பாடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பாடலை மட்டும் உன்னிப்பாகக் கேட்ட காசியப்பன், தன் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு லீலாவை இருக்கையிலேயே அமர்த்திவிட்டு, மெல்ல எழுந்து அப்பாலே போனான்.
அந்த இருளில் அவன் போனதைப் பெரிதாக எவரும் அவதானிக்கவில்லை. எல்லோரும் நாடகத்தில் தம்மை மறந்து இலயித்துப் போய் இருந்தனர்.

தூரத்தில் ஒரு தீப்பந்தம் மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அதன் அருகினில் ஒரு தீப்பந்தம் அப்படியும் இப்படியுமாக அசைந்து கொண்டிருந்தது! அது காசியப்பனுக்கான சைகையாக இருக்க வேண்டும். அதற்கு அருகிலே போன காசியப்பனை அந்த தீப்பந்தத்தை அசைத்த உருவம் வணங்கி நின்றது!

‘மல்லா… மீகாரன் எல்லாம் தெளிவாகக் கூறியிருப்பான்.மேலதிகமாக நான் கூறவேண்டியதில்லை. ஒரு பையில் புனிதப்பல்லையும் ஒரு பையில் அந்தக்கிழவனின் தலையையும் கொண்டுவா! இந்தா இதை பெற்றுக்கொள்…!” சில தங்கக் காசுகள் மல்லனின் கைகளில் விழுந்தன…

மல்லன் தேர்ந்த வில்லாளி! விச அம்புகளைக் கையாள்வதில் வல்லவன், காசியப்பனின் இரகசிய படையில் இருந்தவன். இவன் மூலமாக தாதுசேனரைக் கொல்லும் திட்டத்தை மீகாரன் வகுத்த போதும் அதை ஏனோ காசியப்பன் முன்னரே மறுத்துவிட்டான். இப்போது மகாநாமரைக் கொல்வதற்கு அனுப்பிவைக்கின்றான்!

மல்லன் அவ்விடம் விட்டுப்போனதும், காசியப்பன் மெல்ல நகர்ந்து வந்து தன்னாசனத்தில் அமர்ந்து கொண்டு லீலாவை அணைத்துக்கொண்டான்! இப்போது அந்த அணைப்பில் ஒரு தெளிவு இருந்தது. அவன் மூச்சின் வேகமும் வெப்பமும் குறைந்திருந்தது… இந்தக் குறிகாட்டிகளே லீலாவுக்குப் போதுமானவையாக இருந்தன…

நாடகம் தொடர்ந்தது…..

Related posts

பொக்கைவாய்ப் பற்கள்

Thumi202121

விநோத உலகம் – 01

Thumi202121

ஈழச்சூழலியல் 21

Thumi202121

Leave a Comment