இதழ் 35

பொக்கைவாய்ப் பற்கள்

தினத்தொடர்களின் மிதமிஞ்சிய ஓலங்களால்
பகல்நேர உறக்கத்தைத் தொலைத்த
பொக்கைவாய்க் கிழவிக்குத்
திண்ணைக்கருகில் வளர்ந்தோங்கிய
வேப்பமரத் தென்றல் தாலாட்டுப் பாட முனைந்தது..

தட்டுத் தடுமாறி மரத்தையொட்டி குத்தவைத்த
கிழவியின் தலை மீது
சிறியரக வேப்பங்குச்சிகள் பழுத்துப்போன
சிற்சில இலைகளோடு வீழ ஆரம்பிக்கவே
சற்று முற்றும் திரும்பிப்பார்த்தாள்.
காய்ந்துபோன வேப்பங்குச்சியோடு ததும்பி வந்த
எண்ணங்களை உவமிக்கலானாள்.
எண்பதாண்டுகால நட்புண்டு
வேப்பங்குச்சிக்கும் கிழவிப் பல்லுக்கும்
அடுப்புச் சாம்பல்களும்
செங்காமுட்டிப் பொடிகளும்
இரும்புக்கு நிகர்த்தப்பற்களைப்
பட்டை தீட்டின ஒருகாலத்தில்!
ஆங்காங்கே பல் மேட்டில் சற்று
ஓட்டைகள் துளைக்கவே சட்டென்று
வாழ்நாள் வாடிக்கையாளரானாள்
வேப்பங்குச்சிக்கு!

எத்தனைப் பொங்கல்களில்
எத்தனைக் கரும்புகள்
கிழவியின் பற்களால்
கட்டுக்கட்டாய்க் கட்டுடைக்கப்பட்டன.
எண்ணிக்கை தெரியாத ஆட்டுக்கறியின்
அனைத்துவகை எழும்புகளும்
கிழவியின் பற்களுக்கு அத்துப்படி..
குழாயடிச் சண்டையில்
போட்டிக்கு வரும் வீராங்கனைகளுக்கு
தக்க ஆய்தமும் கூடவே!
எண்பதாண்டு எண்ணங்களை முகிழ்த்தெடுக்கும் நேரத்தில்
பட்டைகள் சிற்சிலவாய் உரிந்து
மரமும் நிர்வாணமாகிக் கொண்டிருந்தது.
அப்போது மெல்ல தன் பொக்கை வாயை
வலது இடதுமாகத் தொட்டுப்பார்த்துப் புன்னகைத்தாள்!

Related posts

ஈழச்சூழலியல் 21

Thumi202121

குரும்பைகள் உதிரலாமா?

Thumi202121

துமியார் பதில்கள் – 01

Thumi202121

Leave a Comment