இதழ் 36

ஞாபகங்கள் மழையாகும்; ஞாபகங்கள் குடையாகும்

அப்பொழுது ஐந்தாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் குத்துபாடல்கள் பிரபலமாக இருந்த காலம்.  Fast beat songs பிடித்த எனக்கும் சரி அன்றைய சிறுவர்களுக்கும் சரி குத்துப்பாடல்கள் என்றால் சந்தோஷம்.

அந்த நேரம் 4 students  என்ற மலையாள திரைப்படம் தமிழிலும் வெளிவந்தது. படம் திரைக்கதையினால் அதிகம் பேசப்பட்டதோடு படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் எதிரொலித்தது. கல்யாண வீடு, சாமத்திய வீடு, குடிபூரல் என்று என்ன மங்களவிழா என்றாலும் 4 students பாடல்கள் இருக்கும். இரண்டு பாடல்கள் பிரபலம். இரண்டும் ஒரே ராகம், ஒரே பீட். இசையில் சின்ன சின்ன வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் வரிகள் வேறு வேறு.

ஒன்று பழநிபாரதி எழுதிய,

“அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க”

மற்றது நா.முத்துக்குமார் எழுதிய,

“லஜ்ஜாவதியே என்னை அசத்திற ரதியே”

இரண்டும் இன்றை வரை என்னுடைய  ஃபேவரைட்.

படத்தின் இசையமைப்பாளர் ‘ஜெசியா ஜிப்ட்’ தான் இரண்டு பாடல்களையும் பாடியிருந்தார். இரண்டு பாடல்களுமே பிரபலம் என்றாலும் ” லஜ்ஜாவதியே” என்ற சொல்லில் இருந்த கவர்ச்சியும் தொடரும் வரிகளில் இருந்த சிறுவர்கால நினைவு மீட்பும் சேர்ந்து “லஜ்ஜாவதியே” க்கு தனி அழகு சேர்த்தது.

//பூவரச இலையிலே

பீப்பீ செஞ்சி ஊதினோம்//

பூவரசம் இலை பீப்பியிலேயே பாடல்கள் வாசித்த என் நினைவுகளை அதிகம் மீட்கும் வரிகள் இது. நாங்கள் பூவரசு இலையில் பீப்பி ஊதினால், சுருட்டடிக்கும் கிழடுகள் சுறுட்டோடு  இளம் வாடலான பூவரசு  இலையை சுத்தி அடிப்பார்கள். இன்றும் எங்கு பூவரசம் இலையை கண்டாலும் சுருட்டி பீப்பி ஊதுவதில் ஒரு அலாதி இன்பம்.

//பள்ளிக்கூடம் பாடம் மறந்து

பட்டாம்பூச்சி தேடினோம்//

பள்ளிக்கூடம் முடிய, வீடு வரை நடந்து செல்லும் போது, மதில்களில் ஒட்டியிருக்கும் தும்பிகளை பிடிப்பது தான் எங்கள் விளையாட்டு. தும்பி பிடிப்பது தனித்திறமை. பதுங்கி போய் கவனமாக பொத்தி பிடிக்க வேணும். கை போகும் வேகத்தில் தும்பி பறந்திடும். சில சமயம் பிடிக்கும் போது அதன் ஒரு சிறகு உடைஞ்சிடும்.  பாவம் கிடந்து துடிக்கும். வடிவா ஒரு தும்பியை பிடிச்சிட்டா, அதோட வாலிலை நூலைக்கட்டி பறக்கவிடுறது; கொஞ்சம் பறக்க, இழுக்கிறது. இதே வண்ணத்துபபூச்சிகளை பிடிப்பது கஷ்டம். அப்படி பிடிக்கும் போது அதன் சிறகின் வர்ண ஜாலங்கள் கைகளிலும் ஒட்டிக்கொள்ளும்.

சில நண்பர்கள் தும்பியை பிடித்து அதன் இறகுகளை வேண்டுமென்றே உடைத்து அது துடிப்பதை பார்த்து சந்தோஷப்படுவார்கள். இது பொறுக்காமல்  தும்பி பிடிப்பதிலிருந்து ஒதுங்கிக் கொண்டவன் நான்.

//தண்ணிப்பாம்பு வரப்பில் வர

தலை தெறிக்க ஓடினோம்//

மழைகாலங்களில் வயலில் உள்ள  கிணறுகள் எல்லாம் நிறைந்து “நீர்க்கோத்தை” எனப்படுகிற நீர்ப்பாம்பு வெள்ளத்தோடு கிணற்றிலிருந்து வெளியில் வரும். வந்தவர் வரம்பு விளிம்புகளில் ஒழிந்திருக்கும். தண்ணியில் மூழ்கி இருக்கும் வரம்புகளில் கால் வைத்தால், நீர் சலசலப்புக்கு பாம்புகள் பயந்து ஓடும். அதை பார்த்து நாங்கள் பயத்தோடுவம். சின்னனோ பெரிசோ விஷமோ இல்லையோ அது பாம்பு தானே!

//பனங்காயின் வண்டியில்

பசு மாட்டு தொழுவத்தை

சுற்றி வந்து பாம்பேக்கு

போனதாக சொல்லினோம்//

இது இந்திய மண் சார்ந்த சிறுவர் விளையாட்டு ஒன்றை சுட்டும் வரிகள். இந்த வரிகள் எனக்கு ‘ குலை குலையா முந்திரிக்கா” விளையாட்டை ஞாபகபடுத்தும்.

“குலையா குலையா முந்திரிக்காய்

நரியே நரியே சுற்றி வா

கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்

கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி”

இப்படி பாடிக்கொண்டே விளையாடிய ஒரு காலம் இருந்தது.

//அடடா வசந்தம்

அதுதான் வசந்தம்

மீண்டும் அந்த காலம் வந்து

மழலையாக மாற்றுமா//

சிறுவர்களாய் இருந்த போது செய்த குறும்புகளும் குழப்படிகளும் நினைவுகளில் என்றுமே பசுமையானவை. அதற்கு எல்லைக்கோடுகள் இல்லை. கவலைகள் இல்லாத மனம். கபடம் அறியாத குணம்.

//காவேரி நதியிலே

தூண்டில்கள் போட்டதும்

கண்ணே உன் தூண்டில் முள்ளில்

குட்டி தவளை விழுந்ததும்

கை கொட்டி கேலி செய்த

ஞாபகங்கள் மறக்குமா//

தூண்டில் பாவனை எங்களிடம் அதிகம் இருந்ததில்லை. யாரும் குளங்களில் மீன் பிடிக்கும் போது பார்த்தது மட்டும் தான். ஆனால் இங்கே மீனுக்கு பதிலாக தவளை பிடித்தது போல, மழை வெள்ளத்தில் ‘மீன் குஞ்சு’ பிடிக்க போய் அதே தவளைக்குஞ்சுகளான ‘வாற்பேய்’ களை பிடித்து வந்திருக்கிறோம் பெரியவர்கள் நக்கல் அடிக்க, நமக்கு அவமானமாகிவிடும்.

//லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே//

அதென்ன லஜ்ஜாவதி? என்ன அர்த்தம் இதற்கு?

“லஜ்ஜை” என்றால் வெட்கம். சிங்களத்தில் “லஜ்ஜாவ” என்று சொல்வார்கள். ‘வெட்கப்படும் பெண்’ என்பதால் லஜ்ஜாவதி.

//ராட்சசியோ தேவதையோ

ரெண்டும் சேர்ந்த பெண்ணோ

அடை மழையோ அனல் வெயிலோ

ரெண்டும் சேர்ந்த கண்ணோ//

பெண்ணின் அழகு கண். கண்ணில் அவள் காட்டும் பாவங்களுக்கு மழை, வெயில், பௌத்தம், சமணம், தூண்டில், கத்தி, அணுகுண்டு என்று ஓராயிரம் வர்ணனைகள்.

காதலால் காதலாள் பார்வை காந்தமாய் கவரும் காந்தாள்.

“கடவுள் பூமி வந்தால்

உன் கண்ணை பார்க்க வேண்டும்

மனிதன் பாவம் என்று

அவன் மறைந்து போக வேண்டும்”

இரண்டு பால்ய கால சிறுவர்கள் நண்பர்களாக இருந்து காதலர்களாக வளரும் பாடலே என்றாலும் நினைவுகள் யாவருக்குமானதே!

//தொட்டவுடன் ஓடுறீயே

தொட்டாச்சிணுங்கி பெண் தானோ//

வயல் வாய்க்கால் கரையிலும் குளக்கட்டிலும் இருக்கும் தொட்டாச்சிணுங்கியை கைகளாலும் கால்களாலும் தொட்டு தொட்டு சுருங்க வைப்பதும் அது சிணுங்குவதை பார்த்து சந்தோஷம் அடைவதும்  இந்த சிறுவனுக்கும் பிடித்தமானது.

படத்தில் இருந்த மற்றைய பாடல்,

“அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க

நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க”

கிளி ஜோசியம் போல் தன் காதலுக்கு பதில் சொல்ல வடிவான கிளியான தன் காதலியை அழைக்கிறான். வண்ணக்கிளிக்கு நெல் மணிகளுக்கு பதில் பல்மணிகள் கொறிக்கும் முத்தம் தருவதாக கூறுகிறான் காதலன்.

அப்பொழுது எங்களுக்கு வரிகளின் அர்த்தம் எதுவும் புரியவில்லை. ஆனால், ஊரில் “பொன்னுக்கிளி” என்ற ஒருவர் இருந்தார். நல்ல உயரம், திடகாத்திரமான உடம்பு, நல்ல கறுவல். எப்பவும் பல்லு தெரிய சந்தோஷமாக சிரிக்கும் முகம். சண்டிக்கட்டு கட்டின சாறம். சிலநேரம் தோளில் ஒரு துவாய். மற்றும்படி வெறும்மேலோட தான் திரிவார்.

நாங்கள் பாடசாலை முடித்து வீடு வரும் வழியில் தான் அவரது வீடு. சரியாக பாடசாலை முடிந்து வரும் போது அவரை காணுவம். வயலில மாடு அவிட்டுக்கொண்டோ,  மாட்டுக்கு கஞ்சி கொண்டோ இல்லை இறைஞ்சுப்போட்டோ வருவார்.

இந்த பாடல் பிரபலமாய் இருந்ததால், அன்னக்கிளிக்கு பதில் பொன்னுக்கிளி என்று மாற்றி பாடிவிட்டு ஓடுவம். அவர் சிரிச்சிட்டே போவார். எங்கட பாட்டு,

‘பொன்னுக்கிளி நீ வாடா என் காதல் சீட்டெடுக்க

நெல்லுக்கு பதிலாக சணல் போட்டு சூடடிக்க’

ஒரு காலம் இருந்தது.

“அது ஒரு அழகிய நிலாக்காலம்

கனவினில் தினம்தினம் உலா போகும்

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே

அது ஒரு பொற்காலம்”

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 32

Thumi202121

விநோத உலகம் – 02

Thumi202121

கொண்டாடுவோம்!!! கொண்டாடச் செய்வோம்!!!

Thumi202121

Leave a Comment