ஒரு சில வருடங்களுக்கு முன்னர் மின் உற்பத்தி நிறுவனமொன்று தமது கழிவுற்பத்தியான ஒயிலினை உயரழுத்த அமுக்கத்தின் கீழ் நிலத்துக்குள் செலுத்தியதன் காரணமாக சுண்ணாகத்தை மையமாக கொண்ட பல கிலோமீற்றர் பரப்பளவில் பாரிய அளவில் நிலக்கீழ் நீர் மாசு படுத்தப்பட்டது.இது மனித ஆளுகைக்கு கீழான பாரிய பேரனர்த்தமேயாகும்.இத்தாக்கத்தின் விளைவாக இன்றும் பார உலோகங்கள் கலந்த மாசாகிய நீரினை ஆயிரக்கணக்கான மக்கள் தெரிந்தும் தெரியாமலும் பயன்படுத்தி வருகின்றனர். அன்றைய சூழ்நிலையில் இவ்விடயம் வட,கிழக்கு ஊடகங்களின் கவனத்தைப்பெற்றாலும் தென்பகுதி ஊடகங்கள் தமது கவனத்தை வழங்கவில்லை என்பதே நிதர்சனமாகும். விடயம் அரசியலாக்கப்பட்டதே தவிர பாதிக்காப்பட்ட மக்களுக்கும், இயற்கை அன்னைக்கும் நியாயமான தீர்வு இன்றுவரை கிட்டவில்லை.

இவ்வாறாகத்தான் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினை எமது பகுதிகள் சந்தித்தன.இதற்குரிய காரண காரியங்களை நாம் முன்னைய தொடர்களில் ஆராய்ந்திருந்தாலும் நீர் மாசாக்கத்துக்கு கணிசமான பங்களிப்பை இவ்வெள்ள அனர்த்தங்களும் வழங்குகின்றன. முறையற்ற வடிகாலமைப்பு, குளங்களை தூர்வாறாமை போன்ற விடயங்கள் யாழ் மாநகரப்பகுதிகளில் சரி செய்யப்படுகின்றமை வருங்கால வெள்ள அனர்த்த வாய்ப்பை குறைக்கும் என எதிர்வு கூறினாலும், இவ்வருடம் வட பகுதியில் வழமையான மழைவீழ்ச்சி அளவை விட 20% அதிகமாக இருக்கும் எனக்கூறப்படுகின்றது. எனவே மக்கள் சிறந்த அனர்த்த முகாமைத்துவ ஆயுத்தங்களுடன் இருக்க வேண்டும்.நீரை மாசடையச் செய்வன எனக் கருதப்படும் பொருட்கள் அடங்கிய நீண்டதொரு பட்டியல் உள்ளது. பொதுவான மாசுபடுத்திகளாவனநீரில் கரைந்துள்ள ஒட்சிசனை நுகரும் சேதனப் பொருட்கள்,தொங்கலாககக் காணப்படும் அமோனியா, பொசுபரசு,எண்ணெய், கிறீஸ், மலக்கழிவுகள் என்பனவாகும். அமிலத் தன்மை,உவர்த் தன்மை, நைதரசன், நிக்கல், குரோமியம், ஈயம், ஆசனிக்,யுரேனியம், கட்மியம், பாதரசம், சயனைட், ஐதரசன் சல்பைட்,குளோரின், பெற்றோலிய ஐதரோகாபன்கள், பீடைநாசினிகள்,அவற்றின் மீதிகள், கதிர் வீசும் அணுக்கள், ஆகியன ஏனைய மாசுபடுத்திகளாகும். அதிக வெப்பத்திலுள்ள நீர்நிலைகள், அடையல்கள், கலங்கற் தன்மை என்பனவும் மாசுபடுத்திகளாகக் கருதப்படுகின்றன.சாயமூட்டிகள், வெடிபொருட்கள், தீந்தைகள், பீடைநாசினிகள்,நிறப்பொருட்கள், பிளாஸ்டிக், மீச்சேர்மம் போன்ற பொருட்களும்,ஏனைய பல பொருட்களையும் உற்பத்தி செய்யும்தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவுகளில்காணப்படும், நீரை மாசடையச் செய்யும் சேதன, அசேதனஇரசாயனங்களைக் கொண்ட 120 இற்கும் அதிகமான பொருட்களைஐக்கிய அமெரிக்காவின் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை (EPA)வகைப்படுத்தியுள்ளது. இவற்றில் பெரும்பாலான இரசாயனங்கள்புற்றுநோயை உருவாக்கும், ஈரல், சிறுநீரகம் என்பனவற்றைச்சேதமாக்கும், மத்திய நரம்புத் தொகுதியை மோசமாகப் பாதிக்கும்.எனவே இவை மனித ஆரோக்கியத்திற்கு மோசமான ஆபத்தினைஏற்படுத்துவனவாகும். எல்.டி50 (LD50) என்னும் பெறுமானத்தைஅடிப்படையாகக் கொண்டு, நீர் வாழ் உயிரினங்களின் உயிரியல்மருத்துவ ஆய்வு (bioassay) இலிருந்து கழிவுப்பொருட்களிற்கானநியமங்களை ஐக்கிய நாடுகளின் சுற்றாடற் பாதுகாப்பு அதிகாரசபைவிருத்தி செய்துள்ளது. மாசுபடுத்திகளை குறிப்பிட்ட காலத்திற்கு வெளிப்படுத்தும் போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட உயிரினங்களில் ஐம்பது வீதத்தினைக் கொல்வதற்கு அவசியமான செறிவே எல். டி50 ஆகும். நீரில் மாசுபடுத்திகளை அனுமதிக்கக் கூடிய ஆகக் கூடிய அளவு இப்பெறுமானத்தின் (அதாவது எல்.டி50 இன்) 10% இற்கும் 1% இற்கும் இடைப்பட்டதாய் இருத்தல் வேண்டும்.
வீட்டு மற்றும் நகர கழிவுகளால் நிர் மாசாக்கம்
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வீடும் பல்வேறு வகையான கழிவுப்பொருட்களை உருவாக்குகின்றன. இவை பத்திரமாக சேமித்துவைக்க வேண்டியளவிற்கு பெறுமதி வாய்ந்தனவாகக்ருதப்படுவதில்லை. இவை வீட்டுக் கழிவுகள் என அழைக்கப்படுகின்றன. உதாரணமாக மீன் பொதி செய்யப்பட்டுள்ள தகரப் பேணியொன்றை திறந்து அதிலுள்ள மீனை நுகர்ந்த பின்னர்,அத்தகரப் பேணி பாதுகாத்து வைக்க வேண்டியளவிற்கு பெறுமதியானதல்ல. உண்மையில், அதிலிருந்து விடுபடும் வரை தகரப் பேணி எமக்கு தொந்தரவானதொன்றாகும். இவ்வீட்டுக் கழிவுகளை விரைவாக பிரிந்தழியக்கூடியவை, அவ்வாறு விரைவாக பிரிந்தழியமுடியாதவை என இரண்டாக வகைப்படுத்தலாம். பாவனை,சமைத்தல் உண்ணுதல் ஆகிய சந்தர்ப்பங்களில் வீணாகும் விலங்கு, தானிய, பழங்கள், மரக்கறிகள் ஆகிய கழிவுகளை இலகுவாக பிரிந்தழியும் கழிவுகளாகக் கருதலாம். பிரிந்தழிய நீண்ட நாட்களெடுக்கும் அல்லது விரைவில் பிரிந்தழியமுடியாத பொருட்கள் கண்ணாடி, மட்பாண்டப் பொருட்கள், பிளாஸ்டிக், பெற்றோலிய கைத்தொழிலிருந்து பெறப்படும் உப விளைவுப்பொருட்கள், உலோகங்கள் என்பனவாகும். பொலித்தீன் பொருட்கள் பிரிந்தழிய முப்பது வருடங்கள் வரை எடுக்கும். கடதாசி, வன் அட்டைகள் (Cardboard ), பொதி செய்யும் பொருட்கள், பலகை, ஆடைகள், நார் என்பனவற்றை இவையிரண்டிற்கும் இடைப்பட்டனவாகக் குறிப்பிடலாம்.
கிராமப்புறங்களில் வருமானம் குறைந்த வீடுகளில் உருவாகும் கழிவுகள் குறைந்தளவானதோடு, அவற்றில் பெரும்பாலானவை பிரிந்தழியக்கூடியவை. நகரப் புறங்களில் குறிப்பாக பணக்கார வீடுகளில் உருவாகும் கழிவுகள் அதிகளவானது மாத்திரமல்லாது,இலகுவில் பிரிந்தழியக்கூடியவையல்ல. ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் கழிவுகளை கிரமமான முறையில் உள்ளுராட்சி நிறுவனங்கள் அல்லது ஏனைய பொது நிறுவனங்கள் அகற்ற முடியுமாயின் ஆகக்குறைந்தது அந்தப் பகுதியிலுள்ள வீடுகளிலாவது கழிவுகளை அகற்றுவது பிரச்சினை இல்லாது போகலாம்.இருந்தபோதிலும், பெரும்பாலான ஏழை நாடுகளில் இவ்வாறான சேவைகள் வழமையாகக் கிடைப்பதில்லை. இதன் விளைவாக ஒவ்வொரு குடும்பமும் ஏதோவொரு வகையில் தமது வீட்டுக்கழிகளை அகற்ற வேண்டும். சிறிய எண்ணிக்கையான குடும்பங்கள் தமது வீட்டு வளவிலேயே இலகுவில் பிரிந்தழியக்கூடிய பொருட்களை குழி தோன்டி புதைத்து விடுகின்றனர். ஏனைய வீடுகளில் தமது எல்லைகளில் அவற்றை வீசி விடுகின்றனர், சிலர் பாதையோரங்களில் வைத்து விடுகின்றனர், இன்னும் சிலர் வேலைக்கு செல்லும் போது யாரிற்கும் சொந்தமில்லாத இடங்களில் அவற்றை கைவிட்டு சென்று விடுகின்றனர், ஏன் சில வேளைகளில் ஆறு போன்ற ஓடும் நீரில் கூட வீசி விடுகின்றனர். தமது வசிப்பிடங்களைக் கவனத்திற் கொள்ளும் போது பொதுமக்களின் பார்வையில் படாதவாறு கழிவுகளை வீசி விடுவதன் மூலம் தமது சமூகப் பொறுப்பை தாம் நிறைவேற்றி விட்டதாகக் கருதுகின்றனர். பெரும்பாலான வீட்டு, நகரக் கழிவுகளில் பெருமளவானவற்றை உருவாக்குவோர் அவற்றை நிலத்தின் மேற்பரப்பில் கைவிட்டுவிடுகின்றனர். இவை நேரடியாக மழையினால் அல்லது கடும்செறிவான மழையினால் ஏற்படும் வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்படும் போது இக்கழிவுகள் நீருடன் கலக்கின்றன. இவ்வாறு மாசடைந்த நீர் இறுதியாக கிணறுகள், அருவிகள், ஆறுகள்,குளங்கள், ஏரிகள் நீர்த்தேக்கங்கள் மற்றும் சமுத்திரத்தை அடைகின்றன.

ஆராய்வோம்…..