இதழ் 36

ஏற்றுவோம்! ஏற்றுவோம்!

தீபம் என்றால் என்ன? விளக்கா? எண்ணெய்யா? திரியா? தீயா? இவை எதுவுமே தனித்தனியாக இருக்கும் போது அவற்றின் குணங்கள் வேறு வேறாக இருக்கலாம். அவற்றின் நோக்கங்கள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அவையாவும் ஒருங்கு சேர்கையில் தீபம் ஆகிறது. ஆம்! வழிந்து ஓடி விடும் எண்ணெய்யை தீபம் ஒளிரும் வரை தடுத்து நிறுத்த விளக்கு தேவைப்படுகிறது. எண்ணெய் எரியாது. திரிதான் எரிகிறது. திரி மட்டும் போதுமா? இல்லை. எண்ணெய் இல்லாமல் திரியை எரித்தால் சில விநாடிகளில் திரி எரிந்து தீர்ந்து போகும். திரி நின்று எரிய எண்ணெய் வேண்டும். அந்த திரியை முதலில் பற்ற வைக்க பொறி வேண்டும்.

இந்த அத்தனை பொருட்களின் கூட்டு முயற்சிதான் ஒளிரும் ஒரு தீபம் என்பதை மறவாதீர்கள்.

தீபம் ஏற்ற ஏற்ற எண்ணெய்கள் பல உண்டென்றும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டென்றும் சொல்கிறார்கள். எண்ணெய்களை வெப்பப்படுத்தும் போது மருத்துவ ரீதியான நன்மைகள் உண்டாவதை விஞ்ஞானமும் ஏற்கத்தான் செய்கிறது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய், இலுப்பெண்ணெய், வேப்பம் எண்ணெய் என பல வகை எண்ணெய்களில் தீபம் ஏற்றலாம்.
தீபத்தோடு தமிழும் விளையாடுகிறது. தீபம் கொழுத்துவதாக கூறக் கூடாதாம். தீபம் அணைப்பதாகவும் கூறக் கூடாதாம். கொழுத்துவதும் அணைப்பதும் அழிவிற்குரிய சொற்களாம். அப்படியானால் எப்படி சொல்வது? தீபம் ஏற்றுவதாகவும், ஏற்றிய தீபத்தை குளிர்விப்பதாகவும் கூறுதல் அழகாம்! வார்த்தைகளிலும் நேரிய சிந்தனைகளை விதைக்க முனைந்திருக்கிறார்கள். தீபம் ஏற்றப்படும் போது எங்கள் வாழ்வும் ஏற்றமடையும் என்றும் தீபம் குளிர்விக்கப்படும் போது அதுவரை ஒளிர்ந்த தீபத்தால் எங்கள் மனங்களும் குளிர்ந்து பூரணத்துவமடைவதாகவும் கொள்ளச் சொல்கிறார்கள் முன்னவர்கள்.

இவ்வாறாக தீபங்கள் எங்கள் நாளாந்த வாழ்க்கையில் இணைந்துவிட்ட ஒன்று. இருள் விரட்டும் நோக்கமே பிரதானமாக இருந்த போதும் இன்று தீபங்கள் அந்த நோக்கத்திற்காக ஏற்றப்படுவது மிகக்குறைவு என்றே சொல்ல வேண்டும். பலவர்ண மின்குமிழ்கள் பன்மடங்கு திறனுடன் ஒளியை வழங்க காத்திருக்கும் போது தீபத்தை தேடுவோர் குறைவே. எப்போதாவது மின்சாரம் தடைப்படும் நாட்களில் மட்டும் தீபங்கள் தன் கடன் பணி செய்யும். மற்றபடி இறை வழிபாடுகளோடு தீபங்களின் பாவனை மட்டுப்படுத்தப்படுகின்றன.

இங்கும் ஒரு தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. எதற்காக?

இருளை விரட்டவாய் இருக்கலாம்! இறை வழிபாடாக இருக்கலாம்! தெற்குத்திசையில் எற்றப்பட்டு இருக்கிறதா? மோட்சதீபமாக இருக்கலாம்! மாதம் என்ன? கார்த்திகையா? விளக்கீடு ஆக இருக்கலாம்! ஐப்பசியா ? தீபாவளியாக இருக்கலாம்! அட ஆமாங்க! ஐப்பசிதான்! அப்படி என்றால் தீபாவளியா?

ஆம்! தீபங்களை வரிசையில் ஏற்றும் பண்டிகையான தீபாவளி தான். ஆனால் வழமையாக தீபாவளிக்கு தீபங்கள் ஏற்றுவதில்லையே? அந்த வழக்கம் இன்னும் ஒழிந்து விடவில்லை என்பதை ஒளிரும் இந்த தீபமாவது சொல்லட்டுமேன்!

இந்த தீபாவளியில் ஒரு தீபமாவது எல்லோர் இல்லங்களிலும் ஏற்றுவோம்!

இயலுமானவரை இன்னொருவர் வாழ்வையும் ஏற்றுவோம்!

Related posts

ஈழச்சூழலியல் 22

Thumi202121

2021 ஐ.பி.எல் இல் சிறந்த வீரர் யார்?

Thumi202121

சித்திராங்கதா – 35

Thumi202121

Leave a Comment