இதழ் 36

சிங்ககிரித்தலைவன் – 34

நழுவிய காவி!

மாந்தைத் துறைமுகம் கடல் அலைகளின் அரவணைப்பால் நிறைந்து கிடந்தது. சிறு வளங்களும் கடலோடிகளின் வத்தைகளும், தூரத்தே கடலில் பெரிய மரக்கலங்களுமாகத் துறைமுகப் பகுதி எங்கும் வணிகர் கூட்டமும் வணிகப் பொருட்களும், பரவிக்கிடந்தது. அரேபிய நாடுகளில் இருந்து வந்த வர்த்தகர்களை கடலோடிகளின் சிறுவர்கள் வியப்பாகப் பார்த்துக்கொண்டு அவர்கள் பின் போயினர்… யாழ்ப்பாண ராசதானியின் காவலர்கள் காவல் செய்ய, மாந்தைக்கடலில் முக்குளித்த முத்துக்களைத் தரம் பிரிக்கும் பணி பிரத்தியேக ஆறுகால்மண்டபம் ஒன்றில் இடம்பெற அதை ஆவலுடன் வெளிநாட்டு வர்த்தகர்கள் பேரம்பேசத்தயாராகிக்கொண்டிருந்தனர்.


மறுபுறத்தில் உப்பிட்டு பதனிடப்பட்ட மீன்கள் கருவாடாகுவதற்காகக் காயவிடப்பட்டிருந்தன… அந்தப்பெரிய பெரிய மீன்களைக் கச்சணிந்த பெண்கள் பறவைகளிடம் இருந்து காத்து நின்றனர். பனையோலைப்பாய்களில் காய விடப்பட்டிருந்த கருவாடுகளை சில வெளிநாட்டு வர்த்தகர்கள் பார்த்துக்கொண்டு தமக்குள் ஏதோ பேசிக் கொண்டும் இருந்தார்கள்…
யாழ்ப்பாண அரசுக்கு செல்வத்தை வாரி வழங்கிய மாந்தைத் துறைமுகம் நாள் முழுதும் பரபரப்பாகவே இருக்கும் அதே நேரம் கடல் கண்காணிப்பும் வரி அறவீடுகளும் முறையாக இடம்பெறும். அந்தத் துறைமுகத்தினூடாக செல்லும் அனைவரும் தமக்கான தொகையை அரசுக்கு செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் துறவிகளுக்கும் அரச வம்சத்தவர்களுக்கும் அது விலக்களிக்கப்பட்டது.


இப்போதும் ஒரு பெளத்த துறவி தன் சீடர்கள் சிலருடன் ஒன்றாகத் துறைமுகத்துக்குள் நுழைகின்றார். ஆனால், துறவிகளுக்கு உரிய நடையோ அமைதியோ அடக்கமோ அவரிடத்தில் சற்றும் இல்லை! அவருடைய நடையில் ஒரு கம்பீரம் அவருடைய கண்களில் அருளுக்குப் பதிலாக ஆவேசமும் அங்கலாய்ப்பும் நிறைந்திருந்தது! புதிதாக சவரம் செய்யப்பட்ட தலை தாடி என்பவற்றிற்கான அடையாளங்களாக குறித்த பகுதிகளில் ஏற்பட்டிருந்த சில காயங்கள் குறிகாட்டின. புதிய காவியாடையும், பிச்சாபாத்திரமும் இவர் ஒரு புதிய துறவி என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டின. ஆனால் அவர் முகம் மட்டும் எப்போதோ நாம் பார்த்த முகம் போலவே இருந்தது…


புதிதாக தலைமுடியையும் தாடியையும் மழித்துக் கொண்டதால் பழகிய முகமாக இருந்தாலும் அது நமக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை…
கிடுகிடுவெனச்சென்ற அந்தத் துறவிகள் கூட்டம் ஒரு கூடாரத்தின் அருகில் போனதும் அந்தக்கூடாரத்தில் இருந்து வெளியே வந்த ஒருவன் ஒரு தண்டத்தை துறவியின் கையில் கொடுத்தான்… அத்தோடு ஒரு ஓலையும் சுற்றப்பட்டிருந்தது. அதை வாங்கிக்கொண்ட துறவியை ஒரு ஏவலாள் அழைத்துச்சென்று ஒரு வத்தையில் ஏற்றி விட்டான். அந்த வத்தை கடலை நோக்கி பயணிக்கத் தொடங்கியது…

சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய மரக்கலத்துக்கு அருகில் அந்த வத்தை சென்றதும் மரக்கலத்திலிருந்து ஒரு கயிற்று ஏணி கீழே இறக்கப்பட்டது. அத்தனை பௌத்த துறவிகளும் மிக லாவகமாக கைதேர்ந்த வீரர்களைப் போல அந்த கயிற்றை பிடித்து மரக்கலத்தில் ஏறினார்கள்!அவர்களுக்கு கை கொடுத்து ஏற்றி விட்ட ஒருவன் கட்டுடல் வாய்க்கப்பெற்ற கடலோடி போன்று காட்சியளித்தான்!
உள்ளே ஏறியதும் “வரவேண்டும் மல்லா! வர வேண்டும்! அப்படியே அச்சு அசலாக ஒரு துறவியை போலவே இருக்கிறாயே… நீ சிறந்த வில்லாளி மட்டுமல்ல! சிறந்த வேடதாரியும் கூட! உன்னை மன்னர் எதற்காக தன் நம்பிக்கைக்கு பாத்திரமாக வைத்திருக்கிறார் என்பதை இப்போதுதான் உணர்ந்து கொள்கிறேன்!”
அடடா… சிங்ககிரியின் அடிவாரத்தில் எமக்கு அறிமுகமான மல்லன் தான் இந்தத் துறவி!

இது ஆசைகளைத் துறந்து ஏற்ற துறவறம் அல்ல! ஏற்கனவே துறவறம் துறந்த மகாநாமரை உயிரையும் துறக்கச் செய்வதற்காக காசியப்பனால் திட்டமிடப்பட்டு வழங்கப்பட்ட துறவறம்!
“நாகா… நலமா? மகாநாமரின் தலையுடன் தான் மீண்டும் உன் கலத்தில் ஏறி இலங்கை வர வேண்டும் என்று தளபதியார் கட்டளையிட்டுள்ளார்… உனக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியம் வெளியில் கசியக்கூடாது கவனம்!”


“மல்லா… உன்னைப்போல் நானும் மாமன்னர் காசியப்பரின் விசுவாசி தான்! அவரின் புரட்சிப் படையை வழிநடாத்தியதற்காகத்தானே என்னை இந்த மரக்கலத்தின் தலைவனாக என் ஆசைப்படி அவர் மாற்றினார்! இந்த செல்வச் செழிப்பும் இந்த மரக்கலமும் அவர் எனக்கு கொடுத்த வெகுமானம்… இதை ஆயுள் உள்ளவரை நான் மறக்க மாட்டேன்! அவர் அனுப்பிய ஓலைப்படி உன்னைப்பாண்டி நாட்டின் கீழக்கரைக்கு அழைத்துச் செல்வதே என் வேலை! ரகசியம் எப்போதும் பேணப்படும்! உன் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!” வெற்றி இறுமாப்புடன் ஒருவரின் கையை ஒருவர் பற்றிக்கொண்டு பலமாகச் சிரித்தார்கள்!
அந்தச்சிரிப்பின் சத்தம் காற்றோடு கலந்து கடலில் மிதந்தது!


“மல்லா மாமன்னர் காசியப்பர் சிங்கககிரி என்கின்ற ஒரு குன்றத்தை தன் இருப்பிடமாக மாற்றிக் கொள்ள முயற்சி எடுத்திருக்கிறாராமே…! அனுராதபுரத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் அங்கு படையெடுத்து கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்… நாடு புதிய தலைநகரத்தோடு, அரச படை வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் மாற்றங்களுக்கு உள்ளாகிறதாமே? இனி உன்பாடு கொண்டாட்டம் தான்!” காவியுடையில் இருந்த மல்லனின் தோளை தட்டிக்கொடுத்தான் நாகன்!

இந்தக் கலத்தலைவன், நாகன் காசியப்பன் தன் தந்தைக்கு எதிராகப் புரட்சிப் படையை ஒழுங்கு படுத்திய போது அவனோடு உடனிருந்து புரட்சிப் படையை வழிநடத்திய ஒரு தளபதி!
மாமன்னர் தாதுசேனரின் படை அணி ஒன்றின் தலைவனாக இருந்தபோதும் காசியப்பன் மீது கொண்ட பற்றின் காரணமாக அப்போது அவனுக்கு உதவியிருந்தான்! அந்த நன்றிக் கடனுக்காக காசியப்பன் இவன் விரும்பியது போல இவனை வணிகம் செய்ய அனுமதி வழங்கி, நாட்டுக்குச் சொந்தமான பெரிய மரக்கலம் ஒன்றையும் இவனுக்கு வெகுமானமாக வழங்கியிருந்தான்!
“என்ன நாகரே… அவசரப்பட்டு தளகர்த்தர் பதவியை விட்டு விட்டு வணிகம் செய்யப்புறப்பட்டு விட்டோமே என்று கவலைப்படுகிறீரா? மன்னரோடு இருந்திருந்தால் சுகபோக வாழ்வு வாய்த்திருக்கும்…”


என்று மல்லன் கூறி முடிப்பதற்குள் நாகன் பலமாக சிரித்தான்! யுத்தத்தை வெறுப்பவன் நான்! நிலையான ஒரு நாட்டில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அதை எப்போதாவது ஒருநாள் இழக்க வேண்டி ஏற்படும்! அசையும் இந்த மரக்கலாமே என் நாடு! சுகபோகம் இலங்கை நாட்டில் மட்டுமல்ல! இந்த மரக்கத்திலும் இருக்கிறது!”என்று மரக்கலத்தின் மேற்றளத்தின் உள்ளே மல்லனையும் மற்றவர்களையும் அழைத்துச் சென்றான்! உள்ளே ஒரு அரண்மனையை போல அலங்கரிக்கப்பட்டிருந்தது! ஆடல் அழகிகள் சிலர் இவர்களின் வரவால் எழுந்து நின்று வணங்கி நின்றனர்!


விழி அகல உள்ளே தன் பார்வையால் துலாவிய மல்லனின் கண்கள் அந்த அழகிகளில் போய் குத்தி நின்றன!


“ரசனை மிகுந்தவர் தாங்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் நாகரே!”
மல்லனின் தோளில் இருந்து காவியுடை மெல்ல நழுவி விழுந்தது!
கலம் இதமாக அங்கும் இங்கும் அலைகளால் தாலாட்டப்பட்டு மிதந்து கீழக்கரையை நோக்கி மிதந்து கொண்டிருந்தது!

இன்னும் நகரும்…

Related posts

ஏற்றுவோம்! ஏற்றுவோம்!

Thumi202121

மலையக மக்களும் குடியுரிமைப்பிரச்சினையும் மு.சிவலிங்கத்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு – 01

Thumi202121

கொண்டாடுவோம்!!! கொண்டாடச் செய்வோம்!!!

Thumi202121

Leave a Comment