உலகின் மிகப் பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு
துபாயில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம் திறந்து வைக்கப்படவுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதன் ஒரு முயற்சியாக துபாயின் புளூவாட்டர்ஸ் தீவில் ஒரு பிரமாண்ட ராட்டின சக்கரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘ஐன் துபாய்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ராட்டினம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் உலகின் உயரமான ராட்டின சக்கரமாக அமெரிக்காவின் லாஸ் வேகாசில் உள்ள ‘ஹை ரோலர்’ ராட்டினம் இருந்தது. அந்த ராட்டினம் 167 மீட்டர் உயரமானது. தற்போது கட்டப்பட்டுள்ள இந்த ஐன் துபாய் ராட்டினம் 250 மீட்டர் உயரமாகும். ஒரே நேரத்தில் 1750 பேர் இதில் பயணிக்க முடியும். இது பிரிட்டனின் லண்டனில் உள்ள ‘லண்டன் ஐ’ ராட்டின சக்கரத்தை விட இரண்டு மடங்கு அதிக உயரமாகும்.

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை
உலகத்திலேயே முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நியூயோர்க் நகரைச் சேர்ந்த N.Y.U லங்கோன் மருத்துவமனயில் மூளைச் சாவடைந்த இருவரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் பன்றியின் சிறுநீரகம், அவரின் இரத்த குழாய்களுடன் இணைக்கப்பட்டு உடலுக்கு வெளியே வைத்து பராமரிக்கப்பட்டது. சிறுநீரகம் மூளைச் சாவடைந்த நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் உடனடியாக நிராகரிக்கப்படாமல் இயங்கியுள்ளது.
சிறுநீரக செயல்பாட்டின் சோதனை முடிவுகள் “மிகவும் சாதாரணமாகத் தோன்றியது” என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராபர்ட் கூறியுள்ளார்.
விலங்குகளின் உறுப்புகளை மனிதனுக்கு பொருத்தும் முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் குரங்களின் உறுப்புக்களை மனிதனுக்கு மாற்றும் முயற்சிகள் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊசி இல்லாத சிரிஞ்ச் கண்டுபிடிப்பு
நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்களால் ஊசி இல்லாத, செலுத்தும் போது வலி தெரியாத, லேசர் தொழில்நுட்பத்தினாலான சிரிஞ்ச் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திரவநிலையில் உள்ள மருந்தானது லேசர் கதிரினால் சூடாக்கப்பட்டு நீர்க்குமிழியாக மாற்றப்பட்டு மணிக்கு 100 கி.மீ க்கு அதிகமான வேகத்தில் தோலில் உள்ள நுண்துளைகள் ஊடாக உடலினுள் செலுத்தப்படுகிறது. இதன்போது ஊசி செலுத்தியதற்கான எந்தவொரு அடையாளமோ வலியோ ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே உயரமான பெண்ணாக ருமைசா கெல்கி
துருக்கியை சேர்ந்த 24 வயதுடைய ருமைசா கெல்கி 7 அடி 7 அங்குலம் உயரத்துடன் உலகிலேயே உயரமான பெண் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். அரிய மரபணு கோளாறு காரணமாக கெல்கி இவ்வாறு அசாதாரண உயரத்தை எட்டியதாக கூறப்படுகிறது.
