இதழ் 36

நூலறுந்த பட்டம்…….

காற்றில் சுழன்று ஆடியபடி – என் வீட்டு முற்றத்தில் விழுந்த
நூலறுந்த பட்டமது
ஏதோ புன்னகைத்தபடி தவண்டெழுந்து ஓடிச்சென்று
கையில் தூக்கிப் பற்றிய அக்கணம்

எங்கிருந்தோ நினைவுகள்
பலகூடி வந்து தவழத்தொடங்கின – என் ஆழ்மனதில்
பட்டத்தைக் கையில்
இறுகப்பற்றிய படி
நினைவு நூலை மீட்பதென சற்றே அமர்ந்துகொண்டேன்

ஏடு தொடங்கி
ஏழெட்டாம் ஆண்டு வரை
பள்ளிப் படிப்பில் மறைத்திட முடியாத பக்கங்கள் அவை
ஆனி ஆடி யென அடியெடுத்து வந்து விட்டால்
வீதிகள் மைதானமென என் கால்களின் பயணங்கள்

விசும்பின் தடம் வருடிய
தென்றலும் சாட்சி
செருப்பின்றி நான் ஓடிய
தூரத்தின் வரம்புகளுக்கு!
உயரப்பறந்து வட்டமிட்ட கழுகுகளும் சாட்சி
ஏறிய பட்டமதின் ஓய்வறியா உயரங்களுக்கு!

தொடங்கியது ஆனி அன்று…..மரங்களின்
இடைவிடாத அசைவுகளுடன் உரசிய காற்றின்மொழிகள்
கேட்கக் கேட்க புரியாத புதிராயினும்
மரத்தின் மேல் கொண்ட தென்றலின் காதலே அது

உரசி உரசி
வளர்த்து வந்த தென்றல்
தீண்டிய காதலும் முத்தமும்
ஒரு புறம் இருக்க
அம்மாவின் தையல் நூலை திருடியபடி விளக்குமாறில்
ஈர்க்கிள் முறித்த
என் கைகள் ஒருபுறம்

பட்டம் கட்டத் தெரியாதெனினும்
முடிந்தளவு ஏதோ
மீண்டும் மீண்டும்
முயற்சிக்கிறது அக்கைகள்
விசும்பில் ஏவியபடி நின்ற யாரோ ஒருவனின் பட்டமே
அன்று எனக்கு தட்டிக்கொடுத்த ஊக்குவிப்பும் கூட

நான்கைந்து ஈர்கிலுடன்
ஒரு தடி தைத்து
ஒரு கட்டு நூலோடி மணிநேரம் ஒன்று நீண்டு கழிய
மாவெடுத்து வெந்நீருடன் அம்மாவிடம் அடிவாங்கி
அழுது முடித்து பசை செய்த நினைவுகள் அங்கே

சிரட்டையிலெடுத்த
பசையுடன் சேர்த்து
அப்பாவின் கடையில் வாங்கிய வானிஸ் பேப்பருமென
ஓயாத ஓவியமாக
விண்பறக்க வெகுநேர
அலங்கரிப்புக்கள் தீயாக நடந்தேறிய தருணமது

புறப்படத் தயாரெனினும்…
முச்சை போடத் தெரியாது..
அண்ணா என இதற்கு மட்டும் பாசத்துடன் என் அழைப்பு
முப்புறமும் சரிபார்த்து
சமனிலைகள் சரியழந்து
அவன் போட்டுத்தந்த முச்சையுடன் தயாரானது என்பட்டம்
காலத்தின் அறிவியலில்
நான் ஏவப்போகும் கனாக்களின்
முதலாவது விண்கலம் அது….
இருந்த நூல்ளை எல்லாம்
சேர்த்து முடி போட்டு
வாலுக்கு சீலைகொண்டு
புறப்படத் தயாரானது அது
ஒரு நாள் பொழுது கடந்த உழைப்பின் பயனறிந்து
மறுநாள் வான் பறக்க பயணமானது மாஸ்டர் வளவு நோக்கி
முற்கல்லென அனைத்தும் செருப்பின்றிய பாதம் முத்தமிட
ஒடத் தொடங்கியது என்னுடன் ஆறேழு சோடிக்கால்கள்

பட்டத்தின் முதுகுப்புறம்
ஒருவன் பற்றியிருக்க
நூலை இழுத்து
முன் ஓடிச்சென்றது என்கால்கள்
காற்றுக் கணித்து வயர்கள் விலத்தி கூடி நின்ற
நட்புகளின் ஆர்ப்பரிப்பில் விண்தொட்டது என் முதற்பட்டம்

ஏதோ செவ்வாய்க்கு விண்கலமது ஏவி விட்டோம் போல்
அளவில்லா சந்தோசம்… கூடியிருந்தவர்களின் புன்னகைகள்
சொற்களில் கூட வரைவிக்க முடியாத ஆனந்தமும் கூட
அன்று ஒரு நாள் நிறைவுதனில்

நினைவுகள் மீட்டிய படி பற்றிய பட்டமது கையிலிருக்க
அண்ணா என ஒலித்த ஒரு சிறுவனின் குரலால்
கதவைத்திறந்து கொண்டேன் வெளிச்சென்று பார்க்க
செருப்பின்றி கால்களுடன் என்னைப்போன்ற ஒருவன்

‘அண்ணா இது என்ட பட்டம்” என்றவாறு பயந்த குரலது
‘;பயப்பிடாத நான் தாறன்டா, கொண்டு போ” என்று
என் குரல் மெலிதாக ஒலிக்க சற்றே புன்னகையுடன்
வாங்கிக் கொண்டு ஓடிச் சென்றான் அவன்

பற்றிய பட்டத்தைக் அவனிடம் கொடுத்த நான்
மீண்டும் அப்பட்டம் என் வீட்டில் விழுந்து விடாதோ
என எண்ணி மனதிற்கு அறிவால் ஆறுதல் தந்து
வீட்டின் உள்நோக்கி புறப்பட்டேன் வானம்பாடியாக……

Related posts

கொண்டாடுவோம்!!! கொண்டாடச் செய்வோம்!!!

Thumi202121

துமியார் பதில்கள் – 02

Thumi202121

ஏற்றுவோம்! ஏற்றுவோம்!

Thumi202121

Leave a Comment