இதழ்-38

சித்திராங்கதா – 37

வன்னியன் விரித்த வலை

‘தேவி, ராஜமந்திரியார் தான் இதனைச் செய்தார் என்று நான் சத்தியம் செய்து உரைப்பேன். இச்செயல் ஆற்ற காரணம் தங்கள் மீது கொண்ட பகை என்று அர்த்தமல்ல தேவி. தன் மகள் மீது கொண்ட பற்று. அதில் அநியாயமாய்ப் பாதிக்கப்பட்டு நிற்கப்போவது தாங்கள் என்பதையே தங்களிற்கு எச்சரித்து நிற்கிறேன்’ என்று இணக்கமான குரலில் கூறியபடி சித்திராங்கதாங்கதாவை தன்வசம் திருப்பும் முயற்சியில் முனைப்பாய் நின்றான் வன்னியத்தேவன்.

‘தன் மகள் மீது கொண்ட பற்று என்றால்… மாருதவல்லிக்காகவா?’ என்று கேட்டாள் சித்திராங்கதா.

‘ஆம்.. அப்பெண்ணிற்காகவேதான்..’

‘மாருதவல்லிக்காக என் அரங்கேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது வன்னியத்தேவரே? தங்கள் கூற்றில் எதிலும் தெளிவு என்பதேயில்லையே’

‘தெளிவாகவே கூறுகிறேன் தேவி’ என்றபடி தன் மேற்சால்வையின் அந்தத்தை தன் கைகளால் தாங்கிச் சுழற்றியவாறே அங்குமிங்கும்
நடந்தபடி கூறத் தொடங்கினான்
‘சற்றுமுன் கூறினேனே.. தங்கள் ஆட்டத்திற்கு வடநாட்டு வேந்தர் கூட தம் காலடியில் வந்து விழுந்து கிடப்பர் என்று… அது ஒன்றும் பொய்ப்புகழுரை அல்ல என்று தாங்களே அறிவீர்கள். அதற்கு தக்க ஆதாரம் உண்டு என்றும் தாங்கள் அறிவீர்கள்’

சித்திராங்கதா அமைதியாகவே நின்றாள்.

‘விஜயநகர ராச்சியத்தின் இணையில்லா மாவீரர் தஞ்சைப்படை தாங்கி ஈழம் வந்திருக்கும் படைத்தளபதியைப் பற்றித்தான் நான் கூறுகிறேன் என்று தேவி இப்போது ஊகித்திருப்பீர்கள் அல்லவா?’

‘என்ன பிதற்றுகிறீர்கள் வன்னியத்தேவரே…’ மெல்லிய கோபத்தோடு கேட்டாள் சித்திராங்கதா.

‘உண்மையை நானும் அறிவேன் கலாராணி. தாங்கள் வீரமாகாளி கோயில் மேடையை விட்டு இறங்கிய அடுத்த நொடியிலேயே தங்களைத் தேடி அந்த மாவீரர் அலைந்த போது உக்கிரசேனன் தான் அன்று அவ்வீரனிற்கு வழிகாட்டி உதவினான். இல்லையா உக்கிரசேனா?’ என்று கூறியபடி உக்கிரசேனனை நோக்கினான்.

ஆமாம் என்பதுபோல் தலையாட்டினான் உக்கிரசேனன்.

வன்னியத்தேவன் கூறிய இச்செய்தி சித்திராங்கதாவிற்கு உள்ளூர பெருமகிழ்வை கொடுத்தாலும் இவ்விடத்தில் அவள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தன் உள்ளத்தில் பூட்டி வைத்திருக்கும் ஆசைநாயகன் தன்னைத்தேடி அலைந்தானா? இது ஒன்றும் சாதாரண விடயமல்லவே. அவள் கொண்டிருந்த காதல் பசிக்கு இச்செய்தி பெருவிருந்தல்லவா.. ஆனால் விருந்தை அனுபவிக்கும் நிலமைதான் இப்போது அவளிடம் இல்லை. தன் உணர்வுகளை சுதாரித்துக் கொண்டு
‘வன்னியத்தேவரே, நான் கேட்டதற்கு பதிலுரைக்காமல் வேறு என்னவோ எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நாம் ராஜமந்திரியார் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்’

‘நல்லது தேவி, நினைவுபடுத்தினீர்கள். இல்லையென்றால் நானும் தேவையில்லாத கதைகள் இன்னும் ஏராளம் கூறியிருப்பேன். தஞ்சை வீரர் தங்கள் நாட்டியம் கண்டு பரமரசிகனாகி தங்கள் பின்னால் நாடி வருவதை ராஜமந்திரியார் எங்ஙனமோ அறிந்து கொண்டார் போலும். அவர் போட்டு வைத்திருக்கும் திட்டங்களிற்கு இது தடையாகி விடும் என்ற பேரச்சத்தினாலே தங்கள் அரங்கேற்றம் நடந்துவிடவே கூடாது என்பதில் உறுதியாய் நின்றுள்ளார்’

‘அவர் போட்டுவைத்திருந்த திட்டமென்பது?’

‘அது இன்னுமா தங்களிற்குப் புரியவில்லை? இணையற்ற மாவீரனை தன் எண்ணம்போல் யாழ்வேந்தன் ஆக்கி தன் மகளினை மகாராணியாக்க வியூகம் வகுக்கிறார் ராஜமந்திரியார். ஆனால் தஞ்சைவீரரோ தங்கள் நாட்டியத்தைக் கண்டு தங்களையே வலம் வருகிறார். இதில் அரங்கேற்றம் என்று வேறு நடந்துவிட்டால் தஞ்சைவீரரை தங்களிடமிருந்து விலக்குதல் இயலாததாய் விடுமல்லவா? பின்னர் அவர் வியூகங்கள் எல்லாமே வீணாகிவிடக்கூடும். இப்போது புரிகிறதா தேவியே’
என்று வன்னியத்தேவன் கேட்டபோது சித்திராங்கதாவால் பதில் ஏதும் கூற முடியவில்லை.

நேற்றைய வன்னியர்விழாவில் ராஜமந்திரியாரால் தான் சபையில் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டதற்கான பழி தீர்க்கும் படலத்தை ஆரம்பித்து விட்டான் வன்னியத்தேவன்.

வன்னியத்தேவன் சொன்னவை யாவும் உண்மைதானா என்கிற சந்தேகத்தை விட அவை உண்மையாய் இருந்தால் நிகழப்போகும் விளைவுகளை எண்ணும் போது தான் சித்திராங்கதாவால் அசையமுடியவில்லை. கன்னங்கள் நோக கற்சிலை போலவே நின்று கொண்டிருந்தாள்.

அரங்கேற்றம் தடைப்பட்ட ஆடலரசியாய் அவள் இன்னும் தன் உடலில் உயிர்பிடித்து வைத்திருக்க ஒரே காரணம் அந்த ஒரே நம்பிக்கைதான். ஆனால் அதற்கெதிராகவே சதி நடக்கிறது என்று கேள்வியுற்ற நொடி தன் நம்பிக்கை நரம்பின் கடைசி இழையும் அறுந்துவிடுகிற ஓசை அவளிற்கு மட்டும் கேட்டது. அவள் உள்ளத்தில் உயிரினை பெருஞ்சுமையாக எண்ணத் தொடங்கினாள்.

ஆனால் வன்னியத்தேவன் தொடர்ந்து கூறிய வார்த்தைகள் தான் அவள் உயிர் வாழ வேண்டியதன் அவசியத்தை தனக்கு உணர்த்துவதாய் அவள் மீண்டும் நம்பத்தொடங்கினாள்.

‘ஆனால் தேவி , ராஜமந்திரயாரது இந்தத்திட்டமானது பலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு அறவே இல்லை. ஏனெனில் தஞ்சைவீரரின் சிந்தை முழுதும் தங்களையல்லவா சுற்றி வருகிறது.. ‘ என்று கூறிச் சிரித்தான் வன்னியத்தேவன்.

அந்தக்கோரமான சிரிப்பு சித்திராங்கதாவிற்கு அவ்வளவு சந்தோசத்தை உண்டுபண்ணியது.

வன்னியத்தேவன் மேலும் தொடர்ந்தான்.
‘ஆனாலும் இந்த இராஜநாகத்தை பற்றி அவ்வளவு சுலபமாக நாம் எண்ணிவிடவும் கூடாது. தன் எண்ணத்தை நிறைவேற்ற எத்தகைய சதிச்செயலையும் ஆற்றவல்லவர் ராஜமந்திரியார் ஆவார். மகா அதிகாரம் கொண்ட மாமன்னரையே தன் கைப்பொம்மையாய்க் கொண்டவரல்லவா? மன்னரின் அதிகாரத்தைப் பயன்படுத்தியே தன் எண்ணங்களை அரச ஆணையாக்கி சாதித்துக்கொள்வார். அவ்வறன்றே ஒரு நாட்டிய கலாராணியின் அரங்கேற்றப் பெருவிழாவையே தடுத்து நிறுத்தி இருக்கிறார். இதற்கு மேல் வேறென்ன ஆதாரம் சொல்லவேண்டும். நான் சொல்வது புரிகிறதா தேவி?’ என்று சித்திராங்கதாவை நோக்கிக் கேட்டான் வன்னியத்தேவன்.

சித்திராங்கதா அமைதியாகவே ஆம் என்பது போல் தலையாட்டினாள்.

‘மந்திரியாரின் சதித்திட்டங்கள் பலிக்காதிருக்க இப்போதிருக்கும் உபாயம் ஒன்றே ஒன்றுதான்’ என்று கூறியவாறே சித்திராங்கதாவின் முகத்தை கூர்ந்து அவதானித்தான் வன்னியத்தேவன்.

அவளது கலவரமான முகத்தில் தெரிந்த அந்தப் பெரிய வினாக்குறியை இரசித்தவாறே மேலும் பேசத் தொடங்கினான் வன்னியத்தேவன்

Related posts

அழுகை….!!!

Thumi202122

ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்

Thumi202122

பிரண்டையின் மருத்துவம்

Thumi202122

Leave a Comment