புதிய வருடம் புதிய பல நம்பிக்கைகளை சுமந்து புத்துணர்வோடு மலர்ந்திருக்கையில் துமியூடாக சூழல்சார் கரிசனை விடயங்களை சுமந்து வரும் ஈழச்சூழலியல் வழி, பெருமகிழ்வோடும், நன்றியுணர்வோடும், பசுமையான புதுவருட வாழ்த்துகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். இனிவரும் காலங்களிலும் செல்நெறிமேம்பாட்டின் தொடர்நிலைச் செயற்தொடர்ச்சியாக சூழலை நேசித்து, சூழலின் உயிர்ப்பை உணர்ந்து சூழல்நேய வாழ்வியல் நெறிகளை பின்பற்றி நிலைபேறான வாழ்வியல் இலக்குகளை அடைய எத்தனிப்போம்.
பீடைநாசினிகள் எவ்வாறு நீர்ச்சூழலில் தாக்கம் செலுத்துகின்றன என ஆராய விளைந்ததன் தொடர்ச்சியாக பீடைநாசினி உற்பத்தியாளர்கள் மிகவும் நச்சுத்தன்மையான, நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய, உயிரியல்ரீதியில் ஒன்றுசேரக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, சடுதியாகபிரிகையடையக்கூடிய, இலக்காகக் கொள்ளப்படாத, உயிரினங்களிற்குத் தீங்கை ஏற்படுத்தாத பீடை நாசினிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளனர். நேரடியாகப் பிரயோகித்தல் மண்ணிலிருந்து மேற்பரப்போட்டம், கழிவுகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் பொருட்கள் என்பனவற்றின் மூலம் பீடைநாசினிகள் நீர்நிலைகளை அடையலாம். ஓகனோகுளோரின் பீடைநாசினிகள் வனசீவராசிகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியனவாகும். D.D.Tஇன் உயிரியல்ரீதியில் அதிகரித்துச் செல்லும் காரணி (உணவுச்சங்கிலியின் வழியே அதிகரித்துச் செல்லல்) நீரிலிருந்து அல்காக்களிற்கும், அதிலிருந்து மீன்களிற்கும், அதிலிருந்து பறவைகளிற்கும் செல்லும் போது 100,000ஐ விட அதிகமானதாய் இருக்கும். 1980களின் ஆரம்பத்தில் பெரும்பாலான நாடுகளில் தாய்ப்பாலில் தரப்பட்ட நியம அளவான 0.74 mg/kgஐ விட அதிகளவான D.DT காணப்பட்டது. பென்டாகுளோரோபைபீனைலிஸ் என்பது நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய, உயிரினங்களிற்கு ஆபத்து விளைவிக்கக்கூடியஇன்னொரு பீடைநாசினியாகும். சில பீடைநாசினிகள் அபிவிருத்தியடைந்த நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்றும் கூட அவை ஏழைநாடுகளில் காணப்படுகின்றன. ஏனெனில் இவை சுற்றாடலிற்கு ஆபத்தானவையாகக் காணப்பட்டாலும் கூட, மிகவும் மலிவானவையாகும்.
உயிரியற்படியிறக்கமடைதல், நீர்ப்பகுப்பு, ஒளிப்பகுப்பு அல்லது ஒட்சியேற்றம் என்பனவற்றின் மூலம் அதன்செறிவு அரைவாசியாகக் குறைவதற்கு எடுக்கும் காலப்பகுதியே அவற்றின் நிலைத்திருக்கும் காலம் (Persistence) எனப்படும். D.D.T போன்ற பீடைநாசினிகள் கொழுப்பிற்கரைந்து, கொழுப்பிழையங்களில் ஒன்று சேரும். கிளைபொசேற் போன்ற ஏனைய பீடைநாசினிகள், அனுசேபமடைந்து கழிவாக வெளியேறக்கூடியனவாகும். நீர்வாழ் உயிரினங்களில் பீடைநாசினிகள் பல
பாதிப்புகளை ஏற்படுத்தும். இவை புற்றுநோயை ஏற்படுத்தும். இனப்பெருக்கத்தை தடைசெய்யும். நிர்ப்பீடனத் தொகுதியைபாதிக்கும். உடலியல் விகாரங்களை ஏற்படுத்தும், முட்டை ஓடு மெலிவதைத்தூண்டும். மிகக்கூடிய செறிவில் காணப்படும் போது இறப்பைக்கூடஏற்படுத்தும். நீர்ப்பகுப்பு, ஒளிப்பகுப்பு என்பனவற்றின் மூலம் மண்ணில் பல பீடைநாசினிகள் விரைவாக சிதைவடைந்து, நீர், காபனீரொட்சைட்டு, அமோனியா போன்ற எளிய பொருட்களாக பிரிகையடையும். எனினும், அவற்றிற்கு விதிவிலக்காக உதாரணமாக குளொடான்ஈபொக்சைட் போன்ற சிதைவடைந்த பின்னர் உருவாகும் பொருட்கள் அடிப்படை குளோடேன்ஐ விட பலமடங்கு நச்சுத்தன்மையானதாகக் காணப்படும். காபன், சக்தி என்பனவற்றைத் தரும் பொருட்களாக பீடைநாசினிகளை நுண்ணுயிர்கள் பயன்படுத்துவதனால் அவை பீடைநாசினிகளை படியிறக்கமடையச் செய்கின்றன.
பெற்றோலிய ஐதரோகாபன்களினால் நீர்மாசடைதல்
மசகு எண்ணெய் பல சேதனப்பொருட்களைக் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ஐதரோகாபன்கள் ஆகும். இவற்றின் ஒரு மூலக்கூறில் 4 தொடக்கம் 26 அணுக்கள் வரை காணப்படும். இவை பல அணுக்களைக் கொண்ட மணம் வீசும் ஐதரோகாபன்கள், பல குளோரினேற்றமடைந்த இருபீனைல்கள், பல எண்ணிக்கையான பாரஉலோகங்கள் என்பனவற்றைக் கொண்டுள்ளன. வீடுகள், கார், பஸ், புகையிரதம், படகு, கப்பல், விமானம் போன்ற போக்குவரத்து சாதனங்களிலும் நாளாந்த வாழ்விலும் மனிதர்களினால் பெற்றோலியப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நடைமுறையில் ஒவ்வொரு கைத்தொழிலும் பெற்றோலியப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போதைய வருடாந்த உலக எண்ணெய் உற்பத்தி மூன்று பில்லியன் தொன்கள் ஆகும். அநேகமாக எந்தவொரு கைத்தொழிலிலும் பயன்படுத்தப்படும் எண்ணெயில் ஒரு பகுதி நீர்நிலைகளை அடைவதைத் தடுக்க முடியாது. நீர்நிலைகளை அடையும் எண்ணெய்களின் அளவை முழுமையாக மதிப்பிட முடியாவிட்டாலும் கூட, கடற்சுற்றாடலில் சேரும்எண்ணெயின் அளவு வருடமொன்றில் 2.2 மில்லியன் தொன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிலத்திலிருந்து வரும் கழிவுகள், தாங்கிகளைச் சுத்தம் செய்யும் போது வெளியேறும் எண்ணெய்க் கழிவுகள், எரிபொருள் எண்ணெய்க் கழிவுகள், ஏனைய வடிவிலான எண்ணெய்க் கழிவுகள் என்பனவற்றினாலேயே பெரும்பாலான மாசுக்கள் வந்தடைகின்றன. வருடாந்தம் பல மில்லியன் தொன் அளவான எண்ணெய்க் கழிவுகள் கடலை வந்தடைந்தாலும், கடலில் எண்ணெய் மீதிகள் ஒன்று சேர்வதற்கான சாட்சிங்கள் எதுவுமில்லை. மனித செயற்பாடுகளின் காரணமாக அறிமுகப்படுத்தப்படும் எண்ணெய்களை பிரிகையடையச் செய்யும் வல்லமை தற்போது கடற் சுற்றாடலிற்கு உள்ளதை இது எடுத்துக்காட்டுகின்றது. எனினும், வருடாந்தம் ஏறத்தாழ 400,000 தொன் அளவிலான எண்ணெய் தற்செயலாகச் சிந்தப்படுவதனால் குறிப்பிட்டதொரு காலத்தில் இது மிகவும் ஆபத்தானதாக விளங்கும்.
ஏனெனில் மிகச்சிறிய இடத்தில் அதிக செறிவின் காரணமாக பாதிப்பு அதிகமானதாக இருக்கும். சுவாசம், ஒளித்தொகுப்பு, உணவூட்டல் என்பனவற்றை பாதிப்பதனால், தாவரங்கள். விலங்குகள் என்பனவற்றின் மீது எண்ணெய்படும் போது அவை பாதிக்கப்படுகின்றன. சில விலங்குகளின் மீது எண்ணெய்படிவதனால் அவை நீரில் மிதக்கும் ஆற்றலை இழந்து விடுகின்றன. பறவைகளின் இறகுகள் பாதிக்கப்படுவதனால், வெப்பம், குளிர் என்பனவற்றிலிருந்து பாதுகாப்பினைப் பெறுவதும் பாதிக்கப்படுகின்றது. உடலிற்கு நீர் செல்வது தடைப்படுவதனால் நீரிழப்பின் காரணமாக எண்ணையை விழுங்கிய மீன்கள் இறந்து போகலாம். எண்ணைய் நச்சுத்தன்மையானதாக இல்லாவிட்டாலும் கூட எண்ணெயினால் மாசடைந்த நீரில் வாழும் மீன்களில் எண்ணெய் மணம் வீசுவதனாலும், சுவையில் மாற்றமேற்படுவதனாலும் அவற்றை விற்பனை செய்வதில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
ஆராய்வோம்…………