இதழ் 43

மகோன்னதமிக்க மாசிமகத் திருநாள்

வேதாகம சாஸ்திரங்களின்படி பாரத சமயங்கள் பின்பற்றும் பன்னிரு சூரியமான மாதக் கணக்கின்படி பதினொராவது மாதமாகவும், மாக மாதம் என்று சாஸ்திரங்கள் விளிக்கும் மாதமாகவும் இருப்பது மாசி மாதம் ஆகும். பல்வேறு ஆன்மீக மற்றும் விஞ்ஞான தத்துவங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இம்மாதம். புவிசார்பான சூரியனின் இயக்கத்தின்படி சூரியனானது ராசிமண்டலத்தின் பதினொராவது ராசியான கும்ப ராசியில் பிரவேசத்து சஞ்சரிக்கும் இருபத்தொன்பது நாட்கள் நாற்பத்தெட்டு நாடிகள் மற்றும் இருபத்துநான்கு விநாடிகள் கொண்ட காலப்பகுதியே மாசிமாதம் ஆகும். மாசி மாத பௌர்ணமித் திதி நாளானது சிம்ம ராசியின் (மாசிமகம்) ஆதிக்கம் பெற்றிருக்கும் நாளும் கூட. இத்தினத்தில் முன்பு சிவத்துடன் சக்தி இணைந்து சிவசக்தியாக ஐக்கியமானர். கணவன் மனைவி ஒற்றுமைக்கு உதாரணமாக இவ்வைக்கியம் இருப்பதால் சைவ-வைணவப் பெண்கள் தம் மாங்கல்ய பாக்கியத்தை வலுப்படுத்த தாலிக்கயிற்றை புதிதாக மாற்றிக் கொள்ளவர். இதனையொட்டி மாசிக்கயிறு ‘மாங்கலிய பாக்கியம் தரும்’ என்ற முதுமொழி உருவானது.

மாசி மக திருநாளில் எந்த தெய்வத்தை வழிபடலாம்? | Masi Magam endha deivathai  vazhipadalam

மேலும், அகிலத்தின் அம்மையப்பர் மாசிமக நன்னாளில் இணைந்ததால், மானிடர்கள் தம் தாய்-தந்தையருக்கு தர்ப்பணம் வழங்கி பிதிர்க்கடனும் நிறைவேற்றிக் கொள்வர்.

அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போலுள்ளது சிவவிரதங்களுள் தலையாயதான சிவராத்திரி விரதமும் மாசி மாதத்திலேயே அனுட்டிக்கப்படுகின்றமையாகும். இத்துணை சிறப்புமிக்க மாசி மாதத்தில் பௌர்ணமித் திதியுடன் மக நட்சத்திரம் கூடவரும் காலம் மாசிமகம் என்று வழங்கப்படுகின்றது.

மாசிமகம் என்றால் அடியவர் நினைவில் வருவது தீர்த்தவாரி தான். அதிலும் குறிப்பாக தக்ஷிணபாரதத்தின் குடந்தை/குடமூக்கு என்று வழங்கப்படுகின்ற கும்பகோணத் திருத்தலத்தின் மாசிமகத் தீர்த்தக்குளத்தில் வெகுவிமரிசையாக நடந்தேறும் மாசிமக மகாதீர்த்தவாரி உற்சவமானது அடியார் மனதில் நீங்காத உற்சவமாகும்.

இத்துணை சிறப்புமிக்க இக்கும்பகோணத் திருத்தலத்தின் வரலாறானது புராணங்களின்படி மிகவும் சுவாரசியமானது. முன்னொருக்கால் தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைந்த போது காத்தற் கடவுளாகிய விஷ்ணுவின் ரூபமாக அமிர்தகலசத்துடன் தன்வந்திரி மூர்த்தி உருவானார். அப்போது, தன்வந்திரியின் கரங்களால் தாங்கப் பெற்றிருந்த அமுதகலசத்துக்காய் தேவரும் அசுரரும் சண்டையிட்டனர். இதுகண்டு விஷ்ணுவானவர் அமிர்தத்தைக் காக்க கருடனை ஏவினார். கருடனும் தன்வந்திரியிடமிருந்து அக்கலசத்தைப் பெற்று வானிற்றாவினார். கருடனைத் தொடர்ந்த அசுரரும் தேவரும் கலசத்துக்காக சண்டையிட கலசத்தின் வாய்ப்பகுதி சிதிலமடைந்து உள்ளிருந்த அமிர்தமானது புண்ணிய பூமியான பாரத க்ஷேத்திரத்தின் ஆங்காங்கே சிதறிற்று. இங்ஙனம் அமிர்தமானது தக்ஷிண பாரதத்தில் விழுந்த புண்ணியத் தலமே இன்றைய கும்கோணம் ஆகும்.

சிறகுகள் Siragugal : ஆன்மிகம்

இவ்வாறு புராணச் சீர்பெற்ற பாஸ்கர க்ஷேத்திரம் என்று வழங்கப்படும் கும்பகோணத்தின் மூர்த்தியாக மங்களநாயகி சமேத ஆதிகும்பேஸ்வரர் இலங்குகின்றார். இத்தலத்தின் சிறப்பை அப்பர் பெருமானார் குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீரும் என்று உரைக்கின்றார். அதாவது, இத்தலப்பெயரைச் செப்பினாலேயே பாவவினையறுந்து முத்தியின்பம் கிடைக்கும் என்பது திண்ணம் என்றுரைக்கின்றார். மேலும், பிறதலங்களில் இயற்றும் பாவங்களை மோக்ஷ த்வாரபுரமான காஸியில் தீர்க்கலாம், ஆனால் அக்காஸியில் இயற்றும் பாவங்கள் தீரும் ஒரே தலம் கும்பகோணம் என்பது புராணமுடிபு.

கும்பகோணத் திருத்தலத்தில் மாசிமகம் சிறப்புறக் காரணம் பிரளயமே ஆகும். ஊழிக்காலம் நெருங்குவதை ஞானத்தால் உணர்ந்த பிரம தேவன், உயிர்கள் அனைத்தும் பிரளயகாலத்திற்பின் உயிர்கள் எங்ஙனம் மீள்த்தோன்றும் என முறையிட்டார். பிரம்மனின் வருத்தம் நீங்கவும், உயிர்ச்சக்கரம் ஒழுங்காகச் சுழலவும் தீர்வு செப்பினார் பரமன். அமிர்தம் நிரம்பியதோர் கடத்தில், புண்ணிய க்ஷேத்திரங்களின் மண் மற்றும் ஜீவராசிகள் சகலதினதும் ஜீவவித்துகளை இட்டு மேருமலைச் சிகரத்தில் வைத்து வில்வங்கொண்டு பூஜித்து விட்டுவிடும்படியும், ஊழிவெள்ளம் முடிந்த பிற்பாடு அக்கலசம் கரைதட்டுங்கால் தான் ஆவன செய்வதாயும் திருவாய் மலர்ந்தருளினார் பரமன். அங்ஙனமே, ஊழி நெருங்கும் போது பிரமனும் கலசத்தை சாஸ்திர விதிப்படி தயாரித்து மங்கலப் பொருட்களாலும் வேதாகமங்கள் கொண்டும் அலங்கரித்து மேருமலைச் சிகரத்தில் வைத்து வில்வார்ச்சனை புரிந்து விட்டுச் சென்றார். பிரளய காலத்தின் போது சகலவஸ்துகளும் அழிய மிகுந்த உயரத்திலிருந்த ஜீவாமிர்தக் கலசம் வெள்ளத்தில் புரண்டோடி கும்பகோணத்தில் கரைதட்டி நிலைகொண்டது. ஊழிவெள்ளம் வழிந்தோடிய பின்னர் மகேஸ்வரன் இதுவே தக்கசமயம் என்றுணர்ந்து வேட்டுவக் கோலம்பூண்டு பாணபுரேசம் என்ற திருத்தலத்தில் நின்றபடி வில்லில் நாணேற்றி ஜீவாமிர்தக் கலசத்தை குறிவைத்து அம்பெய்தார். சிவாஸ்திரம் பட்டுடைந்த அமுதக் குடத்திலிருந்து எட்டுத்திக்கிலும் அமிர்தம் வழிந்தோடியது. அமிர்தக் குடம் உடைந்து அமிர்தம் சிந்திய இடம் என்பதால் குடந்தை எனவும், அமிர்த கலசத்தின் மூலையில் கோணலாகி அமிர்தம் சிந்திய இடம் என்பதால் கும்பகோணம் என்றும் தலத்துக்கு பெயர் உண்டாயிற்று.

February 2016 – Page 2 – vpoompalani05

இவ்வாறு சிவபெருமானால் உடைக்கப்பட்ட கலசத்தினைத் தாங்கிய உறி சோமேஸ்வரம் என்ற இடத்திலும், கும்பத்தின் தேங்காய் அபிமுகேஸ்வரம் என்ற இடத்திலும், கும்பத்தைச் சுற்றியிருந்த புரிநூல் கௌதமேஸ்வரம் எனுந்தலத்திலும், பிரமன் கலசத்தை அர்ச்சித்திருந்த வில்வபத்திரம் நாகேஸ்வரம் எனும்பதியிலும், குடத்தின் வாய்ப்பகுதியானது குடவாயில் என்ற இடத்திலும் விழுந்து சிவலிங்கங்களாக காட்சி தந்தருளின. இத்தலங்கள் இன்று பெருஞ்சிவாலயங்களாக உருப்பெற்றுள்ளது.

அமுதமானது கும்பகோணத்திலிருந்து அட்டதிக்குகளுக்கும் வழிந்தோடி திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலிவனம் ஆகிய திருத்தலங்களை செழுமைப்படுத்தியது. இறுதியில், அமிர்தத்தை தாங்கி வந்து கும்பகோணத்தில் கரைதட்டி நிலைகொண்டது. சிவானுக்கரஹத்தால் உடைக்கப்பட்ட  கலசமானது இறுதியில் ஆதிகும்ப லிங்கமாக மாறி நின்றிற்று.

கும்பகோணம் மாசி மகம் விழாவுக்கு உள்ளூர் விடுமுறை: தஞ்சாவூர் ஆட்சியர்  பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | HC bench on Kumbakonam Masi Magam  local holiday issue ...

இவ்வாறு அமிர்தக் கடம் உடைந்து, உயிர்ச் சக்கரம் மீளுருவாக அனுக்கிரஹம் புரிந்த பரமசிவனைப் பலவாறாகத் தொழுதேத்தி, சிருஷ்டியை மீளத்தொடங்க அனுமதி கேட்டார் பிரம தேவன். சிவப்பரம்பொருளும் சம்மதந் தந்தருளிட, மாசி மாத பூர்வ பக்ஷ அஸ்வதி நக்ஷத்திர தினத்தில் கும்பகோணத்தின் ஆதிகும்பேஸ்வர மூர்த்திக்கும் இறைவிக்கும் துஜாரோகணம் செய்வித்து பத்து நாட்கள் மகா பிரம்மோற்சவம் நடாத்தினார். இவ்வாறு நிகழ்த்திய பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாள் பஞ்சமூர்த்திகளை ஐந்து ரதங்களில் எழுந்தருளச் செய்வித்து பஞ்சரத பவனியையும், பத்தாந்தினம் மாசிமக நன்னாளில் மாசிமகத் திருக்குளத்தில் தீர்த்தோற்சவமும் செய்தும் தனது சிருஷ்டித் தொழிலை இனிதே தொடங்கினார். இதனடிப்படையிலேயே கும்பகோணத் திருத்தலத்தில் மாசிமக மகோற்சவம் வருடாவருடம் நிகழத்தப்படுகின்றது.

இந்த மாசிமக பிரம்மோற்சவத்தில் மகுடோற்சவமாகத் திகழ்வது மாசிமக நன்னாளன்று மாசிமகக் குளத்தில் நிகழும் மகாதீர்த்தோற்சவமாகும். மாசிமகக் குளமானது ஐந்து ஏக்கர் பரப்புடையதாகும். இத்திருக்குளத்துள்ளே வாயு, கங்கா, பிரம்ம, ஜமுனா, குபேர, கோதாவரி, ஈஸான, நர்மதா, ஸரஸ்வதி, இந்திர, அக்னி, காவேரி, குமரி, நிருதி, பயோஹிணி, வருண, ஸரயு மற்றும் கன்யா முதலிய இருபது புனித தீர்த்தக் கிணறுகள் உள்ளன. இப்பெருந்திருக்குளத்தைச் சூழ பதினாறு மண்டபங்களும், ஒவ்வொரு மண்டபத்திலும் தலா ஒவ்வொரு சிவலிங்கங்களுமாக குளத்தைச் சூழ பதினாறு சிவலிங்கங்கள் அமையப் பெற்றுள்ளன. இவை ஒருங்கே ஷோடஸ மஹாலிங்கங்கள் என்று வழங்கப்படுகின்றன. மாசிமகத்தன்று சமுத்திரம் அல்லது புனித தீர்த்தக் குளத்தில் நீராடுவதும், பித்ரு தர்ப்பணமும் உசிதமானது என்று ஏலவே கூறப்பட்டதற்கியைபாக, ஏராளமான சிவனடியார்கள் இத்திருக்குளத்தில் மாசிமக நன்னாளில் நீராடி, குளத்தைச் சூழவுள்ள பதினாறு மண்டபங்களில் பித்ரு காரியம் இயற்றி, அதற்குதவிய அந்தணருக்கு தானமும் வழங்குவார்கள். தானங்கள் பதினாறு ஆகும். அவ்வெண்ணிக்கையை வலியுறுத்தவே திருக்குளத்தைச் சூழ பதினாறு மண்டபங்கள் அமைக்கப்பட்டு, சிவலிங்கங்கள் தாபிக்கப்பட்டுள்ன.

இவ்வாறு விதிப்படி இத்திருக்குளத்தில் நீராடி, பிதிர் தர்ப்பணம் செய்து தானம் வழங்கி ஷோடஸ மஹாலிங்க தரிசனமும் இயற்றினால் பரப்ரம்மமான சிவபெருமானின் திருக்கழலடைந்து பிறவாப் பேரின்பம் பெற்றுய்யலாம்.

மாசிமகத்தில் கும்பகோணத்து தீர்த்தவாரி உற்சவம் பிரசித்தமோ அங்ஙனமே சமுத்திர தீர்த்தவாரியும் பிரசித்தம். ஒருக்கால் மழைக் கடவுளான வருண பகவான் இருள் மலிந்த நேரத்தில் வந்து கொண்டிருந்த தன் குருவை, அவர் குரு என்று அறியாமலும், தன் எதிரி என்று எண்ணியும் கொன்றுவிட்டார். அறியாது செய்தாலும் குருவைக் கொன்ற பாவம் பிரம்மஹத்தி உருவில் வருணனைப் பீடித்தது. இதன் விளைவால் வருணன் சமுத்திரத்தின் அடியில் கட்டுண்டவனாய், பெருத்த அவதியுற்று, தன் கடமையியற்ற இயலாதவனாய்க் கிடந்தான். இதனால் பூவுலகில் மழை பொய்த்தது. மழையின்றி பயிர்களும் உயிர்களும் வாடின. உயிர்கள் அல்லறுவதைக் கண்டு பொறுக்கவியலாத இந்திராதி தேவர்கள் பரமசிவனிடம் முறையிட்டு, வருணனை விடுவிக்க வேண்டினர். இதற்கு செவிசாய்த்த எம்மெருமானும் பிரம்மஹத்தியின்று வருணனை விடுவித்து அருளி, உயிர்கள் உய்ய வழிசமைத்தார். இவ்வாறு வருணன் சமுத்திரத்திலிருந்த விடப்பட்டது ஓர் மாசிமக நன்னாளாகும். இவ்வாறு விடுபட்ட வருணன் ஈசனைப் பலவாறாகப் புகழ்ந்தேத்தி ஓர் வரமும் வேண்டினான். அதாவது, தான் சிவனருளால் சமுத்திரத்திலிருந்து விடுபட்டு, பிரம்மஹத்தி தன்னை நீங்கிய இப்புண்ணிய மாசிமக நன்னாளில் எவர் சமுத்திரத்தில் முறைப்படி நீராடி சிவவழிபாடு இயற்றுகின்றனரோ அவர்களுக்கு பாவம் விலக்கி அருள வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டான். வருணன் கேட்ட வரத்தை அருள்வதாக திருவாய் மலர்ந்தருளினார் எம்பெருமானார். ஆகவே, எவனொருவன் மாசிமகத்தில் சமுத்திரத்தில் நீராடுகின்றானோ அவன்தம் பாவம் விலகும் என்பது திண்ணம்.

மாசிமக மகோற்சவமனது கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரத்தில் பிரம்மோற்சவமாயும் (பிரமதேவன் தொடக்கிய உற்சவம்) மற்றைச் சிவாலயங்களில் மகோற்சவமாயும் கொண்டாடப்படுகின்றது. மதுரை மீனாக்ஷி அம்பாள் உடனாய சொக்கநாதர் ஆலயத்தில் மாசமகத்தை தீர்த்தோற்சவ தினமாகக் கொண்டு ஒருமண்டலம் இவ்வுற்றசவம் நிகழ்கின்றது.

மேலும், திருமயிலாடுதுறை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மாசிமக தினத்தன்று சமுத்திர தீர்த்தோற்சவம் தொன்றுதொட்டு அனுட்டிக்கப்பட்டு வருகின்றது என்பதை ஞானக்குழந்தை அருளிய

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்

கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்

அடலானே றூரு மடிக ளடிபரவி

நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

என்ற திருப்பதிகம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மகாமகம்

அடியார் பாவங்களையும் புண்ணிய நதிகளான கங்கை, ஜமுனை, ஸரஸ்வதி, நர்மதை, ஸிந்து, காவேரி, கோதாவரி, ஸரயு மற்றும் தாமிரபரணி முதலிய நவதீர்த்தங்களும் அடியவரின் பாவங்களை ஏற்றுச் சுமந்து மிக்க வலிமைகுன்றியோராயினர். இதனால், பெற்ற பாவங்களை தொலைக்க வழிகோலி பரமசிவனை நோக்கித் தவமியற்றினர். அவர்தம் தவத்தால் மகிழ்ந்த எம்பெருமானும் நவதீர்த்தங்களின் முன் பிரசன்னமானார். இறைவனைப் பலவாறாக அர்ச்சித்த நவநதிகளும் தம்குறையை முறையிட பரமேசனும் வழி நல்கினார். புவிசார்பாக குரு (வியாழன் கிரகம், கிரகம் என்பது பூவுலகத்தின் இயக்கத்தில் தாக்கஞ்செலுத்தும் விண்பொருட்கள் ) சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் மாசி மாதத்தின் மக நட்சத்திரம் உள்ள நன்னாளில் கும்பகோணத் திருத்தலத்தின் அக்னி திக்கிலுள்ள திருக்குளத்தில் நீராடி பாவங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கிணங்க நவதீர்த்தங்களும் ஈசன் குறித்த அத்தினத்தில் நீராடி தம்பாவங்களைந்து பழைய பொலிவு பெற்று, மானிடர்க்கு மீண்டும் சேவை செய்யலாகினர்.

இவ்வாறு, குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு வருடம் சஞ்சரிக்கும். இவ்வாறு சிம்ம ராசியில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறையே நுழைந்து சஞ்சரிக்கும். ஆதலால் இத்திருநாள் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே வரும். இத்தினத்தில் கும்பகோணத்தின் மாசிமகக் குளத்தில் நீராடினால் நவநதிகளிலும் நீராடிய பலனைப் பெற்று பாவங்களைக் களையலாம்; சிவானுக்கிரகமும் இனிதே கிடைக்கப்பெறும். இது சத்தியம்.

இவ்வாறு பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை வரும் இந்த மாசிமகத்தை மகாமகம் என்று சிலாகித்துக் கூறுவர். இருபத்தோராம் நூற்றாண்டில் 2004  ஆம் ஆண்டும், 2016 ஆம் ஆண்டும் மகாமக நன்னாள் வந்தது. அடுத்த மகாமகம் 2028 ஆம் ஆண்டுக்குரியதாகும்.

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம் |  Virakesari.lk

சிவபூமியாம் ஈழத்தில் மாசிமகத் திருவிழாவானது மாத்தளை மாநகரில் குடிகொண்டு அருளாட்சி புரியும் முத்துமாரிம்மன் திருக்கோயிலில் பிரசித்தமானது ஆகும். இத்திருத்தலத்தில மாசிமகத்தன்று வெகுவிமரிசையாக தேர்த்திருவிழா நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் மாசிமக சமுத்திர தீர்த்தவாரியனது குணதிசைத் திருத்தலமான மும்மலை சூழ் திருகோணமலையில் பிரசித்தமானது ஆகும். மகாமகமன்று திருகோணமலையின் சகல திருக்கோயில்களிலிருந்தும் சுவாமி புறப்பட்டு சமுத்திரக் கரையடைந்து வெகுவிமரிசையாக தீர்த்தோற்சவம் நிகழ்த்தப்படும்.

சிவனருளைப் பெற்றிடவும், முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றிடவும் மாசிமக நன்னாளில் பிதிர்க் கடன் நிறைவேற்றி சிவ வழிபாடியற்றி பிறவாப் பேரின்பம் பெற்றிடுவீர்.

திருச்சிற்றம்பலம்

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

Related posts

ஏற்றமா ஏமாற்றமா ஏலம் – விரிவான அலசல்

Thumi202122

குறுக்கெழுத்துப்போட்டி – 39

Thumi202122

கொம்யூனிசம் சொல்லித்தரும் அணில்

Thumi202122

Leave a Comment