இம்முறை IPL ஏலத்தில் நடந்த சில சுவாரசியமான விடயங்களை பார்த்துவிட்டு அணிகளைப்பற்றி அலசுவோம்.
யார் யார் வந்தாங்க..?
ஏலம் நடைபெற்ற போது ஒவ்வொரு அணி சார்பாகவும் மேசையில் இருந்தவர்கள் விபரம் வருமாறு.
லக்னோ சூப்பர்கெய்ன்ட்ஸ் (LSG): சஞ்சீவ் கோயன்கா (உரிமையாளர்), சாஸ்வத் கோயன்கா, அண்டி பிலோவர் (தலைமை பயிற்சியாளர்), கவுதம் கம்பிர் (ஆலோசகர்), ரகுராம் ஐயர் (CEO), மற்றும் ஆய்வாளர் (Analyst).
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): பனிஷ் ஷெட்டி (ஆய்வாளர்), ஸுபின் பாருச்சா (Strategy & Performance Director), ஜேக் லூஸ் மசிறும் (CEO), குமார் சங்கக்காரா (Director of Cricket), கில்ஸ் லிண்ட்சே (Head of Analytics and Technology), ரஞ்சித் பார்த்தகுர் (Chairperson), ரோமி பின்டெர் (Team Manager).
குஜராத் டைட்டன்ஸ் (GT): விக்ரம் சோலங்கி (Team Director), ஆஷிஷ் நெஹ்ரா (தலைமை பயிற்சியாளர்), கேரி கிரிஸ்டன் (உதவி பயிற்சியாளர்), ஆஷிஷ் கபூர் (உதவி பயிற்சியாளர்), சந்தீப் ராஜு (ஆய்வாளர்), அமித் சோனி (CVC), மோஹித் கோயல் (Chief Financial Officer), அரவிந்தர் சிங் (Chief Operating Officer).
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB): பிரத்மேஷ் மிஸ்ரா (Chairman), ராஜேஷ் மேனன் (Head & VP), மைக் ஹெஸ்ஸன் (Director of Cricket Operations), சஞ்சய் பங்கர் (தலைமை பயிற்சியாளர்), மலோலன் ரங்கராஜன் (Head Scout), பிரட்டி வில்தே (ஆய்வாளர்).
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR): வெங்கி மைசோர் (CEO), பாரத் அருண் (உதவி பயிற்சியாளர்), ஆர் ஸ்ரீகாந்த் (Head of Talent Scouting and Player Acquisitions), அபிஷேக் நாயர் (உதவி பயிற்சியாளர்), ஆர்யன் மற்றும் சஹானா கான் மற்றும் ஜஹன்வி மெஹதா (உரிமையாளர்கள்).
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): காசி விஸ்வநாதன் (CEO), எல் பாலாஜி (பந்துவீச்சு பயிற்சியாளர்), சுந்தர் ராமன் (Chief Operating Officer), லட்சுமி நாராயண் (ஆய்வாளர்), அரவிந்த் சிவதாஸ் (ஆய்வாளர்).
டெல்லி கேபிட்டல்ஸ் (DC): கிரண் குமார் கிரந்தி (Chairman & Co-owner), பார்த் ஜின்டால் (Co-owner), வினோத் பிஸ்ட் (Interim CEO), முஸ்தபா ஹோஸே (Director), பிராவின் அம்ரே (உதவி பயிற்சியாளர்), சபா கரீம் (Head of Talent Search).
மும்பை இந்தியன்ஸ் (MI): நீதா அம்பானி (உரிமையாளர்), ஆகாஷ் அம்பானி (உரிமையாளர்), சாஹீர் கான் (Director of cricket operations), மஹேல ஜெயாவார்த்தேனே (Head Coach), ராகுல் சங்க்வி (Team Manager), தேவங் பீம்ஜணி (MI management), சிகேஎம் தனஞ்சய் (Team Analyst).
பஞ்சாப் கிங்ஸ் (PBKS): நெஸ் வாடியா (உரிமையாளர்), மோஹித் பர்மன் (உரிமையாளர்), அனில் கும்ப்ளே (Director of cricket operations), சதீஷ் மேனன் (Chief executive officer), சங்கர் ராஜகோபால் (ஆய்வாளர்), ஆஷிஷ் துளி (ஆய்வாளர்), டான் வெஸ்டன் (ஆய்வாளர்), எல்சி குப்தா (CFO).
சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் (SRH): கே ஷண்முகம் (CEO), டொம் மூடி (தலைமை பயிற்சியாளர்), ஸ்ரீநாத் பாஷ்யம் (GM), பிரையன் லாரா, முத்தையா முரளிதரன், காவ்யா மாறன் (உரிமையாளர்), சைமன் கட்டிச்.
இடையில் ஏன் ஏலம் நிறுத்தப்பட்டது?
இம்முறை ஏலத்தில் மார்கியூ பிளேயர்ஸ் (நட்சத்திர வீரர்கள்) கொண்ட முதல் சுற்று நிறைவடைந்து இரண்டாம் சுற்று ஏலம் நடைபெற்று வந்தது. இலங்கையின் வனித்து ஹசரங்க க்கு ரோயல் சலேஞ்சர்ஸ் அணி 10.75 கோடியை கேட்ட போது ஹமர்மேன் (ஏலம் விடுபவர்) ஆக செயற்பட்டு வந்த ஹக் எட்மீட்ஸ் திடிரென மயக்கம் அடைந்து சரிந்து விழுந்த துரஷ்திடமான நிகழ்வால் ஏலம் சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் அவர் நலமாக இருப்பதாகவும் அவருக்கு Postural Hypotension ஏற்பட்டதாகவும் அறிவித்த பிசிசிஐ, சாரு சர்மா வினை ஏலம் விடுபவராக நியமித்து ஏலத்தினை தொடர்ந்து நடத்தியது. இரண்டாம் நாளில் ஏலம் நிறைவடைந்திற்கு ஒரு சுற்று இருந்த நிலையில் மீண்டும் வந்த எட்மீட்ஸ், ஏலத்தினை நிறைவு செய்து வைத்தார்.
இதுவரை நடந்த எல்லா மெகா ஏலத்தினையும் நடத்தியவர் ஹமர்மேன் ரிச்சர்டு மேட்லி; இவர் ஐபிஎல் ஆரம்பத்திலிருந்து 2017 வரை ஏலத்தினை நடாத்தி இருந்தார். 2018 இல் ஹமர்மேன் ஆக நியமிக்கப்பட்டவர் தான் இங்கிலாந்தை சேர்ந்த எட்மீட்ஸ்; இவர் 35 வருடங்கள் ஹமர்மேன் ஆக செயற்பட்டு 2500க்கும் மேற்பட்ட ஏலங்களை நடாத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
வழமை போல் தங்கள் வீரர்களை மீண்டும் எடுத்துக் கொள்ளும் உத்தியை பயன்படுத்தியுள்ளனர்; இருந்தும் டூ பிளெஸ்சிஸ், அதுவும் ஆச்சரியமாக சின்ன தல என அழைத்த சுரேஸ் ரெய்னா போன்ற சில வீரர்களை மீண்டும் எடுத்துக் கொள்ள வில்லை.
தொடக்க பதினோருவர் அணியில், பிரதானமாக இடம்பெறக்கூடிய ருத்துராஜ், மொயின் அலி, ராயுடு, டோனி, ஜடேஜா, பிராவோ, மற்றும் தீபக் சகார் என்ற ஏழு வீரர்களுடன் ஆரம்ப வீரராகவும் 4ம் இலக்கத்திலும் விளையாடக்கூடிய டெவன் கென்வே, அசிவ், வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளராக மில்னே/ஜோர்டன்/பிரிடோரிஸ், மற்றும் சுழற்பந்து வீச்சக்கூடிய சிவம் டூபே இடம்பெறலாம். இவர்களை விடுத்து இலங்கையின் தீக்சன்ன, நியூசிலாந்தின் மிட்சல் சன்ட்னர், ரொபின் உத்தப்பா, தமிழக கோவை வீரர்களான ஹரி நிசாந்த் மற்றும் ஜெகதீசன் மற்றும் சில உள்ளூர் வீரர்கள் என ஒட்டுமொத்தமாக 25 பேர் இம்முறை அணியில் உள்ளனர். ஜடேஜா க்கு பக்கபலமாக சுழற்பந்து வீச்சக்கூடிய (பிரசாந்த் சோலன்கியை தவிர்த்து) தரமான உள்ளூர் வீரர் இல்லாத நிலையை விடுத்து அனைத்திலும் சம பலம் வாய்ந்த அணியாக இம்முறையும் பிளே ஓப் நுழைய தயாராகி இருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கேகேஆர் க்கு அணியின் தலைவராக செயற்பட்ட ஒருவர் தேவைப்பட்ட நிலையில் சிரேயாஸ் ஐயர் இனை அதிக விலை கொடுத்து எடுத்தனர். ஏற்கனவே தக்கவைத்துக் கொண்ட அன்ட்ரே ரஸ்ஸல், சுனில் நைரன், வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி என்ற நால்வருடன் மீண்டும் பட் கம்மின்ஸ், சிவம் மாவி, நிதீஷ் ரானா, ரிங்கு சிங் மற்றும் ரிம் சவுத்தி ஆகியோரை ஏலத்தில் எடுத்து தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கினர். புதிதாக அஜின்கயா ரகானே மற்றும் இங்கிலாந்தின் அலெக்ஸ் கேல் யை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸ்தானத்திற்கும்; சாம் பில்லிங்ஸ், பாபா இந்திரஜித், சில்ட்ரன் ஜாக்சன் என்ற விக்கெட் காப்பாளர்களை மத்திய வரிசைக்கும் தேர்வு செய்து வாங்கியுள்ளனர். இவர்களை விடுத்து இலங்கையின் சமிக்க கருணாரட்ன, ஆப்கானிஸ்தானின் மொகமட் நபி, உமேஷ் யாதவ் மற்றும் சில உள்ளூர் வீரர்களை எடுத்திருந்தாலும் அணியின் சம நிலையை பேண ஒரு தரமான உள்ளூர் மத்திய வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இல்லாத நிலை ஏற்பட்ட வாய்ப்பு இருக்கிறது. மத்திய வீரர் இன்மையை நைரன் மற்றும் ரஸ்ஸல் கொண்டு சமாளித்தாலும் ஒரு தரமான உள்ளூர் வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் அணியின் சமநிலையை குலைக்கும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்
முதல் நாள் ஏலத்தில் சிறப்பாக செயற்பட்டு இருந்தாலும் இரண்டாம் நாள் சில தவறுகளை விட்டது, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், அன்ரிச் நொக்கியா, முஸ்ரபிக்கூர் ரஹ்மான் ஆகியோருக்கு சரியான பதில் வீரர்களை எடுப்பதில் சிக்கலை கொடுத்தது; இறுதியில் பொல்லார்ட்/ரஸ்ஸல் போன்று விளையாடக் கூடிய ரவ்மான் பவல், ரிம் செய்வேட் மற்றும் லுங்கி நிகிடி ஆகியோரை எடுத்தாலும் இன்னொரு வெளிநாட்டு வீரரை எடுக்க பணம் இல்லாமல் தவித்தனர். டெல்லிக்கு கடந்த ஆண்டுகளில், பதினொருவர் அணியில் தொடர்ந்து இடம்பெற்று விளையாடிவர்களில் தக்கவைத்துக் கொண்ட நால்வர் தவிர்த்து மற்றைய எழுவரையும் இழந்து இருந்தாலும்; பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிசாப் பன்ட், மன்டீப் சிங்/ சப்ராஸ் கான்/ ரிப்பல் பட்டேல்/ லலித் யாதவ், ரவ்மான் பவல், அக்சர் பட்டேல், சார்துல் தாகூர், குல்தீப் யாதவ், அன்ரிச் நொக்கியா, கலீல் அகமட்/சேட்டன் சக்கரியா என்று பலமான ஒரு பதினொருவர் அணியை கட்டமைத்திருக்கிறார்கள். அத்தோடு கமலேஷ் நாகர்கோடி, பிரவீன் டூபே, அஸ்வின் ஹப்பர் மற்றும் தற்போது நிறைவடைந்த இளையோர் உலகக்கிண்ணப் போட்டிகளில் வழி நடாத்தி கிண்ணம் வென்ற யஸ் டூல் என இளம் வீரர்களையும் எடுத்துள்ளார்கள். கடந்த ஆண்டுகளில் ரிசப் பன்ட் க்கு மாற்று விக்கெட் கீப்பராக உள்ளூர் வீரர் இல்லாமல் தவித்த நிலையில் இம்முறை கேஎஸ் பரத் இனை ஏலத்தில் எடுத்து அக்குறையும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
அணித்தலைவர் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் கோஹ்லி, கிளென் மக்ஸ்வெல், முகமத் சிராஜ் ஆகியோரை தக்க வைத்திருந்தது பெங்களூர். ஏலத்தில் மீண்டும் இலங்கையின் வானித்து ஹசரங்க, ஹர்ஷல் படேல், ஷாபாஸ் அஹ்மத், நியூசிலாந்தின் பின் ஆலன் மற்றும் சூயஸ் பிரபுதேசை ஆகியோரையும் புதிதாக தென்னாபிரிக்காவின் பாப் டு பிளெஸ்ஸிஸ், தினேஷ் கார்த்திக், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹசல்வுட், அனுஜ் ராவத் என பலரையும் எடுத்துள்ளனர். துடுப்பாட்டத்தில் கேஜிஎப் (‘K’ohli, ‘G’lenn Maxwell, ‘F’af du Plessis) கூட்டணி போடும் அடித்தளத்துக்கு தினேஷ் கார்த்திக் என்ற தரமான போட்டியை முடித்துக் கொடுக்கும் பினிஷெர் கிடைத்துள்ளார். இவர்களுக்கு இடையில் இரு இந்திய இளம் வீரர்கள் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடத்தில் ஆடமுடியும். சகல துறை வீரர்களாக ஹசரங்க மற்றும் அஹ்மத் உடன் ஹசல்வுட், சிராஜ், ஹர்ஷல் படேல் என்ற வேகப் பந்து கூட்டணி அமைந்து இருக்கிறது. வெளிநாடு வீரர்களுக்கு தரமான மாற்று வீரர்களாக டேவிட் வில்லி, ஷான் ரதர்போர்ட், பின் ஆலன், மற்றும் ஜேசன் பெஹ்ரேன்ட்ராப் உள்ளனர். கரன் சர்மா, சித்தார்த் கவுல், ராவத் என இந்திய வீரர்களுக்கும் மாற்று வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ்
முதல் நாள் மந்தமாக இருந்து தங்களுக்கு தேவையான இரைகளை இறுதியில் எடுத்துக் கொண்டது மும்பை என்று தான் சொல்லவேண்டும். நான்கு வீரர்களை மட்டும் தக்க வைக்க முடியும் என்பதால் ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், கிரேன் பொல்லார்ட் மற்றும் ஜஸ்பிரிட் பும்ராஹ் ஆகியோரை தக்க வைத்திருந்த நிலையில் இஷான் கிஷன் க்கு, தாங்கள் இதுவரை எந்த ஒரு ஐபில் ஏலத்திலும் கொடுக்காத தொகையை கொடுத்து வாங்கியது; இது இந்த ஐபில் இல் ஒருவருக்கு கொடுக்கப் பட்ட மிகக் கூடிய தொகையும் ஆகும். இவ்வாண்டு ஜல்ரா ஆர்ச்சர் விளையாட மாட்டார் என்றாலும் அர்ச்சரையும் எடுத்து பும்ராஹ்-ஆர்ச்சர் கூட்டணியை அடுத்த ஆண்டிற்கு உருவாக்கி கொண்டது.
ரோஹித், கிஷான், யாதவ், திலக் வர்மா, பொல்லார்ட், டிம் டேவிட் , டேனியல் சாம்ஸ்/ பாபியன் ஆலன், ஜெயதேவ் உனட்கட், மயங் மார்கண்டே/ முருகன் அஸ்வின், டிமால் மில்ஸ் என்று நல்ல தொடக்க பதினொருவர் அணி அமைந்து இருக்கிறது. இவ்வருட இளையோர் உலக கிண்ணத்தில் கலக்கிய, குட்டி ஏபி டீ வில்லியர்ஸ் என்று அழைக்கப்படும் தென்னாபிரிக்காவின் டெவல்ட் ப்ரேவிஸ் இனையும் எடுத்து இருப்பதும் மும்பை தான்.
ஆராய்வோம்…