இந்த உலகம் உனக்கானது. ஆம். இந்த உலகம் உங்களுக்கானது.
இங்கே நீங்கள் விரும்பியபடி வாழலாம். சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடியும்.
ஏன் ? முயற்சித்து போராடி வெறித்தனமாக சாதிக்கவும் முடியும்.
ஆனால் ஒன்றை மறக்கிறீர்கள். உங்களைப் போலவே இந்த உலகம் எல்லாருக்குமானது.
சூரியனையும் சந்திரனையும் அனைவரும் பகிர்ந்துகொள்வது போலவே மனிதர்கள் அனைவரும் இந்த உலகின் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும். எல்லோருக்கும் ஒரே மதிப்புத்தான் இருக்கிறது. அனைவருக்கும் அனைத்திலும் உரிமையும் இருக்கிறது.
பூமி தோன்றி இத்தனை ஆண்டு கால பயணத்தில் ‘இது என்னுடையது’ என்று முதன்முதலில் கூறிய மனிதனே உலகின் முதலாவது குற்றவாளி என்கிறது கொம்யூனிச வாதம்.
பூமியில் இன்பம் தரக்கூடிய அல்லது துன்பம் தரக்கூடிய எந்தப்பொருளும் யாரோ ஒருவருக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. தன் சக இனத்திற்கும் அதனை அனுபவிக்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்பதை மிருகங்கள் கூட புரிந்து வைத்துள்ளன.
ஆனால் இந்த கேடு கெட்ட மனிதருக்குள் மட்டும் இன புரிதல் இல்லாமல் போனது ஏன் என்பதே மிக்ப்பெரிய கேள்வி?
தன்னை போல் தானே மற்றவரும் என்ற சிந்தனை இல்லாததால் தான், ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சொத்து அபகரிப்பு,ஏல சீட்டு மோசடி, கொடுக்கல் வாங்கல் மோசடி,நம்பிக்கை துரோகம்,நன்றி மறத்தல், என பக்கம் பக்கமாய் ஊடகங்களில் செய்தி வரிந்து கட்டி நிற்கிறது.
நிலையில்லா உலகில் தனக்கு மட்டுமே சொந்தம் என்று தேடித் தேடிச் சேர்த்து கைகளில் கடைசியாய் எதையும் எடுத்துச் செல்ல இயலாமல் பல தலைமுறை மரணித்து மண்ணுக்குள் புதையுண்டும் கூட இந்த கேடுகெட்ட ஈனச்செயல்கள் மட்டும் இன்னும் நிற்கவில்லை.
மனிதர்களிற்கு பேசத் தெரிகிறது. தன் குற்றங்களை எல்லாம் நியாயங்களாக விளக்கத்தெரிகிறது. ஆனால்
விலங்குகளுக்கு விளக்கத் தெரியாது. அதனால்த்தான் அவை அற உணர்வுகளை மதித்து அதன்பால் உந்தப்படுவதை அவற்றின் செயல்களைக் கொண்டு நாம் அனுமானிக்க முடியும்.
யோசித்துப் பாருங்கள். நம்மால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பேரழிவு பூமி முன்னெப்போதும் காணாதது. இது போதாதென்று அணு ஆயுதங்கள். முதலியத்தின் பெயரால் சுரண்டல், சமத்துவத்தின் பெயரால் அடக்குமுறை, உலகமயமாக்கத்தின் கோரப் பசிக்கு இரையாகும் மூன்றாம் உலக வளங்கள்…
மனிதனின் அறவுணர்வுக்கு என்னாயிற்று? அது தர்க்க நியதிகளால்- சுருக்கமாக சொன்னால் அறிவால்- மிகைபலம் பெற்றிருக்கிறது. நியாயப்படுத்துவதன் மூலம் எதையும் நிகழ்த்திக் காட்டக் கூடியவனாக மனிதன் இருக்கிறான். அறிவு, மனிதனின் அறவுணர்வின் கேடாக இருக்கிறது.
ஆனால் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள தெரியாத விலங்குகள் நியாயமாகவே நடந்து கொள்கின்றன. இந்த பூமியை அவை எல்லாவற்றுடனும் பங்கிட்டுக்கொள்கின்றன.
அட்டையில் அதற்கொரு சாட்சி தெரிகிறதே. பாருங்கள்! இந்தப்பழத்தை உண்டது ஒரு மனிதர் என்று கூறினால் நம்புவீர்களா?
யாருமே மாட்டார்கள்தான்!
உண்மையும் அது தான். ஆனால் நாம் ஏன் நம்ப மறுத்தோம்?
ஒரு மனிதன் இதனை இவ்வாறு உண்பதற்கு சாத்தியமே இல்லையா?
இல்லை!
மனிதனின் பற்கோலம் வித்தியாசமானது என்பதைத்தாண்டியும் இதை மனிதன் செய்யவில்லை என்பதற்கு வேறு நிரூபனங்கள் உள்ளனவா?
மனிதன் பழம் இனிமையாக இருந்தால் முழுவதுமாய் உண்டிருப்பான். இனிமையில்லையாயின் கடித்துத் துப்பியிருப்பான்.
ஆனால் இதை உண்மையிலே உண்ட அணில் எப்படிப்பட்டது பாருங்கள்!
இவ்வளவு இனிமையாக இருக்கும் கொய்யாக்கனியை தன் பற்களால் துளைத்தே வெளியே வர முடிந்த அணிலால் மனிதர்களைப் போல இதன் இனிமையை முழுவதுமாய் அனுபவிக்கும் எண்ணம் இல்லாமல் போனதேன்?
எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற
அணிலுக்கான அன்றாட ஜீவிதம்
அவ்வளவு இலகுவானதல்ல என்பது நாமறிவோம். இருந்தும் தன் அயல் பறவையின் பசியுணர்ந்து
தான் புசித்த கொய்யாவில்
மீதம் வைத்து விட்டுப் போகிற
அணிலுக்கு முன்னால் மனிதம் தோற்று
வெகு நாளாயிற்று.
மற்றவருக்காக பாதியை மட்டுமே புசிக்கும் அணிலாகி ஜீவிதம் நகர்த்த மனிதனால் முடியுமா? சமத்துவத்தை மனிதனால் இந்தளவிற்கு சாதிக்க முடியுமா?
சிறு குழந்தைகளாக இருக்கும்போதே இதனை மனிதர்களிற்கு சொல்லித்தர முடியும் என்று கல்வி நம்புகிறது. அதனால்த்தான் இப்படியொரு பாடல் எங்கேயே கேட்ட ஞாபகம் உங்களிற்கு வரக்கூடும்.
“அணிலே அணிலே ஓடி வா
அழகு அணிலே ஓடிவா
கொய்யாமரம் ஏறிவா
குண்டுப்பழம் கொண்டுவா
பாதிப்பழம் உன்னிடம்
பாதிப்பழம் என்னிடம்
கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்”
அணில் கடித்த பழம் ருசியாக இருக்கும் என்று ஒருவர் சொன்னால், பழம் கடித்த அணில் அதை விட ருசியாக இருக்கும் என்று இன்னொருவர் சொல்கிறார். இந்த இரு கோணங்களின் உலகத்தில்தான் மனிதர்கள் எப்போதும் இருக்கிறார்கள். சமத்துவமில்லாத வாழ்வு மனிதர்களில் மனிதம் இல்லாமல் போனதற்கு சாட்சியாகிறது.
ஆனாலும் என்ன, அவரவர் உலகம் அவரவர்க்கு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மனிதர்கள் தங்கள் நியாயங்களை வாதத்தில் காட்டாமல் செயலால் காட்டினால் விலங்குகளும் இந்த உலகில் மனிதர்களை மதிக்கத் தொடங்கியிருக்கும். அவைகளிற்கு மனிதனின் வாதம் புரியாது. வாழ்க்கை புரியும்.
தனக்கு எது நன்மை தரும் என்று ஒருவன் நினைக்கிறானோ? அதையே தனது சக மனிதருக்கும் அவன் நினைக்கட்டும்.
மனிதனையும் கொஞ்ச விலங்காவது மதிக்கட்டும்.