இதழ் 43

சிங்ககிரித்தலைவன்-38

குழப்பமும் தெளிவும்

சிந்தனையில் ஆழ்ந்திருந்த காசியப்பனுக்கு லீலாதேவி இன்னுமொரு விடயத்தை சுட்டிக்காட்டினாள் !

‘அரசே… அதோ அந்தப் பாறைகளை சற்று அப்புறப்படுத்தச் சொல்லுங்கள்! இந்த மணல் திட்டை கிளறி அகற்றச் சொல்லுங்கள்”

‘லீலா… இதையெல்லாமா… என்னிடம் சொல்வது? நீயே உத்தரவிடலாமே…”

என்றவன் தன் வீரர்களுக்குச் சைகை செய்தான்… உடனேவீரர்கள் மிகக் கவனமாக லீலாதேவி சுட்டிக்காட்டிய பாறைகளை அப்புறப்படுத்தி, அதன் அருகிலேஇருந்த மணல் திட்டையும் வெட்டத் தொடங்கினார்கள்! லீலாதேவி சந்தேகித்ததைப் போல அதற்குள் இருந்து ஒரு சிறிய நகப் பகுதி போன்ற அமைப்பு தென்பட்டது…

Sigiriya Rock Fortress climb: 1200 steps worth taking | escape.com.au

ஆம்! அது சிறிய நகம்தான்! மூன்று பெரிய நகங்கள் மேலதிகமாக அவற்றோடு இணைந்து ஒரு சிறிய நகம்! மறுகாலிலும் அப்படியே இருந்தது. காசியப்பன் லீலாதேவியின் கூர்மையான பார்வையின் திறத்தை தன்னுள்ளேவியந்து கொண்டான்!

‘மன்னா… பாருங்கள் இவை சிங்கத்தின் நகங்கள் என்று இருக்க எப்படிச் சாத்தியமாகும்? மூன்றுபெரிய நகங்களும் ஒரு சிறிய நகமும் சிங்கங்களுக்கு இருப்பதில்லையே! உங்கள் கற்பனையில் உருவான இந்தச் சிகரம் பற்றிய எண்ணத்தை நான் மாற்றவில்லை என் எண்ணத்தையே உங்களுக்கு வெளிப்படுத்தினேன்! தவறு இருப்பின் மன்னித்தருளுங்கள்”

என்று தன் கரங்களைக் கூப்பிவணங்கிறின்றாள் லீலாதேவி!

‘இதில் தவறேதும் இல்லைத் தேவி சரியான நேரத்தில் எனக்கு நீ இதைச் சுட்டிக்காட்டினாய்! உன் புத்திக்கூர்மையை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன்! பெண்கள் எவ்வளவு நுண்ணிய அறிவுபெற்றவர்கள் என்பதை உள் மூலமாக உணர்கின்றேன்!. இதனால் தான் ஆதியில் இந்த இலங்கைத்தீவின் தலைமைப் பொறுப்பு கூட பெண்ணிடம் இருந்திருக்கிறது.”

என்று லீலா தேவியின் தோள்களை அணைத்தவாறு புகழ் மாலை சூட்டினான் காசியப்பன்.

சிங்கம் ஒன்று படுத்திருப்பதைப் போல தூரப் பார்வையில் தோற்றம் அளித்தாலும் கூட இந்தச்சிகரத்தின் கால்களை ஏன் இப்படி அமைக்க வேண்டும்? என்ற கேள்வி காசியப்பனின் மனதைக்குடைய ஆரம்பித்திருந்தது!

ஒரு வேளை மீகாரனை ஆற்றங்கரையில் எச்சரித்த துறவியை கண்டறிந்து அவரிடம் விசாரித்தால் இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணமும் அவனுக்குள்ளே எழுந்தது! உடனடியாக மீகாரனுக்கு செய்தி அனுப்பி வைக்க ஆணையிட்டான். துறவியின் அடையாளங்களை நேரில் வந்து சொல்லுமாறு அந்தச் செய்தியில் குறிப்பிட்டு செய்தி காவியிடம் ஓலையைக் கொடுத்து அனுப்பினான்!
பாறைகள் புரட்டப்பட்ட பின்னர் வெளித்தெரிந்த, ஒருங்கிய வாசல் வழியே ஓரளவு தூரம் மேலே ஏறமுடிந்தாலும் அதற்கு மேல் பாதையோஇ படி வரிசையோ எதுவும் இல்லை…. பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களும் வெகுவாகக் களைத்துப் போய் இருந்தனர்.

யானைகளுக்கு நீர் காட்டுமாறு காசியப்பன் உத்தரவிட்ட பின்னர், அருகில் அமைத்திருந்த கூடாரத்தினுள் லீலா தேவியுடன் சென்று அமர்ந்தவன் கடுமையான சிந்தனையில் ஆழ்ந்துபோனான்!

காசியப்பனின் நிலை லீலாதேவியை கவலை கொள்ளச் செய்திருந்தது. மெல்ல அவன் அருகினில்போனவள், அவளின் கரங்களைப் பற்றிக் கொண்டாள்! அந்த மென்மையான தீண்டுதல், எந்த அளவுக்கு மரத்துப்போன காசியப்பனின் கைகளுக்கு உணர்வைக் கொடுத்திருக்கும் என்று தெரியவில்லை. நாம் அறியாமலேயே வண்ணாத்துப்பூச்சி ஒன்று எம் தோள்களில் வந்து அமர்ந்துபோகுமல்லவா… அப்படி இருந்திருக்க வேண்டும்…

தன் தலையை அவன் தோள்களுக்கு கீழாக லீலாதேவி சாய்த்த போதுதான் காசியப்பன் தன்னுணர்வு வரப் பெற்றான். மெல்ல அண்ணார்ந்து பார்த்த லீலாதேவி,

‘நாதா குன்றம் குறித்த கேள்விகளால் நீங்கள் குழம்பிப் போயுள்ளதை எண்ணிக் கவலைகொள்கின்றேன்! சிங்கமோ சிட்டுக்குருவியோ எம் மூதாதையர்களின் இந்தப் பிரமாண்டமான கட்டுமானத்தை இனி நீங்கள் உங்கள் விருப்பத்தைப் போல மாற்றி அமைக்க என்ன தடை உண்டு? கடந்த காலத்தின் தவடுகள் மீது நிகழ் காலத்தின் வண்ணங்களை உங்கள் விருப்பப்படி பூசுங்கள்! காலம் உங்களின் பெயரையே காற்றுள்ள அளவும் உச்சரிக்கும்! தேவையற்ற ஆராய்ச்சியும் யோசனையும் குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும். தெளிவு வேண்டும் என்றால் குழப்பத்தைக் கை விட்டு குன்றத்தின் மேல் ஏறும் வழிவகைகளை சிந்தியுங்கள்! என் அன்புக்குரியவர் இப்படி அசதியாக இருப்பது என்னை அணுவணுவாக கொல்கிறது!”

லீலாதேவியின் வார்த்தைகள் காசியப்பனுக்கு தற்காலிக நிம்மதியைக் கொடுத்தது. கடந்த காலத்தின் மர்ம முடிச்சுக்களை பற்றி கவலை கொள்ளாமல் அவற்றின் மீது நிகழ்கால வர்ணங்களைப் பூசி அழகுபடுத்தலாம் என்று ஆவல் அதிகம் கொண்டான் காசியப்பன்!

‘லீலா… உன்வார்த்தைகளின் ஜதார்த்தத்தைப் புரிந்து கொள்கிறேன்! இந்தக் கால்கள் எந்த விலங்கினுடையது என்ற தேடல் எனக்குள் எப்போதும் இருக்கும். அதை ஏன் இந்தக் குன்றத்தில் அமைத்து வைத்தனர் என்ற கேள்வியும் எனக்குள் இருக்கும். ஆனால் அவை என்னைப் பாதிப்படையச் செய்யாது!”

லீலாதேவியின் முகத்தில் ஆனந்த ரேகை ஓடியது! இன்னும் இறுக்கமாகக் காசியப்பனை அணைத்துக் கொண்டாள்!

‘இந்த அணைப்பு என்னை எங்கோ அழைத்துச் செல்கிறது… இந்தக் குன்றத்தின் மீது பறந்து போய்அமர்ந்து கொண்டதைப் போல உணர்கிறேன் லீலா… காதல் எமக்குச் சிறகுகளைக் கூடத்தருகிறது. பார்த்தாயா?”

‘அப்படியாயின் இந்தச் சிகரத்தின் மீது பறந்து தான் போக வேண்டும் என்கிறீர்களா..? உண்மையிலேயே எம் முன்னோர்கள் பறந்து தான் மேலே போய் இருப்பார்களோ? இதன் உச்சியைப் பார்த்தீர்களா? அறுத்துப் போட்டதைப் போல தட்டையாக உள்ளது. பறந்து போனவர்கள் தரை தொட வசதியாய் உள்ளது போன்று என் உள்ளுணர்வு சொல்கின்றது!”

லீலாவின் இந்தவார்த்தைகள் காசியப்பனுக்கு நகைப்பை வரவைத்தது! சிரித்துக் கொண்டே அவளை அள்ளி எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டான்.

‘தேவி மனிதர்கள் பறப்பது என்பது கற்பனை அல்லவா? காவியங்களில் வேண்டும் என்றால் நாம் பறக்கலாம் நிஜத்தில் எப்படி பறக்க முடியும்? புத்தரைப் போன்ற ஞான உயர்வு பெற்றவர்களாலும், சித்தர்களாலும் பறக்க முடியும் என்பது கூட வழி வழி வந்த கதைகளே அன்றி நாம் யாரும் நேரில்பார்க்காத ஒன்றுதானே… கண் பார்த்த ஆதாரம் இன்றி எதையும் நம்புவதில்லை இந்தக் காசியப்பன்!”

‘நாதா, யானைகள் நகர்ந்த போது பாதாளப் பொறி திறப்பதைப் போல வியத்தகு கட்டுமானத்தை அமைத்த எம் முன்னோர்கள் பறக்கும் கருவிகளை அமைத்திருக்க மாட்டார்கள் என்று எப்படிச் சொல்லலாம்? எம் முன்னோர்கள் எம்மை விட ஆற்றல் பெற்றவர்களாக இருந்திருக்க மாட்டவர்கள் என்று எப்படிச் சொல்லலாம்? இவை என் ஊகங்களே… அதிகமாகக் கதைத்திருந்தால் மன்னியுங்கள்”

‘லீலா… வியப்புப்பும் திகைப்பும் தான் இந்தக் குன்றத்துக்கு வந்த நாட்களில் இருந்து என்னைச் சூழ்கிறது.”

என்றவன் கூடாரத்துக்கு வெளியிலே வந்தான். எங்கிருந்தோ காற்றில் பறந்து வந்த காசித்தும்பை விதை ஒன்று காற்றின் உந்துதலால் இன்னும் இன்னும் உயர்ந்து குன்றத்தை நோக்கிச் சென்று காசியப்பனின் பார்வையில் இருந்து மறைந்தது.

மீகாரனின் வரவையே காசியப்பன் அதிகம் எதிர்பார்த்தான். லீலாதேவியின் ஆழமான கருத்துக்கள் காசியப்பனின் சிந்தனைக்கு தீனி போட்டது.

தூரத்தில் நீர் அருந்தச் சென்றிருந்த யானைகள்மீண்டும் சிகரத்தின் அடிவாரத்தை நோக்கி ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தன… காசியப்பனின் முதுகுக்குப் பின்னால் லீலாதேவியின் ஸ்பரிசம் நெருங்கியது. கூடாரத்தின் திரைகள் மூடிக்கொண்டன. இருவரும் குன்றத்தை விட உயரமாகப் பறக்கத் தயாராகிக் கொண்டிருந்தனர்…

தொடரும்…

Related posts

இந்திய அரசியலும் நேரு பரம்பரையும் ஒரு விமர்சன ரீதியான ஆய்வு – 02

Thumi202122

மகோன்னதமிக்க மாசிமகத் திருநாள்

Thumi202121

முன்பள்ளிப்பருவ மாணவர்களது மொழித்தேட்டம்-04

Thumi202121

Leave a Comment