இதழ் 44

ஏற்றமா? ஏமாற்றமா? ஏலம் | விரிவான அலசல் – 02

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் அணியின் தலைவராக செயற்பட்ட கேஎல் ராகுல், அணியில் தொடர்ந்து நீடிக்க விரும்பாத நிலையில், மயங் அகர்வால் மற்றும் அர்ஷிதீப் சிங் என இருவரை மட்டும் தக்க வைக்கப்பட்டிருந்தனர். கடந்த காலங்களில் டெல்லி அணியின் பிரதான வீரர்களாக இருந்த ஷிகர் தவான் மற்றும் காகிஸோ ரபாடா ஆகியோரை ஏலத்தின் ஆரம்பத்திலே எடுத்தது பஞ்சாப். இங்கிலாந்தின் ஜோன்னி பேர்ஸ்டோவ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன், தமிழக வீரர் ஷாருக் கான், மேற்கிந்தியாவின் ஓடென் ஸ்மித் மற்றும் உள்ளூர் வீரர்களான ராகுல் சாஹர், ஹார்ப்ரீட் பிரார் ஆகியோரை அதிக விலை கொடுத்து எடுத்த நிலையில் பென்னி ஹோவெல், நாதன் எல்லிஸ், பானுக ராஜபக்ச, சந்தீப் சர்மா மற்றும் சில உள்ளூர் வீரர்களையும் அடிப்படை விலையிலேயே ஏலம் எடுத்தனர். குறிப்பாக இந்தியா இளையோர் அணியில் கலக்கிய ராஜ் அங்கட் பவா இனை போட்டி போட்டு எடுத்தனர். ஆரம்ப வீரர்களாக தவான் மற்றும் அகர்வால், அடுத்து இங்கிலாந்தின் அதிரடி வீரர்களான பேர்ஸ்டோவ் மற்றும் லிவிங்ஸ்டோன், போட்டியை முடித்து கொடுக்க ஷாருக் கான், ரிஷி தவான், சுழற்பந்தில் சாஹர் மற்றும் பிரார் ஜோடி, வேகப்பந்து வீச்சாளர்களாக ரபாடா தலைமையில் ஸ்மித் மற்றும் அர்ஷிதீப் சிங் என்று தொடக்க பதினொருவர் அணி இருந்தாலும் உள்ளூர் மத்திய வரிசை வீரர் இல்லாமை குறையாக இருக்கும்.

ராஜஸ்தான் றோயல்ஸ்

முதல் நாள் நிறைவில், தக்க வைத்திருந்த சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் சுழற்பந்து வீச்சாளர்களாக ரவி அஸ்வின் மற்றும் யுஸ்வேன்ர சஹால், வேகப்பந்து வீச்சாளர்களாக ட்ரெண்ட் போல்ட் மற்றும் பிரஷித் கிருஷ்ணா என பதினொருவர் அணியில் விளையாடும் எழுவரை எடுத்திருந்தாலும்; இரெண்டாம் நாள் இறுதி சுற்று வரை வெறும் நான்கு வெளிநாடு வீரர்களை மட்டும் எடுத்திருந்தனர். இறுதியில் ரஸ்சி வன் டெர் டுசென், ஜேம்ஸ் நீசம், நாதன் குல்ட்டர் நைல் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரை மலிவு விற்பனையில் வாங்குவது போல் வாங்கி ஏலத்தை முடித்துக் கொண்டனர். பட்லர் ஆரம்ப வீரராக களம் கண்டால் ஜெய்ஸ்வால் அல்லது தேவ்டுட் படிக்கல் இருவரில் ஒருவரை மத்தியவரிசையில் விளையாட வைக்க வேண்டும் அல்லது ஒருவரை வெளியில் இருந்த வேண்டும் என்கிற நிலை இருக்கிறது; அல்லது பட்லர் மத்திய வரிசையில் ஆடினாலும் இரு இளம் இடதுகை ஆரம்ப வீரர்கள் என்ற குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அது போல் போல்ட், பட்லர் மற்றும் சிம்ரோன் ஹெட்மயேர் உடன் நான்காவது வெளிநாட்டு வீரராக நீசம் அல்லது குல்ட்டர் நைல் என்பதிலும் சிக்கல் இருக்கிறது; நீசம் விளையாடினால் டெத் பௌலிங் வீக் ஆகும், நைல் விளையாடினால் துடுப்பாட்டத்தில் பலமிழக்கும். விளையாடும் தொடக்க பதினொருவர் அணி: படிக்கல், ஜெய்ஸ்வால், சாம்சன், பட்லர், ஹெட்மயர், ரியான் பராக், குல்ட்டர் நைல், அஸ்வின், போல்ட், சஹால், மற்றும் கிருஷ்ணா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

வழமையாக தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலம் முதலாம் தடவை விடும் போது எடுக்காமல் பின்னர் மீண்டும் ஏலத்தில் வரும் போது எடுப்பதை உத்தியாக பயன்படுத்தும் அணி ஆகும். இம்முறை பிரபலமான டேவிட் வார்னர், ரஷீத் கான் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரை தக்க வைக்காமல் காணே வில்லியம்சன் உடன் இளம் வேகப் பந்து வீச்சாளரான உம்ரன் மாலிக் மற்றும் இளம் துடுப்பாட்டக்காரரான அப்துல் சமத் ஆகியோரை தக்க வைத்திருந்தனர். ஏலத்தின் போது மேற்கிந்தியாவின் நிக்கோலஸ் பூரான், தமிழக சகல துறை வீரர் வாஷிங்டன் சுந்தர், மற்றும் முன்னாள் கொல்கத்தாக்கு ஆடிய ராகுல் திரிபாதி போன்றோரை அதிக தொகை தொடுத்து எடுத்தனர்; அத்துடன் புவனேஸ்வர் குமார், T நடராஜன், அபிஷேக் சர்மா, பிரியம் கார்க் ஆகியோரை மீண்டும் எடுத்துக் கொண்டனர். வெளிநாட்டு வீரர்களில், துடுப்பாட்டவீரர்களாக தென்னாபிரிக்காவின் ஐடென் மார்க்ரம் மற்றும் நியூஸிலாந்தின் க்ளென் பிலிப்ஸ், சகலதுறை வீரர்களாக மற்றுமொரு தென்னாபிரிக்கா வீரர் மார்கோ ஜென்சென் மற்றும் மேற்கிந்தியாவின் ரோமரியோ ஷெப்பர்ட், பந்து வீச்சாளர்களாக ஆஸ்திரேலியா வீரர் ஸீன் அப்போட் மற்றும் ஆப்கானை சேர்ந்த பாசல்ஹக் பாரூக்கி வாங்கப்படுள்ளனர். துடுப்பாட்டத்தில் சற்று சறுக்கல் இருந்தாலும் வழமை போல் பந்து வீச்சு பலமாக இருக்கக்கூடிய வகையில் மார்க்ரம், திரிபாதி, வில்லியம்சன், பூரான், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், சுந்தர், ஷெப்பர்ட், மாலிக், நடராஜன் என்று தொடக்க பதினொருவர் அணி அமையலாம்; சில வேளைகளில் ஷ்ரேயஸ் கோபால் மேலதிக சுழற்பந்து வீச்சாளராக அணிக்குள் வர வாய்ப்பு இருக்கிறது.

லக்னோ சூப்பர் கியன்ட்ஸ்

புதிதாக உள்வாங்கப்பட்ட இரு அணிகளில் ஒன்றான லக்னோ அணியை, முன்னதாக ரைசிங் புனே சூப்பர் கியன்ட்ஸ் என்ற அணியை வைத்திருந்த உரிமையாளர்கள் வாங்கி இருந்தனர். ஏற்கனேவே இருந்த எட்டு அணிகளுக்கும் நான்கு வீரர்களை தக்க வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. புதிய அணிகளுக்கு ஏலம் நடைபெறுவதற்கு முன் மூன்று வீரர்களை தெரிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டதை பயன்படுத்தி, இவர்கள் லோகேஷ் ராகுல், ரவி பிஷ்ணோய், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரை தெரிவு செய்து இருந்தனர். ஏலத்திற்கு நல்ல தயார்படுத்தலுடன் வந்து எந்தவித குறையும் இல்லாத சிறந்த அணியை கட்டமைத்து இருக்கிறார்கள். கேஎல் ராகுல், குயின்டன் டீ கொக் என்ற அட்டகாசமான ஆரம்ப வீரர்கள், இவர்களை தொடர்ந்து மனிஷ் பாண்டே, ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, கருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கெளதம், மார்க் வூட், ரவி பிஷ்ணோய், மற்றும் அவ்ஸ் கான் என்று பலமான ஒரு தொடக்க பதினொருவர் அணி இருக்கிறது. மனன் வோஹ்ரா, ஏவின் லெவிஸ், கைல் மயேர்ஸ், துஷ்மந்த சமீரா, ஷாபாஸ் நதீம், மற்றும் அன்கிட் ராஜ்பூட் என்னும் சரியான மாற்று வீரர்களும் இருக்கின்றனர்.

குஜராத் டைட்டன்ஸ்

மற்றைய இன்னோரு புதிய அணியாக குஜராத் டைட்டன்ஸ் இருக்கிறது. ஏலத்திற்கு முன்னதாக மும்பையின் முன்னாள் வீரர் ஹர்டிக் பாண்டியா, கொல்கத்தாவின் முன்னாள் வீரர் ஸுபிமன் கில், மற்றும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஆகியோரை தெரிவு செய்து இருந்தனர். இவர்களின் துடுப்பாட்டம் பலம் இல்லாது இருந்தாலும் பந்து வீச்சு பலமாக இருக்கிறது; ரஷீத் கான் மற்றும் தமிழகத்தின் சாய் கிஷோர் என்ற தரமான சூழல் கூட்டணிக்கு அதிக விலை கொடுத்து எடுத்த ராகுல் தெவாடியா பலம் சேர்க்கலாம், அத்துடன் மொஹமட் சமி, லோக்கி பெர்குசன்/ அல்சரி ஜோசப் என்ற வேகப்பந்து வீச்சு ஜோடியும் இருக்கிறது. ஐந்தாவது பந்து வீச்சாளராக விஜய் சங்கர் அல்லது பாடிய அல்லது தெவாடியா பயன்படுத்தப்படலாம். ஜேசன் ரோய், கில், விஜய் சங்கர், அபினவ் மனோகர்,பாண்டியா, மத்தியூ வேட், தெவாடியா, ரஷீத் கான், சாய் கிஷோர், பெர்குசன்/ ஜோசப், சமி என்று தொடக்க பந்தினொருவர் அமையலாம். சாய் சுதர்சன் என்ற தரமான இடதுகை துடுப்பாட்ட இளம் வீரரை ஆரம்ப வீரராக கில்
உடன் களம் இறக்கி இரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சு சக மொஹமட் சமி என்று சற்று பந்து வீச்சை பலப் படுத்தலாம் அல்லது மத்திய வரிசையில் டேவிட் மில்லர்/ சகலதுறை வீரர் டோமினிக் ட்ராக்ஸ் ஒருவரை உபயோகப்படுத்தலாம்.

ஐபிஎல் 2022

இவ்வருடம் மார்ச் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகும் தொடர், மும்பை (55 போட்டிகள்) மற்றும் புனே (15 போட்டிகள்) ஆகிய இரு நகரங்களில் மட்டுமே நடைபெறவுள்ளது. அத்துடன் இம்முறை 10 அணிகள் பங்கெடுப்பதால் லீக் சுற்றில் ஒரு அணி மற்றைய அணிகளுடன் இரு தடவை போட்டியிடும் வழமையான முறைக்கு பதிலாக புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் லீக் சுற்றில் ஒரு அணிக்கான 14 போட்டிகள் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதாவது பத்து அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்படும்; ஒவ்வொரு அணியும் தன் குழுவிலுள்ள மற்றைய நான்கு அணிகளுடன் தலா இரு தடவை வீதம் எட்டு போட்டிகளிலும், மற்றைய குழுவில் ஒரு அணியுடன் மட்டும் இரு தடவை மற்றும் இதர நான்கு அணிகளுடன் தலா ஒரு தடவை வீதம் ஆறு போட்டிகளிலும் என லீக் சுற்றில் மொத்தமாக 14 போட்டிகள் வீதம் பலப்பரீட்சை நடத்தும். இதற்கமைய 2022ம் தொடரின் லீக் சுற்றுக்கான குழு A: மும்பை, கொல்கத்தா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய அணிகளுடன், குழு B: சென்னை, ஐதராபாத், பெங்களூர், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய அணிகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL 2022 - IPL unveils new format, with two groups and seedings

Related posts

சிவராத்திரி விரத மகிமை

Thumi202122

பெண்மைக்கு கிடைத்த கௌரவம் வானவன் மாதேவி ஈச்சரம்

Thumi202122

பாட்டும் நானே பாவமும் நானே!

Thumi202122

Leave a Comment