இதழ் 44

பெண்மைக்கு கிடைத்த கௌரவம் வானவன் மாதேவி ஈச்சரம்

எமது முதற்பெருமை நமது முன்னோர்கள்தான். தமிழர் நாம் என்று எம்மை மார்தட்டிக் கொள்ள வைத்தவர்கள் அவர்கள் தான்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளிற்கு முன் அவர்கள் ஆற்றிய சாதனைகளை இன்றும் உலகம் அதிசயித்துப்பார்க்கிறது. அந்த வகையிலே புவி ஆண்ட சக்கரவர்த்திகள் என புகழ்பெற்றிருந்த சோழ சாம்ராஜ்ஜிய வேந்தர்கள் எழுப்பிய கட்டடங்கள் அன்று விண்ணையே வியக்க வைத்திருந்தன என்பதை மறுப்பதற்கிடமில்லை. அவை இன்றும் நிமிர்ந்து நின்று அவர்களது பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. தஞ்சைப்பெரிய கோயிலின் பிரமாண்டம் ஒன்றே இதற்கு போதிய சான்றாகும் .

இப்பெருவுடையார் கோயிலை நிர்மாணித்த இராஜராஜ சோழனின் புதல்வன் இராஜேந்திர சோழன். புலிக்குப்பிறந்த ஒரு பெரும்புலியாய் தன் தந்தையை விஞ்சி ஒரு படிமேல் சென்று
இந்திய துணைகண்டம் அதுவரை பார்த்திராத சாதனைகளை நிகழ்த்தி மகத்தான ஓர் பேரரசாய் விளங்கினான் ராஜேந்திர சோழன்.

“ஸ்வஸ்திஸ்ரீ பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளின கோப்பரகேசரிவர்மர் உடையார் ஸ்ரீராஜேந்திரசோழதேவர்”

“பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டு சிங்காதனத்திலிருந்த செம்பியர்கோன்”

இராஜேந்திரசோழனைப் பற்றி ஒட்டக்கூத்தர் பாடிய பாடல் இது. இதை கேட்கும்போது இம்மன்னனின் பராக்கிரமம் புரியும். எத்தனையோ ஆயிரம் மன்னர்கள் இவ்வுலகில் தோன்றி மறைந்தாலும் காலம்கடந்து வரலாற்றில் இடம்பிடித்த வெகுசிலரில் ஒருவரே பேரரசன் ராஜேந்திரசோழன். வாழ்நாள் முழுவதும் போரிலேயே கழித்தவன். தமிழரின் புகழை கடல்கடந்து ஒலிக்கச்செய்தவன். பரந்த தேசமெல்லாம் படையெடுத்துச் சென்று சோழதேசம் மேலும் மேலும் பரந்து வளர வழிசெய்தவன்.

தன் வெற்றியைக் கொண்டாட – நினைவு கூற வென்ற தேசங்கள் எல்லாம் புலிக்கொடியோடு புலித்தோல் போர்த்திய பிரானுக்கும் தங்கள் கட்டடக்கலையின் கம்பீரம் மிகும்படி பிரமாண்ட ஆலயங்கள் எழுப்பினான்.

கி.பி 1017 ம் ஆண்டளவில் முழு இலங்கையையும் தன் அதிகாரத்துக்குள் கொண்டு வந்த ராஜேந்திரசோழன் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட அனுராதபுரத்தை விடுத்து இலங்கையின் புதிய தலைநகரமாக ஜனநாதமங்கலம் எனும் பொலன்னறுவையை உருவாக்கினான்.

தலைநகராக்கப்பட்ட இந்த நகரத்தில் தன் வெற்றிச் சின்னங்களாய் வாழ்வோர் வழிபட ஆலயங்கள் பலவற்றை எழுப்பினான். பத்துச் சிவன் கோயில்களும், ஐந்து விஷ்ணு கோயில்களும், ஒரு காளி கோயிலுமாகப் பதினாறு இந்துக் கோயில்கள் பொலன்னறுவையில் அமைக்கப்பட்டிருந்ததாக அகழ்வாராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளன.

இப்பதினாறு கோயில்களுக்கும், பெயர்கள் இருந்திருக்கும். எனினும், இவை அனைத்தும் அறியப்படவில்லை. இலங்கைத் தொல்பொருள் துறையினர் இவற்றை எண்கள் மூலமே அடையாளம் காண்கின்றனர். சிவ தேவாலயங்களுக்கு முதலாம் சிவ தேவாலயம், இரண்டாம் சிவ தேவாலயம் என்றவாறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுள் வீர வேந்தன் இராஜேந்திர சோழனின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தது எனக் கல்வெட்டின் துணை கொண்டு கணிக்கப்பட்ட இரண்டாம் சிவ தேவாலயமே அதிகளவு சேதம் இல்லாமலும், முழுமையாகப் பேணப்பட்ட நிலையிலும் இன்று வரை வழிபாட்டில் உள்ளது. ஏனையவற்றுள் பெரும்பாலானவை அடித்தளம் முதலான குறைந்தளவு தடயங்களையே கொண்டுள்ளன.

இவ் இரண்டாம் சிவாலயத்தில் ஆறுகல்வெட்டுக்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பதிபால மூலப்பட்டுடைங் பஞ்சாசாரிய தேவகன்மிகள் என்ற குழுவினர் இவ் ஈஸ்வரத்தில் இருந்ததாகவும், பரிசாரகர்,மாணிக்கம் போன்ற பட்டம் பெற்றவர்கள் இங்கு பணிகளை மேற்கொண்டதாகவும் அக் கல்வெட்டுகள் கூறி நிற்கின்றன.

இச் சிறப்பு பொருந்திய சிவாலயத்தினை இராஜேந்திர சோழன் ‘“வானவன் மாதேவி ஈச்சரம்” எனும் திருநாமம் கொண்டு அழைத்திருந்தான் என்று அதே கல்வெட்டுக்கள் மேலும் கூறுகின்றன.

எதற்கு அப்படியொரு நாமம்? காரணம் என்னவாக இருக்கும்?

இராஜேந்திரனின் தந்தையாகிய இராஜராஜ சோழனுக்கு அரசியல் நோக்கங்கள் கருதி பல அரசிகள் இருந்தனர் . அதில் முக்கியத்துவம் பெறுபவர்கள் மூவர். பட்டத்து அரசி ஒலோக மாதேவியான தந்திசக்தி விடங்கி, பஞ்சவன் மாதேவி , திரிபுவன மாதேவியான வானவன் மாதேவி. இந்த வானவன் மாதேவி என்பவரே ராஜேந்திர சோழனின் அன்னையாகும். எனவே தனது தாயின் பெயராலேயே இந்தக் கோயிலை அவன் அழைத்திருக்கிறான்.

இராஜேந்திர சோழன் தன்னுடைய மாற்றன்னையான பஞ்சவன் மாதேவிக்கு எடுப்பித்த பள்ளிப்படை கோயில் குறித்து மக்களுக்கு தெரிந்திருக்கும் அளவு, தன்னுடைய பிறப்பன்னையான வானவன் மாதேவியின் பெயரில் இலங்கையில் எடுப்பித்த இந்தக் கற்றளி குறித்து பலருக்கு தெரிந்திருக்காது.

ஆனால் ராஜேந்திரன் தன் அன்னையில் பெயரில் எதற்கு இலங்கையில் ஆலயம் எடுப்பித்தார் என்கிற கேள்விக்கு தெளிவான பதில் என்ன?

பொதுவாக எந்த ஒரு அரசியை போலவும் வானவன் மாதேவியை பற்றிய வரலாற்று தகவல்களும் அதிகம் கிடைக்கவில்லை. எனினும் வானவன் மாதேவி செய்துள்ள ஆலய திருப்பணிகள் மற்றும் கொடைகளில் இருந்து முக்கியமான விடயம் கண்டறியப்படுகிறது. திருவெண்காடு இறைவனுக்கு அதிகளவு தானங்களை மேற்கொண்டுள்ள இவ்வரசி “உடைய பிராட்டி தம்பிரானடிகள் திரிபுவன மாதேவியான வானவன் மாதேவி ” என்றும்
இவரே “இராஜேந்திர சோழ தேவர் தங்களாய்ச்சி (தாய்)” எனவும் ஆதாரங்கள் மூலம் அறியப்பட்டுள்ளார். அப்படியாயின் இவரது சிவபக்தி குறித்தே சிவாலயத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டதா?

வானவன் மாதேவி பிறப்பின் படி கொடும்பளூர் இளவரசியாவார். தமிழக வரலாற்றில் மன்னர்கள் தங்கள் ஆட்சியுரிமையைத் தக்க வைப்பதற்காகப் பல போர்களைச் சந்தித்த இடம் கொடும்பளூர். சங்க காலத்திலிருந்தே புகழ் பெற்ற நகரமாக விளங்கிய கொடும்பளூர் சோழ மன்னர்களின் தலைநகரமான உறையூருக்கும், பாண்டிய மன்னர்களின் தலைநகரமான மதுரைக்கும் இடையே இருந்த பெருவழிப்பாதையில் எழில்மிகு நகரமாக விளங்கியுள்ளது. கொடும்பாளூர் வேளிர் தலைவர்கள் சோழஅரச குடும்பத்தடன் கொள்வினை கொடுப்பினை மூலம் நெருங்கிய உறவை கொண்டிருந்தனர். இராஜராஜ சோழனின் தந்தையாகிய சுந்தர சோழரின் தங்கை நங்கை வரகுணப் பெருமானார் என்பவரை திருமணம் செய்திருந்தார் கொடும்பளூர் பெரிய வேளாளர் பூதி விக்கிரம கேசரி. இப் பூதி விக்கிரம கேசரிக்கு சகோதர முறையினரே வானவன் மாதேவியின் தந்தையாகிய கொடும்பாளூர் வேளிர் தலைவர் பராந்தகன் சிறிய வேளார் என்று சோழர் கல்வெட்டுகள் திட்டவட்டமாக கூறுகின்றன.

வானவன் மாதேவியின் தந்தையாகிய பராந்தகன் சிறிய வேளாளர் சுந்தர சோழர் காலத்தில் ஈழத்துக்கு படையெடுத்து சென்று போரில் வீரமரணமடைந்தார்.

ஆதலால் வானவன் மாதேவி இளம் வயதிலேயே தன் தாய் தந்தையை இழந்து கொடும்பாளூர் பெரிய வேளார் – சோழ சாம்ராஜ்யத்தின்சேனாதிபதி – பூதி விக்ரமகேசரியால் பாசத்துடன் வளர்க்கப்பட்டார்.
ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர் பெரிய வேளாரும் ஈழத்தீவு சென்றதனால் வானவன் மாதேவி மாமன்னர் ராஜராஜ சோழனின் அன்புச் சகோதரி குந்தவை நாச்சியாரின் தோழியாய் சோழ அரண்மனையில் பாசமும் நேசமுமாய் வாழ்ந்து வந்தார்.
குந்தவை நாச்சியாரின் ஆருயிர் தோழியாக இருந்த வானவன் மாதேவி, இயல்பாகப் பயந்த சுபாவம் கொண்டவர்.

அடக்கமும் இனிமையும் தன்னகத்தே கொண்ட பேரழகுப் பெட்டகமான வானவன் மாதேவியின் பயந்த சுபாவத்தைப்போக்கி, தன் தம்பி இராஜராஜசோழனுக்கேற்ற வீர மங்கையாக வானவன் மாதேவியை மாற்ற அவளுக்கு நிறைய சோதனைகளைக் கொடுத்து அவள் மனதில் தைரியத்தை வளர்த்தார் குந்தவை நாச்சியார்.

அவ்வாறே இராஜராஜசோழனின் அன்பைப் பெற்று அவரது கரம் பற்றி ‘திரி புவன மாதேவி’ ஆனார் வானவன் மாதேவி..

பொன்னியின் செல்வன் நாவலின் படி ராஜராஜ சோழரின் முதல் மனைவி வானவன் மாதேவியான வானதியே. ஆனால் ‘நான் ஒருபோதும் அரியணை ஏற மாட்டேன்’ என செய்த சபதத்தின் பெயரால் இவர் பட்டத்து அரசியாகவில்லை என கல்கி கூறியிருப்பார்.

ஆதலால் வானவன் மாதேவியின் புதல்வனாகிய இராஜேந்திர சோழன் தன் தாயின் தியாக உள்ளத்தை நினைவு கூர்ந்து தாய்வழி பாட்டனார் வீரமரணம் அடைந்த இலங்கைத்தீவினை தான் முழுவதுமாய் தனதாக்கிக் கொண்டு தன் தலைமுறைக்கும் தாய்க்கும் கௌரவம் அளித்தமையை எண்ணியே வானவன் மாதேவி ஈச்சரம் என்கிற இச் சிவாலத்தை எடுப்பித்திருக்க வேண்டும் என நாம் ஊகிக்க முடிகின்றதல்லவா? எம் ஊகமே இராஜேந்திர சோழனது விருப்பமாக இருந்திருக்கும் என்பதை நாம் அனுமானித்தே கூற முடியும்.

எதுவாகினும் தன் தாயினை கொண்டாடவே இக்கோயில் ஒரு வீர வேந்தனால் உருவாக்கப்பட்டது என்பது நாம் தமிழர்கள் எம் முன்னோர் குறித்து கரவங்கொள்ள வேண்டிய ஓர் விடயமே ஆகும். தாய் மொழியையும் தாய் நாட்டையும் தாயைப்போல் நேசிப்பவர்களால் இந்த ஆலயத்தின் உன்னதத்தை நிச்சயமாய் உணர்ந்து கொள்ள முடியும்.

இன்று சுற்றிலும் இயற்கைத்தாயின் பச்சை அரவணைப்பில் கம்பீரமாய் காத்து நிற்கும் நந்தி பகவானை எதிர் கொண்டு பழம்பெரும் கோயிலாய் ஒளி வீசி எச்சமாய் நிற்கும் இவ் ஆலயத்தை நம் அடுத்த தலைமுறையினருக்கும் மார்தட்டி அறிமுகப்படுத்தி வைப்பதே எம் காலத்தவரின் வரலாற்றுக் கடமையாகும்.

சிவனிற்கு விழா எடுக்கும் சிவராத்திரி
தினத்தில் அனைவரும் இங்கு கூடி வழிபட வாருங்கள்!
பக்தர்கள், தொண்டர்கள், பாலர்கள் பலவிதமாய் வாருங்கள்!
வானவன் மாதேவி ஈஸ்வரனை வணங்குவோம்!
எமை நிமிர வைத்த வரலாற்றை மீண்டும் நிமிர்த்துவோம்!

Related posts

அதிகாரம் ஆண்வடிவம் என்பது களைதல் வேண்டும்!

Thumi202121

ஈழச்சூழலியல் 30

Thumi202122

பாட்டும் நானே பாவமும் நானே!

Thumi202122

Leave a Comment