இதழ் 44

சித்திராங்கதா – 43

உண்மையான ஊகங்கள்

எண்ணிப்பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. காதலில் மட்டும் எப்படி அர்த்தமற்ற புதிதான வியூகங்கள் தோன்றுகின்றன என்றும் தெரியவில்லை. அவை எப்படிப் பலித்து விடுகின்றன என்றும் புரியவில்லை.

பெருங்காதல் கொண்டுவிட்டால் பல நேரங்களில் ஊகங்களே உண்மையாகிவிடுமோ என்னவோ!

வருணகுலத்தான் சுரங்கப் படிக்கட்டுக்கள் வழியே ஏறி சட்டநாதர் கோயில் பின்புறத்தையே வந்தடைந்தான்.

தான் வந்தடைந்தது சட்டநாதர் கோயில் என்பதை உணர்ந்து கொண்ட நொடியே சித்திராங்கதா இங்கேதான் தனக்காக காத்திருக்கிறாள் என்பதையும் சந்தேகத்திற்கிடமின்றி நம்பத் தொடங்கினான் வருணகுலத்தான். அதுவும் பலித்து விட்டது.

நாட்டிய கலாராணி சித்திராங்கதா ஆலயத்தின் பின்புறமாக யாருமற்றிருந்த மறைவில் ஒரு பெரிய மரத்தின் கீழ் நின்றுகொண்டிருந்தாள்.
இதோ வருகிறேன் வருகிறேன் என்று இருள் வேகவேகமாக விழுந்து கொண்டிருக்கும் அந்தப் பொழுதில் அவ்விடத்தில் தன்னந்தனியாகவே அவள் நிற்கின்றாளா? அவளிற்கு துணையாய் அங்கு யாருமே இல்லையா? ஒருவன் இருந்தான். மரத்தின் மேலே இருக்கிறான். அவன் யார் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்! உங்கள் ஊகமும் பலிக்கின்றதா பார்ப்போம்.

சித்திராங்கதாவை தேடி வந்த வருணகுலத்தான் அந்த மங்கிய இருளில் மாசற்ற சோதியாய் அவளைக்கண்டு கண்கள் விரிபட அப்படியே நின்றான்.

‘தேவி ….. அந்த ஓலை ? ….. தாங்கள் தானா?……..’ தடுமாறிய குரலோடு கேட்டான் வருணகுலத்தான்.

‘நான் தானே இங்கு காத்து நிற்கிறேன். பிறகும் என்ன சந்தேகம் தளபதியாருக்கு?’
என்றாள் சித்திராங்கதா.

‘ஆமாம்… ஆமாம்.. உண்மைதான்! தாங்களேதான்!
அந்த ஓலை உண்மைதான்!
என் நம்பிக்கையும் கூட உண்மைதான்!
என் … என்…..’ என்று பிரம்மை பிடித்தவன் போல் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான் வருணகுலத்தான். என் காதலும் உண்மைதான் என்பதே அவனால் சொல்லமுடியாமல் போன அந்த கடைசி வார்த்தையாகும்.

‘வேறு எதுவும் உண்மை தளபதியாரே…? எனக்கு சரியாக கேட்கவில்லையே, அனைத்தும் பொய் என்று நினைத்துத்தான் இவ்விடம் வந்தீர்களோ?’

‘அப்படியில்லை தேவி, தாங்கள் என்னை அழைத்ததை நான் முதலில் நம்பமறுத்தது உண்மைதான். இறுதியாக தங்களை பார்த்த நொடி என் உள்ளத்தில் முள்ளாய் நினைவிருக்கிறது. என் பார்வையை விலத்தி நீங்கள் விலகிச் சென்ற காட்சி … என்னுள் பதிந்து நின்று இவ்வழைப்பை நம்புவதற்கு இடந்தர மறுத்தது. ஆனாலும் ஒரு நம்பிக்கை என்னை இங்கு வரவழைத்தது. அந்த நம்பிக்கை இப்போது வெற்றியும் பெற்று விட்டது. அதுதான் என்ன பேசுவது என்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறேன்’
என்றான் வருணகுலத்தான்.

‘அன்று தங்கள் மீதும் கோபம் இருந்தது உண்மைதான் தளபதியாரே. இன்றும் இருக்கிறது. தங்கள் மீது மட்டுமே கோபம் இருக்கிறது’

‘அப்படியென்ன பெருங்குற்றம் செய்தேன் தேவி? அன்றைய தங்கள் துன்பத்திற்கு தவிர்க்கமுடியாத காரணம் ஒன்றிருந்ததை பின்னரே நான் அறிந்தேன். முன்னறிந்திருந்தால் தாங்கள் அத்தனைதூரம் வேதனை கொள்ள நிச்சயம் அனுமதித்திருக்க மாட்டேன் …’

‘ஆமாம்.. ஆமாம்… நடந்து முடிந்தவைக்கெல்லாம் தக்க காரணம் இருந்தது என்று நானும் அறிவேன். தங்கள் இராஜமந்திரியார் காரணம் இன்றி எதையும் செய்வாரா என்ன?’
என்று ராஜமந்திரியார் குறித்து அவள் உள்ளத்திலிருந்த கோபத்தின் வெளிப்படையாய் ஏளனத்தோடு கேட்டாள் சித்திராங்கதா.

‘தேவி.. இப்போதும் நீங்கள் அந்த காரணத்தை அறிந்தீர்களா என்று எனக்கு சரிவர புரியவில்லை. ராஜமந்திரியார் அன்று நிகழ இருந்த அரங்கேற்ற விழாவை நிறுத்தியது வோறொரு நல்நோக்கம் கருதியே என்பதை தாங்கள் அறிந்தால் தங்கள் வேதனை சிறிதளவாவது குறையும் என்று எதிர்பார்த்தேன்’

‘அதற்கு சாத்தியமில்லை தளபதி! நடந்து முடிந்தது குறித்து அறிவதற்கு எனக்கு ஆர்வமில்லை. அதை அறிவதால் மட்டும் நான் இழந்தவை மீளக் கிடைத்து விடுமா? பொழுது போகாதவர்கள் எல்லார்க்கும் என் கலை கேளிக்கையும் கிண்டலும் ஆனதை நான் இல்லை என்று கூறி மறுக்கமுடியுமா? அதையெல்லாம் என்னால் மறக்கத்தான் முடியுமா? நடந்தது தங்களைப்போல் அரசாள்பவர்களிற்கு ஒரு சம்பவம். வலி என்பது நான் மட்டுமே உணர்ந்தது. அதற்கு வியாக்கியானங்கள் இனி எத்தனை அழகாய் – அர்த்தமுள்ளதாய் இருந்தாலும் எனக்கென்ன? அதனால் ஆகப்போவது எதுவுமல்ல… மேலும் இது பற்றி பேசுவதே என் வேதனையை கூட்டுகிறது. வேண்டாம் தளபதி…’
ஒரு உடைந்த குரலில் கூறிக்கொண்டிருந்தாள் சித்திராங்கதா.

தக்கசமயம் வாய்க்கும் போது அவளது அரங்கேற்றத்தடை குறித்த அரசியல் காரணத்தை எப்படியாவது சித்திராங்கதாவிற்கு எடுத்துரைக்கவேண்டும் என்றே வருணகுலத்தான் காத்திருந்தான். ஆனால் இவ்வேளை அதனை கேட்கும் நிலையில் அவள் இல்லை என்பதை உணர்ந்து அதற்கு மேல் பேசாமல் அமைதியானான்.

அது அவர்கள் இருவருக்குமிடையிலான ஒரு நீண்ட அமைதியாய் சிலகணம் நின்றது. ஆனாலும் அந்த அமைதி இருவருக்கும் இணக்கமான ஒன்றாகவே இருந்தது. தனிமையின் மௌனத்தில் மட்டும் பலநாள் காத்திருந்தவர்களிற்கு இந்த இணைந்த மௌனம் ஒரு வித்தியாசமான இன்பத்தை அளித்தது. இதற்கு மேல் எதற்கு பேச வேண்டும்? இப்படியே நின்றால் கூட போதும் என்ற நிலையிலே இருவரும் இருந்தனர்.

அந்தக்காதலின் இன்பமான பேரமைதியை சித்திராங்கதாவே முதலில் கலைத்தாள்.
‘இருக்கட்டும் தளபதியாரே, என்னை எதற்கு தேவி என்று அழைக்கிறீர்கள்? நான் எந்த நாட்டில் இங்கு தேவியாக இருக்கிறேன்? அல்லது ஏதாவது கர்ப்பக்கிரகத்திலிருந்து காட்சி தருகின்றேனா? ‘ என்று ஒரு ஒளிவுப் புன்னகையோடு கேட்டாள்.

‘அப்படியென்றல்ல தேவி, எல்லாப் பெண்களையும் தேவி என்றழைப்பதுதான் என் வழக்கம்’

‘ஓகோ… எல்லாப்பெண்களையும் போல் தானே தங்களிற்கு நானும் ஒரு பெண்….. ஆமாம்… ஆமாம்…. அப்படியென்றால் தாராளமாக தேவி என்றே அழையுங்கள்’

‘தேவி இல்லையென்றால் ….
வேறு எப்படி அழைப்பது என்பதை தாங்களே சொன்னால் என்ன?’

‘அதையும் நான் தான் சொல்ல வேண்டுமா தளபதியார்க்கு?
யார் சொன்னாலும் கேட்டு விடுகிற உத்தம உள்ளம் அப்படியே பழகி விட்டது போலும். கடல் தாண்டி வந்து காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து கடுமையான கலவரங்களை எல்லாம் அடக்கி ஒடுக்க அரும்பாடு பட்ட வீரருக்கு சுயபுத்தி கொஞ்சமாவது இருக்கும் என்று சுற்றிலும் பேசிக் கொள்கிறார்கள். எனக்கு அது உண்மை போல் தெரியவில்லையே’
பார்வையை வேறு எங்கோ செலுத்திய வண்ணம் சித்திராங்கதா இவ்விதம் கூறியதும் வருணகுலத்தான் தன்னை மறந்து சிரித்தான்.

‘எத்தனை பெரிய வெற்றிகளைக் கண்டிருந்தாலும் தங்களோடு வாதம் செய்ய முற்பட்டால் நான் தோல்வியடைவதே உறுதி என்று தங்களை சந்தித்த முதல் நாளிலேயே நான் தெரிந்து கொண்டு விட்டேன்’ என்று புன்னகையோடே கூறினான் வருணகுலத்தான்.

‘தஞ்சை மாவீரருக்கே தோல்வியா? அதுவும் இந்த ஆடலரசி.. இல்லை இல்லை… சதாரண வணிகன் மகளிடமா? இதை வெளியில் சொன்னால் தங்கள் ராஜமந்திரியார் தங்களை உடனே நாடு கடத்தி விடக்கூடும். தாமும் ராஜமந்திரியார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று உங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பிவிடுவீர்கள்’
ஒரு மெல்லிய கோபத்துடனே சித்திராங்கதா இவ்வாறு கூறினாள்.

‘எனது நாட்டிலோ அல்லது ஈழத்திலோ இந்த வருணகுலத்தான் ஒன்றும் மகாராஜா இல்லையே. படைத்தளபதி என்பவர் அரசின் அதிகார ஒலிக்கு கட்டுப்பட வேண்டியதே கடமையாகும். நான் மட்டும் அதில் விதிவிலக்கா என்ன?’

வருணகுலத்தான் நிதானமாக கூறிய இந்த வார்த்தைகள் சித்திராங்கதாவின் உள்ளத்திலிருந்த பேரச்சத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

‘அப்படியென்றால் நான் கூறியது சரி தானே? அரச விதியை மதித்து சொந்த மதியை மிதித்து நடக்கும் சாதாரண வீரர் போல் தான் தாமும் என்பதை நிரூபித்து விட்டீர்களே! தங்களை சுயபுத்தி மிக்கவர் என்று வன்னி வேந்தர் அன்று கூறியதும் தவறு என்று இப்போது தோன்றுகிறது’
அவள் உள்ளத்தில் இருந்த அச்சம் மேலெழ பேசுவது என்னவென்று தெரியாமலே பேசிக் கொண்டிருந்தாள்.

‘வன்னி வேந்தரா ??? தாங்கள் கூறுவது யாரைப்பற்றி?’ என்று கேட்டான் வருணகுலத்தான்.

‘வன்னி வேந்தர் வன்னியத்தேவரைத்தான் கூறுகிறேன்’

‘ஆ…. அந்த துரோகியா?’

‘அவர் என்ன துரோகம் செய்தார் உங்களிற்கு?’

சித்திராங்கதாவின் இக்கேள்வி வருணகுலத்தானிற்கு ஒரு பெரிய ஆச்சர்யத்தை அளித்தது. நடந்தது என்ன என்பதை இப்போது அவனால் எள்ளளவும் ஊகிக்க முடியவில்லை.

பேராபத்தை விளைவிக்கூடிய ஒரு கேள்வியை சித்திராங்கதா கேட்டிருந்தும் அதன் அர்த்தம் எதுவும் அவனிற்குப் புரியவில்லை. ஏற்கனவே எழுதப்பட்ட விதியை மீண்டும் தன் காதல் மை ஊற்றி மாற்றி எழுத முயற்சியை ஆரம்பித்து விட்டாள் சித்திராங்கதா.

தொடரும்…

Related posts

பாட்டும் நானே பாவமும் நானே!

Thumi202122

அதிகாரம் ஆண்வடிவம் என்பது களைதல் வேண்டும்!

Thumi202121

வினோத உலகம் – 10

Thumi202122

Leave a Comment