இதழ் 45

கந்தர்வ கான வித்தகன்

24.03.1922 அன்று மதுரையில் உதித்த மந்திரக்குரலோனுக்கு இந்த வருடம் நூறாவது பிறந்தநாள். அவரது நா அசைந்தால்த்தான் தமிழ் சினிமா அசையும் என்ற காலத்தை உருவாக்கி வைத்திருந்த இசையரசர் அவர். அவர் தான் டி.எம். சௌந்தரராஜன்.

‘நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி
நடந்த இளந் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே”

அதுவரை கர்நாடக சங்கீத வகைப்பாட்டுக்களையே கேட்டு சலித்த காதுகளுக்கு மண்ணின் பாடல்களை தெளிந்த தமிழில் தேனாய் வார்த்தவர் இவர்.

‘தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்”

தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட இந்த எழிலிசை வேந்தன் தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தௌ;ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன் ஆனான். ஆம்! டி.எம்.எஸ் என அழைக்கப்படும் டி.எம்.சௌந்தர்ராஜன் வேறு மொழியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் தமிழை இவரளவுக்கு அட்சரம் பிசகாமல் உச்சரித்தவர்களில்லை என்று உறுதியாக சொல்லலாம்.

‘படைத்தவன் மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒரு போதும்
தெய்வம் கொடுத்ததில்லை”

பாட்டும் அவராக பாவமும் அவராக குரலில் நடித்தவர். அவர் குரலில் காட்டும் நடிப்பை திரையில் காட்ட நடிகர் திலகம் உட்பட அனைவருமே சிரமப்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஆரோக்கியமான போட்டி தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது.

‘கூத்தும் இசையும்
கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம்
கதை சொல்ல வந்தாயோ.
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை
நான் பாடவைத்தேனே”

சிவாஜிக்கு பாடும் போது சிவாஜியாகவும்இ எம்ஜிஆருக்கு பாடும் போது எம்ஜிஆர் ஆகவும் கூடு விட்டு கூடு பாயும் குரல் வித்தை காரரானார் டி.எம்.எஸ். அதுமட்டுமா? ஜெமினி கணேஷன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நாகேஷ் என அக்காலத்தின் முன்னணி நடிகர்கள் அனைவருக்குமே டி.எம்.எஸ் குரல் கொடுத்திருக்கிறார். அதில் ஆச்சரியமே இவரது குரல் அந்தந்த நடிகர்களின் உடல் மொழிக்கு ஏற்ப அத்தனை பொறுத்தமாக பொருந்திப்போகும்.

‘மன்னனின் கௌரவம்
சதுரங்க நடுவிலே
மரிக்கின்ற சேனையோ
பிள்ளையின் வடிவிலே
ஆகட்டும் பார்க்கலாம்
ஆட்டத்தின் முடிவிலே
அறுபதை இருபது
வெல்லுமா உலகிலே”

அவர் காலத்தில் இருந்த தமிழ்த் திரையுலகின் அனைத்து இசைப்பாளர்களிடமும் பாடினார். இறுதியாக 2010ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தமிழ் செம்மொழி மாநாட்டு பாடலை பாடினார்.

சங்கீத மும்மூர்த்திகள் என தியாகராஜ சுவாமிகள், முத்துச்சாமி தீட்ஷிதர், ஷியாம சாஸ்திரிகள் ஆகியோர் அழைக்கப்படுவர். இவர்களின் பெயரின் ஆங்கில முதல் எழுத்து டி எம் எஸ் என வரும். ‘சங்கீத மும்மூர்த்திகளின் பெயர்களை எனது இன்ஷியலில் பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம்” என டி.எம்.எஸ்., அடிக்கடி பெருமையாக கூறுவார்.

‘பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா”

அந்தக் குரல் மாயங்கள் செய்து ஜாலங்கள் புரிந்தது.. அவற்றை மொத்தமாக சொல்வதென்றால் துமியின் ஆயிரமாவது இதழையும் கடந்து எழுத வேண்டும். சுருக்கமாக சொல்ல முனைகிறோம்…

பகுத்தறிவு போதித்ததும் அந்தக்குரல் தான்…

‘ஒவ்வொரு உயிர்க்கும் இறைவன் தந்தது
ஒரு ஜாண் வயிறல்லவா?
ஒரு ஜாண் வயிற்றுக்கு வழியில்லை என்றால்
ஒரு முழம் கயிறல்லவா?
வயிறும் வைத்துக் கயிறும் வைத்துப்
படைத்தது உன்தன் தவறல்லவா?”

பக்திக் கடலில் மூழ்கடித்ததும் அந்தக்குரல் தான்…

‘உள்ளம் உருகுதய்யா – முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே –
எனக்குள் ஆசை பெருகுதப்பா”

காதல் மழையில் நனைய வைத்ததும் அந்தக்குரல்தான்..

‘வாவென்று கூறாமல் வருவதில்லையா
காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா
சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா
இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா”

கவலைக் கனலை தணிய வைத்ததும் அந்தக்குரல்தான்…

‘மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும்
வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்தது
இன்று நரகமாக மாறிவிட்டது…”

சிரித்துக்கொண்டே அழ வைத்ததும் அந்தக்குரல்தான்…

‘காலம் ஒருநாள் மாறும் – நம்
கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”

தன்னம்பிக்கைக்கு வலுவூட்டி சுயமரியாதையை சொல்லித்தந்ததும் அந்தக்குரல்தான்…

‘யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும்
வென்ற பின்னே
வாங்கடா வாங்க”

வாழும் வழியை காட்டிச் சென்றதும் அதே குரல்தான்..

‘கடலளவு கிடைத்தாலும்
மயங்க மாட்டேன் – அது
கையளவே ஆனாலும்
கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான்
உலகம் கண்ணா – இதை
உணர்ந்து கொண்டேன்
துன்பமெல்லாம் விலகும் கண்ணா”

10,000க்கும் அதிகமான திரைப்பாடல்களையும் 2500க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்., தனது ஒப்பற்ற கலை பங்களிப்பிற்காகப் பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி உட்பட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டது.

தமிழர்களின் இன்ப துன்ப சடங்குகளிலும் பக்தி நிகழ்வுகளிலும் கலந்துவிட்ட டி.எம்.எஸ் அவர்களது குரல் காற்றுள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும்.

‘கட்டழகானதோர் கற்பனை
ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா
கொடும் சட்டங்கள்
தர்மங்கள் ஏதுமில்லை
இன்பச் சக்கரம் சுற்றுதடா
ஹ ஹா ஹா ஹா
அதில் நான் சக்கரவர்த்தியடா”

Related posts

சித்திராங்கதா – 44

Thumi202122

போர்களுக்கு காரணமாகும் பொய்மான்

Thumi202122

என்ன நடக்கிறது நாட்டில்?

Thumi202122

Leave a Comment