சடைத்து விரிந்த கிளைகளை பரப்பி வியாபித்திருந்த மருத மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. பாதைகள் அகலமாக விரிந்து புதிய கட்டிடங்கள் எழுந்திருந்தன. பறவைகளின் ‘கீச்;.. கீச்..” என்ற ஒலியெல்லாம் பஞ்சப்பட்டு விட்டன. புண்ணிய நதிகளில் நீராட முடியாத தன்மையை ‘இராம நகர்” சோடித்திருந்தது. கனவுகளில் நீந்திய நீர் பறவை யொன்று லேசு லேசாக பிரயாணம் செய்து வருகின்றது. புழுதிகள் புணர்ந்து சுருள் காற்றுகள் மெலெழுந்து பட மெடுக்கின்றன. சுட்டெரிக்கும் வெயிலில் சாய்ந்து சாய்ந்து சுமைகள் தூக்கிய உருவம் புழுதியை கிழித்துக்கொண்டு வீதியில் நடந்து வருகின்றது.
அவள் ஒரு இரும்பு மனுசி. சொர்க்க பூமியில் பல காலங்களை கழிக்க முடியாமல் கடமைக் கடலிலே மூழ்கி மூழ்கி எழுந்து வருபவள். சின்னஞ்சிறிய மென்மையான நெற்றியில் இருந்து குறுக்கெடுக்கும் வியர்வைத்; துளிகளை கன்னங்களினுடாக வடிந்து வர விட்டு நாடியில் வைத்து மறித்து தன் கைக்குட்டையில் துடைத்து விடுகின்றாள். தன் தாயகம் மாறிவிட்டது. தன் இளமைக்காலத்தை கழிக்க முடியாத தேசத்தை நினைத்து சுயகழிவிரக்கப் படுகின்றாள். வீதியில் இருபுறமும் இருந்த தோற்றம் எல்லாவற்றிலும் மாற்றம் நிகழ்ந்து விட்டது. அவை இந்த மனிதர்களிடத்திலும் வந்திருக்கும். யுத்தத்தில் கிழிந்த பனை மரங்கள் ஆங்காங்கே வீட்டுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தது.
‘யார் உது தனத்தின்ற பொட்டையோ…? சைக்கிள் மேலிருந்து இறங்கி பழுதுபட்ட கண்களை விரித்த படி உற்றுப் பார்த்தான் நடேசனப்பு. அவள் கண்களுக்கு பழக்கப்பட்ட உருவம் தான்.
மெல்லிய இதழ்களில் வீசிய காற்று குதூகலிப்பதைப்; போல தெரிந்த மனிதனை சந்தித்த மிதுலாவின் உதடுகள் சிரிக்க ஆரம்பித்தது.
‘ஓம் அப்பு நான் தான் அடையாளங் கண்டுட்டா இன்னும் நல்லா கண் தெரியுது என..”
‘எனக்கென்னடியம்மா? நான் இளந்தாரிதானே?”
கிழவனின் குசும்புத்தனம் மாறவே இல்லை. இன்னும் அதே போல தான் இருக்கின்றார்.என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
‘அப்புச்சு இன்னும் உந்த நக்கல் உன்னை விட்டு போகேல்ல …”
பொக்கை வாயை திறந்து வெற்றிலை கரை படிந்த பற்கள் தெரிய சிரித்தார் நடேசன் அப்பு.
‘அப்புச்சி எப்படி இருக்கிறாய்..?”
‘எனக்கென்ன குற நல்லம்மா என்ன சுத்தி சுத்தி இருக்கிறாள். அவள்ட நினைவு இந்த ஊரெல்லாம் கிடக்கு. அதோட என்ற வாழ்க்க போகுது.. புள்ள உன்ன பாத்து எவ்வளவு வருசம் ஆகிட்டு…”
‘எனக்கும் தான் அப்பு..”
‘ஆனால் நடேசன் அப்பு கொஞ்சம் இளச்சது போல தெரியிறியல்…”
‘நிறைய நாள் கழிச்சு பாக்கிறதால அப்பிடிதெரியுது போல…”
‘அது கிடக்கட்டும் நீங்கள் இன்னும் நல்ல குடியாமே கேள்விபட்டன்..”
‘புள்ள அப்புவ பத்தி தெரியும் தானே… கள்ளுக் குடிச்சாலும் சொல்லு பிசகாது.. நீ வீட்டுக்கு போன.. அப்பு வாறன் வந்து கதைக்கிறன்…”
நடேசன் அப்புவின் கால்கள் தரையில் பதற்றமாக இருந்தன.
மிதுலாவுக்கு நன்கு புரிந்தது.
‘சரி கள்ளுக்குடிக்கதானே போங்கோ.. போங்கோ..”
அப்புவும் காவி படிந்த பற்கள் வெளிய தெரிய சிரித்தப்படி கள்ளுக்கொட்டில நோக்கி புறப்பட்டார்.
‘மிதுலாவுக்கு தெரியும் அப்பு இனி அடிக்கடி அவளப் பார்க்க வருவார். மிதுலாவின் கையால் ஒரு தேனீர் குடித்து முடித்ததும் அவருக்கு உடலெல்லாம் தெம்பு வந்து விடும். இவ்வளவு காலம் பாவம் அப்பு. இனி இருக்கிற நேரங்களில் அப்புவுக்கு ஒரு டம்ளர் தேனீர் என்றாலும் கொடுக்க வேணும். கடைசிக்காலம் ஆறுதல் பட்டுக் கொள்வார். தானே என்று தனக்குள்ளே நினைத்துக்கொண்டு மீண்டும் புழுதியை கிழித்துக்கொண்டு தன் நடை பவனியை ஆரம்பித்தாள்.
இந்த யுத்தம் இன்னும் எத்தனை அவலங்களை விபரிக்குமோ? தெரியவில்லை. யுத்தம் தந்தையை பறித்துக்கொண்டது தாயும் இரண்டு தங்கையும் மிதுலாவின் கைப்பிடிக்குள் அரவணைப்பைத் தேடி கொண்டார்கள். பெண்கள் மட்டுமே குடும்பத்தில் இருந்தனர். பெண் என்பதால் என்ன? குடும்பத்தை வழிநடத்த முடியாதா? தலைமை பொறுப்புடன் சமூகத்தில் வாழமுடியாதா? இப்படியெல்லாம் கேட்கலாம். ஆனால் நடைமுறையில் முட்களின்; மீது செருப்பு அணியாத பாதங்கள் வைக்கும் போது கிழிபடும் வலி பாதங்களுக்குத்;தான் தெரியும். அது பெரும் துயரம். மிதுலா எல்லா வலிகளையும் பொருத்துக்; கொண்டாள்.
குடும்ப சூழ்நிலை, சமூதாய ஏற்றத்தாழ்வு எல்லாவற்றிலும் தன்னை அர்ப்பணித்தால் ஒரு கட்டத்தில் வெளிநாட்டு வேலை தான் சரி என நினைத்துக் கொண்டாள். தன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தவும் தங்கைகளை படிக்க வைக்கவும் அம்மாவுக்கு ஒரு தையல் இயந்திரம் எடுத்துக் கொடுக்கவும் பறக்க ஆரம்பித்தவள். இன்று மூன்று வருடங்கள் கழித்;து மீண்டும் தாயகத்திற்கு வருகின்றாள்.
புழுதி சூழ காற்றினுள் அகப்பட்டு புரண்டு புரண்டு வருகிறது. ஏதோ நன்கு பழக்கப்பட்ட இடத்தை வந்து விட்டதாக மிதுலாவின் மனம் நொந்து கொள்கிறது. எருக்கலை, நாயுருவி, மொழிமுறிச்சான் பற்றைகள் மூடிய காளி கோவிலடி அவள் நினைவுக்கு இடம்பெயர்கின்றது.
அந்தக் கோயில் காடு மண்டியிருப்பதைப் பார்க்கும் மிதுலாவின் மனம் சற்றுத்; தடுமாறுகிறது. ஊர் மனைக்குள் இந்த கோயில் தான் நடுவில் எழுந்தருளி இருக்கிறது. திருவிழா என்றால் பறவைக்காவடி, தீ மிதிப்பு, கச்சான் கடைகள், தேத்தண்ணி கடை, மணிக்கடை ஊரே ஜெக ஜோதியாகி இருக்கும். குமரிகளின் கண்கள் ஆடவர்களையும், ஆடவர்களின் கண்கள் குமரிகளையும், பக்தர்களின் கண்கள் இறைவனையும் நாடிக் கொண்டே இருக்கும்.
சூழ்ந்து வரும் பக்தர் கூட்டத்தில் ஒரு மலைத்த உருவம். ஜல்லிக் கட்டு காளைகளின் திமில் போன்ற திடகாத்திரம் அவனிடம் இருந்தது. பிரகாசமான முகம். கோயில் மின் விளக்குகள் அவன் மீசையில் பட்டு தெறித்தது. அவன்; கண்கள் மிதுலாவை நோக்கியதாய் இருந்தது. அவன் இராமனூர் விதானையார்ட்;ட பொடியன். கழுத்திலே இரண்டு பவுனுக்கு குறையாத தங்கச் சங்கிலி. ஊரில் பல பெண்களுக்கு அவன் மேல் ஒரு கிறக்கம் இருந்தது.ஆனால் மிதுலாவுக்கு இல்லை. இந்த திருவிழா வரைதான். இப்போது அவன் மீது இவளுக்கும் கிறக்கம் உள்ளத்திலிருந்து வெளியேறி விட்டது. அதற்கான வேலையை அவன் நன்கு செய்ய ஆரம்பித்து விட்டான்.
அவள் போகும் இடமெல்லாம் அவளை தொடர்ந்து கொண்டே இருந்தான். பூசை நேரம் அன்னதான மண்டபம், மணிக்கடைத் தெரு திமிலேரிய காளையை அடக்கியே தீருவேன் என்ற ஜல்லிக்கட்டு காரன் போல அவன் தொடர்ந்து கவர்ந்து கொண்டே இருந்தான்.
‘பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்” என்பது போல தன்னை கண்ணாலே ஒப்புக்கொண்டவள். அவன் காதலுக்கு இணங்கினாள். கோயில் வெளிச்சத்திலிருந்து சற்றுத் தூரம் இருள் மருங்கி மண்டிப்போன கரம்;பைக் காட்டில் அன்று இரவே தனித்துக்கதை பேச காதல் அழைத்தது. இருள் மருங்கிய பொழுது காதல் உடலாலும் பரிமாற சரணடைந்தாள் மிதுலா.
இதை நினைத்துக்கொண்டே கோயிலடியை கடந்தவளுக்கு சற்றுத் தூரத்தில் வீட்டுப்படலை தென்பட்டது. அவள் வரவுக்காக முற்றத்தில் தாயும், தங்கைகளும் காத்திருந்தனர்.தங்கையின் காதுகளில் தங்கத்தில் தோடு மின்னியது. தாய் முகம் நன்றாக வெளித்து இருந்தது. வீட்டு விறாந்தையில் ஒரு தையல் மிசின்.
குடும்பம் தேறிவிட்டது.
‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் மிதுலா”
ஆனால் ஏதோ ஒன்றை தொலைத்தவள் போல…
‘இல்லை.. இல்லை..” அந்த காதலை தியாகம் செய்தவள் போல வீட்டுக்குள் போனாள்.
(முற்றும்.)