இதழ் 46

என்னவன் அவன்

‘தயவு செஞ்சி நான் சொல்றத கொஞ்சம் கேளு..”

ஹாலில் அமர்ந்திருந்தவர்கள் எவருக்கும் மணப்பெண் அறை சம்பாஷணை கேட்காத வண்ணம், மெலிதான குரலில் முணுமுணுத்தான் லக்ஷ்மன்.

‘நாளைக்கு விடிஞ்சா கல்யாணம். எப்படி லக்ஷ்மன் உங்களால மட்டும் இப்படி பேச முடியிது?”

“எனக்கு வேற வழியில்ல ஊர்மிளா. என் தம்பிக்காக நான் இதக்கூட பண்ணலனா, அப்புறம் நானெல்லாம் உயிர் வாழ்றதுல அர்த்தமே இல்ல..”

என்று இந்த கல்யாண நாடகத்திலிருந்து தப்பித்துக்கொள்ள லக்ஷ்மன் முயல்வது இது ஒன்றும் முதல் தடைவையல்ல.

‘உங்க அண்ணா தம்பி பாசத்த காட்றத்துக்கு நான் தானா கெடச்சன்? என் வாழ்க்க ஒண்ணும் நீங்க வெளையார்றத்துக்கு விளையாட்டு பொம்ம கெடையாது..” பேசிப்பேசி தோற்றுப் போனவள் கடைசியில் கோபம் தலைக்கேற பொங்கி எழுந்தாள்.

இந்த இரண்டு வாரங்களாக லக்ஷ்மனும் அவளை கன்வின்ஸ் பண்ண முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறான். அவளும் முரண்டு பிடித்துக்கொண்டுதான் இருக்கிறாள். நாளை விடிந்தவுடன் திருமணம். அன்றிரவு கூட அவளை அவன் விட்டபாடில்லை. லக்ஷ்மனுக்கு ஊர்மிளாவின்பால் காதல், ஈர்ப்பு, நட்பு இப்படி எந்த வெங்காயமும் இருக்கவில்லை. தன் தகப்பன் இறப்பதற்கு முன்பு ஊர்மிளாவின் தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்திருந்தானாம் என் மகன்தான் உன் வீட்டு மருமகனென்று. இன்று லக்ஷ்மனின் தகப்பனும் இல்லை, அவருடைய சகோதரி ஊர்மிளாவின் தாயும் இல்லை. இருந்தும் சொத்து வெளிச் செல்லாமலிருக்கவும் சொந்தம் விட்டுப் போகாமலிருக்கவும் உற்றார் உறவினர் விட்ட உறவு, விடாத உறவு, தொட்ட உறவு, தொடாத உறவு என அனைவரும் ஒன்றுகூடி லக்ஷ்மனுக்கு ஊர்மிளா தானென்று முடிவே கட்டிவிட்டார்கள்.

கல்யாண வாழ்வை விளையாட்டாக எண்ணியிருந்தவன் இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொள்வோமென கனவிலும் நினைத்திருக்கவில்லை. லஷ்மனை விட ரகுராம் இளையவன், அமைதியானவன், அண்ணன் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்கின்றவன். அதனால் லஷ்மன் கொஞ்சம் சுயநலமாகவே சிந்தித்தான். தான் விரும்பாத ஊர்மிளாவை தன் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி, தன் தம்பியிடம் சம்மதத்தை பெற்றுக்கொண்டு, இந்த விடயத்தை யாரிடமும் கூறவேண்டாமென சத்தியமும் வாங்கிக்கொண்டான்.

இதனால்த்தான் அவன் இந்த இரண்டு வாரங்களாக ஊர்மிளாவிடம் தன் தம்பியை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்திக்கொண்டிருந்தான். ஆனால் சிறு வயதிலிருந்தே ஊர்மிளாவின் உறவுகள்

‘லக்ஷ்மன் தான் உன் கணவன், லக்ஷ்மன்தான் உன் கணவன்’

என்று சொல்லி சொல்லியே வளர்த்ததாலோ என்னமோ அவள் ரகுராமை எள்ளளவும் அந்த எண்ணத்தில் பார்த்ததில்லை.

இவ்வாறு லக்ஷ்மன் அவளை வற்புறுத்திய பொழுதுதான், அவள் என்றும் இல்லாதவாறு இப்படி சீறிபாய்ந்ததே.

‘உண்மையிலயே என்ன விளயாட்டு பொம்ம எண்டு நினச்சிட்டா இப்படி பேசுறீங்க லக்ஷ்மன்? சொல்லுங்க. உங்களயே மனசுல நினச்சி வாழ்ந்துட்டு எப்பிடி என்னால உங்களோட தம்பியாவே இருக்கட்டும், இன்னொரு ஆணோட வாழ முடியும்? இதுக்கு பேசாம நீங்க என்ன கொண்ணு இருக்கலாம்..”

இந்த இரண்டு வாரங்களாக ஊர்மிளா, தன் தம்பியை திருமணம் செய்துகொள்ளுமாறு தான் வற்புறுத்தியதற்கு ஆம் சொல்லவில்லையென்றாலும், இப்படி எதிர்த்துப்பேசவில்லையே. ஆனால் இப்பொழுது விளையாட்டு, பொம்மை, அது இதுவென்று சொல்கிறாள். நான் இன்றிரவு என்னதான் செய்தாலும் நாளைய திருமணம் நடக்கத்தான் போகிறது என்ற ஆணவத்தில் பேசுகிறாளா? இல்லை, என்னதான் இன்று எனக்கு அவள்மீது பிடிப்பு இல்லையென்றாலும் நாளடைவில் வந்து விடத்தான் போகிறது என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையா? ஆணவமோ கண்மூடித்தனமான நம்பிக்கையோ? என்ன திமிரோ? இந்தப்பேச்சு எல்லாம் என்னிடம் சரி வரப்போவதில்லை என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு மணப்பெண் அறையை விட்டு மறுகணமே வெளியேறினான் லக்ஷ்மன்.

ஆண்களெல்லாம் இப்படித்தானம்மா. அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிட்டால் தானாக நம் வழிக்கு வந்துவிடுவார்களென்று தன் சித்தி சொன்னது நினைவுக்கு வர, மனதில் சிறு கனத்தோடு கட்டிலில் சாய்ந்தாள் ஊர்மிளா. விடியும் வரை வண்ணமயமாக கல்யாணக்கனவுகள். கூடவே கோபமாய் சிவந்த அழகிய முகமொன்றும் தெரிய, லக்ஷ்மனை எண்ணிக்கொண்டே கனவுலகம் போய்விட்டாள்.

விடிகாலை மூன்றரை மணி இருக்கும்.

தாம்பூலத்தட்டுகளோடு இளம் பெண்கள் மணப்பெண் அறைக்கு அடி வைக்க, அடுத்த ஒன்றரை மணி நேரங்கள் எப்படி போனதென்றே தெரியவில்லை.

மணப்பெண் அறையினுள் சுவர் மூலையில் ஓரமாய் ஒரு பெரிய நிலைக்குத்து கண்ணாடி இருந்தது.

ஊர்மிளா எழுந்துபோய் கண்ணாடியை பார்க்கிறாள்.

ரதியும் மேனகையும் அர்த்த நாரீஸ்வரர் உருவத்தில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அழகு என்ற சொல்லின் கருத்து மொத்தமும் கண்ணாடியில் விம்பமாய்த்தெரிய, உற்றுப்பார்த்து ஒரு கணம் பூரித்துப்போய் நின்றாள்.

என்னதான் உடுத்தி எத்தனை அணிகள் தான் பூண்டிட்டாலும், கணவன் ஆசையாய் பார்த்து அழகாய் இருக்கிறாயே என புன்னகைப்பூ ஒன்று வீசி விட்டால் போதும், அதில்தான் பெண்ணின் மொத்த சந்தோஷமும் தங்கியருக்கிறது.

‘நாழியாயிடுத்து.. பொண்ண அழச்சிண்டு வாங்கோ”

எத்தனையோ சினிமா திரைப்படங்களில் ஐயர் இப்படிச் சொல்லி பார்த்திருக்கிறாள், கேட்டிருக்கிறாள். ஆனாலும் இந்த கல்யாணம் தனக்குத்தான். ஐயரும் தனக்குத்தான் சொல்கிறாரெனும் பொழுது அவள் மனது பட்டாம் பூச்சியாய் சிறகடித்து பறந்துகொண்டிருந்தது.

தோழிகளின் பிடியில் மணமேடைக்கு அடிவைத்து செல்கிற வழியில், ஓரக்கண்ணால் மணமகனை மட்டுமே சுமந்திருக்கிற மேடையை பார்க்கிறாள். அவனில் எந்த குறையுமில்லை. வெள்ளை வேட்டி. வெள்ளை சட்டை. சிவப்பு ரோஜாக்கள் கோர்த்திருந்த அழகிய மாலை கழுத்தை பற்றியிருக்க, வழக்கம் போல் அழகாய் ட்ரிம் பண்ணிவிட்ட தாடி. அப்புறம் அழகான அவன், லக்ஷ்மன். ‘என்னவன் அவன்” மெல்லமாய் சொல்லி தனக்குத்தானே சிரித்துக் கொள்கிறாள்.

ஊர்மிளாவை கண்ட பின்பு லஷ்மனுடைய இதழ்கள் இரண்டும் சற்று அதிகமாகவே திறந்தனவென்று சொல்லலாம். என்னதான் சிந்திக்கும் மூளையை கட்டிப்போட்டாலும், நேசிக்க மட்டுமே தெரிந்த பலவீனமான இதயம் மனிதனை உண்டு இல்லையென்று பண்ணிவிடுகிறதே.

‘பொண்ணோட ஆட்கள் வாங்கோ”
‘பையனோட அம்மா எங்க?”
‘வழிய விடுங்கோ கொஞ்சம்”
‘ஆமா மாப்பிள்ளைத்தோழன் எங்க போட்டார்?”

என்று அடுக்கடுக்காய் ஐயர் கேள்விக்கணைகளை தொடுக்க, தாலிகட்டும் படலம் சற்று கலேபரமாகத்தான் இருந்தது.

‘அம்மா தம்பி எங்க?” லக்ஷ்மன் கேட்டான்.

‘இங்கதான்டா இருந்தான்” என்று அம்மாவும் சொல்ல, ஐயரும் தாலி எடுத்துக்கொடுக்க நேரம் சரியாக இருந்தது.

ரகுராமை கண்களால் தேடிக் கொண்டே, குங்குமம் தடவியிருந்த தேங்காயையும் தட்டிலிருந்த மஞ்சள் அரிசியையும் தொட்டுக்கிடத்தியிருந்த தாலியை எடுத்து தயங்கித்தயங்கி கடைசியில் முடிச்சு மூன்று போட்டுவிட்டான்.

திடீரென மணமேடைக்கு ஓடிவந்த ஒரு சிறு குழந்தை,

‘ரகுராம் அத்தான் அந்த ரூம்ல தனியா ஊஞ்சல் ஆடிட்டு இருக்காரு. என்கூட பேசவே மாட்டேங்கிறாரு”

என்று சொல்லி அழுதது. குழந்தை காட்டிய அறைக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர், கதவை திறந்துகொண்டு உள்ளே போய் பார்த்துவிட்டு,

‘ஐயோ ரகுராம் தம்பி தூக்குல தொங்கிருச்சிய்யா”

என்று அலறிய மறு கணமே, திருமண மேடையிலிருந்த லக்ஷ்மனின் தாயும் தந்தையும் உறைந்துபோனார்கள்.

மொத்த மண்டபமுமே சல சலக்க துவங்கியது.

‘பொண்ணு வந்த நேரந்தான் சரியில்ல”

‘இப்பேர்ப்பட்ட குடும்பத்துக்கு இப்படித்தானா ஆகணும்?”

‘அந்த ரகுராம் நல்லாத்தானேப்பா இருந்தான்”

‘ஐயோ உங்களுக்கு விஷயமே தெரியாதா? அந்த ரகுராம் கல்யாணப்பொண்ண காதலிச்சு அவள அவனோட அண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டதாலதான் செத்துப்பொய்ட்டானாம்பா”

‘நான் அப்பவே நெனச்சன் இந்த குடும்பத்துல என்னமோ குளறுபடி இருக்குனு”

‘எல்லாம் பணம்! பணம் இருந்து என்னத்த? வாழக்குடுத்துவைக்கலயே”

அது இதுவென்று கூட்டம் மொத்தமுமே, மழைக்கால தவளைகளை போல கத்திக்கொண்டிருக்க, புதிதாய் திருமணமான சில்வண்டுகள் இரண்டும் மௌனமாய் சினுங்கிக் கொண்டிருந்தன.

இடைவிடாமல் பெய்யத்தொடங்கிய கடும் மழையாய் ஊர் வாய்.

அப்பொழுது தான் இடித்தோய்ந்த ரகுராமின் மரணம் இடி மேல் இடியாய்.

செய்வதறியாமல் தவித்து நின்ற குடும்பத்தாரின் பயம் கலந்த கண்சிமிட்டல்கள் மின்னலாய்.

ஊர் மொத்தமும் துக்க வெள்ளம்.

அனைத்துக்கும் மேலாக லக்ஷ்மன் ஊர்மிளாவை பார்த்த அந்தப்பார்வை. வாழ்வு முழுக்க இனி உனக்கு ஆயுள் தண்டனைதான் என்பது போல.

வெயிற்காலத்தில் வெப்பம் கூடுவதும், மழைக்காலமென்றால் அது தணிந்து கடுங்குளிர் அடிப்பதும் புதிதல்லவென்று ஊர்மிளாவின் தாய் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வர, அவனுடைய பார்வையை கண்களில் பெருகிய நீருடனேயே சந்தித்தாள்.

சுபநிகழ்வொன்றில் இப்படியொரு தர்மசங்கடமான நிலை ஏற்படுகின்ற பொழுது அது எல்லோருக்கும் மனக்கசப்பை தரக்கூடியதுதான். இருந்தாலும் தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் ஒரே மேடையிலேயே வாழ்த்தரிசியும், வாய்க்கரிசியும் போடுவேனென அந்த தாய் எண்ணியிருக்க மாட்டாள். லஷ்மனின் தாய் அப்படியே உறைந்து உடைந்து போனார். அவருக்கு அருகில் போய் அவருடைய கைகளைப்பற்றியவாறே அமர்ந்துகொண்டாள் ஊர்மிளா.

அவளை இரத்த சிவப்பாக மாறிப்போன தன் கண்களால் மறுபடியும் பார்த்துவிட்டு, தன் கழுத்தில் கிடந்த ரோஜாப்பூமாலையை கழற்றி வீசினான் லக்ஷ்மன். நேராக கூட்டம் சூழ்ந்திருந்த அறைக்குச் சென்றவன் ரகுராமின் உடலை தோளிலே சுமந்த வண்ணம் கோவிலைக்கடந்து காரிற்குள் ஏறினான். சில உறவுகளும் அவனுடன் காரில் ஏறின.

கார் கோவிலை கடந்து போகையில், ஊர்மிளா லக்ஷ்மனின் மற்ற சொந்தங்களுடன், உறைந்து போன தன் மாமியாரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

நிஜமாகவே மழை பெய்யத் தொடங்கியிருந்தது. அவளுடைய கன்னங்களிலிருந்து நீர்த்துளிகள் வழியத் தொடங்கின. கண்களி லிருந்தும் தான்.

தொடரும்….

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 42

Thumi202121

ஈழச்சூழலியல் 32

Thumi202121

பெண்ணே…….!

Thumi202121

Leave a Comment