இதழ் 46

வெருளிகள் ஜாக்கிரதை

தினம் தினம் முட்டாளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் மக்கள் கூட்டத்தில் வாழும் எமக்கு முட்டாளாவதையும் முட்டாளாக்குவதையுமா இந்த முட்டாள் தினம் கற்பித்துப் போகிறது? முட்டாளாக்க வந்து முட்டாளாகிப்போனவர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்த இதழின் அட்டையை பாருங்கள். அந்த தோட்டத்து வெருளிதான் அத்தனை கேள்விக்கும் பதில். எப்படி? வாருங்கள் பார்க்கலாம்!

தமிழகத்தில் சோலைக்காட்டு பொம்மை என்கிறார்கள். ஈழத்தில் வெருளி என்கிறார்கள். இதனை விடவும் இதற்கு
புல்லுரு, புள்ளோட்டி, பூச்சாண்டி, பொய்க்கழு, கந்தலாண்டி, மருள், என்று பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. தோட்டங்களில் இருந்த வெருளியை பாடங்களில் புகுத்திய பெருமை நவாலியூர் சோமசுந்தரப்புலவரையே சாரும்.

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! – நன்று
காவல் புரிகின்ற சேவகா!

மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! – உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்!

ஊதியம் வாங்காமல் விவசாயிகளின் தோழனாக களத்து மேட்டில் காவல் காக்கும் இவர்கள் விவசாய கலாசாரத்தின் சிறப்பு வாய்ந்த ஒரு அம்சமாவார்கள். நெற்றி வியர்வை சிந்த விவசாயிகள் உழைத்த பயிரை பறவைகளிடமிருந்து காக்கும் காவல்க்காரர்கள் இவர்கள். விவசாயிகள் இல்லாத உலகு மட்டுமல்ல வெருளிகள் இல்லாத உலகும் பாழ் தான்.

கண்ணும் இமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! – என்றும்
காவல் புரிகின்ற சேவகா!

எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்! – என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்!

மனிதருக்கும் பறவைகளுக்கும் பகை மூழாமல் இருக்க பாடுபடும் சமாதானப்படை இவர்கள். இருக்கலாம். ஆனால் பறவைகளின் உணவை இல்லாமல் செய்யும் கொடுமைக்காரர்களல்லவா இருக்கிறார்கள். காட்டிலும் மேட்டிலும் விளைவனவற்றை உண்ணாமல் விவசாயியின் களத்தில் விளைவதை உண்ண வரும் பறவைகளைத்தானே தடுக்கிறார்கள் என்று நியாயங்கள் கூறப்படுகின்றன. உண்மைதான். தன்னை உருவாக்கியவர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். அது இவர்கள் தவறில்லையே? செஞ்சோற்றுக்கடனுக்காக கர்ணனை கொண்டாடும் நாம் வெருளிகளை மட்டும் பழிகூறலாமா? தோட்டங்களில் பறவைகளின் உணவை தடை செய்தாலும் கற்றாலைகளில் பறவைகளின் உயிரைக் காக்கிறார்கள். காற்றாலைகளின் சக்கரங்களுக்குள் பறவைகள் அகப்படாமல் இருக்க, அங்கும் காவல் புரிகிறார்கள்.

வாட்டமில்லாப்ப்யிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண்டோடுதே – வெடி
வாலைக் கிளப்பிக்கொண்டோடுதே

கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே – கூடிக்
கத்திக் கத்திக் கரைந்தோடுமே

விலங்கு நடத்தைகளின் கற்றலின் எளிய கற்றலின் (simple learning) வகையில் பழக்கமாதல் (habituation) வகைக்கு இந்த வெருளிகள் சிறந்த உதாரணமாகும். அதாவது பறவைகளும், விலங்குகளும், இந்த வெருளி தங்களுக்கு எந்தவித தீங்குதர முடியாதது என்பதை காலப்போக்கில் புரிந்துகொள்வதால், வெருளிகளினது வினைத்திறனும் காலப்போக்கில் குறைந்துகொண்டு செல்கின்றன.

தோட்டத்தில் வெருளி ஒன்றை கண்டவுடன் ஆரம்பத்தில் பறவைகள் பயந்து உடனடியாக விரண்டோடினாலும், காலப்போக்கில் அந்த பறவைகள் பயந்தோடுவதை நிறுத்திவிடுகின்றன. அந்த வெருளிகள் மீதே அமர்ந்து ஆறுதலாக தானியங்களைத் தின்னத் தொடங்குவதோடு எச்சத்தையும் போட்டுவிட்டு செல்கின்றன. ஆரம்பத்தில் பறவைகளை பயந்தோடச் செய்த வெருளியால் ஏன் இப்போது முடியவில்லை? ஏனென்றால் வெருளி ஒரு மாயை. அதன் உருவம் மிகப் பயங்கரமானதாக இருந்தாலும் அதனால் எதையுமே செய்ய முடியாது. இந்த உண்மை அந்த பறவைக்கு தெரியும் வரைதான் அந்த வெருளியை வைத்து பறவையை முட்டாளாக்க முடியும். சில நாட்களிலேயே அசைவுகளற்ற அந்த வெருளியின் போலித் தன்மை தெரிய வந்ததும் அந்த வெருளியும் வெருளியை அங்கே வைத்தவர்களையும் முட்டாளாக்கி விடுகின்றன பறவைகள்.

ஏழைக் கமக்காரன் வேளைக்கு உதவிசெய்
ஏவற்காரன் நீயே யென்னினும் – நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்

ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தனன் உண்மையே – போலி
ஆவதறிந்தனன் உண்மையே

உங்களுக்கு புரியுமாறு சொல்வதென்றால் அறையின் மூலைமுடுக்குகளில் தொங்கும் கயிறுகள் முதல் பார்வையில் பாம்பாக தெரிவதில்லையா? அது போலத்தான் இதுவும். மனிதனையும் சேர்த்த விலங்கியல் விஞ்ஞானத்தில் பழக்கமாதல் (habituation) பற்றிய கற்றல் முக்கியமான ஒன்றாகும். அதற்கென்றே அளவெடுத்து செய்யப்பட்ட உதாரணம்தான் இந்த வெருளிகளுக்கு வெருளும் பறவைகளின் கதைகள்.

தூரத்திலே உனைக் கண்டவுடன் அஞ்சித்
துண்ணென்று இடித்தது என் நெஞ்சகம் – மிகத்
துண்ணென்று இடித்தது என் நெஞ்சகம்

சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்தது உன் வஞ்சகம் – நன்று
தெரிய வந்தது உன் வஞ்சகம்

கலீல் கிப்ரான் எனும் ஆங்கிலக் கவிஞன் தோட்டத்தில் காவல் காக்கும் வெருளியுடன் உரையாடுவதாக ஒரு கவிதை ஆங்கில இலக்கியத்தில் உள்ளது.

கலீல் :- விலங்குகளையும், பறவைகளையும் விரட்டுவதற்காக உன்னை உருவாக்கியுள்ள உழவரின் எண்ணத்தை என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது. நீ ஒரு போலியான பொறி என்பதை அறிந்துகொள்ள முடியாத அறிவற்ற பரிதாபமான விலங்குகள் அவை என்பதும் எனக்கு புரிகிறது. ஆனாலும் உன்னை மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

வெருளி:- ஏன் கவிஞரே?

கலீல் :- மழையிலும், கொளுத்தும் கோடையிலும், உறைபனியிலும் கூட தொடர்ந்து இங்கேயே நின்று கொண்டிருக்கிறாயே …. எதற்காக?

வெருளி:- அந்த விலங்குகளையும், பறவைகளையும் அச்சமூட்டும் ஆனந்தத்திற்காக கொட்டும் மழை, கொளுத்தும் வெய்யில், உறையச் செய்யும் பனி என எதையும் தாங்கலாம். நான் உண்மையல்ல என்பதும், என்னில் ஒன்றுமில்லை என்பதையும் அறிவேன். இருந்தாலும் அதைப்பற்றிய கவலையில்லை எனக்கு. என்னுடைய மகிழ்ச்சியெல்லாம் அடுத்தவரை அச்சமூட்டுவதுதான் …..!

கலீல் :- உண்மைதான். அந்த மகிழ்ச்சியை நானும் கூட அறிந்திருக்கிறேன்.

வெருளி:- வைக்கோலால் நிரப்பப்பட்டவர்களால் மட்டுமே அதை அறிய முடியும்.

தன் மூளையும் வைக்கோலால் நிறைந்ததென சூசகமாக வெருளி நக்கலடித்ததை பொறுத்துக்கொள்ள இயலாத கலீல் அவ்விடத்தை விட்டு அகன்றார். சில மாதங்கள் கடந்த பின் கலீல் கிப்ரான் அந்த பொம்மையைக் காண சென்ற போது மிகப்பெரிய தத்துவஞானியாக அந்த வெருளி மாறி இருந்ததாகவும், அவரது தொப்பிக்குள் இரண்டு காகங்கள் கூடு கட்டிக்கொண்டிருப்பதை தான் பார்ப்பதாகவும் அந்த கவிதையை முடித்திருப்பார். ஆம்! யாரை பயமுறுத்துவது ஆனந்தம் என்று நினைத்திருந்தாரோ அவர்களுக்கே இருப்பிடம் கொடுக்குமளவிற்கு பக்குவம் வந்து விட்டதென்றால் தத்துவஞானிதானே அவர்.

இந்த வெருளிகள் போல போலிப்பெருமைகளுடன் எமது நாட்டில் திரிபவர்கள் அதிகம்! அடுத்தவர்களை முட்டாளாக்கி அதில் ஆனந்தம் அடைய நினைக்கும் இவர்களின் எண்ணத்தின் காலாவதித்திகதி மிக விரைவிலேயே வந்துவிடும் என்பதை தான் இந்த வெருளிகள் விளம்பி நிற்கின்றன.

சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் – இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்

அங்கவர் தம்மைக் கண்டே மாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் – உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்

Related posts

பெண்ணே…….!

Thumi202121

இரும்பு மனிதன் புடின்

Thumi202121

மெகா ஸ்டார் மெக் லேனிங்

Thumi202121

Leave a Comment