உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ச்சியாக 4 வது தடவையாக பின்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. ஐ. நா. வெளியிட்டுள்ள இந்த பட்டியல் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, சுகாதார வாழ்க்கை, உங்களுடைய சொந்த வாழ்வை முடிவு செய்யும் சுதந்திரம், மொத்த மக்கள் தொகை மற்றும் ஊழல் அளவு ஆகியவற்றை அளவுகோல்களாக கொண்டுள்ளது. 149 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் டென்மார்க்கும் மூன்றாம் இடத்தில் சுவிட்சர்லாந்தும் உள்ளன. அமெரிக்கா 16வது இடத்திலும், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் முறையே 17வது மற்றும் 20வது இடத்திலும் உள்ள அதேவேளை இலங்கை 129-ஆவது இடத்திலும், இந்தியா 136-ஆவது இடத்திலும் உள்ளன. பட்டியலில் கடைசி இடத்தில் ஆஃப்கானிஸ்தான் உள்ளது.
மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதை நெதர்லாந்து விஞ்ஂஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 80% பேரின் ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை மனித உடலில் செலுத்தும் தாக்கங்கள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
உலகின் மிகவும் நீளமான பவளப்பாறைத் திட்டான ஆஸ்திரேலியாவின் 2,300 கிமீ நீளமான கிரேட் பேரியர் ரீஃப்-ல் பவளப்பாறை திட்டுகள் மீண்டும் பெரிய அளவில் வெளிர் தன்மை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. வெப்ப மாற்றம் காரணமாக அழுத்தம் அடையும் பவளப்பாறைகள் தங்களுக்குள் இருக்கும் ஆல்காவை வெளியேற்றும்போது அவை இவ்வாறு வெளிர் தன்மையை அடைகின்றன. சமீபத்தில், இந்தப் பகுதியில் கடல் நீரின் வெப்பநிலை அதன் சராசரியை விட 4 செல்சியஸ் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து, பவளப்பாறைத் திட்டு இவ்வாறு வெளிர் தன்மை அடைவது இது நான்காவது முறையாகும். எனினும் இந்த நிகழ்வு, ஆஸ்திரேலியாவில் லா நினா வானிலை நிலவும்போது நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக லா நினா வானிலை ஆஸ்திரேலியாவில் குளிர்ச்சியான வெப்பநிலையைக் கொண்டுவருகிறது.
GIF எனும் அசையும் படத்தை கண்டுபிடித்த கணிப்பொறி விஞ்ஞானி ஸ்டீபன் வில்ஹிட் தனது 74 வயதில் காலமானார். வில்ஹிட் GIF படத்தை 1987-ம் ஆண்டு கண்டுபிடித்தார். இவரது முதல் GIF இமேஜ் பறக்கும் விமானத்தின் படமாகும்.
செய்தி துளிகள்
- ஐரோப்பாவில் முதல் முறையாக டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலை ஜெர்மனியில் தொடங்கப்பட்டுள்ளது.
- சோமாலியவில் 40 ஆண்டுகளில் இல்லாத கடும் பஞ்சத்தால் நான்கில் ஒருவர் பட்டினியால் பாதிப்பு.
- இலங்கையின் முக்கிய செய்தித்தாள்களான தி ஐலண்ட் மற்றும் திவயினா ஆகியன தாள் பற்றாக்குறை காரணமாக அச்சிடுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.