தன் இரண்டாவது சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸி சார்பாக இளம் வயதில் மூன்று இலக்க ரன்கள் எடுத்த வீரர் என்ற ரிக்கி பொன்டிங் சாதனையை முறியடித்த மெக் லேன்னிங், ஒரு வருடம் கழித்து அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் முறியடித்தார். வெறுமனே 35 ஒருநாள் சர்வதேச ஆட்டங்களில் தனது 5வது சதத்தை கடந்தவர், 51வது ஆட்டத்தில் ஒன்பதாவது சதம் விளாசி அவுஸ்திரேலியா மகளிர் சார்பாக அதிக சதம் எடுத்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரியனார். இதற்கு முன் இச்சாதனையை 118 இன்னிங்ஸ்களில் எட்டு சதம் எடுத்த கரேன் ரோல்டன் வசம் இருந்தது. அவுஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திரங்களான ரோல்டன் மற்றும் ப்ளேண்டா கிளார்க் ஆகியோரின் சத எண்ணிக்கைகளை தகர்க்கும் பொது லேன்னிங் வயது 24 மட்டுமே. தன் 25வது வயதில் பத்தாவது ஒருநாள் சதம் கடந்து மகளிர் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை நாட்டி ‘மெகா ஸ்டார்’ ஆனார்; அப்போது 50 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 96.7 என்ற அடித்தாடும் வீதத்தையும் கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
தற்போது 30 வயதான லேன்னிங், இதுவரை தன் விளையாடிய 100 போட்டிகளில் 15 சதங்கள் மற்றும் 19 அரைச்சதங்களை 53.13 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் குவித்துள்ளார்; இவர்க்கு அடுத்து நிலையில் நிற்கும் பேட்ஸ் 12 சதங்கள் எடுத்து இருந்தாலும் 142 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்த பதினைந்து சதங்களில் பத்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துரத்தும் போது பெறப்பட்ட காரணத்தால் “சேசிங் குயின்” என அழைக்கப்படுகிறார்.
இருபத்தொரு வயதில் அவுஸ்திரேலியா அணியின் தலைவியாக உருவெடுத்தன் மூலம் இளம் வயதில் ஒரு சர்வதேச அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியை தலைமை தாங்கியவர் என்ற மகுடத்தையும் பெற்றுக் கொண்டார். இதுவரை லேன்னிங் தலைமையில் அவுஸ்திரேலியா, 66 வெற்றிகள், 8 தோல்விகள் மற்றும் ஒரு சமநிலையை பெற்றுள்ளது; வெற்றி தோல்வி வீதம் 8.25 இல் உள்ளது. 2003 இல் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸி 21 தொடர்ச்சியான ஒருநாள் சர்வதேச ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தது. இதுவே சாதனையாகவும் இருந்து வந்தது. ஆனால் 2021 இல் லேன்னிங் தலைமையில் அவுஸ்திரேலியா மகளிர் அணி தம் 22வது தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று முறியடித்தது. இப்போது லேன்னிங் தலைமையில் அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக வென்ற 26 போட்டிகளே சாதனையாகவுள்ளது.
இதுவரை நான்கு ரி20 உலகக் கிண்ணம் மற்றும் இரு உலகக் கிண்ணம் வென்றுள்ள மெக் லேன்னிங், அவற்றில் மூன்று ரி20 உலகக் கிண்ணம் மற்றும் ஒரு உலகக் கிண்ணம் என்பவற்றை தன் தலைமையில் வென்று கொடுத்துள்ளார்.
அத்துடன் லேன்னிங் ஆடும் Cut Shot ஆனது குமார் சங்கக்காராவின் Cover Drive, ரிக்கி பொண்டிங்கின் Pull Shot மற்றும் சச்சின் டெண்டுல்கரின் Straight Drive என்பன போன்று ரசிக்கப் படுகிறது.
இம்முறை நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு எதிராக Cut Shot அடித்தே ஓட்டங்களை இலாவகமாக குவித்து இருந்தார்.