இதழ் 47

ஓலைச்சுவடிகள் கதை

சில மடங்களில் பூஜைப் பொருள்களாகவும், சில வீடுகளில் அறிவாளிகளின் அடையாளமாகவும், சில இடங்களில் தற்குறிகளின் தனி உடைமையாகவும் மொத்தமாகவும் சில்லறையாகவும் எடுத்தாள நாதியற்று, எங்கு கிட்டும் என்ற சேதியற்று காக்கை கொத்திய கடுக்கனைப்போல மதிப்பறியாது மங்கிக்கிடக்கும் ஓலைச்சுவடிகளுக்கு அரிதாக சில இடங்களில் பல மடங்கு மதிப்பு அளிக்கப்படுகிறது. ஏனென்றால் அந்தச் சுவடிகளில்தான் பதிந்துகிடந்தன பழந்தமிழரின் சுவடுகள்.

பேப்பரிஸ் என்கிற மரத்தண்டில் எகிப்தியர்கள் எழுதினார்கள். சுமேரியன்ஸ் களிமண் தட்டுக்களில் எழுதினார்கள். இங்கும் ஆரம்ப காலங்களில் களிமண் தட்டுக்களிலும், கற்பாறைகளிலும் எழுதினார்கள். அதன்பின்னரே பனையோலைகளில் எழுதும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. கைத்தொழில் புரட்சியால் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்படும் வரை ஓலைச்சுவடிகளே பிரதான எழுத்துமூலமாக தமிழர் வாழ்வியலில் இருந்துவந்தது.

ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு தலவிருட்சத்தை வைத்தார்கள் தமிழர்கள். தமிழுக்கே ஒரு தல விருட்சமென்றால் எதை சொல்வீர்கள்? பனைமரந்தான்! பன்னூறு ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட தமிழை 18ஆம் நூற்றாண்டுக்கு கடத்தி வந்த அந்த ஓலைகளை தந்த கற்பகத்தருக்கள் அந்த பனைமரங்கள் தானே! மூன்று வகை பனை மரங்களான, தாளைப்பனை, கூந்தல் பனை, இலாந்தர் பனை போன்ற மரங்களின் ஓலைகளையே ‘ஓலைச்சுவடிகள்” செய்ய பயன்படுத்தியுள்ளனர். ஒரு பனை மரத்தில் ஆக்குறைந்தது ஐந்து ஓலைகளே தரமானதாக இருக்கும். அவற்றை வெட்டி வெய்யிலில் காயப் போடுவார்கள். ஏட்டு ஓலைப்பிரமாணத்தில் குறிப்பிட்ட அளவீடுகளுக்கு அமைய அவற்றை வெட்டி எடுத்து வார்ந்து போடுவார்கள். ஆண் ஓலை, பெண் ஓலை மற்றும் அர்த்தநாரி ஓலை என ஓலைகளில் மூன்றுவகை உள்ளது. ஆண் ஓலைகளில் எழுதுவது கடினம். பெண் ஓலைகளில் எழுதுவது சுலபம். அர்த்தநாரி ஓலைகள் எழுதும் போது ஓலை உடைந்துவிடும்.

சுவடி படைக்கும் தொழில் நுட்பம் பற்றி மொழிகாத்தான் சாமி எனும் உவேசா பற்றிய வரலாற்றுத் தொகுப்பில் கவிப்பேரரசு வைரமுத்து பின்வருமாறு கூறுகிறார்.

‘இளம் பதமுள்ள பனை ஓலை பொறுக்கி, அளவுக்குத்தக்க நறுக்கி, குழந்தைக்கு நகம் வெட்டுவதுபோல் நளினமாய் நரம்பு களைந்து, நிழலில் உலர்த்தி, பனியில் பதப்படுத்தி, இளக்கமுறுமாறு இளஞ்சூட்டு வெந்நீரில் வெதுப்பி, பளபளப்பான சங்கு அல்லது கல்கொண்டு அழுத்தி அழுத்தித் தேய்த்து அழகுறுத்தி, பக்குவமாய்ப் பாடஞ்செய்து, மஞ்சள் நீரிலோ அரிசிக் கஞ்சியிலோ உள்ளார ஊறவைத்து, பிள்ளைக்கு வலிக்காமல் காது குத்துவதுபோல சுவடிக்கு இரு துளைகளிட்டு, ஒரு முனையில் கயிறு செருகி, மறுமுனையில் சுள்ளாணி செருக, பனை ஓலை பாட்டுச் சுவடியாய் மோட்சமுறும். ஓலையின் மீது மஞ்சளும் வேப்பெண்ணெயும் பூசி, கோவை, ஊமத்தை இலைச்சாறுகளும், மாவிலை அருகம்புல் விளக்கு ஆகியவற்றின் கரியும் தடவி ‘மையாடல்” செய்வதுமுண்டு. “

ஓலைகள் எழுதி முடித்ததும், அந்த கட்டின் மேலும் கீழும் ஓலையின் அளவைவிட சற்று பெரிய மரத்தாலான பலகைகள் கொண்டு பாதுகாப்பு உறை போன்று மூடப்படுகிறது. அதனை ஒரு துணியினால் சுற்றப்பட்டு, தூசு படியாமல் பாதுகாக்கப்படுகிறது.

வேறுநாடுகளில் பனையோலை மீது மை தொட்டு எழுதும் வழக்கம் இருந்தது. ஆனால் மை அழிந்துவிடும் என்பதால் இதன் ஆயுளும் சொற்பம். எனவே மிக சிக்கலான கடினமான ஆனால் இலகுவில் அழிக்க முடியாதவாறு எழுத்தாணியின் பலத்தை ஓலையில் ஊன்றி எழுதும் முறையை கடைப்பிடித்தார்கள். வரலாறுகளும் சுவடுகளும் காலமுள்ளவரை இருக்க வேண்டுமென்பதில் எம்முன்னவர்கள் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறார்கள். பூச்சிகளின் அரிப்பிற்கு உள்ளாகாமலிருக்கும் பொருட்டு, அதன்மேல் வேம்பு அல்லது வசம்பு போன்ற, திரவியங்கள் அல்லது எண்ணெய்கள் தடவப்படுவதும் உண்டு. மேலும் எலுமிச்சை புல் எண்ணெய் அல்லது கற்பூர எண்ணெய் ஓலையின் நெகிழ்வுத்தன்மைக்காக தடவப்படும். நவீன காலங்களில், ஓலைகளை பூஞ்சை அரிக்காமல் பாதுகாக்க, ‘தைமோல் நீராவி புகையூட்டம்” கொண்டு பதனிடப்படுகிறது.

சுவடிகளில் எழுத பயன்படுத்திய எழுத்தாணிகள் குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி ஆகியவையாகும்.
ஓலையில் எழுதுவது என்பதே கடினமானது. அவ்வாறு எழுதும் போது அந்த ஓலை இடையில் கிழிந்துவிட்டால் என்ன செய்வது? ஓலைகளின் தகுதியை எழுதும் முன்னரே பரிசோதிக்க வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு ஓலையிலும் மேற்பாகத்தில் ஒரு குறியீட்டை எழுதிப் பார்ப்பார்கள். அது எழுதும் போது ஓலை கிழியவில்லை என்றால் அந்த ஓலை மேற்கொண்டு எழுதத் தகுதியானது. கிழிந்துவிட்டால் அந்த ஓலை தகுதி நீக்கம் செய்யப்படும். அந்த குறியீடு வளைவுகளையும் நேர்கோட்டையும் கொண்டிருக்கும். அந்த குறியீடுதான் பிந்நாளில் பிள்ளையார் சுழியானதென்றும், எழுதத் தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போடும் வழக்கம் இவ்வாறுதான் வந்ததென்றும் கூறப்படுகிறது.

ஓலை எழுதுவது மட்டுமல்ல ஓலைச்சுவடிகளை வாசிப்பதும் மிக்ககடினமான காரியம். இலக்கியப் பேரறிவும் இலக்கணச் சீரறிவும் உள்ளவர்களாலேயே இது சாத்தியம். ஏனெனில் பனை ஓலை எழுத்துக்களுக்குப் புள்ளி இராது. இது கொம்பு – இது சுழி என்று வேறு பிரித்து அறியமுடியாது. ‘ர’கரத்திற்கும் காலுக்கும் வேற்றுமை தெரியாது. ‘சரபம்’ சாபமாகத் தோன்றும்.’சாபம்’ சரபமாகத் தோன்றும்.

ஒவ்வொரு முறையும், ஓலைச்சுவடிகள் ஏதேனும் பாதிப்பிற்கு உள்ளாகும்போதோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறையோ மற்றொரு புதிய ஓலைச்சுவடிக்கு அதன் தகவல்கள் மாற்றப்பட்டு வந்துள்ளன. அதாவது, திருக்குறள், திருவள்ளுவரால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருந்தால், அந்த ஆதிச்சுவடி தற்போது நமக்கு கிடைப்பது அரிது. அஃது, கி.மு 1-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருப்பின், இப்போது, குறைந்தபட்சம் 9 தலைமுறைகளில் ஓலை மாற்றி எழுதப்பட்ட, அண்மைய சுவடிகளையே நம்மால் காண இயலும். ஏனெனில், சரியாக பாதுகாக்கப்பட்டிருந்தால், ஒரு ஓலைச்சுவடியின் ஆயுட்காலம், சராசரியாக, 200-லிருந்து 300 ஆண்டுகள் வரையே. ஓலைச்சுவடிகளை வாசிப்பதே கடினமெனும் போது அதனை வாசித்து தெளிந்து அச்சேற்றிய பெருமகனார் உ.வே. சாமிநாதையர் போற்றுதலுக்குரியவர். அவரை மொழி காத்த சாமியாக பின்வருமாறு போற்றுகிறார் வைரமுத்து.

‘இந்த ஏடுகளைத்தான் தின்றழித்தது கடல்;இ நின்றழித்தது தீஇ கொன்றழித்தது மதம்;இ உண்டழித்தது மூடம். தமிழை மறந்த ஆட்சியும் அழித்தது தமிழ் தெரியாத பூச்சியும் அழித்தது. இப்படிக் காலவாய் என்ற காளவாயில் வீழ்ந்ததுபோக மிச்சமுள்ள ஏட்டுத் தமிழை மீட்டுத் தரத்தான் சாமிநாதன் என்ற மூளைக் கிழவனைக் காலம் அனுப்பியது.”

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட போது சாம்பலாகிப்போன பொக்கிஷங்களுக்குள் 95000 ஓலைச்சுவடிகளும் அடக்கம். இவ்வாறு தீ உண்டதும், புனல் கொண்டதும், கறையான் தின்றதுமென நாம் இழந்தது வெறும் மர ஓலைகளை அல்ல. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, ஆராய்ச்சி முடிவுகளை.. நோய் தீர்க்கும் மருந்துகளை.. வாழ்வியல் நெறிகளை.. சிந்தையில் கொஞ்சும் கவிகளை.. அனைத்திற்கும் மேல், நாம் இழந்ததும், இழந்துகொண்டிருப்பதும், ஏறத்தாழ குறைந்தபட்சம் 2000 வருட அனுபவங்கள் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே வாழ்ந்துகெட்ட ஒரு தலைமுறையின் எச்சம்போல் கொஞ்சம் கொஞ்சம் மிச்சமிருக்கும் இந்த தமிழ் தரித்த ஓலைச்சுவடிகளை காலமுள்ளவரை பாதுகாக்க வேண்டியது தமிழுக்கும் தமிழ் காத்த எம்முன்னவர்களுக்கும் நாம் செய்யும் தலையாய கடமையாகும்.

Related posts

கனவுக்காரர்களே காரியக்காரராகுங்கள்…!

Thumi202121

விண்ணதிர் பரணி

Thumi202121

வினோத உலகம் – 12

Thumi202121

Leave a Comment