பசளைகளில் பொஸ்பரசு
நீரில் கரையாத எப்பாவில பாறை பொசுப்பேற்றும் 90% நீரில் கரையக்கூடிய முக்கூட்டு சுப்பர் பொசுப்பேற்றும் இலங்கையில் பாவிக்கப்படும் பொசுபரசு உள்ளடக்கிய பசளைகளாகும்.இலங்கையில் உள்ள விவசாய ஆராயச்சி நிலையங்கள் எல்லா பயிர்களுக்கும் பொசுபேற்றை சிபாரிசு செய்கின்றன. பல்லாண்டுப் பயிர்களான இறப்பர், தேயிலை, தென்னை மற்றும் அநேக வாசனைத் தாவரங்கள் ஆகிய பயிர்களுக்கு பொசுப்பேற்று சிபாரிசு செய்யப்படும் அதேவேளை, நெல், சோளம், மிளகாய்,வெங்காயம், உருழைக்கிழங்கு, மரக்கறிகள், மற்றும் குறுகிய கால பயிர்களுக்கு முக்கூட்டு சுப்பர் பொசுப்பேற்றை சிபாரிசு செய்யப்படுகின்றது.
பெருந்தோட்டக் கம்பனிகள் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக இரசாயனப் பசளைகளை தொடர்ச்சியாகப் பாவிக்கின்றன. இக்கம்பனிகளுக்கு புது ஆராயச்சிகளின் கண்டு பிடிப்புகளை அணுக வாய்ப்பிருந்தமையினால் ஆராயச்சி நிலையங்களின் சிபாரிசுகளை பின்பற்றினர். இதன் காரணமாக தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற பெருந்தோட்ட மண்ணில் பொசுபரசின் அதிகரிப்பு காணப்படவில்லை. அதே நேரம் 1980ம் ஆண்டளவில் விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் உத்தியோகத்தர் பதவிகள் பதிலீடின்றி அகற்றப்பட்டதால் சிறு பயிர்த் துறை விரிவாக்கல் சேவை பெரியதோர் இணைப்பை இழந்தது. நுவரெலியா, பண்டாரவல, வெலிமட, மாரஸ்ஸன போன்ற பகுதிகளில் உருழைக்கிழங்கு மற்றும் மரக்கறி செய்கைக்கு முறையான வழிகாட்டல் இல்லாததால், பசளை விற்பனையாளர்களின் அறிவுரைகளையே விவசாயிகள் நம்ப வேண்டியதாயிற்று. அதனால் விவசாயத் திணைக்களத்தின் சிபாரிசினைவிட அதிக அளவு பசளைகள் பாவிக்கப்படும் நிலை ஏற்பட்டது. நைதரசன் பசளைகள் நீரில் இலகுவாகக் கரைவதனாலும் அதன் இரசாயனத் தன்மை காரணமாக மண்ணிலிருந்து இலகுவாக விலகிச் செல்லக் கூடிய பண்பையும் கொண்டது. இதற்கு மாறாக பொசுபரசுப் பசளை மண்னுடன் விரைவாக தாக்கமடைந்து நீருடன் கரையமுடியாத பல பொசுபரசு சேர்க்கைகளாக மாற்றப்பட்டு மண்ணில் நீண்ட காலம் குடி கொள்கின்றன. எனினும் மண்ணின் பொசுபரசின் அளவு ஒரு எல்லையைத் தாண்டும் போது மண்ணில் உள்ள தாக்கமடையும் பகுதிகள் நிரம்பல் நிலையை அடைவதனால் மேலதிகமாக இடப்படும் பொசுபரசு பசளை மண்ணிலிருந்து இலகுவாக அகற்றப்பட்டு நீர் நிலைகளை அடைய ஏதுவாகின்றது.
விலங்குக் கழிவுகளில் காணப்படும் பொசுபரசு
பெரியளவான பால்பண்ணைகளில் கால்நடைகள் நிரந்தரமாக அடைத்து வளர்க்கப்படுகின்றன. இதன் காரணமாக அதிகளவான விலங்குக் கழிவுகள் நிலத்தில் சேர்வதால் மண்ணில் பொசுபரசின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன. விலங்குக் கழிவுகளில் காணப்படும் பொசுபரசில் சுமார் 45% – 70% ஆனவை அசேதனப் பதார்த்தங்களாக இருப்பனதால் அவை நேரடியாக தாவரங்களுக்கு கிடைக்கக் கூடியனவாக உள்ளன. மிகுதியான 30% – 55% சேதனப் பதார்த்தங்களாக உள்ளதால் அவை தாவரம் உறிஞ்சும் கனிப்பொருட்களாக சிதைவடைய சிறிது காலம் தேவைப்படும். அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் நடாத்தப்பட்ட கள ஆய்வில் பசு மற்றும் கோழி சாணத்தில் இருந்து வரும் பொசுபரசை விட இரசாயன பசளைகளிலிருந்து வரும் ஓடு நீரில் உள்ள பொசுபரசு அதிகமானதென அவதானிக்கப் பட்டது. பல நாடுகளில் பெரிய விலங்குப் பண்ணைகளின் அளவை மட்டுப்படுத்தவும், மண்ணில் காணப்படும் பொசுபரசின் அளவைக் கண்கானிப்பதற்கும் சட்ட ஒழுங்குகள் அமுலில் உள்ளன.
இலங்கையில் விலங்குகள் பொதுவாக சுயாதீனமாக மேய்ந்து திரிவதால் குறைவான விலங்குக் கழிவுகளே ஓர் இடத்தில் சேர்கின்றது. வரண்ட பிரதேசங்களில் காணப்படும் சிறிய நீர்நிலைகளுக்கு நீர் அருந்த வரும் பண்ணை விலங்குகளின் கழிவுகளில் இருந்தே அந்நீர்நிலைக்கு சிறிதளவு போசனை சேர்க்கப்படுவதுடன் விலங்குக் கழிவுகளினால் பெரியளவில் பாரிய நீர்த் தேக்கங்களில் மாசுபடுதல் அரிதாகும். கொத்மலை ஆற்றின் மேல் நீரேந்தும் பகுதியில் காணப்படும் சில தீவிர பாற் பண்ணைகளின் விலங்குக் கழிவுகளும், கால்நடை உணவின் மிகுதிகளும் நேரடியாக ஆறுகளைச் சென்றடைகின்றன. விலங்குகளின் கழிவுகளில் உள்ள பொசுபரசின் அளவு அதன் உணவில் தங்கியுள்ளது. சோயா, பார்லி, சோளம் போன்றன, மேலதிகமாக விலங்கு உணவில் அதிகம் Phylate காணப்படுகின்றது. இவற்றின் சமிபாடு குறைவானதால் சுமார் 60% ஆனவை சிறுநீர் மற்றும் கழிவுகளினூடாக வெளியேறுகின்றது. இலங்கையில் மரக்கறி விவசாயிகள் 10 – 15 தொன் வரை விலங்குகளின் கழிவுகளை இட்டு 15 – 20 Kg பொசுபரசினை வருடாந்தம் மண்ணுக்கு சேர்க்கின்றனர்.
உழவியல் மற்றும் சூழலுக்கான மண் பொசுபரசின் மாறுநிலை (critical) அளவு
எல்லா மண்ணிலும் பொசுபரசு காணப்பட்டாலும் அதன் குறைந்த கரைதிறன் காரணமாக அவற்றின் பெரும் பகுதியை தாவரத்தினால் நேரடியாக உறிஞ்சி கொள்ள முடியாது. இதன் காரணமாக மண் ஆராய்ச்சியாளர்கள் வன் அமிலத்தினுடனான தாக்கத்தினால் தீர்மானிக்கப்படும் மொத்த பொசுபரசின் அளவை தாவரத்துக்கு வழங்கக்கூடிய பொசுபரசின் சுட்டியாக கருதுவதில்லை. அமெரிக்காவில் 60 வருடங்களுக்கு முன்பதாக மண் விஞ்ஞானிகள் தாவரத்துக்கு அதன் வளர்ச்சிக் கட்டத்தில், பொசுபரசை வழங்கக்கூடிய மண்ணின் தன்மையை கண்டறிய பல்வேறு மண் பரிசோதனைகளை நடாத்தியுள்ளனர். இந்த மதிப்பீடு மண்ணில் கிடைக்ககூடிய பொசுபரசு பெறுமானம் என கூறப்படும். அமெரிக்காவின் விவசாயத் திணைக்கள விவசாய ஆராய்ச்சி சேவை நிறுவனத்தினால் கொலராடோ பல்கலைக்கழக ஆய்வு கூடங்களில்
நடத்திய ஆய்வுகளின் படி Dr.Sterling Olsen தலைமையிலான குழுவினால் 1954 இல் முன்வைக்கப் பட்ட முறையையே (Olsen P)உலகளாவிய ரீதியில் பொதுவாக கிடைக்கக்கூடிய பொசுபரசின் அளவைத் தீர்மானிப்பதற்கு உபயேகிக்கின்றனர். இந்த முறையே இலங்கையிலும் சிறு பயிர்களான நெல், மரக்கறிகள், உருழைக்கிழங்கு, சோளம், மிளகாய் மற்றும் வெங்காயச்செய்கைக்குப் பாவிக்கக் கூடிய பொசுபரசு உரத்தின் அளவை தீர்மானிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
பொசபரசு உரம் இடப்படாத இடங்களான காட்டுப்பகுதிகளில் Olsen P 10 ppm க்கு மேலதிகமாக காணப்படுவது மிகவும் அரிதாகும். தொடர்சியாக பொசுபரசு உரம் பாவிக்கப்படும் மண்ணில் Olsen P அதிகரித்து செல்லும். மண்ணிலுள்ள பொசபரசு ஓர் நிலையை அடைந்த பின் மேலதிகமாக இடப்படும் பொசுபரசு விவசாயிகளுக்கு எந்த வித பிரயோசனத்தையும் அளிக்காது. இந்த நிலை ஒரு குறிப்பிட்ட மண்-பயிர்-சுற்றாடல் சேர்க்கைக்குரிய மாறுநிலை உழவியல் எல்லை (Limit for soil-crop-environment combination) என அழைக்கப்படும். அனேகமான நாடுகளில் 30ppm பொசுபரசை விவசாய உயர் எல்லையாக (Olsen P) வரையறை செய்துள்ளனர்.
ஆராய்வோம்……………..