இதழ் 47

கனவுக்காரர்களே காரியக்காரராகுங்கள்…!

மண்ணில் இருந்தபடி விண்ணை நோக்கி விண்மீன் பிடிப்பவன் கனவுக்காரன். அலையின் மீதேறி கடலைக் கிழித்து கடல் மீன் பிடிப்பவன் காரியக்காரன். இந்த பூமி நகர்வது கனவுக்காரர்களாலா? காரியக்காரர்களாலா? கொஞ்சம் சிந்தித்துச் சொல்லுங்கள்.

கனவு காண்பதில் தவறில்லை. ஆனால் கனவே உணவாகும் என்று காத்திருப்பது தவறல்லவா? மெய்வருத்தம் இல்லாத மேன்மை நிலைக்கும் என்று நம்புவது மடத்தனமல்லவா?

கனவு காண்பவன் எப்போதும் ஒருமையிலே காண்கிறான். காரியம் ஆற்றுபவனே பன்மையில் இணைகிறான். மக்கள் எனும் மகாசமுத்திரத்தில் கரைந்து காணாமல் போய் விடமாட்டேன் என்கிறான் கனவுக்காரன். கரையாமல் கலந்து நிற்கிறான் காரியக்காரன். உண்மையில் பன்மையில் இணைபவன் தன் ஒருமையை இழந்து விடுகிறானா? அல்லது ஒற்றுமையால் வளர்ந்து விடுகின்றானா? உழைப்பவர்களது உள்ளத்தில் இந்தக்கேள்வி எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

அரசியலில் கூட மக்களிடையே ஒருமைப்பாடு வேண்டும்; ஒற்றுமை வேண்டும்; என்ற சொற்கள் அடிக்கடி இப்போது ஒலிக்கின்றன.இவை இரண்டும் ஒரே சொற்கள் போல் தோன்றினாலும் இடையே வேறுபாடு இருப்பதையும் எம்மால் உணரமுடிகிறதல்லவா?

“ஒன்னுடன் மற்றொன்று இணைவது ஒற்றுமை
ஒன்றினுள் ஒன்று பொன்றுவது ஒருமை
இணைந்தும் தனித்தும் இயங்குவது ஒற்றுமை
அணைந்தபின் ஒன்றாய் அமைவது ஒருமை
அடுக்குத்தொடர் போல் அமைவது ஒற்றுமை
இரட்டைக் கிளவியென் றிருத்தல் ஒருமை”

வீறுகவி முடியரசனாரின் இந்தப்பாடல் எம் வினாவிற்கான விடையாகவே உள்ளது என்பது தெளிவு.

அவர் கருத்தின் சான்றுப்படி கூறினால் ஒருமை என்பது ‘இரட்டைக் கிளவி’ போன்றது. நீர் சலசல என ஓடுகிறது என்னும் தொடரில் சலசல என்பது இரட்டைக் கிளவி. ‘சலசல’ எனச் சேர்ந்திருக்கும் பொழுது அது ஒலிக்குறிப்புப் பொருளை உணர்த்தும். `சல’ எனப் பிரித்தால் தனக்குரிய பொருள் தாராது. தனித்து நின்று பொருள் தாராது ஒரு சொற்போலச் சேர்ந்து நின்றால் மட்டுமே பொருள் தருவது ‘இரட்டைக் கிளவி’ஆகும். இதுபோன்றதுதான் ஒருமைப்பாடும். அதாவது தனித்து நில்லாது, தனக்குரிய தன்மை யிழந்து மற்றொன்றுடன் இரண்டறக் கலந்து ஒன்று போல நின்று செயற்படுவது ஒருமை.

அடுக்குத் தொடர் என்பது இரட்டைக் கிளவி போலவே இரு சொற்கள் கூடி நிற்கும். ஆனால், பிரிந்து நிற்பினும் தனக்குரிய பொருளைத் தரும். பலபல ஊரார் பாராட்டினர் என்ற தொடரில் ‘பலபல’ என்பது அடுக்குத்தொடர். இது ‘பல’ எனப் பிரித்து நிற்பினும் தனக்குரிய பொருளைத் தரும். இவ்வாறு ஒன்றுடன் ஒன்று கூடி நின்றும் தனித்து நின்றும் தனக்குரிய தன்மையுடன் இயங்குவது ஒற்றுமையாகும் என்பது கவிஞரின் கருத்தாகும்.

உதாரணமாக சொல்லப்போனால்
பாலுடன் சர்க்கரை கலக்கப்படுகிறது. சர்க்கரை கரைந்து விடுகிறது. தன் உருவத்தையும் இழந்துவிடுகிறது; பால் மட்டும் கண்ணுக்குப் புலனாகிறது; அதற்குச் சுவையும் கூடுகிறது. இவ்வாறு ஒன்று மற்றொன்றுடன் கலந்து, தன் தனித்தன்மையை இழந்து அந்த மற்றொன்றுக்கு வலிமை கூட்டுவது ஒருமை.

பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு ஒரு மாலை தொடுக்கிறோம். பல்வேறு நிறமும் பல்வேறு மணமும் கொண்ட மலர்கள் அனைத்தும் ஒன்றுகூடி மாலையாகி அழகு தருகிறது. ஆயினும், ஒவ்வொரு வகை மலரும் அதனுடன் நிறத்துடனும் மணத்துடனும் பொலிந்து நிற்கும். தனித்தன்மையை இழந்து விடுவதும் இல்லை. மாலையிலிருந்து பிரிக்கப்படினும் அவ்வம் மலர்கள் தத்தமக்குரிய நிறத்துடனும் மணத்துடனும் மிளிரும். இவ்வாறு பல பொருள்கள் தத்தம் தனித்தன்மையை இழந்து விடாது, கூடி நின்று, பின்னர்ப் பிரியினும் பண்டைய நிலையில் இருப்பது ஒற்றுமை எனப்படும். சுருங்கக் கூறின் ஒன்றுக்குள் ஒன்று கலந்து மறைவது ஒருமை. ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாழ்வது ஒற்றுமை.

இந்த ஒற்றுமையின் ஓர் உண்மைச்சாட்சியே அட்டைப்படம். மேதின சிறப்புக்காட்சியாய் பதிக்கப்பட்ட படத்தில் உழைப்பின் ஒற்றுமைக்கான சாட்சியையும் நீங்கள் காணலாம். வெவ்வேறு மனிதர்கள். வெவ்வேறு அனுபவங்கள். வெவ்வேறு வேகங்கள். வெவ்வேறு பலங்கள். வெவ்வேறு பலவீனங்கள். வெவ்வேறு கனவுகள். வெவ்வேறு ஆசைகள். வெவ்வேறு குடும்பங்கள். வெவ்வேறு தேவைகள். எல்லாமே வெவ்வேறானவை. தனித்துவமானவை. ஆனால் தனி மனிதனாய் நின்றால் படகு நகராது. அவர்கள் உழைப்பு இணைகையில் அவர்கள் பணி என்பது ஒற்றுமையில் இலகுவாகிறது. நோக்கமும் பாதையும் ஒன்றாகி சேர்கையில் அவர்கள் பயணம் வெற்றிபெறுகிறது. காரியம் கைகூடுகிறது. இதே ஒற்றுமை நாட்டுக்குள்ளும் முளைத்தால் நடவாத காரியங்களும் கைகூடுமல்லவா?

இந்தக் காரியக்காரர்கள்
காட்டும் நெறியில் கருத்தைச் செலுத்தினால் செப்புமொழி இரண்டாகவும் சிந்தனை ஒன்றாகவும் இருப்பதுதான் நம் நாட்டில் ஒற்றுமை என்பது நன்கு புலனாகும். இவ்வாறின்றிச் செப்புமொழி ஒன்றாகவும் சிந்தனை பலவாகவும் இருப்பின் அது ஒருமை யாகும். இதனால் நாட்டுக்கு வலிமையோ, வளர்ச்சியோ, பொலிவோ, பெருமையோ ஏற்படும் என்பது ஐயப்பாட்டுக் குரியது.

ஆதலின், இவ்விரு சொற்களுக்கும் உள்ள வேறுபாட்டை நன்குணர்ந்து கொண்டு நம்நாடு வலிமையுள்ள நாடாக மாற ஒருமை வேண்டுமா? ஒற்றுமை வேண்டுமா? என்பதை அரசியல் சீர்வாய்ந்த நல்லோர் ஆய்தல் நன்று.

நாட்டின் நலங் கருதும் நல்லோர், உண்மையான நாட்டுப் பற்றுடையோர், உலக அரங்கில் நம்நாடு மீண்டும் உயர்ந்த புகழைப் பெறுதல் வேண்டும் என்று விளைவோர், ஒன்றுபட்டுக் கூடி வாழும் நல்லெண்ணங் கொண்டோர் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டிய சொல் ஒருமையா? ஒற்றுமையா? நீங்களே சொல்லுங்கள்.

விழிப்பதற்கு வழிகள் இருந்த காலத்தில் விழிக்கச் சொல்லி கேட்டோம்.
இப்போது விழிப்பதற்கு விழியே இல்லாத காலத்தில் வழியை மறித்து நிற்க எம்மை துணைக்குஅழைத்தால் எம்மால் என்ன பதில் சொல்லமுடியும்.?

எம் தனித்தன்மை இழக்காத ஒற்றுமையாலே நம் நாட்டை மீட்டெடுக்க எம்மாம் இணைய முடியும். எம் தனித்தன்மை என்பது எம் வரலாறு, எம் அடையாளம், எம் அனுபவம் எல்லாவற்றையும் பாற்பட்டு நிற்கிறது. எல்லாவற்றையும் இழந்து ஒருமையோடு போராட எம்மால் முடியாது. ஒற்றுமையோடு போராட மட்டுமே எம்மால் இயலும்.

Related posts

மெகா ஸ்டார் மெக் லேனிங் – 02

Thumi202121

வினோத உலகம் – 12

Thumi202121

விண்ணதிர் பரணி

Thumi202121

Leave a Comment