‘ஐயா..”
‘அம்மா.. வீட்டில யாராவது இருக்கிங்களா..?”
‘அம்மா..”
வாசலில் யாரோ அழைப்பது கேட்டு சமயலறையில் இருந்து ஊர்மிளா விரைந்து வெளியே வந்தாள். வாசலில் தபால்காரர் ஒருவர் நின்றிருந்தார், அவர் கொண்டு வந்திருந்த புத்தகமொன்றில் கையொப்பமிட்டுவிட்டு அவருடைய கையில் இருந்த கடிதத்தை வாங்கிக் கொண்டாள். அந்த கடிதத்தில்,
‘மிஸ்டர். லக்ஷ்மன் ராமச்சந்திரன்” என்று பெயர் போடப்பட்டிருந்தது.
தபால்காரர் போய்விட்ட பின்பு கதவையும் சாத்திவிட்டு உள்ளே வந்த ஊர்மிளாவுக்கு ஒரே யோசனையாக இருந்தது என்ன கடிதமாக இருக்கும் பிரித்துப்பார்த்துவிடுவோமா என்று. ஒருவாறு யோசித்து யோசித்து கடிதத்தை பிரித்தே விட்டாள். அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது இது லக்ஷ்மன் அவனுடைய வேலைத்தளத்தில் விரும்பி கேட்டு வாங்கிய பணி இடமாற்றம் என்று.
ரகுராமனுடைய இறுதிச்சடங்குகள் அனைத்துமே முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டிருந்த நிலையில் தான் இப்படியொரு கடிதம் வந்திருந்தது. ஊர்மிளாவின் மனத்தில் பல எண்ணங்கள் திசையெல்லாம் ஓடின. தன்னுடன் ஒன்றாக சேர்ந்து ஓராண்டு இருந்திருந்தாலும் லக்ஷ்மன் அவளுடைய முகத்தை பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை. அவளாக எதுவும் பேச வந்தால், அறையை விட்டு வெளியேறிவிடுவான். மாமாவும் அத்தையும் சொல்லி சொல்லிதான் கடந்த சில மாதங்களாக தன் கையால் சமைத்த உணவையே சாப்பிட தொடங்கினான். இல்லையென்றால், ஊர்மிளாவின் கையினால் ஒரு சொட்டு தண்ணீர் வாங்கிக் குடிக்கவும் அத்தனை யோசிப்பான்.
என்ன இருந்தாலும் இத்தனை மாதங்கள் தன்னை இகழ்ந்தோ அல்லது திட்டியோ எதுவுமே அவன் பேசவில்லையென்று அவளாக அவளுடைய மனதை தேற்றிக்கொள்வாள். இப்படியே நாள் கணக்கு வாரக்கணக்காகி, வாரக்கணக்கு மாசக்கணக்காகி, மாதங்கள் சில கடந்துபோகையில் ஊர்மிளாவுக்கு இந்த வாழ்க்கை சந்தோஷம் என்று இல்லாவிட்டாலும் கவலையில்லாமல் இனிமையாக இருந்தது. ஏனென்றால், என்னதான் லக்ஷ்மன் விழித்திருக்கின்ற நேரத்தில் இவளை கண்டுகொள்ளவில்லை என்றாலும், அவன் தூங்குகின்ற அழகை ரசிக்க இவள் தவறியதே இல்லை. வீட்டுவேலைகளை நேரத்தோடு முடித்துவிட்டாலும் கூட, அறைக்கு தாமதாகவே வருவாள் லக்ஷ்மன் தூங்குகின்ற அழகை தூரத்தில் இருந்து ரசிப்பதற்காக. தூக்கத்தில் அவனுடைய வெண்முகத்தில் இருக்கின்ற அந்த அமைதியை பார்ப்பதற்கு அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவனுடைய நெற்றியில் பரவியிருக்கின்ற அந்த கருமுடிகளும்தான், அப்படியே அவனுடைய குறுந்தாடியும். அவனுடைய ஸ்பரிசம் எப்படி யிருக்கும் என அறியாமல் தினம் தினம் அதை எண்ணி எண்ணி அவனை ரசித்து பார்த்துக்கொண்டே அவளையறியாமல் தூங்கிவிடுவாள். ஊர்மிளா கவலையில்லாமல் இருப்ப தற்கு காரணங்களே இவைகள்தான்.
ஒரு மனிதன் ஒரு நாள் பேசாமல் இருக்கலாம், ஒரு வாரம் கூட சரி என்றாலும், ஒரு மாதம் அதுவும் பன்னிரண்டு மாதங்கள் என்பது எவ்வளவு கடினம். உண்மையிலேயே லக்ஷ்மன் தன்னை வாழ்நாளெல்லாம் வெறுத்து ஒதுக்கி விடுவானோ என்ற பயம் ஊர்மிளாவுக்கு அவ்வப்போது வந்துபோகும். இருந்தாலும் லக்ஷ்மன் இவளை திட்டாமல் இத்தனை மாதங்கள் கூடச்சேர்ந்து வாழ்ந்தது அவளுக்கு ஆறுதலை தந்தது. ஆனால் திடீரென இன்று வந்த அந்த பணி இடமாற்றக்கடிதம் தான் அவளை சற்று உலுக்கியது எனலாம். தன்னுடன் கூட இருக்க பிடிக்காமல் தன்னை இங்கேயே விட்டுவிட்டு வேறிடத்திற்கு செல்ல முடிவெடுத்து விட்டிருப்பானோ என்று பாவை உள்ளம் பதறிக்கொண்டிருந்தது.
‘என்னம்மா அது என்ன கையில..?”
‘மாமா.. அதுவந்து..”
‘என்னம்மா.. தா பாப்பம்..
என்ன அது?..”
‘அது அவருக்கு வந்த லெட்டரு மாமா..”
‘லக்ஷ்மனுக்கா..?
என்ன போட்டிருக்கு..?”
‘அவரு வேற ஒரு இடத்துக்கு ட்ரான்ஸ்வருக்கு எழுதிப்போட்டிருக்காரு..”
‘என்னம்மா சொல்ற? உண்மையாவா? நான் நெனக்கிறன் போன வருஷம் நடக்கக்கூடாத விஷயங்கள் எல்லாமே உங்க ரெண்டு பேரோட கல்யாணத்துல நடந்து இப்பதான் அவன் கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் மறந்து வந்திட்டு இருக்கான்.. அதனால ஒரு சேன்ஜ் வேணும்னு இப்படி வேற இடத்துக்கு போக நெனக்கிறான் போல..”
‘…”
‘நீ ஒண்ணும் கவலப்படாத.. உன்கூட அவன் சிரிச்சி பேசிக்கலனாலும் அவனுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.. உன்னயும் சேத்து கூட்டிட்டுத்தான் போவான் நீ வேணா பாரும்மா..”
மாமா கூறிய வார்த்தைகள் யாவும் மனதிற்கு ஆறுதலை கொடுக்க ஊர்மிளாவும் அதுவே உண்மையாகி விடக்கூடாதா என்று ஏங்கினாள்.
அத்தைக்கு உடம்பு சரியில்லை என்பதால் அத்தையை பார்த்துக் கொள்வதற்கு அவருடைய தங்கைகள் இங்கே வீட்டிற்கே வந்து தங்கிவிட்டார்கள். அவர்களே மூன்று வேளையும் சமைத்து விடுவார்கள். மாமாவிற்கும் மனதிலிருந்த பாரமே குறைந்தது போல் ஆகிவிட்டது. இதனால் ஊர்மிளா தன் கணவனுக்கு செய்கின்ற பணிவிடைகள் தவிர நேரம் கிடைத்தால் மட்டும் ஏதாவது சமைத்து வைப்பாள், இனிப்புப்பண்டங்கள் ஏதாகிலும் செய்வாள், இல்லையென்றால் வீட்டுத் தோட்டத்திற்கு சென்று மரங்கள் நட்டு நீர் ஊற்றுவாள், இல்லையா புத்தகங்கள் படிப்பாள், அப்படியும் இல்லையென்றால் மாமாவுடன் சேர்ந்து அரட்டையடித்துக்கொண்டிருப்பாள். இந்த ஒரு வருடமாக இதுதான் ஊர்மிளாவின் வாழ்க்கை யென்றாகிவிட்டது. தான் எதிர்பார்த்த காதல் கிடைக்காவிட்டாலும் கவலைப் படாமல் தன் எதிர்ப்பார்ப்புக்களுடன் சேர்ந்து வாழப்பழகியிருந்தாள்.
மாலை ஐந்தரை மணி இருக்கும். லக்ஷ்மனின் கார் கேட்டை நெருங்கி ஹோன் எழுப்புகிற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவன் உள்ளே வந்துவிட,
‘லக்ஷ்மனா, உனக்கு ஒரு லெட்டர் வந்துச்சிய்யா..”
என்று மாமா அவனிடம் கொடுக்க, அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன் திடீரென்று புன்னகைத்தான்.
‘அப்பா.. நான் உங்களுக்கு சொல்லலனு கோவிச்சுக்காதிங்க.. எனக்கு இப்ப வேல செய்ற ஒபிஸ்ல வேல செய்ய பிடிக்கல.. அதா…ன்..”
‘எனக்கு புரியிதுப்பா.. உன் அம்மாவோட நிலைமையையும் உன்னால பாக்க முடியில.. உன் மனசு கிடந்து தவிக்கிறது எனக்கு புரியிதுப்பா.. நீ என்ன முடிவு எடுத்தாலும் நல்ல முடிவாதான் இருக்கும்..”
‘தாங்ஸ்ப்பா..”
‘எப்ப கௌம்புற..?”
‘அது வந்து நாளைக்கே கௌம்புறன்பா..”
‘நானும் நாளைக்குனுதான் என் மருமகள்ட்ட சொன்னன்.. அவளும் இந்நேரத்துக்கு பெட்டி ஜாமானெல்லாம் அடுக்கி வச்சிருப்பாள்.. நீயும் கைகால் கழுவி சாப்பிடுட்டு, உன் பொருட்கள அடுக்கி வச்சிடுப்பா..”
ஊர்மிளாவும் தன்னுடன் வருகிறாள் என்று தன் தந்தை சொல்லக் கேட்டதும் லக்ஷ்மனுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவளிடமிருந்து எப்படியாவது தப்பித்து ஓடிவிட வேண்டுமென்றுதான் அவன் தன் சொந்த ஊரை விட்டுவிட்டு வேறு ஒரு ஊருக்கு செல்கிறான். அதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை என்று தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டு,
‘சரிப்பா..” என்று அமைதியாக கூறிவிட்டு மாடிப்படியேறி தன் அறைக்கு சென்றான். அங்கு ஊர்மிளா தலைக்கு குளித்துவிட்டு தன்னுடைய நீள்கூந்தலில் இருந்து நீர் சொட்ட சொட்ட கண்ணாடிக்கு முன் நின்று அவளுடைய தலையை துவட்டிக் கொண்டிருந்தாள். அதனாலோ என்னமோ அவன் வந்ததை அவள் கவனிக்கவே இல்லை.
‘நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்..”
லக்ஷ்மன் இப்படி கூறியதுதான் தாமதம், ஆமை ஓட்டிக்குள்ளிருந்து எட்டிப்பார்ப்பது போல துவாயிற்குள் இருந்த தன்னுடைய தலையை வெளியே எடுத்துப் பார்த்தாள். ஈரமாக இருந்த கூந்தல் முடிகள் அவளுடைய முகத்தில் ஆங்காங்கே ஒட்டிப்போய் பரவியிருந்தன. இரண்டு பக்கமும் ஒருவிதமான தயக்கமும் அமைதியும் நிலவியது. ஊர்மிளாவுடைய பக்கம் நிச்சயமாக மகிழ்ச்சி கலந்த ஒரு அமைதிதான். ஆனால் லக்ஷ்மனுடைய பக்கம் கோபம் கலந்த தயக்கம் இருந்தது எனலாம். அவளுடைய முகத்தை பார்க்க முடியாமல் நிலத்தை பார்த்தபடி தயக்கமும், கூடவே கடவுள் ஆபத்தை ஏன் அழகாக படைத்துவிடுகிறான் என்கிற கோபமும் இருந்தது அவனுக்கு.
‘என்னங்க..? என்ன சொன்னிங்க?..”
‘எனக்கு நீ நாளைக்கு என் கூட வாறது இஷ்டம் இல்ல. புரிஞ்சி நடந்துப்பனு நெனைக்கிறன்..”
‘நீங்க என்கூட பேசிட்டிங்க.. அதுவும் ஒரு வருஷத்துக்கு அப்புறம்..”
‘நான் என்ன சொல்றன்! நீ என்ன சொல்ற..!”
‘இல்லங்க.. நீங்க..??”
‘போதும்.. ஸ்டொப் தீஸ் நோன்சென்ஸ்.. இதே போல ஒரு இரவுதான் நான் உங்கிட்ட சொன்னன் என்ன கல்யாணம் பண்ணிக்காத, என் தம்பி ரகுராம கட்டிக்கனு.. ஆனா நீ அத கேக்காம என்னயே கல்யாணம் பண்ணி என் தம்பிய கொண்ணுட்ட.. இப்ப நான் ரெண்டாவது தடவையா இண்டைக்கு இரவு இன்னொரு விஷயத்தை உன்கிட்ட கேக்குறன் நாளைக்கு என் கூட புறப்பட்டு வராதனு.. இதயாச்சும் ப்ளீஸ் கேளு.. இதயும் கேக்காம என் தம்பிய கொண்ண போல என்னயும் கொண்ணுடாத..”
என்று கோபமாக பேசிவிட்டு லக்ஷ்மன் குளியலறைக்குள் சென்றுவிட்டான்.
ஊர்மிளா இந்த சுடுசொற்களை சற்றும் எதிர்பார்க்கவில்லை. மனதளவில் புண்பட்டுப்போனாள். காதல் காயம் தரும் என்பார்களே, ஓராண்டு தாமதித்திருந்தாலும் அதை தனக்கும் தந்துவிட்டது என எண்ணிக்கொண்டாள். அந்த இரவு மட்டும் ஏன் அத்தனை நீளமானதாக இருந்தது என இரவு முழுவதும் விழித்திருந்த ஊர்மிளாவுக்கு விடியும் வரை புரியவே இல்லை.
அழகான ஒரு காலை புலர்ந்து எட்டு மணி நேரங்கள் ஆகியிருந்தன. அறையில் இருந்த அம்மாவிடமும், சித்திமார்களிடமும் விடைபெற்றுவிட்டு மாடிப்படியிறங்கி தன் தந்தையிடம் விடை பெறுவதற்காக வந்தான் லக்ஷ்மன். அங்குதான் அவனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவன் எழுவதற்கு முன்னமே எழுந்து, ஆயத்தமாகி, அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, காருக்கு அருகில் காத்திருந்தாள் ஊர்மிளா. தன் தந்தையிடம் விடைபெற்றுக் கொண்டு அமைதியாக வெளியே வந்தான் லக்ஷ்மன்.
‘எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. என்னால முடிஞ்ச வரைக்கும் நான் உங்க மனசுல இடம்பிடிக்க முயற்சி பண்ணிவன்.. இல்லனா செத்துபோயிடுவன்.. ஆனா பின்வாங்க மட்டும் மாட்டன்..”
ஊர்மிளா இப்படி பேசியதை எதிர்பாராத லக்ஷ்மனுக்கு திருமணத்திற்கு முன்னிரவில் இவள் கோபமாக பேசியது நினைவுக்கு வந்தது. திருமணத்தையே நடத்திக் காட்டி விட்டேன், உன்னுடைய மனத்தில் இடம்பிடிப்பது ஒன்றும் கடினமல்ல என்று சவால் விடுகிறாளோ என்று எண்ணிக்கொண்டே, மௌனமாய் ஊர்மிளாவிற்காக கார் கதவை திறந்துவிட்டான். சேலைத் தலையை எடுத்து, தோளில் போர்த்துக்கொண்டே பவ்வியமாக காரிற்குள் ஏறி அமர்ந்தாள் ஊர்மிளா.
உண்மையிலேயே லக்ஷ்மன் நினைத்ததைதான் அவளும் நினைத்திருக்க வேண்டும். இது சவாலே தான். இந்த சவாலில் தான் நிச்சயமாக ஜெயிப்பேன் என்று அவள் நம்புவதால் தான் அன்று திருமண நாளில் வந்த கண்ணீர்த்துளிகள் இன்று வரவில்லை. லக்ஷ்மன் வீட்டு கேட்டை திறக்கச் செல்கின்ற பொழுது, அவனுக்கு கேட்காத வண்ணம் ஒன்று மட்டும் சொல்லிக்கொண்டாள்.
“என்னவன் அவன்..”
***