பொருளாதாரச் சுமையை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் வீதிகளுக்கு இறங்கி வந்து போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்களோடு படித்தவர்களும், பணபலம் படைத்தவர்களும் கூட கைகோர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏனென்றால் நிலைமை கைமீறிப் போய்விட்டதை அனைவருமே உணரத்தொடங்கி விட்டார்கள்.
மிக முக்கியமாக தெய்வமாக போற்றப்படும் வைத்தியர்கள் தம் இயலாமையை பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவப் பொருட்கள் வற்றி விட்ட தேசத்தில் தாங்கள் எதை வைத்து மருத்துவம் பார்ப்பது என்கிறார்கள்? உயிர் காக்கும் அதி அவசியமான சிகிச்சைகள் தவிர்ந்த மற்றையை சிகிச்சைகளை தள்ளிப் போடுகிறார்கள். அவலத்தின் உச்சமாக ஒற்றைப் பாவனைப் பொருட்களை எல்லாம் கழுவிக் கழுவி மறுபாவனை செய்யும் கட்டத்துக்கு மருத்துவப் பணியாளர்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள். குருதிக் கொடையாளர்கள் இருந்தாலும் அவர்கள் வழங்கும் குருதியை சேகரிக்கும் பைகள் இல்லாமல் இரத்தவங்கிகளும் வங்குரோத்து நிலைக்குச் சென்றுகொண்டுள்ளன.
வழமையாகவே விபத்துக்களால் தினசரி உயிரிழப்புகள் சகஜமாகி விட்ட எமது நாட்டில், வைத்தியசாலைக்கு சென்றால் சிகிச்சையும் இல்லை என்கிற அவலத்தால் இறப்புக்கள் பலமடங்காகப் போகிறது. உணவை விட உணவுக்கு பின்னரான மருந்து மாத்திரைகள்தான் இப்போது பலருக்கு சுவாசம் தந்து கொண்டிருக்கிறது. மருந்துகள் இல்லை என்றால் அவர்களும் இல்லை.
மருந்துகள் இருக்கிறதென்ற தைரியத்தில் நோய்களையும், சிகிச்சைகள் இருக்கின்றதென்ற தைரியத்தில் விபத்துக்களையும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டோம். ஆனால் இனி அப்படியில்லை. நோய்கள் வருவதைக்குறைக்க எம்முடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாறு இயற்கையில் கிடைக்கும் உணவுகளை உண்ணத்தொடங்க வேண்டும். அவை மலிவாகவும் இருக்கும். அதேபோல் விபத்துகள் ஏற்படாதவாறு அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். சுருங்க சொல்வதென்றால் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கு கொஞ்சக்காலமாவது சென்று வருவதுதான் சிறந்த வழி.
காலம் பதில்கள் பலவற்றை விரைவாகத்தந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுவும் கடந்து போகுமென எண்ணி, தத்தமது சுய பாதுகாப்பையும் சுய பொருளாதாரத்தையும் இயன்றவரை காப்பதோடு, இல்லாதவருக்கு இயன்றவரை உதவிகள் செய்வதுமே தனிமனிதனாக செய்யத்தக்க முதற்பணிகளாகும்.
1 comment