பூப்பந்தாட்ட உலக கூட்டமைப்பினால் (BWF – Badminton World Federation) நடாத்தப்படுகிற உலக ஆடவர் அணி சாம்பியன்ஷிப்ஸ், சர்வதேச பூப்பந்தாட்ட கூட்டமைப்பின் (இப்போது பூப்பந்தாட்ட உலக கூட்டமைப்பு) நிறுவுனர் மற்றும் தலைவர் சேர் ஜார்ஜ் தோமஸ் இனை கௌரவிக்கும் வகையில் தோமஸ் கப் என அழைக்கப்படுகிறது. 1939 இல் இதற்கான முன்னெடுப்புக்கள் தோமஸினால் மேற்கொள்ளப்பட்டாலும், 1949 இல் தான் முதலாவது தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
முதலாவது சாம்பியன்ஷிப்ஸ் தொடரில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் இருந்து ஒரு அணி வீதம் மூன்று அணிகள் பங்கெடுத்தன; மலேசிய அணி முதலாவது மகுடம் சூடிக்கொண்டது. 1952 இல் நான்கு அணிகள் பங்கெடுத்த தொடரில் மீண்டும் மலேசிய அணி மகுடம் வென்றது.
ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒரு முறை நடாத்தப்பட்டு வந்த இத்தொடர், 1984 முதல் இருவருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது; அத்துடன் எட்டு அணிகளும் பங்குபற்றின. 2004 ம் ஆண்டில் 12 அணிகளாக உயர்த்தப்பட்ட அணிகளின் எண்ணிக்கை, 2014 ம் ஆண்டு முதல் 16 அணிகள் ஆனது. முதல் மூன்று சாம்பியன்ஷிப்ஸ்களை மலேசிய அணி வென்று இருந்தாலும் அதன்பின் வெறுமனே இரு தடவைகளே வென்றிருந்தது. இதுவரை நடைபெற்ற 32 தொடர்களில் இந்தோனேசிய அணி 14 தடவைகளும் சீன அணி 10 தடவைகளும் வென்று முன்னிலை வகிக்கின்றனர். முறையே 2014, 2016, மற்றும் 2022 இல் வென்ற ஜப்பான், டென்மார்க் மற்றும் இந்திய அணிகள், சாம்பியன்ஷிப்ஸ் வென்ற மற்றைய அணிகளாக உள்ளன.
நோக் அவுட் (Knock Out) முறையில் நடைபெறும் இந்த தொடரில் ஆரம்பம் முதல், அணிகளுக்கு இடையேயான வெற்றி என்பது ஐந்து ஒற்றையர் மற்றும் நான்கு இரட்டையர் என ஒன்பது ஆட்டங்களில் அதிகம் வெற்றி பெறும் அணி வெற்றியாளராக கணிக்கப்பட்ட நிலையில் பங்குபெறும் அணிகள் அதிகரித்தால் 1984 ம் ஆண்டு முதல் மூன்று ஒற்றையர் மற்றும் இரு இரட்டையர் கொண்ட ஐந்து ஆட்டங்களில் அதிகம் வெல்லும் அணி வெற்றியாளரானது.
1950 இல் பேட்டி உபெர் (Betty Uber) இனால் முன்மொழியப்பட்ட உலக மகளிர் அணி சாம்பியன்ஷிப்ஸ், 1956/57 முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 29 தொடர்களில் 15 தடவை சாம்பியன்ஸ் ஆனா சீன அணி முன்னிலை வகிக்கிறது.
இதனை முன்மொழிந்த உபேர் பெயரில் உபேர் கப் (Uber Cup) என அழைக்கப்படுகிறது.
2022 ம் ஆண்டுக்கான தோமஸ் கப், கடந்த மாதம் எட்டாம் திகதி முதல் பதினைந்தாம் திகதி வரை இடம்பெற்றது. பதினைந்தாம் திகதி நடந்த இதன் இறுதி ஆட்டத்தில் இந்திய மற்றும் இந்தோனேசிய அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் இரு ஒற்றையர் மற்றும் ஒரு இரட்டையர் ஆட்டங்களை வென்று 3-0 என முன்னிலை வகித்த இந்திய அணி முதல் முறையாக தோமஸ் கப் வென்றது. 73 வருடங்களில் 13 முறை தகுதி பெற்ற இந்தியா ஒருமுறை கூட இறுதிக்கு முன்னேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2022 ம் ஆண்டுக்கான உபேர் கப் இனை, இறுதி ஆட்டத்தில் சீன அணியை வெற்றி பெற்ற ஜப்பான் அணி ஐந்தாவது தடவையாக வென்றுள்ளது.