இதழ் 48

சித்திராங்கதா – 46

பாலகனை கொன்ற பாதகன்

அஸ்வதமங்கலம் வன்னி மாளிகையை வந்தடைந்தது.

“வரவேண்டும் ஆடலரசி சித்திராங்கதா தேவி… வரவேண்டும்.. கலையரசி கால்பதிக்க இந்த வன்னி மண் முக்காலத்தில் வரம் பெற்றிருக்க வேண்டும்’ என்று கூறி வன்னியத்தேவன் சித்திராங்கதாவை வரவேற்றான்.

உடன் வந்த வருணகுலத்தான் அமைதியாகவே அருகில் நின்று கொண்டிருந்தான். தன்னைக் காட்டிலும் சித்திராங்கதாவின் வருகையே தனக்கு முக்கியமானது என்பது போல் பாசாங்கு செய்யும் வன்னியத்தேவனின் நாடகத்தை அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

‘தஞ்சை தளபதியையும் இந்த வன்னி மாளிகைக்கு வரவேற்பதில் நான் ஆனந்தம் கொள்கிறேன். தம் வரவு நிச்சயமானது என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இருக்கவில்லை…’ என்றான் வன்னியத்தேவன்.

‘வணங்குகிறேன் வன்னியத்தேவரே… நான் வருவேன் என்பதில் தங்களிற்கு ஐயம் எவ்வாறு இருக்கும்! தேவி சித்திராங்கதாவை தனியே தங்களை நம்பி இங்கே அனுப்பி வைப்பதில் தான் எனக்கு ஐயம் இருந்தது. மங்கையரை தூதனுப்பி அழைத்து கவர்ந்து செல்லும் வீரபுருசர்கள் இங்கு நிறைய இருக்கின்றனரே. அதனால்த்தான் தேவியோடு நானும் வரவேண்டியதாயிற்று’ என்றான் வருணகுலத்தான்.

‘இது என்ன கூற்று தளபதி? மங்கைகளை கவர்ந்து செல்லும் கோழைகள் இங்கிருப்பதாய் தங்களிற்கு யாரோ தவறாய் கற்பித்திருக்கிறார்கள்’.

‘கற்றுக் கொண்டதல்ல வன்னியத்தேவரே, கண்டு கொண்டது. ஏன் ? தங்கள் தோழர் மிக்கபிள்ளை ஆராச்சி நிகழ்த்திய அன்றைய வீரச்செயலை தாங்கள் மறந்துவிட்டீர்களா என்ன?’

‘ஓகோ… அதனால்த்தான் அங்ஙனம் கூறினீர்களோ?‘ என்று கூறி கோரமாகச் சிரித்தான் வன்னியத்தேவன்.
‘அந்த சம்பவத்திற்கு காரணங்கள் ஏராளம் இருக்கலாம் தளபதி. உண்மை என்னவென்பதை மிக்கபிள்ளை மட்டுமே அறிவான். அந்த இரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அதற்கு முதலில் மிக்கபிள்ளை சிறையிலிருந்து விடுதலை ஆக வேண்டுமே’ என்று சலித்துக் கொண்டான் வன்னியத்தேவன்.

‘அது இருக்கட்டும் தளபதியாரே, தங்களை இப்படி மாளிகை வாயிலில் நிறுத்தி உரையாடுவதற்காகவா அழைப்பு விடுத்தேன்.
உள்ளே வாருங்கள் தளபதியாரே… வாருங்கள்….’
என்று கூறி வன்னி மாளிகையின் உள்ளே இருவரையும் அழைத்துச் சென்றான் வன்னியத்தேவன்.

வருணகுலத்தானை விலகாத வண்ணம் சித்திராங்கதா மாளிகை நோக்கி நடந்தாள். ஒரு வேளை தான் தன்னந்தனியாக வந்திருந்தால் இந்த மாளிகைக்குள் நுழைவதற்குள் தன் உள்ளத்து அச்சம் எங்ஙனம் பிரளயமாகி நின்றிருக்கும் என நினைத்துப்பார்த்துக் கொண்டாள். ஆனால் இப்போது வருணகுலத்தான் உடன் இருப்பதால் தன் துணிவையும் தங்கள் இருவரிற்கும் நடைபெறும் ராஜவரவேற்பையும் எண்ணி அவள் உள்ளம் நனைந்து கொண்டிருந்தாள்.

மாளிகையின் விருந்தினர் கூடம் ஒன்றிற்கு வந்தடைந்த சித்திராங்கதாவும் வருணகுலத்தானும் அந்த விருந்தினர் கூடத்தில் ஏற்கனவே சிலர் இவர்கள் வரவிற்காய் காத்திருப்பதை கண்டு கொண்டனர். முன்பின் தெரியாத அந்த மக்கள் கூட்டத்திடையே தனக்கு நன்கு பரீட்சயமான ஒரு முகம் இருப்பதை வருணகுலத்தான்இலகுவாக இனங்கண்டு கொண்டான். வணங்கியபடி நின்ற உக்கிரசேனனை பார்த்து ஓர் கேலிச்சிரிப்பொடு பதில் வணக்கம் கூறினான் வருணகுலத்தான். ‘எப்படி இருக்கின்றாய் என் இனிய வழிகாட்டியே’ என்று உக்கிரசேனன் தோள்களில் தட்டியபடியே கேட்டான்.

‘தங்கள் தயை கூர்ந்து விட்டுவைத்ததால் தைரியமாக திரிகிறேன் தளபதி’ என்றான் உக்கிரசேனன். அந்த பதில் கேட்ட வருணகுலத்தான் ஆரோகித்து சிரிக்க ஆரம்பித்தான்.

மேலும் அந்தக் கூட்டத்தில் சிலர் வெள்ளையர்களாக காணப்பட்டதையும் ஒரு கண் போக்கில் அவதானித்தபடியே வருணகுலத்தான் தனக்கென வைக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். சித்திராங்கதாவும் அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டாள்.

நேரே சென்று அந்த கூடத்தின் உயர்ந்த மேடையில் அமைக்கப்பட்டிருந்த ஆசனத்தில் வன்னியத்தேவன் அமர்ந்து கொண்டான். பார்வைக்கு அந்தக்காட்சி அத்தனை கம்பீரமாய் இருந்தது. ஒரு மகாராஜாவிற்கான பிரகாசம் வன்னியத்தேவன் முகத்தில் தெரிந்தது.

அடங்காப்பற்றின் பெரும்பாலான பகுதியை ஆள்கின்ற வன்னிமன்னனின் இந்த பிரகாசத்தையே பறங்கியர்கள் தம் சூழ்ச்சிகளால் தூண்டிவிடுகிறார்கள் என்பதை வருணகுலத்தான் புரிந்து கொண்டான். புகழ் வார்த்தைகளால் வன்னியத்தேவனின் நம்பிக்கையை பெருக்கி தமக்காக எதையும் செய்யத் துணியும் வீரனாய் பறங்கியர்கள் வன்னியத்தேவனை உருமாற்றியிருக்கிறார்கள் என்பது வன்னியத்தேவன் கம்பீரமாய் அந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும் விதமே வருணகுலத்தானிற்கு உணர்த்தியது.

‘யாரங்கே?.. ஆடலரசிக்கு சமர்ப்பணமாய் நாம் வழங்க இருக்கும் பரிசுகள் எங்கே? இப்போதே அவையில் நிகழ்வுகள் ஆரம்பிக்கட்டும்’ என்று வன்னியத்தேவன் இட்ட ஆணையைத் தொடர்ந்து சில சிறுமிகள், மங்கைகள் கூடத்தின் மத்தியில் வந்து நின்றனர். சித்திராங்கதாவையும் வருணகுலத்தானையும் வணங்கியபடி அவர்கள் நாட்டியம் ஆரம்பமானது.

தனக்கு கிடைக்கின்ற மரியாதைகளை எண்ணுகையில் சித்திராங்கதாவின் உள்ளம் பேரானந்தத்தில் மிதந்தது என்றே சொல்ல வேண்டும். நல்லூர்க் கோட்டையில் தன் அரங்கேற்றம் நிகழ்வதாய் அவள் உள்ளத்தில் தீட்டி வைத்திருந்த அந்த கற்பனை ஓவியங்கள் அவள் உள்ளத்தில் வந்து மறைந்தன. அதை எண்ணுகையில் கூடவே ராஜகுலத்தவர்கள் மீதான அவள் கோபமும் மேலெழுந்து மூண்டு கொண்டிருந்தது.

அந்த மங்கையரின் நாட்டியத்தை தொடர்ந்து சிவப்பு நிற மெல்லிய ஆடை அணிந்த சில போர்த்துக்கேய பெண்கள் கூடத்தில் வந்து ஆட ஆரம்பித்தனர். வேறுபட்ட நளினங்களும், வேறுபட்ட முகபாவங்களும் கொண்டு அவர்கள் ஆடிய ஆட்டத்தை சித்திராங்கதா வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு நிலையான இடம் என்றில்லாமல் அந்த கூடத்தின் எல்லா திசைகளிற்கும் நடனமாடிய படியே நகர்ந்து சென்றனர் அந்த வெள்ளை அழகிகள். கூடத்தில் இருந்த பறங்கியர்கள் சிலரின் அருகில் அவர்கள் வந்து தொடுவதும் உடன் ஆட அழைப்பதுமான அந்தக் காட்சிகள் அங்கிருந்த அனைவருக்குமே சிரிப்பை உண்டாக்கியது.

அந்த நாட்டிய நிகழ்வுகளை சித்திராங்கதா இரசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த வருணகுலத்தான் அந்நிகழ்வுகள் நிறைவடையும் வரை பொறுமை காத்தான். யாவும் நிறைவுற்ற பின் தன் மௌனம் கலைத்தான்.
‘வன்னியத்தேவரின் வரவேற்பு அற்புதமாகத்தான் இருக்கிறது. ஆனால் வரவழைத்த காரணத்தை தான் இன்னும் வன்னி வேந்தர் கூறவில்லை’ என்றான்.

‘கூறுகிறேன் தஞ்சை தளபதியாரே, அதற்குள் என்ன அவசரம்? … முதலில் விருந்துண்ணுங்கள். தங்களிற்காக சுவையான விருந்துகள் காத்திருக்கின்றன.’

தன் ஆசனத்தில் இருந்து திடுமென எழுந்த வருணகுலத்தான்
‘மன்னிக்க வேண்டும் வன்னியத்தேவரே, விருந்துண்டு மகிழ என்னிடம் அவகாசம் இல்லை. தாம் அழைத்த காரணத்தை தெரிவித்தால் நாம் விரைந்து புறப்பட ஏதுவாக இருக்கும். அப்படி தாங்கள் கூற தயங்கினால் நான் கூறுகிறேன்… தஞ்சையிலிருந்து வந்த நான் எக்காரணம் கொண்டும் எந்நேரத்திலும் தங்களுடன் கூட்டுச்சேர உடன்பட மாட்டேன். வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற ஆணை தாங்கி படை கொண்டு ஈழம் வந்தவன் நான். அக்காரியம் ஆற்றாமல் நான் மீண்டும் என் தாய்தேசம் திரும்ப மாட்டேன். என் மனதை மாற்ற முயற்சிப்பது தமக்கு வீணான நேரவிரயம் என்பதை இப்போதே கூறுகிறேன். இதற்கு மேலும் தாங்கள் என்னிடம் கூறுவதற்கு ஏதாவது இருக்கின்றதா வன்னியத்தேவரே..?’
என்று கம்பீரமான குரலில் அவையோர் அனைவர்க்கும் கேட்கும்படி சொன்னான்.

‘இத்தனை ஆணவமாக பேசுகிறானே இவன்’ என்று உள்ளத்தில் நினைத்துக் கொண்ட வன்னியத்தேவன் அங்கிருந்த வெள்ளையர்கள் ‘இனி என்ன செய்யப் போகிறாய்’ என்பது போல் தன்னையே உற்று நோக்கிக் கொண்டிருப்பதையும் அவதானித்தான்.

‘யாரங்கே… அரசவையில் யாவருக்குமான விருந்து ஆரம்பிக்கட்டும்’ என்று கட்டளையிட்டான். பின் வருணகுலத்தானை நோக்கி
‘தளபதியாரே, .. நான் தங்களிடம் தனியாக சில விடயங்கள் பேச விரும்புகிறேன்…’ என்று கூறி அருகிலிருந்த இன்னொரு மண்டபத்தை நோக்கிச் சென்றான். வருணகுலத்தானும் பொறுமை காத்து அந்த மண்டபத்தை நோக்கிச் சென்றான். சித்திராங்கதாவும் உடன் சென்றாள்.

அந்த மண்டபத்தில் காவலர்கள் யாவரும் விலகிச் சென்ற பின் மெதுவான குரலில் வன்னியத்தேவன் பேசத்தொடங்கினான்.

‘வருணகுலத்தாரே.. தயை கூர்ந்து தாங்கள் பொறுமை காத்தால் என் தரப்பு நியாயத்தை நான் எடுத்துரைக்கிறேன்’

‘மிகுந்த பொறுமையுடன் தான்
நான் இங்ஙனம் நிற்கின்றேன் வன்னியத்தேவரே, தங்களிடம் நியாயம் என்று என்ன இருக்கிறது? தமிழாண்ட இந்த வீர நிலத்தில் பிறந்து வெள்ளையனிற்கு துணைபோய் இறுதியில் எதை அடையப்போகிறீர்கள் தாங்கள்?’

‘வெள்ளையனிற்கு நான் துணை போகவில்லை தளபதியாரே, எனக்கு துணையாகத்தான் நான் வெள்ளையனை நாடுகிறேன். என்னைப் பொறுத்தவரை இச்சமயம் வெள்ளையனை எதிர்ப்பது என்பது தெற்கு தேசங்கள் போல் எம் முடியினது முழு வீழ்ச்சிக்கு சமமாகும். வெள்ளையனை எதிர்க்க போதுமான பலம் நாம் அடையும் வரை அவர்களுடன் நட்பு பாராட்டி நகர்வதே ராஜதந்திரமாகும். வீராதி வீரனாகிய தங்கள் வீரபராக்கிரமமும் வீணாகி விடக்கூடாது என்பதற்காகவே தங்கள் நட்பையும் வேண்டி நிற்கிறேன்’

‘என் வீரம் வீணாவதில் தங்களிற்கு என்ன கவலை வன்னியத்தேவரே? தங்கள் இந்த இராஜதுரோக போக்கிற்கு என் நட்பை ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? என் நட்பைக் கொண்டு அப்படியென்ன தேவையை தாங்கள் அடையப்போகிறீர்கள்? என்று வெளிப்படையாகக் கேட்டான் வருணகுலத்தான். இந்த கேள்விற்கான பதில் மூலம் வன்னியத்தேவனின் வக்கிரபுத்தியை சித்திராங்கதா உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வருணகுலத்தான் எதிர்பார்த்தான்.

சித்திராங்கதாவும் இந்த உரையாடலில் எதுவும் குறுக்கிடாமல் மௌனமாக கவனித்துக் கொண்டிருந்தாள்.

‘என் தேவை என்பது சங்கிலியனை சரிக்க வேண்டும் என்பதுதான்’ என்று விரிந்த புருவத்தோடு கூறினான் வன்னியத்தேவன்.

‘இப்படி எண்ணுவது தங்களிற்கு தவறென்று தோன்றவில்லையா வன்னியத்தேவரே? ஈழ சாம்ராச்சியத்தின் ஈடு இணையற்ற வீரமகாராஜா என்று அகிலம் புகழ ஆள்பவரை சரித்துவிடத் துடிக்கும் தங்கள் எண்ணம் கொடூரமாக தெரியவில்லையா? என் கருத்துப்படி இந்த நாட்டினை ஆள சங்கிலியமகாராஜாவை விட தகுதியானவர் வேறு யாரேனும் இருக்க சாத்தியமேயில்லை’.

‘தாம் படைதாங்கி வந்த தளபதி. நல்லையின் இராஜ விருந்தாளி. தாம் அப்படியே அறிந்திருப்பீர்கள். அப்படியே நம்புவீர்கள். ஆனால் உண்மை என்பது அதுவல்ல தளபதி. இராச்சியம் ஆள எவ்வகையிலும் தகுதியில்லாத ஒருவன் சங்கிலியன். பிறப்பின் அடிப்படையில் கூட அவன் தகுதியில்லாதவன். முன்னை ஆண்ட வேந்தர் எதிர்மன்ன சிங்க மகாராஜாவிற்குப் பின் ஆட்சியுரிமை கொண்டிருந்த மன்னரது மூன்றேவயதான பாலகனை அநியாயமான முறையில் கொன்று அதை எதிர்த்து நீதி கேட்டு வந்த மன்னரின் இளைய சகோதரர் அரசகேசரியையும் நேருக்கு நேராய் தன் வாளிற்கு இரையாக்கி ஆட்சிபீடத்தை பறித்தெடுத்துக் கொண்டவன் இச்சங்கிலியன். இவனா தலைசிறந்த வேந்தன ? இவனிற்கா தாங்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்கிறீர்கள்?’.

அதுவரை அமைதியாய் இருந்த சித்திராங்கதா ‘என்ன கூறுகிறீர்கள் வன்னியத்தேவரே? தாங்கள் கூறுவது மெய்யா? முன்னை வேந்தர் எதிர்மன்ன சிங்கர் மரணிக்க முன்னமே தனக்குப் பின் சங்கிலியனே அரசாள்வான் என்று கூறி உயிர் துறந்தார் என்றும் அதனால் தான் சங்கிலியர் மகாராஜா ஆனார் என்றுமல்லவா நல்லை மாந்தர் அன்று கூறினர்?’ என்று கேட்டாள்.

‘ஆம் தேவி…. அப்படியே உலகத்தோர் நம்பும்படி அறிவித்தனர் அன்று. ஆனால் உண்மை அதுவல்ல. தனக்குப் பின் தன் புத்திரனே முடிக்குரிய வேந்தன் என்றும் ஆனால் அவன் மூன்று வயது பலாகனாக இருந்தமையால் அதுவரை ஆட்சியலுவல்களை கவனிக்க தன் சகோதரன் அரசகேசரியையும் நியமித்தார் வேந்தர். பாவம் அச்சிறு பாலகனை கூட ஈவு இரக்கமில்லாமல் தன் பதவி ஆசைக்காக கொன்றான் சங்கிலியன். இப்போது நல்லவன் போல் வேடம் இட்டு வீரவேந்தன் தான் என்று பறைசாற்றி திரிகிறான்’

சித்திராங்கதாவின் முகம் ஆச்சரியத்தில் பேச்சின்றி கிடந்தது.

‘போதும் நிறுத்துங்கள் வன்னியத்தேவரே, ஒரு நாட்டின் வேந்தர் புகழொடு மிளிர்ந்தால் அதனை சாய்க்க ஆயிரம் கட்டுக்கதைகள் நாட்டில் உலாவருவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? இதற்கு மேல் இந்தப் பொய்க்கதைகளை நான் சகித்துக் கொள்ள மாட்டேன்’ என்றான் வருணகுலத்தான்.

‘என் கூற்றை தாங்கள் நம்ப வேண்டாம் தளபதி. நம்புவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவுமில்லை. தஞ்சை தளபதியாரே, தாங்கள் நம்பும்படியான தகுந்த சாட்சி என்னிடம் இருக்கிறது. வாருங்கள் உங்களை அழைத்துச் செல்கிறேன்’ என்று முன்னோக்கி நடந்தான் வன்னியத்தேவன்.

சிந்தனையில் நகர மறுத்து நின்ற வருணகுலத்தானை தன் கரங்களினால் பற்றிக்கொண்டு வன்னியத்தேவன் சென்ற திசையில் அழைத்துச் சென்றாள் சித்திராங்கதா.

அந்த வன்னி மாளிகையின் அழகின் உச்சம் என்று நினைக்கக்கூடிய அந்த மண்டபத்திற்கு வன்னியத்தேவன் அவர்களை அழைத்து வந்தான்.

சாட்சிகள் விரியும்….

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 44

Thumi202121

வினோத உலகம் – 13

Thumi202121

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது — 2022

Thumi202121

Leave a Comment