இதழ் 48

நானும் புதுசாசாசா இருந்தவன்தான்

அன்று சனிக்கிழமை.

நான் இந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து என்னை ஒரு தடவை கூட ஒழுங்காக ஏறெடுத்து பார்க்காத சீதா, ராதாவின் தந்தை அன்றைக்குத்தான் என்னை முதன்முதலாக பார்ப்பது போல பார்த்தார். என்னடா இது என்றிருந்தது எனக்கு.

‘சீதா, இது பழசாகிட்டு என? நாளக்கி குப்ப வண்டி வரும், அதுல தூக்கி போட்டுவிடுமா.”

‘சரிப்பா..”

அப்பொழுதுதான் எனக்கும் வயதாகி போய்விட்டது என்பதை உணர்ந்தேன். ஒரு மாதம் கூட இல்லையே, ஆசை ஆசையாய் என்னை அக்காவும் தங்கையும் வாங்கிக்கொண்டு வந்தார்களே! உறுதியான மரக்கைப்பிடியுடன் பளபளவென்று மின்னுகின்ற இரத்தச்சிவப்பு நிற தகட்டுத்துண்டொன்றை வளைத்து நெளித்து சில ஆணிகளை செருகி, இரண்டு கைகள் நிறைய ஈர்க்குகளை அள்ளியெடுத்து அவற்றை நெருக்கி அளவாகவும் அழகாகவும் செய்யப்பட்டிருந்தேன் நான்.

‘சுத்தம் சுகம் தரும்” என்பதுதான் எனது உயிர்மூச்சு. வீட்டைச்சுற்றி தினமும் சேருகின்ற குப்பை கூழங்களை பத்து எண்ணுவதற்குள் கூட்டிப்பெருக்கி தள்ளிவிடுவேன். இப்படித்தான் ஒருநாள், நான் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் கூட இல்லை, அக்காவும் தங்கையும் எனக்காக சண்டை போட்டுக்கொண்டார்கள்.

‘ராதா, நீ எனக்கு தங்கச்சி. நான்தான் வயசுல பெரியவ, உன் அக்கா, அதனால வாருகல என்கிட்ட குடு.”

(வாருகல் என்பது விளக்குமாறுக்கு உரிய மட்டக்களப்பு பேச்சு வழக்கு சொல்)

‘அக்காவா? அதெல்லாம் எனக்கு தெரியா, நான்தான் இன்னைக்கு வீடு பெருக்க போறன்.”

‘ராதா, இப்ப ஒழுங்கா வாருகல என்கிட்ட குடுக்கப்போறியா இல்லயா?”
‘இல்ல இல்ல இல்ல, அம்மா… இவள கொஞ்சம் பாருமா.. அம்மா..?”

சண்டை போட்டுக்கொண்டது என்னமோ எனக்காகத்தான். ஆனால் அக்கா சீதாவுக்கு அவளுடைய நண்பிகளுடன் சுற்றுலா செல்ல வேண்டும், அதற்கு ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும், அதற்காக வீட்டில் நாலு வேலையை செய்து, எப்படியாவது அப்பாவிடம் நல்ல பெயர் வாங்கி, சுற்றுலாப்பணத்தை பெற்றுக்கொள்வது தான் அவளுடைய எண்ணம். ஆனால் தங்கை ரொம்பவும் கெட்டிக்காரி, சின்னவள் ராதாவுக்கு அம்மா, அப்பா, அக்கா என அனைவருடனும் சேர்ந்து படம் பார்க்க தியேட்டருக்கு செல்ல வேண்டுமென்று ஒரே ஆசை. அம்மாவுக்கு ஐஸ் வைத்தால் தானே அம்மா இதைப்பற்றி அப்பாவிடம் பேசுவார்? பின்னர் எல்லோரும் ஒன்றாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாமே. அதற்குத்தான், அக்காளும் தங்கையும் இப்படியாக என்னை ஒரு வழி பண்ணிவிட்டார்கள்.

அசுத்தமான வீட்டை நாலு முறை பெருக்குவதில் தவறொன்றுமில்லை. ஆனால் ஏற்கனவே சுத்தமாக இருக்கின்ற வீட்டை நாற்பது முறை பெருக்குவது தகுமா? நானும் வந்த முதல் நாளிலிருந்து பொறுத்து பொறுத்து என் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டேன். என்னை ஒரு மனிதனாக மதிக்க தேவையில்லை, குறைந்தபட்சம் ஒரு உணர்வுள்ள வாருகலாக பார்க்கக்கூடாதா? போதாத குறைக்கு இவர்களுடைய ஜிம்மி வேறு. காலையும் மாலையும் என்னையே தேடி வந்து சிறுநீர் கழித்துவிட்டு போகும். இப்படி நான் தனியாக புலம்புவது இது ஒன்றும் முதல் தடவையல்ல.

அவன் அவன் பிரச்சனை அவன் அவனுக்குத்தான் தெரியும். ஆயிரம் தான் என்றாலும் காய்ச்சலுக்கு தலையிடியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள். வாங்கி வந்த புதிதில் என்னை பெருக்குவதற்கு மட்டும்தான் உபயோகித்துக் கொண்டார்கள். ஆனால் இன்று என்னடாவென்றால், மலசலகூட அடைப்புக்கும் நான்தான். வீட்டு வளவிற்குள் வருகின்ற சிறிய மிருகங்களை விரட்டுவதற்கும் நான்தான். இது போதாதென்று என்னை ஒரு சுவரில் சாத்தி சாத்தி வைத்து, நானும் சறுக்கி விழுந்து விழுந்து, என் உடம்பில் விழாத அடிகள் இல்லை. அடி படாத இடங்கள் இல்லை. இப்படி கஷ்டப்படுவதற்குத்தானா என்னை என் பெற்றோர்கள் பெற்றெடுத்தார்கள். என் அம்மாவும் அப்பாவும் பிரதான வீதியில் பெருக்குகிறார்கள். என் பெரியம்மா குடும்பம் எங்கேயோ கொழும்பில் ஒரு கம்பனியில் பெருக்குவதாக கேள்விப்பட்டேன். ஆனால் என் சகோதரர்கள் என்னுடன் இங்கு அயலவர்களின் வீடுகளில்தான் இருக்கிறார்கள். என் சின்ன தங்கை இந்நேரம் என்ன செய்கிறாளோ. பாவம்.

இப்படி புலம்பி புலம்பியே ஒருவாறு இருட்டிவிட்டது. எப்படியோ நாளை காலை சீதாவும், ராதாவும் என்னை குப்பை வண்டியில் போட்டுவிடப்போகிறார்கள். நான் வாழ்ந்த இந்த வீட்டில் இறுதி இராப்பொழுதை கழிப்பது உண்மைக்கும் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

சூசூ.. சூசூ..

அடச்சீ, ஐயோ..

இந்த நேரம் இந்த ஜிம்மி வேறு. சிறுநீர் கழிப்பதற்கு ஒரு நேரம் காலம் இல்லை இவனுக்கு. இவனையும் நாளைய தினத்திற்கு பிறகு சந்திக்க மாட்டேன் என? குட்டிப்பையா சரி இன்றைக்கு மட்டும்தானே. பரவாயில்லை.

ஒருவாறு பொழுதும் புலர்ந்துவிட்டது. என்ன ஒரே சத்தமாக இருக்கிறது. சீதா, ராதாவின் தந்தையின் குரல் தான் அது.

‘சீதா.. அம்மா சீதா..”
‘என்னப்பா..”

‘உன்னோட ஸ்கூல் ட்ரிப்புக்கு இதுல ஆயிரம் ரூபா இருக்கு.. கவனமா கொண்டுபோய் வை”

‘தாங்ஸ்ப்பா”

‘ராதாக்குட்டிய வர சொல்லு”

“சரிப்பா”

ராதா தந்தை அழைத்த சத்தம் கேட்டு வீட்டிற்குள் ஓடிவந்தாள், ‘என்னப்பா?”

‘அப்பா புது வாருகல் வாங்கிட்டு வந்திருக்கன். கொண்டுபோய் வீட்டுக்கு பின்னால வைடா”

‘சரிப்பா..”

ஓஹோ, இன்று புதிய விருந்தாளி வருவதால் தான் என்னை தூக்கி வீசுகிறீர்களா? சரி சரி. நான் புதிய விருந்தாளியாக வந்த பொழுது இங்கிருந்த எனது பழைய நண்பன் சொன்ன வார்த்தைகள் இப்பொழுதுதான் என் மனத்தில் சுரீரென்று தைக்கின்றன.

‘நண்பா, நீ புதிசா இருக்குமட்டும் தான் உனக்கு மதிப்பு. பழசானா உன்ன தூக்கிபோட்டுடுவாங்க. ஏன்னா இங்க அன்பு ஒன்றுதான் அனாதை. நாளைக்கு நான் கௌம்பிடுவேன். பாத்து இருந்துக்க..”

அன்று வந்த புதிதில் அந்த வார்த்தைகளை தட்டிக்கழித்து, பெருமிதத்துடனும் கர்வத்துடனும் இருந்ததற்குத்தான் இன்று அனுபவிக்கின்றேன் போலும். பரவாயில்லை இருக்கட்டும். மனிதர்கள் சுத்தத்தை அசுத்தம் செய்கின்றவர்கள், ஆனால் நாங்கள் அசுத்தத்தை சுத்தம் செய்கின்றவர்கள். எப்பொழுதும் நாங்கள் ஒரு படி மேல்த்தான் இருக்கின்றோம். என்னதான் மனிதர்கள் இப்படியிருந்தாலும், நான் வாருகல் ஆயிற்றே. கடைசி வரைக்கும் தேய்ந்து தேய்ந்து உயிரைக்கொடுத்து வேலைசெய்வது தான் என் குணமே.

வேகமாக ஓடிவந்த ராதா புதிய விருந்தாளியை எனக்கருகில் வைத்துவிட்டு போய்விட்டாள். நான் இருக்கின்ற கோலத்தில் திரும்பிப்பார்ப்பதற்கே கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. சரி இனி என்ன செய்வது…! பார்த்துவிடுவோம்.

ஆ… திரும்பிப்பார்த்தது தான் தாமதம், அந்த அழகை வர்ணிக்க யாராலும் முடியாது. எங்களை போல அல்லாது, அவள் இன்னும் அழகாக நேர்த்தியாக இருந்தாள். அப்பொழுதுதான் அவளும் என்னை மேலிருந்து கீழ்வரை கவனிப்பதை உணர்ந்தேன். கூச்சம் ஒரு பக்கம், என்னுடைய தேய்ந்துபோன ஈர்க்குகள் மறு பக்கம். பேசுவதற்கு வார்த்தைகளே வரவில்லை.

‘ஹா.. அது வந்து..”

திடீரென வானில் மிதப்பதை போன்ற ஒரு உணர்வு எனக்கு. பின்புதான் தெரிந்தது, என்னை யாரோ தூக்கிச்சென்று, குப்பை வண்டியில் போடுகிறார்கள். நான் அப்பொழுதே நினைத்தேன், இது அந்த சீதா, ராதாவின் தந்தையாகத்தான் இருக்க வேண்டும். அவரே தான். நான் வந்த நாளிலிருந்து இந்த மனிதனுக்கு என்னுடன் அப்படி என்னதான் கோபமோ?

குப்பை வண்டி புறப்படப்போகிறது, புதிய விருந்தாளி, அந்த அழகி என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஏதாவது சொல்லி விடவேண்டுமென்று என் தேய்ந்த ஈர்க்குகள் துடித்துக்கொண்டிருந்தன.

‘நானும்ம்ம்ம்ம்ம் புதுசாசாசா இருந்தவன்தான்ன்ன்ன்ன்”

***********************


Related posts

வினோத உலகம் – 13

Thumi202121

குறுக்கெழுத்துப்போட்டி – 44

Thumi202121

காத்திருக்குமாம் கொக்கு!

Thumi202121

1 comment

Leave a Comment