இதழ் 48

காத்திருக்குமாம் கொக்கு!

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட அந்த படகு மெல்ல மெல்ல கடலால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த காட்சி அட்டைப்படத்தில் மட்டுமா தெரிகிறது? திரும்பும் திசையெல்லாம் இப்போது கவிழும் படகுகளைத்தான் காண முடிகிறது.

கல்விதான் மூலதனம் என்று விடாப்பிடியாகப் படித்து உயர்தரப் பரீட்சைக்காக காத்திருக்கிறான் விமலன். அவனது கல்விச் செலவுகளுக்காக அவன் குடும்பம் ஒருவேளை உணவை மட்டுமல்ல சில வேளை இருவேளை உணவையும் தியாகம் செய்திருக்கிறது. ஆனால் நாட்களாகியும் பரீட்சை நடக்கவில்லை. பரீட்சைகள் அச்சடிக்க தாள் இல்லையாம். “அவனைப் படிப்பிச்சு விட்டால் அவன் எல்லாத்தையும் பாத்துப்பான்” என்கிற நம்பிக்கைப்படகு அங்கே கவிழத் தொடங்கிவிட்டது.

அப்பாவை போர் கொன்றது. அம்மாவை கொரோனா கொன்றது. இரண்டு பருவ வயது தங்கைகளும் சியாமளனை நம்பித்தான் இருக்கிறார்கள். படிப்பு ஏறாத சியாமளன் கட்டிடக் கூலி வேலைக்கு போவது வழமை. எகிறிய விலைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத முதலாளி கட்டுவதை நிறுத்திக்கொண்டு இருப்பதை சேமித்தார். இருப்பே இல்லாத சியாமளன் வேலையும் இல்லாமல் திண்டாடத் தொடங்கிவிட்டான். தங்கைகள் திருமணத்திற்கு காசு தேடியவன், தங்கைகள் சாப்பாட்டிற்கே காசில்லாமல் போனான். வேலை தேடுவதையே வேலையாக்கிக் கொண்டவனின் கடமைப்படகு கவிழத் தொடங்கிவிட்டது.

முருகையாவின் உயிரை இன்னும் பிடித்துவைத்திருப்பவை அவர் தினமும் உண்ணும் மருந்துகள் தான். வேளைக்கு மூன்றென்று மூன்று வேளையும் எடுக்காவிட்டால் அவர் மூச்சை நுரையீரல் எடுத்துக் கொடுக்க மறுத்துவிடும். வங்கி நிறைய பணம் இருக்கிறது. ஊர் நிறைய காணி இருக்கிறது. என்ன பயன் எந்த வைத்தியாசாலையிலும் அந்த மருந்து இல்லை. சில ஆயிரங்கள் பெறுமதியான மருந்து பல ஆயிரங்களை கடக்கிறது. வெளியூர்களிலிருந்து எல்லாம் அந்த மருந்தை வரவைக்கிறார். எத்தனை நாளைக்கு? இறக்குமதி இல்லை. ஓரிரு வாரத்தில் அந்த மருந்து நாட்டிலேயே இருக்காது. காசெனும் கடதாசியாலும் காப்பாற்ற முடியாத அந்தப்படகும் மூழ்கத்தொடங்கி விட்டது.

வறுமைக்கோட்டிற்கு கீழ்ப்பட்ட இந்த நாட்டில் நம் பிள்ளை பிறந்து கஷ்டப்படக் கூடாதென தாம்பத்தியத்தையே தவிர்த்த அந்த புதுமண தம்பதிகளின் இல்லறப்படகும் கவிழத்தொடங்கி விட்டது.

மண்ணை நம்பி உழுதுவைச்ச காலம் போய் உரத்தை நம்பி உழுது வைச்ச காலம் வந்ததால் மலடாகிப் போனது மண். உரம் இல்லையேல் மண்ணில் உயிர் இல்லை எனும் நிலை வந்தது. உரம் இறக்குமதி தடையாகிப் போனது. உழவர் வாழ்வின் விளைச்சல் கப்பலும் கவிழத் தொடங்கி விட்டது.

பக்கத்து வீட்டுக்காரனின் மரணச் செலவுகளைக் கேட்டதும் பத்து மாதங்களாக படுக்கையில் சாவை வேண்டிக் கிடந்தவன் முதன் முதலாக வாழ்வை வேண்டத்தொடங்கி விட்டான். வாழும் செலவா? சாகும் செலவா? கூட என்கிற கணக்காய்வில் மூழ்கிக் கொண்டிருக்கிறது அந்த உயிர்ப்படகு!

இத்தனை படகுகள் மூழ்கியும் அங்கே ஒரு படகு மூழ்காமல் வீறு கொண்டு செல்வதை மூழ்கும் படகுக்காரர்கள் முறைத்துப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப்படகில் ஒரு குரங்கும் இருந்தது. மற்றப்படகுகள் மூழ்குவதைக் கண்ட அந்த குரங்கு ஆனந்தக் கூத்தாடியது. அது ஆடிய கூத்தில் அந்தப் படகும் கவழ்ந்துவிடும் போல் இருந்தது. எத்தனையோ பேர் சொல்லிப் பார்த்தார்கள். கேட்கவில்லை அந்த மதி கெட்ட மந்தி. பொறுமையிழந்த ஒருவன் குரங்கைத்தூக்கி கடலில் எறிந்தான். நீச்சல் தெரியாத குரங்கு தண்ணீரில் தத்தளிக்கத் தொடங்கிவிட்டது. சில நிமிடமாக போராட்டம் தொடர்ந்தது. இன்னும் ஒரு நிமிடம் தொடர்ந்தால் குரங்கு இறந்துவிடும் என்கிற நிலையில் குரங்கைத் தள்ளியவனே துடுப்பைக் கொடுத்து குரங்கை காத்தான். எல்லோருக்கும் ஆச்சரியம். தள்ளியவனே ஏன் காப்பாற்ற வேண்டும்? ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அதற்குப்பிறகு அந்தக்குரங்கு அமைதியாக இருந்தது. பிறகுதான் விசயம் புரிந்தது. கடலின் சக்தியும் படகின் அருமையும் புரிந்ததால் குரங்கு அமைதியாக இருந்தது.

அந்த குரங்கின் நிலையில்த்தான் இங்கேயும் பலர் இருக்கிறார்கள். ஆனால் என்ன இவர்களை இப்போது காப்பாற்றி துடுப்பு ஒன்றை தர யாரும் இல்லை. படகு மூழ்கப்போவது உறுதியாகி விட்ட நிலையில் மூழ்கிக்கொண்டிருக்கும் படகில் தொடர்ந்தும் இருப்பது புத்திசாலித்தனமில்லை என்கிறார்கள். தப்பிக்க வழி அறிந்தவர்களை படகை விட்டு போகுமாறு படகுக்காரர்களே அறிவுறுத்தியும் விட்டார்கள். நீச்சல் தெரிந்தவர்கள் கடலில் குதித்து விட்டார்கள். பறக்க தெரிந்த பறவைகள் கரை தெரியாத அந்தக்கடலிலே எதோ நம்பிக்கையில் பறக்கத் தொடங்கிவிட்டன.
ஆக்கள் குறைந்தால் பாரம் குறைந்து படகு அமிழாது மீள மிதக்குமென்று கணக்குப்போட்ட சிலர் அடுத்தவர்களை அனுப்புவதில் அக்கறை காட்டினார்கள். கடல் தட்டி நின்ற அந்த படகுக்கு அருகில் எங்கிருந்தோ வந்த இயந்திரப்படகு ஒன்று அறிவித்தல் விட்டது. வயதுக்கு வராதவர்களையே மீட்கப்போவதாக சொன்னது. வயதுக்கு வந்தவர்களுக்கு வாழ்க்கையின் காலாவதித் திகதி முடிந்துவிட்டதா என்ன? தத்தளிக்கும் கடலில் சொல்வதெல்லாம் சட்டம்.

அதுநாள் வரை அந்த கடலிற்குள் எங்கள் வாழ்க்கையை சாத்தியமாக்கியது அந்த படகு. அந்த படகு இல்லையென்றால் என்றோ மூழ்கி மூச்சை இழந்திருப்போம். எம்மை வாழ வைத்த படகை மீட்டெடுக்காது ஓட மாட்டோமென உறுதி மொழி எடுத்து இருந்த சிலருக்கும் இப்போது கலக்கம் ஏற்பட்டு இருக்கிறது. காற்றுள்ள போது தானே தூற்றிக்கொள் என்பது போல மூழ்க முன்பு தானே தப்பிக்க முடியும். தம் முடிவுகளை மீள்பரிசீலனை செய்ய அவர்களுக்கு காலம் போதுமானதாக இல்லை.

அதெல்லாம் இருக்கட்டும்! அதைக் கவனித்தீர்களா? மூழ்கிக் கொண்டிருக்கும் அந்த படகில் இன்னும் மூழ்காத பகுதியில் ஒரு கொக்கு நிற்கிறது. அந்தக் கொக்கிற்கு அங்கே என்ன வேலை? ஓடுமீன் ஓடி உறுமீன் வரும் வரை காத்திருக்கிறதா? அல்லது படகுகள் கவழ்வதை தன் பாரத்தால் சமநிலைப்படுத்த மறு பக்கத்தில் நின்று விசையைக் கொடுக்கிறதா? அல்லது எதையோ வேண்டி தவம் இருக்கிறதா?

இந்தப்பிரபஞ்சத்தில் விடை இல்லாத கேள்விகள் என்று எதுவுமே இல்லை. எல்லாக் கேள்விகளுக்கும் காலம் என்றோ ஒருநாள் விடையைச் சுமந்து வரும். சில வேளை அந்த விடை சுகமாக இருக்கும். சிலவேளை அந்த விடை சுமையாக இருக்கும். இந்தக் கொக்கின் புதிர் அவிழும் போது படகு முற்றாக கவிழ்ந்து இருந்தது!

Related posts

ஈழச்சூழலியல் 34

Thumi202121

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது — 2022

Thumi202121

நானும் புதுசாசாசா இருந்தவன்தான்

Thumi202121

Leave a Comment