நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளால் வெகுவிரைவில் வரலாறு காணாத பெரும் பஞ்சம் ஒன்றை நாம் எதிர்கொள்ள வேண்டிவருமென நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள்.
தற்போது நிலுவும் எரிபொருட்களின் தட்டுப்பாட்டால் மரக்கறி பழ வகைகளை விற்பதில் பாரிய தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவை வீண்விரயமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பழவகைகளையும் மரக்கறிகளையும் வற்றல்களாக்கி வெயிலில் உளர்த்தி களஞ்சியப்படுத்தி வைக்கும் செயல்முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். உணவுப் பஞ்சம் ஏற்படும் காலத்தில் இந்த வற்றல்கள் பேருதவியாக இருக்கும்.
வெளிநாடுகளில் கோடை காலங்களில் இவ்வாறு வற்றலாக்கப்படும் உணவுப் பொருட்களைத் தான் குளிர்காலங்களில் பயன்படுத்துவார்கள். அந்த முறையை நாமும் பின்பற்ற வேண்டும். எமது நாட்டைப்பொறுத்த வரை சூரிய ஒளியே வற்றலாக்கப் போதுமானளவு உள்ளது.
உணவில் மட்டுமல்ல உயிர் காக்கும் மருந்துப் பொருட்களிலும் இந்தப் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இந்த இடர் நிறைந்த காலத்தில் அரச வைத்தியசாலைகளில் மருந்து கிடைப்பதை உறுதி செய்யும் முகமாக துமி அமையத்தால் முதற்கட்டமாக இரண்டு லட்சம் ரூபாயும் அடுத்த கட்டமாக ஒரு லட்த்தி இருபதினாயிரம் ரூபாயும் மதிக்கத்தக்க மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சிறியளவிலேயே இந்த திட்டத்தை செயற்படுத்த ஆரம்பித்த போதும் தாமாக முன்வந்து பலர் நன்கொடைகளை வழங்கியதால் மூன்றாம் கட்ட உதவித்தொகைக்கான வேலைகளையும் ஆரம்பித்திருக்கிறோம். உதவிய அந்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
எனவே எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதை உறுதி செய்து கொண்டு வரப்போகும் சவால்களுக்கு எம்மையும் நாம் சார்ந்த சமூகத்தையும் தயார்படுத்துவதற்கான செயற்திட்டங்களை மிக விரைவாக எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.